Thursday, June 30, 2011

நமது நாடு 26.இயற்றமிழ்

  உள்ளத்து எழும் உணர்ச்சிகளுக்கேற்ற ஓசைகளிற் பாடப்படும் இசைப்பாடல்களையன்றி, வரலாறு, கதை, இலக்கனம் முதலிய பிற பொருள்களை விளக்கும் நூல்களும் செய்யுள் நடையில் எழுதப்படலாயின. அவ்வகை நூல்கள் இயற்றமிழ் என்னும் தலைப்பில் அடங்கும். தமிழ் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுத்து நிலை அடைந்திருந்தது. ஆகவே அதன்கண் பல இயற்றமிழ் நூல்கள் தோன்றியிருந்தன எனக் கொள்ளலாம். இன்று காணப்படும் இயற்றமிழ் நூல்களுள் மிகப் பழமையுடையது தொல்காப்பியம். இது இடைச்சங்க காலத்துச் செய்யப்பட்டதென நம்பப்பட்டு வருகிறது. தொல்காப்பிய காலத்துக்கு முன் பல இலக்கண நூல்கள் இருந்தனவென்பது தொல்காப்பியச் சூத்திரங்கள் பலவற்றால் அறியக்கிடக்கின்றது. முன் மிக விரிந்து கிடந்த இலக்கணநூற் கருத்துக்கள் தொல்காப்பியர்காலம் முதல் சுருக்கி எழுதப்படலாயின. இதனால் தமிழ் மிக உச்ச நிலை அடைந்திருந்த காலம் தொல்காப்பியத்துக்கு முன்னர் என்று நன்கு தெளிவுறுகின்றது. தொல்காப்பியத்தில் தமிழ் தொன்மொழி என வழங்கப்பட்டது.
   இன்று தமிழிற்கிடைக்கும் இயற்றமிழ் நூல்களிற் பழையன எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சிந்தாமனி, மணிமேகலை, நீலகேசி முதலியன. இராமாயணம் பாரதம், தலபுராணங்கள், நிகண்டு நூல்கள் முதலியன பிற்காலத்தெழுந்த இயற்றமிழ் நூல்களுட் சில.
   பழைய இயற்றமிழ் நூல்கள் வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாடல்களாற் பாடப்பட்டுள்ளன. அவைகளைப் பாடுவதற்கேற்ற ஓசைகள் செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் முதலியனவாகும். விருத்தப்பாக்கள் பிற்காலத்துத் தோன்றியன. இன்று உரை நடையிற் றேன்றி மிளிரும் நூல்களையும் இயற்றமிழ் நூல்களில் அடக்கலாம் உரை நடையில் இயன்ற நூல்கள், மேடையில் ஏறிச் சொற்பொழிவாற்றுவோன் தான் கூறும் கருத்துகளுக்கேற்ப ஓசையை எடுத்தும் படுத்தும் நலிந்தும் பேசுவதுபோலப் பொருளுக் கேற்பப் படிக்கப்பட வேண்டியன. இயற்றமிழ் நூல்களிலும் இசைத்தமிழுக்குரிய சிறு பகுதிகள் காணப்படுதல் இயல்பு.
   நாடகம், இசை, இயல் என்னும் இம் மூன்று வளர்ச்சிகளும் படி முறையே தமிழ் மக்களிடையே தோன்றி இயற்கையாக வளர்ச்சியுற்ற மையினாலேயே இயல் இசை நாடகம் என்னும் வழக்குத் தமிழ்மொழியில் மாத்திரம் காணப்படுகிறது. பிறமொழிகளிலும் இயல் இசை நாடகம் என்னும்  மூன்றும் காணப்படுகின்றன வாயினும் மொழியோடு தொடர்பு படுத்தி இயல் இசை நாடகச் சேர்மனியம் இயலிசை நாடக ஆங்கிலம் என வழங்கப்படாமை அறிக.

நமது நாடு தொடரும்...

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Tuesday, June 28, 2011

தேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்

   தேனீக்கள் நமக்கு உற்ற நன்பன் என்பதை இதற்கு முன் இரண்டு இடுகையில் கூறியுள்ளேன். அதன் அவசியத்தை அது நமக்கு, எப்படி உதவி புரிகிறது என்பதையும் கூறியிருந்தேன் அதை மறந்ததால் உணவு உற்ப்பத்தி எப்படி குறைகிறது என்பதை பார்ப்போம்.
   விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் உற்ற நண்பனாக விளங்கும் தேனீக்களை விவசாயிகள் மறந்ததால், விளைச்சலும் குறைந்து வருகிறது. இந்தியாவின் தேன் உற்பத்தியில் பஞ்சாப் மாநிலமும், தமிழகத்தில் கன்னியாகுமரி வட்டமும்
முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் மாவட்டங்கள் தோறும் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தேன் உற்பத்தியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
   தேனீக்கள் சூரியகாந்தி, பருத்தி, புளி, வேம்பு, தைலமரம், மிளகாய், புங்கமரப் பூக்களிலும், ரப்பர் இலைகளில் இருந்தும் தேனை பெறுகின்றன. தென்னை, செம்பருத்தி, ரோஜாப்பூக்களில் இருந்து மகரந்தங்களை
   சேகரிக்கின்றன. மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற வாசனைப் பூக்களில் தேன், மகரந்தம் கிடைப்பதில்லை. தமிழகத்தில் பரவலாக வேம்பு, புளிய மரங்கள் காணப்படுகின்றன. தென்னை, மா, புளி, வேப்பந்தோப்புகளில் தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்த்தால், பூக்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, உற்பத்தியும் 30 சதவீதம் வரை அதிகரிக்கும். வளர்ப்பது எளிது: இந்திய தேனீக்களை வளர்ப்பது மிகவும் எளிது. மூன்றடுக்கு கொண்டு சிறிய பெட்டியில் தேனீக்களை வளர்க்கலாம்.
   பூக்கும் காலத்தில் 15நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் இரண்டு கிலோ தேன் வரை எடுக்கலாம். தேனீக்கள் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு வரை சென்று தேனை சேகரிக்கும்.
   விவசாயத்தோடு, தேன் மூலமும் வருமானமும் கிடைக்கும். கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் தேனீக்களை கையாளும் தொழில்நுட்ப நிபுணர்கள் பணிபுரிவதால், அவர்களைக் கொண்டு விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்க வேண்டும். விவசாயப் பல்கலை மற்றும் விவசாயத் துறை இதற்கான முயற்சியை துவக்க வேண்டும்.

நன்றி தினமலர்...

வனவிலங்குகள், பறவைகள் பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Monday, June 27, 2011

உலக வெப்பமயமாதல்... காடு வளர்ப்பால் பயனில்லை!

   காலம் காலமாக வரை முறையின்றி இயற்கை வளத்தை அழித்ததன் காரனமாக, சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்கான பலனை தற்போது அன்பவிக்கத் தொடங்கியிருக்கிறோம். உலகத்தின் வெப்பநிலை உயரத் தொடங்கியிருப்பதன் விளைவை இனிமேல் இன்னும் கடுமையாகச் சந்திக்கப்போகிறோம்.
   இப்பிரச்சினையில் இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்று, வீணான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் மரங்களை வளர்த்துக் காடுகளை உருவாக்குவது.
   இதற்கு, கியோட்டோ பருவ நிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐ.நா.வும் ஆதரவு அளிக்கிறது. மரங்கள், 'ஒளிச்சேர்க்கை' மூலம் காற்றில் உள்ல கார்பன்-டை-ஆக்சைடை பெருமலவில் உறிஞ்சிக் கொள்ளும் என்று கருதப்படுகிறது.
   ஆனால் இதைவிட இன்னும் தீவிரமாக அதிகப் பரப்பில் காடுகளை உருவாக்கினாலும் அதனால் பசுமைக்கூட வாயுக்களுக்கு எதிராக பெரிதாகப் பயனிருக்காது என்று கண்டுபிடித்துக் கூறுகிறார்கள், சுர்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
   மரங்களை வளர்ப்பது இப்பிரச்சினையில் ஓரளவுதான் கை கொடுக்கும். காரணம், செடிகள் மரமாக வளரப் பல ஆண்டுகள் ஆகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளோ நீடித்திருக்கக்கூடியவை. எனவே பல நூற்றாண்டுகளுக்கு அவற்றின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
   இது தொடர்பான ஆய்வில், பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேக் அரோரா, நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்கள் கூறும் போது, "உலகின் 50 சதவீத நிலப்பகுதியைக் காடுகளாக மாற்றினால்கூட, உலக வெப்பமயமாதலுக்கு அது பெரிதாகத் தடை போடாது. அப்படியை செய்வதாக இருந்தாலும், விளைநிலங்களை எல்லாம் காடுகளாக மாற்றுவது சாத்தியமில்லை. காரணம், அதிகரித்து வரும் மக்கள் தொகைதான்" என்கிறார்.
   காடு வளர்ப்பால் பொதுவாக நன்மைதான். என்றாலும், அது மட்டுமே உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பது இதில் இருந்து தெரிகிறது. இருந்தாலும் நாம் மரம் வளர்த்து காடுகள் அமைப்போம்.
நன்றி: தினத்தந்தி...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்.......

Saturday, June 25, 2011

அதிவேக ரயில்

     நமது நாட்டில் பெரிய திட்டங்கள் பொதுவாக இத்தனை ஆண்டுகளில் முடிவடையும் என்றும் அதன்பின் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்படுவதுண்டு. அவை பெரும்பாலும் குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிவதில்லை. சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட தாமதமாகலாம். ஆனால் சீனாவிடம் மட்டும் இந்தத் தாமதம் என்பது அறவே இல்லை என்பது அதிசயம். ஆனால் உண்மை. லேட்டஸ்ட்டாகப் பாருங்கள். சீனாவின் இருபெரும் நகரங்கள் பெய்ஜிங், ஷங்காய். இரண்டு நகரங்களுக்கும் இடையே அதிவேக ரயில் பாதை போட அரசு திட்டமிட்டது. வேலை முடிந்துவிட்டது. இன்னும் ஒருமாதத்தில் ரயில்கள் ஓட இருக்கின்றன.
     எப்போது வேலை முடிந்தது? குறிப்பிட்ட தேதிக்கு ஓராண்டு முன்னதாக! தயவுசெய்து மூக்கின் மேலிருந்து விரலை எடுங்கள். மீதியையும் கேட்டுவிட்டு மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
    இந்த அதிவேக ரயில் பாதையில் ஓடப்போகும் ரயில்கள் இன்றைய அளவில் உலகில் மிகவும் பாதுகாப்பான ரயில்கள். ரயில் பெட்டிக்குள் ரயில் ஓடும் சப்தம் கேட்கும் இல்லையா? இந்த ரயில் பெட்டிக்குள் ரயில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது அந்தச் சப்தத்தின் அளவு 61 டெஸிபல்லாக இருக்கும். ஒரு விமானம் பறக்கையில் அதற்குள் கேட்கும் ஒலியின் அளவு 81 டெஸிபல்ஸ். 120 கி.மீ. வேகத்தில் போகும் காருக்குள் 76 டெஸிபல்ஸ்.
    சீன ரயில்வே பொறியாளர்களுக்குச் சல்யூட் அடிக்க வேண்டும் போலத் தோன்றவில்லையா?
     இன்னொரு தகவல். பெய்ஜிங் - ஷங்காய் இடையே உள்ள தூரம் 1318 கி.மீ. இதுவரை இந்தத் தூரத்தைக் கடக்க பத்து மணிநேரம் பிடித்தது. இனி அதிநவீன வேக ரயிலில் போனால் 4 மணி 48 நிமிடங்கள் மட்டுமே!
    இன்று உலகில் ஓடும் அதிவேக ரயில்களில் முதல் பரிசு இந்த சீன ரயிலுக்குத்தான். இந்த ரயிலில் மணிக்கு 380 கி.மீ. வேகத்தைச் சர்வ சாதாரணமாகத் தொடமுடியும்!
   நமது சென்னையில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் எப்போது முடியும் குறிப்பிட் காலமா? எப்போது என்று யாருக்குத் தெரியும்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

 

அதிசய மூலிகைகள்!

   மெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் கண்டறிந்த மூலிகைகளைப் பற்றிச் சுவையான விவரங்களைத் தந்திருக்கிறார். அவர் கூறியுள்ள தாவரங்கள், மூலிகைகள் ஆகியவற்றைப் பற்றி இன்றை நாகரீக உலகுக்குத் தெரியாது.
   சிலதாவரங்களின் சாற்றை அரிந்தினால் உடனடியாக உடலை விட்டு உயிர் பிரிந்து விடுமாம். சில தாவரங்களை உட்கொள்வோருக்குப் படிப்படியாக இளமைத் தோற்றம் ஏற்பட்டு விடும். அவற்றை இளைஞர்கள் உட்கொண்டால் அவர்களுடைய ஆண்மைத் திறன் அளவு கடந்து அதிகரித்துவிடும். வேறு சில தாவரங்களை அந்தி வேளையில் புசித்தால் உடல் ஒளிரத் தொடங்கிவிடும். இரவில் பயணம் செய்வதற்கு அந்த ஒளியே போதும். வேறு விழக்குகள் வேண்டாம்.
   பண்டைகாலத்தில், தாவரங்களிள் ரகசியங்களை அறிந்த யோகிகள் பலர் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். பசி தெரியாமல் இருக்கவும், இமையமலைச் சாரலில் குளிர் தெரியாமல் இருக்கவும் இவர்கள் சில பச்சிலைகளைப் புசித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.
   தேள்கடி, பாம்புக்கடி போன்ற விஷங்களை அகற்றுவதற்கும், வெட்டுக் காயங்களைக் குணப்படுத்துவதவும் பச்சிலைகள் உள்ளன. பல வியாதிகளைக் குணப்படுத்தும் திறன் வாய்ந்த மூலிகைகள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அவை வேதியல் முறையில் உருமாறிப் புட்டிகளில் சிறைப்பட்டு புதுமையான மருத்துவப் பெயர்களுடன் மீண்டும் நம்மிடமே வருகின்றன.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

Friday, June 24, 2011

நமது நாடு 25.இசைத் தமிழ்   மனிதனுடைய உள்ளத்தெழும் உணர்ச்சிகளுக்கேற்றவாறு எழும் மெய்ப்பாட்டிலிருந்து நாடகம் வளர்ச்சி யுற்றதென்று முன் இடுகையில் பார்த்தோம். உணர்ச்சிகளுக் கேற்ப மனிதன் தோற்றுவிக்கும் ஓசைகளிலிருந்து இடை வளர்ச்சியுற்றது. வீரம், மகிழ்ச்சி, அழுகை போன்றவைகளை உணர்த்தப் பாடப்படும் பாடல்கள் வெவ்வேறு ஓசைகளிற் பாடப்படுதலை நாம் காண்கின்றேம். இசையினால் மணிதனின் உள்ளத்தில் எவ்வகை உணர்ச்சியும் எழுப்பலாம் எனக் கருதப்பட்டது. ஆகவே கால இடங்களுகேற்ற இசைகள் பாடப்பட்டன. தமிழர் மிகப் பழைய காலத்திலேயே மிக்க இசைப்பயிற்சி யுடையவர்களாயிருந்தார்கள். குழந்தைகளைத் தாலாட்டுதல் முதல் எல்லாவற்றுக்கும் இசை பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களைக் குறித்து அழும் அழுகைதானும் இசையுடையதாகும். ஆடவரும் மகளிரும் இசையைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். அரசர் அவைகளில் பாடி அவர்களை மகிழ்விக்கும் பாடன்மகளிர் பலர் இருந்தனர். கதைகள் நாடக முறையில் நடிக்கப்பட்டன. அவைகளுக்கு இசை வேண்டப்பட்டது.
   தமிழ் நாட்டில் வழங்கிய இடைக்கருவிகளுட் சில யாழ், வீணை, குழல், மத்தளம், கொம்பு, சங்கு, தாளம் முதலியன. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என நால்வகையாக வழங்கின. வாய்ப்பட்டு மிடற்றுப்பட்டு எனப்பட்டது. தமிழில் வழங்கிய ஆதியிசைகள் ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உளை, இளி, விளரி, தாரம் என்பன.
   பண்டைய நாளில் பாணர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். அவர்கள் இசை பாசுவதில் மிகத் தேர்ச்சியுடையவர். அவர்கள் ஊர் ஊராகச்சோன்று அரசரையும் செல்வரையும் பாடினார்கள். அவர்களின் இசைப்பாடல்களுக்கு உவந்து அன்றேர் அவர்களுக்குப் பொருள் வழங்கினர். பெரிய புராணத்திலும் நாலாயிரப் பிரபந்தத்திலும் காணப்படும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் திருப்பாணாழ்வாரும் பாணர் மரபினரேயாவர் திரு நீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணியாரே சைவத் திருமுறைகளுக்குப் பண் வகுத்தார்.
   இசைத்தொடர்ராக மூன்று பொருள்கள் கருத்திற் கொள்ளத்தக்கன. பாடல்கள் எளிதில் பொருள் விளங்கத்தக்கனவா யிருத்தல் ஒன்று. பாடல்களில் இனிய சொற்களும் மேலான கருத்தும் அமைந்திருத்தல் மற்றென்று ஆகும். பொருள் விளங்கமுடியாத பாடலில் நுகர்வதற்குரியது மூன்றில் ஒரு பகுதியேயாகும்.
   தமிழ் நாட்டில் தெலுங்கு கன்னட இந்திப் பாடல்கள் பெரிதும் இசைப்புலவர்களால் பாடப்பட்டு வந்தன. அவைகளின் குறையைத் தமிழ் மக்கள் அறியலானர்கள். தமிழ்மக்கள் இசையைக்கேட்டு நுகர்வதற்குத் தமிழ்ப் பாடல்களே வேண்டும் என்னும் கிளர்ச்சி எழுந்தது. இதனை எதிர்த்து வழக்காடிய ஒரு சார்பும் உண்டு. இப்பொழுது தமிழ் இசை உணர்ச்சி நாடெங்கும் கமழ்கின்றது.

நமது நாடு தொடரும்.

இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

Saturday, June 18, 2011

பழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்

   பொதுவாக, பழங்கள் எல்லாமே இனிப்புச் சுவையுடையதாகவே இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சுவை கசப்பாகவோ அல்லது புளிப்பாகவோ இருக்கும். இப்படி சுவை மாறுவதற்கு என்ன காரனம்.
   பழங்களுடைய இனிப்புச் சுவைக்கு குளுக்கோஸ், பிரக்சோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரைப் பொருள்கள் அதிகளவில் இருப்பதுதான் காரணம். என்றாலும், இதற்கு மற்றொரு சுவராசியமான காரணமும் உண்டு.
   பழங்களுக்குள் உள்ள விதைகளில் தான் தாவரங்களின் அடுத்த சந்ததியே மறைந்து இருக்கிறது. இந்த விதையை பக்குவமாக விழுந்து முளைக்க வைக்க வேண்டிய பெரிய பொறுப்பு பழங்களுக்குதான் உள்ளது. பிஞ்சாக இருக்கும் போதே இனிக்க ஆரம்பித்து விட்டால், என்னாவது?  விதை உருவாகும் முன்பே அதைப் பறித்து, சுவைத்து விடுவோம் அல்லவா?
   அதனால் தான் விதை, முழுமையாக முதிர்ச்சி அடையும் வரை பழம் பழுக்காமல் காத்திருக்கிறது. பின்பு, விதை முதிர்ச்சி அடைந்தவுடன் பழமும் நன்றாக பழுத்து, அதன் நிறமும், சுவையும் மாறி விடுகிறது. கண்ணைக் கவரும் விதத்தில் சிவப்பு, மஞ்சள் என்று மின்னும் நிறங்களையும் அதன் மணத்தையும் கண்டதும், பறவைகளையும், விலங்குகளையும் சுண்டி இழுக்கச் செய்கிறது.
   உடனே அவை பழங்களை இனம் கண்டு, அவற்றைப் பறித்து சுவைத்து விடுகின்றன. அப்படி இருந்தும் கூட, தாவரங்கள் தங்கள் விதையைக் காப்பாற்ற வேண்டி, அவற்றைக் கசப்பாகவோ அல்லது வழுவழுப்பாகவோ நழுவி கீழே விழும் வகையில் மாற்றி விடுகிறது. ஏனென்றால், பழங்களுக்கு இனவிருத்தி தான் முக்கியம். விதையை பக்குவமாக விதைக்க வேண்டும் என்பதே அவற்றின் கடமையாக உள்ளது. அந்த அனவுக்கு தன் இனத்தைப் பெருக்குவதில் புத்திசாலியாக இருக்கின்றன, தாவரங்கள்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

Friday, June 17, 2011

நமது நாடு 24. நாடகத் தமிழ்


   தமிழ் இயல், இசை, நாடகம் என மூவகைப் படும். ஆதியில் நாடகத் தமிழும், பின் இசைத் தமிழும், அதன் பின் இயற்றமிழும் தோன்றின. இம்மூவகைத் தமிழும் மொழியின் இயற்கை வளர்ச்சிப்படிகளாகும்.
   ஒருகாலத்தில் மக்கள் பேச அறியாதிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் தமது கருத்துக்களை உடல் நிலை, முகம், பார்வை என்பவைகளால் வெளியிட்டனர். சதிர் என்று சொல்லப்படும் நாட்டியம் ஒரு பாட்டின் கருத்தை நடித்துக் காட்டுதலாக அமைந்துள்ளது. முற்காலத்தில் சிவனாடல், வேலன் ஆடல், திருமால் ஆடல் எனப் பலவகை ஆடல்கள் வழங்கின. இவ்வாடல்களும் சதிர் ஆட்டங்கள் போன்றனவே. நடிப்பு, நாடகம், கூத்து, துள்ளல் என்னும் சொற்கள் ஒரு காலத்தில் ஒரு பொருளில் வழங்கின. பிற்காலத்தில் நாடகம் என்பது பலர் சேர்ந்து ஒரு கதையை நடித்துக் காட்டுவதை மாத்திரம் குறிக்க வழங்குவதாயிற்று.
   ஒரு கருத்தை நடித்துக் காட்டும் ஆடலுக்குப்பின் கதையை நடித்துக் காட்டும் நாடகம் தோன்றிற்று. தமிழரிடையே தோன்றி வளர்ச்சியடைந்திருந்தது. தமிழருடைய கடவுள் நடராசன் எனப்படுகிறார். நடராசன் என்பதற்கு நடன சபைக்குத் தலைவன் என்பது பொருள். பொழுது போக்குக் கலையாகத் தொடங்கிய நாட்டியக் கலை கடவுட் புனிதமுடையதாகத் தமிழராற் கொள்லப்பட்டடு ஒருகாற் போற்றப்பட்டது.
   நாடகத் தமிழுக்கு உயிர், மெய்ப்பாடு. மெய்ப்பாடு என்பது உள்ளத்தே தோன்றும் உணர்ச்சி மெய்யிடத்திற்றேன்றுதல்.
   நாடகம் நடிக்கும் மேடை அரங்கு எனப்பட்டது. நாடகத் தமிழ் வளர்ச்சியடைந்த காலத்தில் நாடகத் தமிழ் இலக்கணங்கள் பல எழுதப்பட்டன. அவ்வகை இலக்கணங்கள் இன்று தமிழ் மொழியில் காணப்படவில்லை.
   இன்றைக்கு ஆயிரட்டு எண்ணூறு ஆண்டுகளின் முன் சிலப்பதிகாரம் என்னும் சிறந்த தமிவ் நூல் ஒன்று இளங்கோவடிகள் என்னும் சேர இளவரசனால் எழுதப்பட்டது. அந்நூலில் அரங்கேற்று காதை என்னும் ஒரு பகுதி உள்ளது. அதனகத்தே பழைய நாடகத் தமிழ் வழக்குகள் பல காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்குநல்லார் என்னும் புலவர் ஒருவர் உரை எழுதியுள்ளார். அவர், பழைய நாடகத் தமிழ் நூல்கள் பலவற்றிலிருந்து தமது உரைக்கு மேற்கோள் காட்டியிருக்கிறார். அதனால் முற்காலத்து நாடக இலக்கணங் கூறும் தமிழ் நூல்கள் பல இருந்தனவென்று நாம் நண்கு அறிகின்றோம்.
   சிறுமியர், குரவை கும்மி கோலாட்டம் எனப் பல ஆடல்கள் புரிந்தனர். அரசர் முன்பும் பெருமக்கள் முன்பும் ஆடி அவர்களை மகிழ்விக்கும் கூத்தர் கூத்தியர் பலர் இருந்தனர்.
   நாடக அரங்கு வட்டமாக இருந்தது. அதன்மீது இடப்பட்ட கொட்டில் வட்டவடிவினது. பலவகை ஓவியங்கள் எழுதிய ஆடைகள் மேற்கட்டியாகக் கட்டப்பட்டிருந்தன. அரங்கில் திரைச் சீலைகள் பயன்படுத்தப்பட்டன.
   பலர் முந்நிலையில் ஆடுதல் பாடுதல் முதலியன குலமகளிர்க்கு ஏற்ற செயலாக முற்காலத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் குல மகளிரும் ஆடல் பாடல்களை நன்கு அறிந்திருந்தனர். அரங்கு ஏறி நடிப்போர் கணிகையர் குலத்தினராவே யிருந்தனர்.

நமது நாடு தொடரும்...  

இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Wednesday, June 15, 2011

நிலவில் இருந்து மின்சாரம்

    உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உள்ள ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் மாற்று வழிகளில் மின்சாரத்தை தயாரிப்பது குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சூரிய ஒளி, காற்று, கடல்அலை போன்றவற்ரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகள் அதிகமா இருப்பதால் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி தரவில்லை.
   இதற்கிடையில் ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள், பூமிக்கு தேவையான மின்சாரத்தை நிலவில் இருந்து கொண்டு வர முடியுமா என்று ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமான ஷீமிஷூ கார்ப்பரேசன் இது தொடர்பான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள திட்டம் இதுதான்.
   நிலவின் மீது கனிசமான அளவு சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். பின்னர் அதை பூமிக்கு அனுப்பவேண்டும். இந்த முறையில் 13 ஆயிரம் டெர்ரா வாட் அளவு மின்சாரத்தை தொடர்ந்து தயாரித்து பூமிக்கு அனுப்பமுடியும். இதன் மூலம் பூமியின் மின்சாரத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். நிலவில் மின்சாரம் தயாரிக்கும் பணி மற்றும் அந்த மின்சாரத்தை பூமிக்கு அனுப்பும் பணி ஆகியவற்றில் ரோபோ தொழில் நுட்பத்தை பயண்படுத்தலாம் என்றும் இதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என்பது அந்த நிறுவனத்தின் திட்டமாகும்.
   தற்போது காகித அளவில் இருக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அனவுக்கு சாத்தியம் என்பது பற்றி அந்த நிறுவனம் விளக்கங்களையும் அளித்துள்ளது. மேலும் தற்போதுள்ள விண்வெளி மற்றும் ரொபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என்பது இந்த நிறுவனத்தின் கருத்தாகும்.


காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Tuesday, June 14, 2011

எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன


  எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.
  சமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உடவுகின்றன.
  சாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டிபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும். இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன் எறும்புகளின் வயிற்ரின் பெரோமோன் சுறக்கிறது. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.
  வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.
  சில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன. அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்...

Monday, June 13, 2011

நமது நாது 23.தமிழ்சங்கம்


    தமிழிநாட்டு முவேந்தரும் தமிழைக் கருத்தோடு வளர்த்தனர். அவ்வேந்தரின் அரண்மனையில் தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசனது வெற்றிகளையும் பிற புகழ்களையும் அழகிய இனிய பாடல்களாகப் பாடினர்கள். அப்பாடல்கள் அரண்மனை விழாக் காலங்களில் அரசனதும் பெருமக்களுடையவும் முன்னிலையிற் படிக்கப்பட்டன. புலவர்கள் அரிய கல்விப் பொருள்களை விரிவுரை நிகழ்த்துவதற்கெனத் தனி மண்டபங்கள்பல நகரில் இருந்தன. அவை பட்டி மண்டபங்கள் எனப்பட்டன. அரசர் சபைகளில் தமிழ்ப்புலவர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டனர். அரசன் அவர்களின் வரிசைகளை அறிந்து அவரர்களுக்கு வேண்டுவன நல்கினான்.
   
  பாண்டிய அரசன் ஒருவன், தமிழ் நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்த தமிழ்ப் பெரும்புலவர்களைத் தனது தலைநகருக்கு அழைத்தான். அவன் தனது ஆதரவின்கீழ் தமிழ்க் கழக மொன்றை நிறுவினான். அக்கழகம் பல பாண்டிய அரசர்கள் காலம் வரையில் நன்கு நடைபெற்றது. சங்கப் புலவர் கூடியிருந்து தமிழ் ஆய்வதற்கெனத் தனி மண்டபம் இருந்தது. அதனகத்தே கன்மாப்பலகையினால் செய்யப்பட்ட பீடங்கல் இடப்பட்டிருந்தன. இப்பீடங்களில் சங்க உறுப்பினர்களாகிய புலவர்களே வீற்றிருந்தார்கள். புதிதாகப் புலமையில் அரங்கேறிய புலவர்களும் அவ்விருக்கை இடப்பட்டது. இது, பிற்காலத்தே சங்கப் பலகை விரிந்து புலவர்களுக்கு இடங்கொடுக்கும் கதையாக மாறிற்று.
  புதிய நூல்களை இயற்றுவோர் தமது நூல்களுடன் பாண்டியனது தலைநகருக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் தமது நூல்களைச் சங்கப் புலவர் முன்னிலையிற் படித்துக்காட்டினர். சங்கப் புலவர்களால் குற்றமற்றன என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல்களைச் செய்தோர் சிறந்த புலவர்களாக மதிக்கப்பட்டனர். முற்காலத்தில் கல்வி அறிவாற் சிறந்தவன் என மக்கள்ல் மதிக்கப்படுதலே எல்லாப் புகழ்களிலும் மேலானதாகக் கருதப்பட்டது. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றேன் எனக்கேட்ட தாய் " என்னும் திருக்குறளும் இதனையே குறிக்கின்றது.
    ஆதியில் சங்கம் பாண்டியரின் தலைநகராகிய தென்மதுரையிற் கூடிற்று. அது இப்பொவுதுள்ள மதுரையன்று. அது கன்னியா குமரிக்குத் தெற்கேயிருந்து கடலாற்கொள்லப்பட்டது. கடல் கோளுக்குப்பின் பாண்டியர் தமது தலைநகரைக் கவாட புரத்துக்கு மாற்றினார்கள். அது திருநெல்வேலி மாகாணத்திலேதாமிரவர்ணி என்னும் பொருநை ஆற்று முகத்திவாரத்திலிருந்தது. அங்கு மறுபடியும் தமிழ்ச்சங்கம் கூட்டப்பட்டது. பின்பு கவாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது. அப்பொழுது பாண்டியர் தமது தலை நகரை மணலூருக்கு மாற்றினர். அது திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்தது. சிலகாலத்தின் பின்னர் பாண்டியர் தமது தலைநகரை வையை ஆற்றுக்கு அருகே இருந்த கடம்பவனத்தில் அமைத்து அதற்கு மதுரை எனப் பெயரிட்டனர். மறுபடியும் தமிழ்ச்சங்கம் இங்குகூடி நீண்டகாலம் நடைபெற்றது. ஆதியில் தொடங்கிய சங்கம் தொடர்ந்து நடவாமல் இடையிடையே நின்று போயிற்றல்லவா? அக்காரனத்தினால் முதல் நடைபெற்ற முதற் சங்கம் என்றும், அதற்குப்பின் நடைபெற்ற சங்கம் இடைச்சங்கம் என்னும், இறுதியில் நடைபெற்ற சங்கம் கடைச்சங்கம் என்னும் பெயர் பெற்றன.

நமது நாடு தொடரும்...

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்...

Saturday, June 11, 2011

பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு

  பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை,தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
   பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால், பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன், கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும், சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
  அதாவது, 1 டம்ளர் பழச்சாறில், 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே,பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில், 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமணி...
இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன. ...

விலங்குகளின் வேட்டை


   வேட்டையாடப்படும் விலங்குகள்  மனிதன் விலங்குகளை வேட்டயாடுவது மட்டுமின்றி, விலங்குகளே விலங்குகளை வேட்டையாடுவதும் உண்டு. வேட்டை என்பது ஆதிமனிதன் காலத்தில் இருந்தோ அதற்கு முன்னர் விலங்குகளின் காலத்தில் தோன்றி இருக்கலாம். அசைவ உணவுகளைச் சாப்பிடக்கூடிய விலங்குகள் மனிதனி உட்பட வேட்டையின் மூலமே தங்களுடைய உணவைத் தேடிக் கொண்டன. எந்த மாதிரியான விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன
  ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்த விவங்குகளை வேட்டையாடும் ஒரு விலங்கு, வேறு ஒரு இன விலங்கால் வேட்டையாடப்படுவதுதான் இயற்கையின் அதிசயம். எனவே, இந்த விலங்கு தான் வேட்டையாடும், இந்த மாதிரியான விலங்குகள் தான் வேட்டையாடப்படும் என்றெல்லாம் நாம் குறிப்பாட்டுச் சொல்ல முடியாது. இருந்தாலும், ஒட முடியாதவை, வயதானவை, நோய்வாய்பட்டவை போன்றவற்றைத்தான் மற்ற விலங்குகள் வேட்டையாடுகின்றன என்பது பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உண்மையென நிருபித்திருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
  வீட்டுப்பூனைகளின் வேட்டையாடும் பழக்கம் குறித்து கொல்லப்பட்ட பறவைகள், விபத்தில் சிக்கி இறந்த பறவைகள் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அதிலும் குறிப்பாக அந்த விலங்குகளின் மண்ணீரலை ஆய்வு செய்தனர். காரனம், ஆரோக்கியமான பறவைகளின் மண்ணீரல் பெரிதாக இருக்கும். ஆரோக்கியமில்லாத அல்லது சிறிய பறவைகளின் மண்ணீரல் சிறிதாக இருக்கும். பொதுவாக பறவைககளின் நோய் எதிர்ப்புச் சக்தியை மண்ணீரல் தான் தீர்மானிக்கிறது. எனவே, பூனைகளால் கொல்லப்பட்ட பறவைகளின் மண்ணீரல் அளவைக்கொண்டு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
  மொத்தம் 18 வகையைச் சேர்ந்த 500 பறவைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், விபத்தில் இறந்த பறவைகளின் மண்ணீரலைக் காட்டிலும், பூனைகளால் கொல்லப்பட்ட பறவைகளின் மண்ணீரல் சிறிதாக இருந்தது. மேலும், பூனைகளால் கொல்லப்பட்ட பறவைகளில் பல இளம் வயதாகவும் இருந்தன. பூனைகளிடம் இருந்து எப்படி தப்புவது என்று அவைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது பூனைகளிடம் இருந்து தப்பிக்கும் ஆற்றல் அவற்றுக்கு இல்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
  எனவே, தன்னைவிட சிறிய, நோய்வாய்ப்பட்ட விலங்குகளையே பிற விலங்குகள் வேட்டையாடுகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இயற்கை அன்னையின் குழந்தைகள் விலங்குகள், பறவைகளைக் காப்போம்....

Friday, June 10, 2011

தேள்


   தேள் கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள், செந்தேள். இதன் உடல் கணுக்களால் ஆனது. இன்னும் ஒரு தேள் இனம் நட்டுவாக்கிளி இது கொட்டினால் கவனிக்காவிடில் மரணம் நிச்சயம். இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
   தன்னேட பாதுகாப்புக்காகவும், உணவைப் பெறுவதற்கு உதவி செய்யவுமே தேள்களுக்கு விஷம் இருக்குது.வாலின் நுனியில் உள்ள கொடுக்கால் பூச்சிகளைக் கொட்டி, அது இறந்த பிறகோ அல்லது மயக்கமுற்ற பிறகோ அந்தப் பூச்சிகளை உண்ணும். உலக அளவுல சுமார் ஆயிரம் வகையான தேள்கள் இருக்கிறது. அவற்றில், எழுநூறு வகையான தேள்களுக்கு மிதமான, வீரியம் குறைந்த  விஷம் தான் உண்டு. இந்த நஞ்சைக்கொண்டு மனிதனைக் கொல்ல முடியாது. ஆனா அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள சில தேள்கள், இறப்பை உண்டாக்கும் அளவுக்கு கடுமையான விஷத்தைக் கொண்டிருக்கும்.
  சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இது, வறண்ட, வெப்பமான பகுதிகளில் வசிக்கும். இரவு நேரத்தில் நடமாடுற தேள், பலவிதமான வெட்டுக்கிளிகள், தத்துக்கிளி, கரப்பான்பூச்சி முதல் சிறிய வீட்டுப்பூச்சிகள் வரை சாப்பிட்டு, நமக்கு நன்மை சய்கிறது. தரை, சுவர், கற்கள், மண்மேடு போன்றவற்றுல உள்ள துவாரங்களிலும் இது ஓய்வு எடுக்கும்.அரை அங்குலம் முதல் 12 அங்குலம் வரை வளரும்.

இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்.
இயற்கை நமக்களித்த ஆதார ஒளி சூரியன்!

Wednesday, June 8, 2011

முள்ளங்கி


  சிவப்பு, வெள்ளைன்னு இரண்டு வகை முள்ளங்கி இருக்கிறது. இதில், வெள்ளை முள்ளங்கி தான் மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும்.
   மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும். எகிப்து, கிரீஸ், ரோம் இந்தியா போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். சுத்தமான இரத்தத்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது. சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில் இருந்து வெளியாகுற வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பிறகும் நாம விடுற மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதுல அதிகமாக இருக்குறது தான் அதுக்கு காரணம்.
  உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளங் குழந்தைகளைத் தாக்குற ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சோட சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேகவைத்து, அதுல இருந்து சாறு எடுத்து பாலாடையில வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது.
   சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, மஞ்சள் காமாலை, சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். முள்ளங்கிக்கீரையை எண்னை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவா சாப்பிடுவது நல்லது.
  பச்சையான முள்ளங்கிக்துண்டுகளுடன் காரட், பீட்ரூட் துண்டுகளையும் கலந்து, அவற்றில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலட் போல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியம் கிடைக்கும். கீரையையும், கிழங்கையும் பச்சையாகவே பயன்படுத்துங்கள்.

மரம் வளர்த்து புவி காப்போம்....

வறண்ட மேகங்கள்


   சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பமானது, தண்ணீரைச் சூடாக்கிறது. தன்னால் முடிந்த அளவுக்கு வெப்பத்தை உள்வாங்கும் தண்ணீர், மீதி வெப்பத்தை திருப்பி அனுப்புகிறது. அதுதான் நீராவியாக மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும்போது நீராவி குளிர்ந்து, காற்றில் கலந்திருக்கும் தூசுத் துகள்களில் பட்டு அடர்த்தியாகிறது. அதாவது, நீர்த்துளிகளாக மாறுகிறது. இந்தத் துளிகள் கனமாகவும், பெரிதாகவும் மாறும்போது மழையாகப் பூமியில் விழுகிறது.
   தற்போது வாகனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை ஏராளமாக பல்கிப் பெருகிவிட்டன. இதனால் வளிமண்டலத்தில் புகையின் அளவு அதிகரித்துவிட்டது. இந்தப் புகையால் காற்றில் உள்ள தூசுக்கள்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு தூசுக்கள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மழைத்துளிகள் பெரிதாக வாய்ப்பில்லை. எனவே, சிறுசிறு துகள்களாக மழைத்துளிகள் மாறிவிடும். இப்படி சிறுசிறு துளிகள் அடங்கிய மேகத்தை, வறண்ட மேகம் என்று அழைக்கின்றனர். இதில் மழையே இருக்காது.
   தூய்மையான மழை மேகத்தையும், வறண்ட மேகத்தையும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். தூய்மையான மழை மேகங்களில் இருப்பதில் பாதி அளவு மழைத்துளிகளே வறண்ட மேகத்தில் இருப்பது தெரிய வந்தது.
    எனவே, மழை வேண்டுமென்றால், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்த வெண்டும் ஏராளமான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யாவிட்டால், பிற்காலத்தில் மேகம் கூடும். ஆனால் மழை பெய்யாது என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

நமது நாடு 22.தமிழ்

    தமிழ் ஒருகாலத்தில் இவ்வுலகம் முழுவதிலும் வழங்கிற்று. இவ்வாறு கூறுதல் வியப்பாயிராது, ஏன் ஆதியிற்தோன்றிப் பெருகிய மக்கள் தமிழரே  என்று நமது நாடு முன் பதிவுகளில் படித்தோம். கூட்டங் கூட்டமாகச் சென்று ஆங்காங்குத் தனித்து வாழ்ந்த மக்கள் பேசிய தமிழ் சிறிது சிறிதாக வேறுபட்டது. அவ்வாறு வேறுபட்ட மொழி நெடுநாட்களின் பின் வெவ்வேறு மொழிகள் ஆயின.
  ஆதியில் மொழி எப்படி உண்டாயிற்று தொடக்கத்தில் மக்கள் தமது எண்ணங்களை வெளியிடச் சில ஒலிக்குறிகளை வழங்கினர். காலஞ் செல்லச் செல்ல இவ்வொலிக் குறிகள் சிறிது சிறிதாகப்பெருகி மொழி ஆயின. பேச்சு வாழக்கிலுள்ள மொழிக்குப் பின் எழுத்துக்கள் உண்டாயின. பின்பு இலங்கியங்கள் உண்டாயின. இவைகளுக்குப்பின் இலக்கணங்கள் தோன்றின. இவ்வாறு மொழிதோன்றிப் படிப்படியே வளர்ச்சியடைந்தது.

  கடவுள் தமிழையும் சமக்கிருத்தையும் அருளிச்சேய்தார் எனப்பலர் நம்பிவருகின்றனர். இக்கருத்து மொழி வளர்ச்சி நூலுக்கு மாறுபட்டது. இம்மொழிகளின் உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு முற்கால மக்கள் இவ்வகைக் கதைகளை எழுதிவைத்தார்கள்.

  ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு எழுத்துகள் இருந்தன. அவ்வெழுத்துகளின் திரிபே இக்காலத்து மக்கள் எல்லோருடைய எழுத்துக்களும் ஆகும். ஆதியில் தோன்றியது ஓவிய எழுத்து. ஓவிய எழுத்து என்றால், கால், கை, நடத்தல், இருத்தல், படுத்தல் போன்றவைகளை விளக்க அவ்வவ்வுறுப்புகளையும் அவ்வகைச் செயல்களையும் படத்தின்மூலம் வரைந்து காட்டுதல்.

   பட எழுத்துக்கள் விரைந்து எழுதி விடத்துக் கீறுகளாக அமைந்தன. பின்பு ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பையுங் குறிக்க ஒவ்வொரு குறி கண்டுபிடிக்கப்பட்டது இதற்குப்பின் மொழியிலுள்ள ஓசைகள் எத்தனை என்று ஒலித்துப்பார்த்து ஒவ்வொரு ஓசைக்கும் ஒவ்வொர் எழுத்து உண்டாக்கப்பட்டது. மொகஞ்சொதரோவில் வழங்கிய தமிழ் எழுத்துகள் சில மாற்றம் அடைந்து பிராமி எழுத்துகள் ஆயின. இவ்வெழுத்துக்களைப் பினீசிய மக்கள் வழங்கினர். பிசினியரிடமிருந்து கிரேக்கர் எழுத்தெழுத அறிந்தனர். கிரேக்கரிடமிருந்து உரோமரும், உரோமரிடமிருந்து மற்றைய ஐரோப்பிய மக்களும், எழுத்தெழுத அறிந்தனர். இன்று ஆங்கில மொழியில் வழங்கும் எழுத்துகளும் பழந்தமிழ் எழுத்துக்களினின்றும் பிறந்தனவே.

   தமிழில் பல அரிய நூல்கள் முற்காலங்களில் இருந்தன. அவை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதப்பட்டன. அப்போது ஒவ்வொரு நூலிலும் ஒன்று அல்லது சில படிகளே இருந்தன. ஓலைச்சுவடிகள் சில காலத்திற்குப்பின் பூச்சிகளால் துளைக்கப்பட்டும், ஓடிந்தும் இறந்துவிடும். இக்காரணத்தினால் தமிழ் நூல்கள் பல இறந்தன. தமிழ் நாட்டைப் பலமுறைகளிற் கடல் கொண்டது. கடல்கோள் போன்ற இக்கட்டுக் காலங்களில் மக்கள் தமது பொருள் பண்டங்களை எல்லாம் போட்டுவிட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடியிருப்பார்கள். இக்காரணத்தினாலும் பழைய நூல்கள் இறந்தொழிந்தன. ஆகையினாலேயே தமிழ் மொழியில் எழுதப்பட்ட மிகப் பழைய நூல்கள் கிடைக்கவில்லை.

நமது நாடு தொடரும்...


இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

 

Tuesday, June 7, 2011

நட்சத்திர மீன்


    கடலில் அதிகளவில் கணப்படுபவை கடல் நட்சத்திரமீன்கள். இதன் உடலின் மையப்பகுதி வட்டம் எனப்படும். இதிலிருந்து நீளும் ஐந்து கதிர்கள் ஆரங்கள் எனப்படும். இவை படிப்படியாகக் குறுகி நுனியில் கூர்மையாக இருக்கும். எல்லா ஆரங்களும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. வட்டத்துடன் சேர்ந்து இவை சரியான ஐங்கோண நட்சத்திரமாக உறுவாகின்றன. எனவே கடல் நட்சத்திங்களின் உடல்கள் ஐந்து ஆர சமச்சீர் கொண்டவை.

    இவை, தோலில் உள்ள சுண்ணாம்புத் தகடுகளின் பகுதிகள். இத்தகடுகளே வட்டம், கதிர்கள் ஆகியவற்றின் கடினமாக வெளிச் சட்டகம் ஆகின்றன. நீர்க்குழாய் மண்டலமும் கடல் நட்சத்திரத்தில் உள்ளது.

   இது, வடிகட்டும் தட்டில் இருந்து தொடங்குகிறது. இந்த தட்டில் உள்ள அதிகப்படியான துளைகளின் வழியாகக் கடல் நீர் வடிகட்டப்பட்டு நீர்க்குழாய் மண்டலத்தை நிரப்புகிறது. முதலில் சிறிய கற்கால்வாய் வழியே வந்து நீர், வளையக் கால்வாயை அடைகிறது. இந்த கால்வாயில் இருந்து ஆரத்துக்கு ஒன்றாக ஐந்து ஆரக்கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன. இந்தக் கால்வாய்கள் வழியே நீர், கால்களின் உட்புறத்தை அடைகிறது.

  நீர்க்குழாய் மண்டலம், இயக்கத்துக்குப் பயன்படுகிறது. காலில் நீர் அழுத்தும்போது அது நீண்டு கடலின் அடித்தரையை உறிஞ்சிப் பற்றிக் கொள்கிறது. கால்கள் சுருங்கும்போது நீர் கால்வாயில் திரும்பச் செலுத்தப்படுகிறது. கடல் நட்சத்திரத்தின் உடல், கால் பற்றியிருக்கும் இடத்துக்கு இழுக்கப்படுகிறது.

    கடல் நட்சத்திரங்கள் உணவு உட்கொள்ளும் முறை வித்தியாசமானது. அவை வேட்டை.ாடி உண்ணும் உயிரினங்கள், மெல்லுடலிகளாகும்.

   ஒரு மெல்லுடலியின் ஓட்டு மூடிகளைக் கால்களால் உறிஞ்டிப் பற்றிக் கொண்டு கடல் நட்சத்திரம் அவற்றை ஒருபுறமாக இழுக்கத் தொடங்கும். மெல்லுடலியின் மூடுதசைகள் உடனேயே சிப்பியை மூடிக் கொள்ளும். ஆனால், பின்பு களைத்துப் போகும். கடல் நட்சத்திரத்தின் பல கால்களோ ஒன்று மாற்றி ஒன்றாக வேலை செய்வதால் அது களைப்படுவதில்லை.

   முடிவில் கடல் நட்சத்திரமே மெல்லுடலியை வெல்லும், மெல்லுடலியின் ஓட்டு மூடிகள் திறந்து கொண்டதுமே கடல் நட்சத்திரம் தன் இரைப்பையை உள்வெளியாகத் திருப்பி நீட்டி மூடிகளுக்கு இடையே புகுத்தும். இரைப்பையின் ஜீரண நீர், மெல்லுடலியின் உடலை அதன் சிப்பிக்கு உள்ளேயே ஜீரணிக்கும்.

   கடல் நட்சத்திரத்தின்  இந்த ஊட்டமுறை காரணமாக, மெல்லுடலியானது ஓடுகளால் எவ்வளவுதான் உறுதியாக மூடப்பட்டிருந்தாலும் தப்பமுடியாமல் அதற்கு இறையாகி விடும். கடல் நட்சத்திரம் அதை ஓடுகளுக்கு உள்ளேயே ஜீரணித்து உட்கொண்டு வெற்று ஓடுகளை விட்டுச் செல்லும்.

 
காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...