Saturday, December 8, 2012

ஆச்சரியமான உண்மைகள்!


 மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு நமது ஐம்புலனறிவு ஒரு முக்கியக் காரனம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
  வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன.
 மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 இலட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை அவனால் பிரித்தறிய முடியும்.
 உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த வாசனை மட்டுமே தெரியும்.
 ஒவ்வொர் உயிரினமும் தம் உடலில் இருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தன் வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தன் இணையைக் கவரும்.
 சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணருகின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன. தவளைக்குப் பார்வை சக்தி குறைவு. தன் இரை மட்டுமே அதற்குப் புலப்படும். இன்னும் பல பறவை, விலங்கு, பூச்சியினஙகளிடம் ஆச்சரியமான உண்மைகள் உண்டு.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.


Friday, December 7, 2012

நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்!


 பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் தீமை விளைவிக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடிய நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன.
 இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை ஒவ்வொரு விவசாயியும் அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டு மல்லாமல், அதை அழிக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்தின் உபயோகத்தைத் தவிர்த்திட வேண்டும்.
 இது குறித்து ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இ.வ.நா.முத்துஎழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாள்களும்,பெண் பூச்சிகள் 35 நாள்களும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைகள் வரை இடும். இது குஞ்சு பருவமாக இருக்கும் போதே தீமை செய்யும் பூச்சிகளைத் தாக்க ஆரம்பித்து விடும். இவை பயிர்களைத் தாக்கும் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சிகள், முட்டைகள், குஞ்சுகளைத் தாக்கி அழிக்கும்.
 இதன் வாழ்நாளில் 400 முதல் 500 தீமை செய்யும் பூச்சிகளை அழித்து விடும். கிரைசோபா தாய்பூச்சி பச்சை நிறத்தில் கண்ணாடி போன்ற இறக்கை உடையது. இதன் குஞ்சுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 முட்டை ஒட்டுண்ணிகள்: முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ்,டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள் தன்னுடைய வாழ்நாளில் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும். இதில் இருந்து வெளிவரும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைக் காய்புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இட்டு இனத்தைப் பெருக்கி, காய்புழுக்கள் வெளிவராமல் தடுக்கிறது. இது தன்வாழ்நாளில் 20 முதல் 40 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை.
 அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி: இதன் வாழ்நாள் 14 முதல் 17 நாள்கள். தன்வாழ்நாளில் 300 முதல் 400 முட்டைகள் வரை இடும். இது காய்ப் புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இடும். முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். இவை பழுப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த சிறிய ஈ போன்றது.
 செலானஸ்குளவி: தாய்பூச்சி சிவப்பும் கறுப்பும் கலந்தது. அடி வயிற்றில் மஞ்சள் கோடு இருக்கும். இவை தாய்ப் புழுக்களின் முட்டைகள், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.
 கோடீசியா குளவி: இதன் வாழ்நாள் 10 முதல் 15 நாள்கள். 10 முதல் 30 முட்டைகள் வரை இடும். இவைகள் காய்ப் புழுக்களின் முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.
 பிகோனிட் குளவி: இதன் வாழ்நாள் 3 முதல் 6 நாள்கள். இது 6 முதல் 20 முட்டைகள் இடும். இந்த குளவிகள் காய்ப் புழுக்களையும், முட்டைகளையும் தாக்கி அழிக்கும்.
 பெதிலிட்ஸ் குளவி: இவ்வகை குளவிகள் கருப்புநிறம் கொண்டவை. சிறு எறும்புபோல் இருக்கும். காய்ப் புழுக்களை நினைவு இழக்கச் செய்து,அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப் பெருக்கம் செய்து, காய்ப் புழுக்களை அழிக்கின்றன. இதன் வாழ்நாள் 10 முதல் 12 நாள்கள். 3 முதல் 8 முட்டைகள் இடும்.
 இக்மானிட் குளவி: இதன் வாழ்நாள் 3 முதல் 6 நாள்கள். இது 10 முதல் 30 முட்டைகளை இடும். புழுவின் மேல் ஒரு முட்டை வீதம் இடும். குஞ்சு புழுக்களை அழிக்கும். தன் வாழ்நாளில் 10 முதல் 30 பூச்சிகளை அழிக்கும்.
 டாகினிட் ஈ: இதன் வாழ்நாள் 7 நாள்கள் . இதன் நிறம் கறுப்பு அல்லது கருநீலம். வீட்டு ஈயை விடப் பெரியது. 8 முதல் 12 முட்டைகள் இடும். காய்ப் புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும். வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப் புழுக்களை அழிக்கும்.
பிராகிமீரியா குளவி: இது கறுப்பு நிறம் கொண்டது. மஞ்சள் கோடுகள் இருக்கும். குண்டானது. பின்கால்கள் இருக்கும். இதன் வாழ்நாள் 3 முதல் 5 நாள்கள். இந்த குளவி 5 முதல் 20 முட்டைகள் வரை இடும். இது காய்ப்புழு அல்லது கூட்டுப்புழு மீது ஒரு முட்டை வீதம் இட்டு அழிக்கின்றது. இதன் வாழ்நாளில் 5 முதல் 20 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது.
 தட்டான் இனங்கள்: தட்டான், ஊசி தட்டான் போன்ற பூச்சிகள், வானிலும் நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும். பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. தட்டான்கள் சுற்றிவளைத்து இரைதேடும் சிறப்பு வாய்ந்தவை. இதன் கால்கள் இலகுவாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை கவ்வி பிடித்து தாக்க ஏதுவாக அமைந்துள்ளன.
 பொறி வண்டு: இதன் தாய்ப் பூச்சி முழுவதும் மஞ்சள் அல்லது முழு சிவப்பில் கரும்புள்ளிகள் இருக்கும். குஞ்சு கறுப்பு அல்லது கருநீலமாக இருக்கும். இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இது 150 முதல் 200 முட்டைகள் வரை இடும். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள்,அதன் முட்டைகள்,அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை ஈ, முட்டைகள் குஞ்சுகளை அழிக்கின்றன. தன் வாழ்நாளில் 400 முதல் 500 பூச்சிகளைத் தேடி அழிக்கின்றன.
 அசாசின் வண்டு: நன்செய்,புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக வரும். கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் உயிர்வாழும்.
 150 முதல் 200 முட்டைகள் இடும். இந்த வண்டுகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். தன் அளவை விட பெரிய பூச்சிகளையும் தாக்கும் தன்மை உடையது. தன் வாழ்நாளில் 120 முதல் 140 பூச்சிகளை அழிக்கும்.
 சிலந்திகள்: பல வண்ணங்களில், பல வகையான சிலந்திகள் அனைத்துமே நன்மை செய்பவை. இவை 60 முதல் 400 முட்டைகள் வரை இடும். 120 நாள்கள் வாழக் கூடியது. இதுவும் தன் அளவைவிட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும். தன் வாழ்நாளில் 500 முதல் 600 பூச்சிகளைத் தாக்கி அழிக்கும்.
நீள கொம்பு வெட்டுக்கிளி: இது உடலைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். பச்சை நிறமுடையது. மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது. இவை பூச்சிகளின் முட்டைகள், தத்துப் பூச்சிகளை உணவாக உள்கொள்ளும். இதன் வாழ்நாள் 110 நாள்கள்.
 மேற்கண்ட நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அதை பாதுகாத்து விவசாயிகள் பலன் அடைந்திட வேண்டும் என்றார் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்.

நன்றி தினமணி நாழிதள்.....

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...


Friday, November 30, 2012

வேகமாக உயருகிறது கடல் நீர் மட்டம்


 சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோர பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதை செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...


Wednesday, November 21, 2012

பறக்கும் பாம்பு


  பாம்பினங்களிலேயே மிகவும் அழகிய நிறங்கொண்ட பாம்பு "பறக்கும் பாம்பு' ஆகும். உண்மையில் இது பறவைகள்போல் பறப்பதில்லை. ஆனால் உயர்ந்த மரக்கிளையிலிருந்து கீழே உள்ள கிளைக்கு காற்றில் எழும்பிச் செல்கிறது. மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும்.
   மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. இது, தாவும்போது தன் உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு கீழ் நோக்கி வரும். அதே நேரத்தில் தன் வயிற்றுப் பகுதியை இழுத்துக்கொள்ளும். இந்தச் செயலால் இதன் விலா எலும்பின் வெளிப்பகுதி அகன்று நிற்கும். இதனால், பார்ப்பதற்கு இந்தப் பாம்பு பறப்பது போலத் தெரியும்.
   இந்தப் பாம்பு மென்மையான செதில்களுடன் மிகமெலிந்த உடலமைப்பைக் கொண்டிருக்கும். ஏறத்தாழ ஒரு மீட்டர் நீளம் இருக்கும். இதன் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடுவில் பொட்டு வைத்ததுபோன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும்.
   இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக்கொண்டிருக்கும் இந்தப் பாம்பு "அணிகல மரப் பாம்பு'  என்றும், "தங்க மரப் பாம்பு' என்றும் அழைக்கப்படுகிறது.
   இந்தப் பாம்பு "கொலுபிரிடே' என்ற குடும்பத்தைச் சேர்ந்த விஷமற்ற மரப்பாம்பு வகையாகும். நம் நாட்டில் காணப்படும் பறக்கும் பாம்பு "கிரிசோபீலியா ஆர்நேடா'  என்ற இனத்தைச் சேர்ந்தது. இவ்வகைப் பாம்புகள் நம் நாட்டில் தென்மேற்குப் பகுதி மலைகளில் 1500 அடி உயரத்தில் காணப்படுகின்றன. மேலும், வட கிழக்குப் பகுதிகளான பிகார், ஒரிசா, அசாம் ஆகிய காட்டுப் பகுதிகளிலும், இலங்கை, தென் ஆசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
   இந்தப் பாம்பின் மற்றொரு இனமான "கிரிசோபீலியா பார்டேசி' அந்தமான் தீவில் காணப்படுகிறது. பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலும், பெரிய மரங்களிலும் வசிக்கும் இந்தப் பாம்புகள், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வீடுகள் மற்றும் பூங்காக்களின் சுற்றுப்புறங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
   மற்ற மரப் பாம்புகளைப் போல இந்தப் பாம்புகளும் பகல் வேளையில் இரை தேடுகின்றன. இவை பொதுவாக தாழ்வான புதர்களிலும், புல்லிலும், மரங்களிலும் காணப்படும் தவளை, பல்லி, ஓணான், சிறிய பறவைகளின் முட்டைகள், பூச்சிகள்போன்றவற்றை உண்ணும். இந்தப் பாம்புகளின் விஷம், சிறு பிராணிகளை அசைவற்றுப்போகச் செய்வதற்கு உதவுகிறது. ஆனால், இந்த விஷம் மனிதனுக்கு எந்தவிதமான தீங்கையும் விளைவிப்பதில்லை. பறக்கும் பாம்புகள் பெரும்பாலும் இரையை உயிருடனே உட்கொள்ளும். மரக் கிளைகளில் வேட்டையாடும்போது மிக மெதுவாக ஊர்ந்து செல்லும்.
   இவை ஏறத்தாழ ஆறுமுதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடுவதாகத் தெரிகிறது.
   இந்தப் பாம்புகளின் பறக்கும் தன்மையைப் பற்றி குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பழங்கதைகள் இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இவை பறவைகளாக இருந்து பின்னர் பாம்பாக மாறிவிட்டதாக இந்தப் பழங் கதைகள் கூறுகின்றன. ஆனால் இது உண்மையில்லை. அழகிய நிறங்கள் கொண்ட இந்த அணிகலப் பாம்புகள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் பாம்புகள் வித்தியாசமான நிறங்களில் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே, இவற்றைப் பார்ப்பவர்கள்  நச்சுப் பாம்பு என்று நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். இது தடுக்கப்பட்டு இந்தப் பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டும்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 


Tuesday, November 20, 2012

பல்லிகள்


 பல்லி என்றதுமே சுவரில் அங்கங்கே இருந்தபடி பூச்சி பிடித்துக்கொண்டிருக்குமே அதுதான் நினைவுக்கு வரும். இந்தவகைப் பல்லிகள் நம் வீடுகளில் நடமாடும் பூச்சிகளை பிடித்துத் தின்று வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதெல்லாம் குட்டிப்பல்லி வகைகள். முதலை சைசில் பல்லிகள் இருகின்றன. இந்தப்பல்லிகள் சமயத்தில் மனிதர்களையும் தாக்கிவிடும்.
கொமாட்டா பல்லி
 பார்த்த மாத்திரத்தில் தோற்றத்தாலேயே பயமுருத்தும் இந்த வயைப்பல்லிகள் 3மீட்டர் நீளம் கொண்டவை. எடை ஒரு சராசரி மனிதனின் எடையைப்போல் 70 கிலோவரை இருக்கும். இந்தோசினியத் தீவுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் உணவு பெரும்பாலும் அழுகிக் கியைக்கும் மிருகங்களின் உடல்தான். தோற்றத்தில் பெரிதாக இருந்தாலும் வேட்டையாடும் திறன் இல்லாதவை. அதனால் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் வேட்டையாடி சாப்பிட்டதில் மீந்துபோன உணவுகளை இவை சாப்பிடும். எதிரிகளிடம் இவை மாட்டிக்கொள்ளும்போது வாயில் இருந்து எச்சிலை எதிரி மிருகங்கள் மீது பீச்சியடிக்கும். இந்த எச்சிலில் விஷம் இருப்பதால் எதிரி விலங்குகள் அதை உணர்ந்து கொண்டு ஓட்டம் பியித்து விடும். இந்த வகைப்பல்லிகள் சமயங்களில் மனிதர்களையும் தாக்க முற்படும்.
       ப்ளையிங் டிராகன் லிசார்டு
 இது சாதாரன பல்லி வகைதான். ஆசியா வெப்ப மண்டல காடுகள் காணப்படுகின்றன. சுமார் 15 இனங்கள் உள்ளன. 8 (20 செமீ) இருக்கும். மழை நேரங்களில் அதிக காற்றோ, அதிக குளிரோ இதனால் தாங்க முடியாது. அதனால் அம்மாதிரி சமயங்களில் முடிந்தவரை பாதுகாப்பான இடம் தேடி பதுங்கிக் கொள்ளும்.
 இதன் சிறப்பு அம்சம், இதன் தாவும் திறன் தான். மரம் விட்டு மரம் தாவும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகு. இரண்டு மரங்களுக்கு இடையே அதிக பட்சதூரமான 8 மீட்டர் தூரத்தை இது கடக்கும்போது இவை காற்றில் மிதப்பது போல் தோற்றம் தரும். இதன் தோல் அமைப்பு இப்படி பறப்பதற்கு ஏதுவாக அமைந்திருப்பது சிறப்பு.
மானிட்டர் லிசார்டு
  உடும்பு வகைகளை இந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள். மனிதர்களின் செல்லப் பிராணியாகவும் இவை வளர்க்கப்படுகிறது. இவை புத்திசாலிகள். நினைவாற்றலில் தேர்ந்தவை. பட்டுப்பூச்சி, மண்புழுவையும் உணவாகக் கொள்ளும். மலேசியாவில் மட்டும் இது அங்குள்லவர்களுக்கு உணவாகி விடுகிறது. உடும்பை அங்குள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சுவையான உணவுப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
       ரீகன்கவுட் லிசார்டு
  ஆப்பிரிக்காவிலும் மெக்சிகோவிலும் அதிகம் காணப்படும் இந்தவகைப் பல்லிகள் வாழ ஏற்ற இடமாக இருப்பது பாலைவனங்கள்தான். மண்ணில் இவை இருக்கும் போது இது சட்டென கண்ணில் படாது. அந்த அளவுக்கு மண்ணின் நிறம் அதன் நிறத்தோடு ஒத்திருந்து இதற்கு உதவுகின்றன.
 இந்த வகைப் பல்லிகள் எதிர்பாரமல் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள நேரும்போது மூச்சை இழுத்துப் பிடித்து தன் உடம்பை பெரிதாக்கிக் காட்டும். இந்த திடிர் உடல் விரிவாக்கம் பார்த்து பயப்படாத எதிரி மீது, கண்ணில் இருந்து இரத்தத்தை பீய்ச்சியடிக்கும். நரம்புகள் வழியே மூளைக்குப் போகும் இரத்தத்தின் செயல்பாட்டை இப்படி நிறுத்திக் கொண்டு இப்படி கண் வழியே இரத்தம் பீய்ச்சும் போது எதிரி விலங்குகள் பயத்தில் ஓட்டம் பிடித்துவிடும்.
பிரில்டு லிசார்டு
 ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் இந்த வகை பல்லிகளின் ஸ்பெஷல், சிங்கத்தின் பிடரிமயிரை திருப்பிவைத்த மாதிரியான இதன் வித்தியாச முகத்தோற்றமே. நடக்கும், பறக்கும் பூச்சிகள் அத்தனையும் அவற்றின் உணவே. சின்ன பல்லியையும் பிடித்து உணவாக்கிக் கொள்ளும். சமயத்தில் இதைவிட பெரிய பல்லிக்கு இரையாகிவிடுவதும் உண்டு. கழுகு, ஆந்தை இதன் எதிரிகள்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.

Friday, October 12, 2012

தக்காளி பக்கவாதத்தை தடுக்கும்


 தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்காக ஆயிரத்து முப்பத்தி ஓர் ஆண்களை தேர்வு செய்துகொண்டனர். பரிசோதனையின் துவக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.
ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
 இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது.
 இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்றும், இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி.
 எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார். 

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...


Thursday, October 4, 2012

பசுமைக் கூடாரம்


 வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இந்தியாவில் புதிய தொழில்நுட்பமாக உள்ள பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி முறை மிகவும் பலன் தரும் வழிமுறையாக உள்ளது.
 நமது நாட்டில் 95 சத பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில வகைப் பயிர்களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. இந்தப் பயிர்களுக்கு ஏற்ற சூழல்நிலையை உருவாக்கினால் மட்டுமே எந்த இடங்களிலும் இந்தப் பயிர்களை வளர்க்க முடியும்.
 பசுமைக் கூடாரம்: பசுமைக் கூடார தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுப்புறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று, குளிர், மழை அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, பூச்சி நோய்களிலிருந்து செடிகளைப் பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.
 பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாராத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
 இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. மேலும், மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கிவிடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படும்.
 பயன்கள்-நன்மைகள்: பூச்சி, நோய், எலிகள் மற்றும் பறவைகள் பயிரைத் தாக்குவதிலிருந்து
 பாதுகாக்கலாம். அதிகமான வெப்பம், பெரும் மழை, அதிவேகக் காற்றுகளால் பயிருக்குச் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள், உரங்கள் ஆகியவை சரியான அளவில் உபயோகிக்கலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் உற்பத்தி செய்யலாம்.
 சந்தையில் பருவமில்லா காலத்தில் வரும் விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் கிடைக்கும். எனவே, அத்தகைய தருணங்களில் பசுமைக் கூடார உற்பத்தி முறை பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பதப்படும் தொழில்சாலைகளுக்குத் தேவையான காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்க முடியும்.
 50 நாடுகளில் பயன்: பசுமைக் கூடார அமைப்புகள் இப்போது உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக ரீதாயாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.8 பில்லியன் டாலர்கள் ஈட்டக் கூடிய மலர் சாகுபடி, 400 ஹெக்டர் பரப்பில் பசுமைக் கூடார முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானில் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பசுமைக் கூடார உற்பத்தி முறை உள்ளது. இந்தியாவில் 1980-ம் ஆண்டுதான் பசுமைக் கூடாரத் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது. முதலில் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான் உலகமயமாக்கல், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியால் பசுமைக் கூடார தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது.
 உள்ளூர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி பயிர் வகைகள் பயிரிடும் வகையில் இந்தக் கூடாரங்களை அமைக்க முடியும். 4 வகை பசுமைக் கூடார முறைகள் உள்ளன.
 குறு நுட்ப பசுமைக் கூடாரம்: இந்த வகை கூடாரத்தில் காலநிலைக் காரணிகள் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்காது. மூங்கில் கட்டைகள், பாலீத்தின் பைகள் உபயோகப்படுத்தி கட்டப்படும். பூச்சிகளை கட்டுப்படுத்தும் வலைகளையும் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் பக்கச் சுவர்களை திறந்து வைப்பதன் மூலம் வெப்ப நிலையைக் குறைக்கலாம். இந்த வகை கூடாரம் குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்றவையாகும்.
 மித நுட்ப பசுமைக் கூடாரம்: இயந்திரங்ளைக் கொண்டு இந்த வகை கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்படுவதால் வேகமாக வீசும் காற்றை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டவை. காற்று வெளியேற்றி விசிறிகள், பனிப்புகை குழாய்கள், குளிர்விக்கும் பட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடாரத்தில் தேவையான அளவு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை நிலவச் செய்ய முடியும். பயிர் பருவம் முழுவதும் தேவைக்கேற்ப சூழலை மாற்றிக் கொள்ளலாம். தரமான மலர்களை இந்த வகையில் உற்பத்தி செய்ய முடியும். வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் இந்தக் கூடாரங்கள் உகந்தவையாகும்.
 உயர்நுட்ப பசுமைக் கூடாரம்: முழுமையான தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொண்டவை. இந்த வகை கூடாரம் அமைக்க செலவு அதிகமாக இருந்தாலும் தரமான உற்பத்திப் பொருள்களை வழங்குவதால் செலவை ஈடு செய்யலாம். இந்தக் கூடாரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் போன்ற காரணிகளின் அளவை ஓர் உணர் கருவியானது உள் வாங்கிக் கொள்ளும். அந்த கருவியில் உள்ளவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
 மலைச் சரிவுகளுக்கான கூடாரம்: சமனற்ற கூரைகளைக் கொண்ட பசுமைக் கூடாரங்கள் மலைச் சரிவுகளில் கட்டுப்படும். சரிவுகளுக்குத் தகுந்தபடி வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படும். தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடுகள் பயன்படுத்துவதில்லை. இதேபோல், பிளாஸ்டிக் பசுமைக் கூடாராங்களை குறைந்த செலவில் அமைக்கக் கூடியது. புற ஊதாக்கதிர்கள் கொண்டு மேம்படுத்தப்பட்ட தாள்களால் அமைக்கப்படும் இந்தக் கூடாரங்கள் 4 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Wednesday, October 3, 2012

விஷமில்லா பூச்சிக்கொல்லிகள்


 பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை மட்டும் அழிப்பதில்லை. மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்யும் தேனீக்கள் மற்றும் பறவைகள், பூச்சிகளை இயற்கையாகக் கொல்லும் தவளைகள், தேரைகளையும் அவை அழித்துவிடுகின்றன. பூச்சிக்கொல்லிகள் ஆபத்தான ரசாயனங்கள். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் பாலூட்டி விலங்குகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதனும் ஒரு பாலூட்டிதானே? பொதுவாக, புட்டிப்பாலை விட தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் அதிக நோய் எதிர்ப்புத்திறனுடனும் காணப்படுவது இயற்கை. 
 இதற்கு மாறாக கனடாவில் இனுயிட் என்ற சமூகத்தில் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைகளை விட குறைவான நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளன என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் இன்றைய உணவில் கலந்துவிட்ட பூச்சிக்கொல்லிகள்தான். பூச்சிக்கொல்லி நஞ்சால் உலகில் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், இதனால் பலனிருக்கிறதா என்றால் ஏமாற்றம்தான். பூச்சிகளைக் கொல்வதற்கு 70 சதவீதம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அந்தப் பூச்சிக்கொல்லிகளைச் சமாளித்து உயிர் வாழும் அளவுக்கு 525 பூச்சி இனங்கள் தயாராகி விட்டன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 எனவேதான், விஷமில்லாத பூச்சிக்கொல்லிகளை நோக்கி அறிவியல் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண் வண்டுகளின் வாசனையை மோப்பம் பிடித்துத்தான் ஆண் வண்டுகள் பல மைல் தூரம் பறந்து வந்து இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் பூச்சிகளிடம் சுரக்கும் அந்த வாசனைப் பொருளை எடுத்து பசை தடவிய பெட்டிக்குள் வைத்தால், வாசனையால் கவரப்பட்டு வரும் ஆண்பூச்சிகள் பசையில் ஒட்டிக்கொண்டு உயிர் துறப்பது உறுதி. இந்த வகையில் பூச்சிகளைக் கொல்லும் முறை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. பூச்சி இனம் பரவாமல் இருக்க மற்றொரு வழி, காமா கதிர்களை உபயோகிப்பது. ஆண் பூச்சிகள் மீது இந்தக் கதிர்களைப் பாயச்செய்து அவற்றை மலடாக்குகின்றனர். இதனால் ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளுடன் இணைந்தாலும் அவற்றைக் கருத்தரிக்கச் செய்ய முடியாது. இதனால் பூச்சி இனம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
 பூச்சிகளால் பாதிக்கப்படாத வீரியம் மிக்க விதைகளை உற்பத்தி செய்து அவற்றைப் பயிர் செய்வதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குகிறார்கள். அல்ட்ரா சவுண்ட் மூலமும் சில வகை விளக்குகள் மூலமும் பூச்சிகளை வெறுப்பேற்றி, எரிச்சல் உண்டாக்கி, குறிப்பிட்ட பயிரை அந்தப் பூச்சிகள் நாடிவராமல் செய்யவும் வழிமுறைகள் இப்போது வந்துவிட்டன. பூச்சி களைக் கொல்லும் நுண் உயிரி களை வளர்த்து, பயிருக்கும் உயிருக்கும் பாதிப்பில்லாமல் அவற்றை வெகு எளிதில் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எப்படியோ... உணவு நஞ்சாகாமல் சீக்கிரம் தடுத்தால் சரி.
நன்றி:  தினகரன் நாளிதழ்....

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

பவழப்பாறைத் தடுப்புக்கு ஆபத்து


 ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்பரப்பில் இருக்கும் "பெரும் பவழப்பாறைத் தடுப்பு" ( கிரேட் பேரியர் ரீஃப் ) என்ற இயற்கை அமைப்பு, 1985லிருந்து அதன் பவழப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டது என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த பவழப்பாறைத் தடுப்பு இன்னும் பத்து ஆண்டுகளில் அதன் பவழப்பாறை வளத்தில் கால் பங்குக்கும் குறைவான அளவையே பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 உலகின் மிகப்பெரும் பவழப்பாறைத் தொடரான இந்த அமைப்பிற்கு ஏற்பட்டு வரும் சேதத்தின் வேகம் 2006லிருந்து அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய கடற்கல்விகள் கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
 மிகவும் கடுமையான புயற்காற்றுகள், நட்சத்திர மீன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றாலேயே பெரும்பாலான சேதம் விளைந்திருப்பதாகக் கூறும் இந்த ஆய்வு, கடல் வெப்ப நிலை அதிகரித்ததும் இந்த பவழப்பாறைகள் அரிக்கப்பட ஒரு காரணமாக இருந்திருப்பதாகக் கூறுகிறது. 
சுற்றுச்சூழல் மாசடைவதுடன் தொடர்புபடுத்தப்படும், கடல் அமிலத்தன்மை உயர்வதால், இவ்வாறு சேதமடைந்த பவழப்பாறைகள் புத்துயிர் பெறுவது தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்.......

Monday, October 1, 2012

மீன்வளம் குறையும்


 புவி வெப்பமடைந்துவருவதன் காரணமாக உலக சமுத்திரங்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதத்தால் குறைந்துவிடும் எனத் தெரிவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணினிகள் துணைகொண்டு ஆய்வாளர்கள் அனுமானித்துள்ளனர்.
 நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள பிராணவாயுவின் அளவு குறைந்துவிடுகிறது.
 இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதை விட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
 கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் குறிப்பிட்ட மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது என்றும். பல மீன் இனங்களின் இனவிருத்தி திறனும் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
 நீரில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
 உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றால் மீன்வளத்துக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் அனுமானித்துள்ளனர்.
 கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 ஏனென்றால் பாலூட்டி விலங்குகள் போல சீரான உடல் வெப்பம் கொண்டவையல்ல மீன்கள்.
 சுற்றாடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும்.
மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதனால் அவற்றுக்கு கூடுதலான பிராணவாயு தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
 கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை நோக்கி தமது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.
 இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கிளைமேட் சேன்ஞ் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...


Saturday, September 29, 2012

பாலைவன உயிரினங்கள்


  பாலைவனத்தில் பார்க்குமிடமெல்லாம் மருந்துக்குக்கூட தண்ணீர்கிடைக்காது, ஆனால் இந்த இடத்திலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் முளைக்கின்றனர். இதுதான் இயற்கையின் வினோதம்.
  பாலைவனத்தில் பகலில் கடுமையான வெப்பமும் இரவில் கடுமையான குளிரும் இருக்கும். வெப்பத்தின் கொடுமையை தாங்கிக் கொள்வதற்காக ஆங்காங்கே காணப்படும் புதர்களில் அங்கு வாழும் உயிரினங்கள் ஒதுங்கிக்கொள்ளும். எப்போதவது பெய்யும் மழையின் நீரை சேமித்து வைத்துக்கொள்ளும்.
  பாலைவனத்தில் நத்தைகள் ஏராளமாக இருக்கும் அமெரிக்க பாலைவனங்களில் "பேக் ரேட்" என்ற ஒருவகை எலிகள் உண்டு. வட ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள பாலைவனங்களில் "ஜெர்போவா" என்ற விலங்குகள் உண்டு. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கங்காருவைப்போல நீளமான பின்னங்கால்களை கொண்டிருக்கும். அரேபிய, ஆப்பிரிக்க பாலைவனங்களில் ஓநாய் வகையைச் சேர்ந்த ஒருவகை விலங்கு காணப்படுகிறது.
  பலவிதமான பல்லிகள், ஆந்தைகள், புழு, பூச்சிகள், கொடிய விஷமுடய பாம்புகளை பாலைவனங்களில் அதிகம் காணலாம். இவை உயிர்வாழ நீர் அதிகம் தேவையில்லை. வியர்வை, சிறுநீர் கூட மிகமிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படும். சிறு அளவில் வெளியிடப்படும் இவற்றின் சிறுநீரில் யூரியாவும், யூரிக் அமிலமும் அதிகம்.
  பாலைவன மிருகங்களில் மிக முக்கியமானது ஒட்டகமாகும். இதை பாலைவனக் கப்பல் என்கிறார்கள். உலர்ந்த புல்லும், முட்செடிகளும் இதன் உணவு. அதன் மூக்கு, காது, கண் முதலிவை மணலால் பாதிக்கப்படாடதபடி அமைந்துள்ளது.
  பாலைவனத்தில் புதர்செடிகளும், சப்பாத்திக்கள்ளி வகையைச் சேர்ந்த செடிகளும் காணப்படுகின்றன. புதர் செடிகளில் இலைகளை விட முட்கள்தான் அதிகம். இலைகள் குறைந்திருப்பதால் நீர் ஆவியாதல் குறைவாகவே இருக்கும். சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதி தடித்து சதைப்பற்றுள்ளதாக அமைந்திருக்கிறது. இதிலும் முள் மட்டுமே உண்டு. இலைகள் கிடையாது.
  சில வகை சப்பாத்திக் கள்ளிகளின் முட்கள் நிலத்தை நோக்கி வளர்ந்திருக்கும். இதன் நுனியில் தங்கும் பனித்துளிகள் நிலத்தில் விழுவதால் அடிப்பகுதியில் நீர்ப்பசை இருந்து கொண்டே இருக்கும். இதன் வேர்களும் நிலத்தின் அடியில் வெகுதூரம் பரந்து இருக்கும். பல நாள் வெயில் வாட்டிய பிறகு ஒரு மழை பெய்தால்கூட போதும் இந்த வேர்கள் நீரை முழுமையாக உறிஞ்சிக் கொள்கின்றன. சில கல்ளிச் செடிகள் அவற்றின் அருகில் வேறு எந்த செடியையும் வளர விடாது. இதனால் அதிக உணவும் நீரும் இதற்கு கிடைக்கின்றன. இப்படியாக உயிரினங்கள் பாலைவனத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றன.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

Saturday, September 15, 2012

காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி


 'காய்கறிகள் பெரியதாக காய்ப்பதற்கும், அதிக விளைச்சலை ஊக்குவிக்கவும் செலுத்தப்படும் ஆக்சிடோசின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்'.
 அதிக மகசூலை தருவதற்காக குறிப்பாக காய்கரிகள் பெரிய அளவில் காய்ப்பதற்காக விவசாயிகள்,  ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்கு செலுத்துகின்றனர்.
 இதனால், காய்கறிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், சில காய்கறிகள் அதிக பசுமை நிறத்தையும் பெறுகின்றன. பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
 ஆக்சிடோசின் ஹார்மோன் பிரசவத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. விர, மனிதர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்து அட்டவணையில் ஆக்சிடோசின் இடம் பெற்றுள்ளது.
 ஆனால் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஆக்சிடோசின் கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
 ஆக்சிடோசின் ஹார்மோன் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடும் போது நரம்பு தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கர்பிணிகளுக்கு பிரசவத்தின் போது பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.
 சந்தையில் ஆக்சிடோசின் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விவசாகள் அதை வாங்கி காய்கறி பயிர்களில் செலுத்துகின்றனர்.
 காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
 'ஒரு காய்கறியையோ, பழத்தையோ வாங்கும் போது அது ஆக்சிடோசின் செலுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய சாதாரண மக்களால் முடியாது. இந்த ஹார்மோனால் உடனடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும் பின்விளைவுகள் ஏற்படும் என்கின்றனர்'.

இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

Friday, September 14, 2012

அழிவை நோக்கி 'கிரிசில்ட் ஜயன்ட்' அணில்கள், 4 கொம்பு மான்கள்!


 ஓசூர் வனப் பகுதிகளில் வசி்க்கும் கிரிசில்ட் ஜயன்ட் ஸ்குரில் (grizzled giant squirrel) எனப்படும் அரிய வகை அணில், 4 கொம்புடைய மான் மற்றும் நீண்ட வாலுள்ள குரங்குகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பம். 
 கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில் (zoological name: Ratufa macroura) இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள மலைப் பகுதிகள், இந்தியாவில் காவேரி ஆற்றங்கரையோரம் இருக்கும் காடுகள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மலைக் காடுகளில் காணப்படுகிறது. 
 இந்த அணில்கள் அதன் வாழ்விடம் அழிக்கப்படுவதாலும், அவைகள் வேட்டையாடப்படுவதாலும் அழியும் அபாயத்தில் உள்ளது என்று இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கம் தெரிவித்துள்ளது. 
 முன்னர் இந்த வகை அணில் ஓசூர் வனப்பகுதியில் பதிவு செய்யப்படாத வகையாக இருந்தது. சமீபத்தில் ஏசியன் நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷன்(ஏஎன்சிஎப்) என்னும் அமைப்பு இந்த வகை அணில் குறித்து ஆய்வு நடத்தத் துவங்கியது. 
 கடந்த 2009ம் ஆண்டில் ஏஎன்சிஎப் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன், சரவணன் மற்று செந்தில் குமார் ஆகியோர் இந்த வகை அணில்கள் மேலும் பல்வேறு இடங்களில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
  கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி (கேஏஎன்எஸ்) அமைப்பைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் அதிர்ஷ்டவசமாக கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரிலை கண்டு, அதை புகைப்படம் எடுத்ததால் இந்த வகை அணிகள் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
 அழியும் அபாயத்தில் இருக்கும் இன்னொரு இனம் நான்கு கொம்புகள் உள்ள மான் (டெட்ராசெரஸ் குவாட்ரிகார்னிஸ்). இதை சௌசிங்கா என்றும் அழைப்பார்கள். இந்த மான் அதிகம் தண்ணீர் குடிக்கும் தன்மை உடையது. அதனால் பெரும்பாலும் வற்றாத தண்ணீர் ஆதாரம் உள்ள இடங்களில் தான் வசிக்கும். 
 தமிழக வனத்துறையுடன் சேர்ந்து கேஏஎன்எஸ் மற்றும் ஏஎன்சிஎப் ஆகியவை ஓசூர் வனப் பகுதிகளில் நடத்திய வன விலங்குகள் கணக்கெடுப்பில் இந்த இரண்டு அரிய வகை உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 தமிழகத்தில் காவேரிக் கரையோரங்களில் வசிக்கும் நான்கு கொம்புகள் உள்ள மான் இனம் அநேகமாக அழிந்துவிட்டது என்று டாக்டர் ஏஜேடி ஜான்சிங் அன்மையில் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓசூர் வனப் பகுதிக்குட்பட்ட ராயக்கோட்டா மலைத்தொடரில் உள்ள உடதுர்கம் பகுதியில் இறந்த மான் உடல் கண்டெடுக்கப்பட்டது.
 தற்போது அதே காவேரிக் கரையோரம் உள்ள பல இடங்களில் இந்த மான்கள் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். இந்த மான்கள் ஓசூர் வனத்தில் 3 மான்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாகத் திரிகின்றன. 1970களில் ஓசூர் வனப்பகுதி அலுவலராக இருந்த மறைந்த டாக்டர் ராஜா சிங்கின் மகன் டாக்டர் ரவி ராஜா சிங் அண்மையில் இந்த மான்களைப் பார்த்துள்ளார்.
 ஆடு, மாடுகள் மேய்ச்சல், விறகு சேகரித்தல், காட்டில் விளையும் பொருட்கள் சேகரித்ததலால் இயற்கை வளம் அதிகம் உள்ள இந்த பகுதிகள் அழிவை நோக்கிச் செல்கின்றன. இந்த அரிய உயிரினங்களை அழிவில் இருந்து காக்கும் வகையில் தற்போதைய வன அதிகாரியான உலகநாதன் கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில் வசிப்பிடங்களின் நுழைவாயிலில் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளார். அந்தப் பகுதியை எப்பொழுதும் கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில், 4 கொம்புடைய மானைத் தொடர்ந்து லாங்குர் எனப்படும் நீண்ட வால் உடைய குரங்குகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்

Thursday, September 13, 2012

வெட்டிவேர் செலவில்லாத சுத்திகரிப்பு கருவி!


 அறிவியல் எனற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உரங்களை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்திற்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால் இனி கஷ்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும்... மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முற்க்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.
  நாகரிகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கக் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்ற அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.
 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிபட்ட சூழ்நிலை உள்ள கழிவுநீர் வெளியே செல்லும் பகுதியில் வெட்டிவேர்களை வளர்த்ததில், கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற போன்ற உயர் உலேகங்கள் எல்லாம் சிலமாதங்கலில் காணமல் போய்விட்டன. கழிவுநீர் நல்ல நீராக மாறிவிட்டது. இத்தைகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்தது வெட்டிவேர்.
 ஆஸ்திரேலியாவை காட்டிலும் சாக்கடைகள் அதிகம் ஓடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிவமைத்ததில், சில மாதங்களில் அந்த நீர் நல்ல நீராக மாரியது.
 நமது சென்னை மாநகரின் இதை வளர்க்கலாம். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர்களையும் இம் முறையிலே சுத்திகரிக்கலாம் செலவே இல்லாமல்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, September 4, 2012

நெல்லு விளையுற பூமியில தட்டானும், தும்பியும் வாழணும்


 ஜெட் வேகத்தில் தட்டான், தும்பி பூச்சிகள் பறந்து செல்வது பார்ப்பதற்கு பரவசமூட்டும். குறிப்பாக நெல் வயல் பகுதிகளில் பகல் நேரத்தில் கூட இவை அதிகமாக சுற்றி திரிவதை காண முடியும். ஆனால் பல வகை பூச்சிகளிடமிருந்து நெற்பயிரை காக்கும் பாதுகாவலர்களாக இவ்விரு பூச்சியினங்களும் விளங்குகின்றன.
 உலகளவில் 6,000 வகையான இரை விழுங்கிகள் உள்ளன. அதில் தட்டான் மற்றும் தும்பி பூச்சிகள் முக்கியமானவை. தட்டான் மற்றும் தும்பி பூச்சிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகையை சேர்ந்தவை. உடல் அமைப்பில் சில வித்தியாசங்களை வைத்து தான் தட்டான், தும்பி பூச்சிகள் என்பதை கண்டறியமுடியும். பயிரின் பச்சையை தாக்கி, தீமை செய்யும் பூச்சிகளை தின்று அழித்து விடுகிறது. இதனால் இதை இரை விழுங்கிகள் என்றும் அழைக்கின்றனர்.
 கொசுக்களை அழிப்பவை: தாய் பூச்சிகள் விடும் முட்டையில் இருந்து வெளி யேறும் இப்பூச்சிகள் குறைந்தபட்சம் 8 நாள் முதல் அதிகபட்சம் 3 மாதம் வரை உயிர் வாழும். முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் நீர் நிலையில் உள்ள கொசு, பூச்சிகளை பிடித்து உண்டு தனது இரைவேட்டையை துவக்கி விடுகிறது. நீர்ப்பாங்கு உள்ள நெல் வயல்களுக்கு படையெடுக்கும் இவ்விரு பூச்சிகளும், அங்குள்ள புகையான், தத்துப்பூச்சி, இலை மடக்குப்புழுவை அழித்து விடுகிறது. பயிர்களை எளிதில் நாசம் செய்யக்கூடிய புகையான், தத்துப்பூச்சிகளை உருத்தெரியாமல் அழித்து விடுவதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. தட்டானும், தும்பையும் அதிகமாக பறந்தால் அந்த பகுதியில் நெற்பயிர் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பலாம்.
 கண்கள் பெரியதாக பார்ப்பதற்கு முட்டைக் கண்கள் போல இருக்கும். இதன் ஒரு கண்ணில் 3000 கூட்டுக் கண்கள் இருக்கும். இந்த கண்களின் உதவியுடன் 360 டிகிரி அளவுக்கு உள்ள எல்லா பகுதிகளிலும் பறக்கிற இரைகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இவை 25 கிலோ மீட்டர் முதல் 35 கிலோ மீட்டர் வரை வேகமாக பறக்கும்.  

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

கழிவறையை விட அசுத்தமானது உங்கள் செல்போன்


 கழிவறையை விட மிக அசுத்தமான ஒன்றாக நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் உள்ளது என்றால் அது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. ஏன் என்றால், பல இடங்களில், பல நபர்களால் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை எப்போதும் சுத்தப்படுத்துவதில்லை என்பதால், ஏராளமான கிருமிகள் நிறைந்ததாக செல்போன் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேவும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ்  கெர்பா தெரிவித்துள்ளார்.

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்.....

Tuesday, August 28, 2012

தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால் மட்டும்   அ...   ஆ...

சிரிக்கும் போது மட்டும்   இ...   ஈ...

சூடு பட்டால் மட்டும்   உ...   ஊ...

அதட்டும் போதும் மட்டும்   எ...   ஏ...

ஐயத்தின போது மட்டும்   ஐ...

ஆச்சரியத்தின் போது மட்டும்   ஒ...ஓ...

வக்கணையின் போது மட்டும்   ஔ...

விக்களின் போது மட்டும்   ஃ...

என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி  பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!


இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.....


'அம்மா' எனும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!


 தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை உருவான விதம் அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக  'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதல் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.
 அதே போன்றுதான் 'அப்பா' என்ற சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


மரம் வளர்ப்போம் புவி காப்போம் .....
 மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....


Saturday, August 18, 2012

தூக்கணாங்குருவி


 தெற்காசிய நாடுகளில் காணப்படும் தூக்கணாங்குருவி, தமிழகத்தின் செழிப்பு மிகுந்த பகுதிகளில் வசித்து வரும் ஒரு அதிசய பறவை.
 செழிப்பான நீர்பகுதி, உயரமான பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி குடும்ப வாழ்க்கை நடத்தும் தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவி இனத்தைப் போன்று வேகமாக அழிந்து வரும் இனம். காய்ந்து போன ஆறுகள், ஏரிகள், கண்மாய்கரைகள் என பசுமை குறைந்து வரும் நிலையில், இந்த தூக்கணாங்குருவி இனமும் மாயமாகி வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எந்த திசையில் பார்த்தாலும் தெரியும் தூக்கணாங்குருவி கூடுகளை இன்று பார்ப்பது அரிது. காய்ந்தபுல், வைக்கோலால் கூட்டை நெய்கிறது ஆண் குருவி. மேல்பகுதி உருண்டையாகவும், கீழ்பகுதி நீட்சியாகவும் இருக்கும். உட்புறம் மிருதுவான நெல் வைக்கோல் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவற்றுடன் ஈரகளிமண், உலர்ந்த மாட்டு சாணியை பசை போன்று பயன்படுத்தி இந்த உறுதியான கூட்டை அமைக்கிறது. இவை வசிக்கும் இடத்தில் 20 -30 கூடுகள் இருக்கும்.
 ஒரு கூடுகட்ட பொருட்களை சேகரிப்பதற்கு 500 முறை பறந்து செல்கிறது. 4 ஆயிரம் பதர்களால் கூட்டை முழுமை செய்கிறது. ஒரு கூடு கட்டுவதற்கு 18 நாட்கள். குடுவை போன்ற பகுதிக்கு 8 நாட்கள். ஆண்குருவிக்கு பெண் துணை உறுதியான பின் தான் கீழ்பகுதியில் உள்ள நீட்சியான பகுதியை ஆண்குருவி கட்டுகின்றது. கூடுகட்டி முடித்த பின் பெண் குருவியை அழைத்து வருகிறது. கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை எனில் சில வேளை வெளியேறும். அல்லது அது மாற்றியமைக்கும். பெண் குருவி 3 - 4 முட்டையிடும். 15 நாட்கள் அடைகாக்கிறது. இரவில் கூட்டில் ஈரமண் கொண்டுவந்து அதில் மின்மினிப்பூச்சியை பிடித்து அதில் பதித்து வைத்து ஒளிபெறும் ஆற்றல் கொண்டவை இவை. குஞ்சுகள் பறந்ததும், ஆண் குருவி புதிதாக அடுத்த வீடுகட்டத் துவங்கி விடுகிறது. இரண்டு கி.மீ., தூரத்திற்குள்ளாக இவை கூடுகளை மாற்றிவிடும்.
 சமூகப் பறவை. குழுக்களாக வாழும். பறக்கும்போது அழகிய வடிவமைப்பில் குழுக்களாகப் பறக்கும்.      
 வயல்வெளிகளிலுள்ள தானியங்களைத் தின்பதால் விவசாயிகளுக்கு இந்தப் பறவையைப் பிடிக்காது. நெல், சோளம், வயல்களில் கூட்டமாக இறங்கினால் கதிர்களை மொட்டையாக ஆக்கிவிடும் இதை விரட்டுவதற்கு விவசாயி காலை, மாலை மிகவும் சிரமப்படுவார்கள். 
 நெற்கதிர்களும் புற்களும் தென்னங்கீற்று, கரும்பு சோகை கூடுகட்டும் பொருள்களாகவும் இந்தப் பறவைக்குப் பயன்படுகின்றன. சமயங்களில் புழு பூச்சிகளையும் சாப்பிடும்.
 கிராமங்களில் பாசன வளம் குன்றியதால் நீரோடைகள் நாடிச் செல்லும் தூக்கணாங்குருவி இனம் இன்றும் பல காலம் வாழவேண்டுமெனில் நாம் பசுமையை பாதுகாப்பதும் அவசியம்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.


Thursday, August 16, 2012

தேயிலை கதிர்வீச்சை தடுக்கும்

 தலைவலியாக இருந்தாலும் சரி, கொஞ்சம் டல்லாக இருப்பது போல தெரிந்தாலும் சரி, சூடாக டீ என்ற தேநீரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி  நிச்சயம். அந்தளவுக்கு தேநீருக்கு சக்தி உண்டு. தேநீரின் மூலப்பொருளான தேயிலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதயம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது தேயிலை. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சற்று விரிவடையச் செய்ய வைப்பதிலும் இதற்கு  முக்கிய பங்கு உண்டு. மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டி நமது வேலை செய்யும் திறனை அது முறுக்கேற்றுகிறது. தேநீரில் உள்ள அமினோ அமிலமான ‘காட்டாசின்’ உடலில் சேருகிறது. இந்தக் காட்டாசினில் வைட்டமின் ‘பி’ சக்தி நிறைந்திருக்கிறது. இது தந்துகிக் குழாய்களைப் வலுப் படுத்தும் சக்தி படைத்தது. மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் சிட்ரின், ருட்டின், எஸ்குலைன் போன்ற பொருட்களைக் காட்டிலும் காட்டாசினுக்கு சக்தி அதிகம்.  ‘காட்டாசின்’ என்ற பொருளுக்கு கதிர்வீச்சு முறிப்புக் குணமும் உண்டு. மனித உடலில் ‘ஸ்டிரான் ஷியம் 90’ ஏற்படுத்தும் தீய விளைவுகளை முற்றிலும் அகற்றி விடும் இது.
 கதிர்வீச்சு ‘ஐஸோடோப்’ எலும்பு மஜ்ஜையை அடையும் முன்னர் அதனை இப்பொருள் உறிஞ்சி விடுகிறது  என்கின்றனர் ஆய்வாளர்கள். தந்துகிகளை வலுவாக்குவதன் மூலம் மனித உடலில் ‘அஸ்கார்பிக்’ அமில அளவு சீராகிறது. காட்டாசினுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும் உண்டு என்று லேட்டஸ்ட் ஆய்வுகள் கூறுகின்றன. விதவிதமான தேநீர் வகைகள் யாவும் ஒரே செடியில் இருந்து பறிக்கப்படும் இலைகளை வெவ்வெறு வித மாகப் பதப்படுத்துவதன் மூலம் கிடைப்பவைதான். பதப்படுத்தும் முறையைப் பொறுத்து அவற்றின் தரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தேயிலையில் இரண்டு வகை உள்ளன. அவை சீனத் தேயிலை (சைனன்சிஸ் வகை), அசாம் தேயிலை (அசாமிக்கா வகை). பச்சைத் தேயிலை சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இது ‘கேமில்லியா’ என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது படிப்படியாக மேற்கு மற்றும் கீழை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பச்சைத் தேயிலைத் தயாரிப்பின்போது இலைகள் உலர்த்தப்படுகின்றன. ஊற வைத்து நொதிக்க வைக்கப் படுவதில்லை. வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படும் பச்சைத் தேயிலையில் முக்கியமாக நான்கு ‘பாலிஃபீனால்கள்’ உள்ளன. இவை மொத்தமாக ‘கேட்டகின்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் ஆகும். அதாவது இவை நமது வேதியியல் பண்பினால் ஆக்ஸிகரணமாகும் செயல்களைத் தடைப்படுத்துகின்றன. இதனால்  கேட்டகின்களால் வைரஸ்களை எதிர்கொள்ள முடிகிறது.
 பச்சைத் தேயிலையில் ஒருவர் தேநீர் தயாரித்து குடித்து வந்தால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். அதேபோல புற்றுநோய் செல்கள் பிரிந்து வளர்வதையும் இது தடுக்கிறது. பல வகையான புற்று நோய்களில் இருந்து பச்சைத் தேயிலை நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
 வளர்ந்த நாடுகளுள் சீனாவில் இதய மற்றும் ரத்தக் குழாய் நோய்கள் 80% குறைவாக இருக்க இதுவே காரணம். ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பச்சைத் தேயிலை மூளையில் முதுமை ஏற்படுவதைக் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் அதிகம் இருப் பதால்தான், உலகில் பல நாட்டு மக்கள் தேநீர் அதிகமாக அருந்துகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் காஃபியைத்தான் அதிகமாக அருந்துவதாகச் சொல்லும் ஆய்வுத் தகவல்தான் வினோதமாக இருக்கிறது!

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?