Showing posts with label கடவுட் கொள்கை. Show all posts
Showing posts with label கடவுட் கொள்கை. Show all posts

Saturday, July 23, 2011

நமது நாடு 28.கடவுட் கொள்கை.

   மிகப் பழைய காலத்திலேயே தமிழ் மக்கள், எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என அறிந்து அவரை வழிபட்டார்கள். நினைவுக்கு எட்டாதவர், எல்லாவற்றையும் இயக்குபவர் என்னும் பொருளில் அவர்கள் எல்லாம்வல்ல அம்முழுமுதற் பொருளுக்குக் கடவுள் இயவுள் என்னும் பெயர்களை இட்டு வழங்கினர். ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொறிக்கப்பட்ட மொகஞ்சொதரோ முத்திரைகளில் கடவுள்  என்னும் பெயர் காணப்படுகிறது.
    கடவுள் உயிர்களிடத்து தாயுந் தந்தையும் பேன்று அருள் வழங்குபவர் என அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் கடவுளை அம்மை வடிவிலும் அப்பர் வடிவிலும் வைத்து வழிபட்டார்கள். அம்மையும் அப்பரும் வேறு வேறு அல்லர் என்பதை விளக்கும் பொருட்டுப் பாதி ஆணும் பாதி பெண்ணுமாயுள்ள வடிவங்களையும் வைத்து அவர்கள் வழிபட்டார்கள்.
   நல்வினை தீவினைகளின் விளைவாகிய ஊழ், மறு பிறப்பு, உயிர்களின் அழிவின்மை போன்ற உண்மைகள் அவர்களால் நன்கு அறியப்பட்டிருந்தன. உள்ளத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினைத்தாலாகிய யோகத்தைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். மொகஞ்சொதரோ முத்திரைகளில் இறைவன் யோகத்தில் அமர்ந்திருக்கும் கோலமுடைய வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் பசுவின் (உயிர்களின்) பதி என்னும் கருத்தை விளக்க அவ்வடிவைச் சுற்றிப் பல விலங்குகள், மக்கள் முதலியவற்றின் வடிவங்களும் வெட்டப்பட்டுள்ளன. உள்ளத்தை ஒரு வழிப்படுத்தி இறைவனை நினைப்பதால் மனிதன் பெரிய ஆற்றல்களைப் பெறுகின்றான். அவ்வகை ஆற்றல் அடைந்தோர் சித்தர் எனப்பட்டார்கள்.
   இவ்வகை ஆற்றல் பெற்றோர் உலக மக்களும், அரசனும் நல்வழிப்படுதல் வேண்டும் என்று கோவில்களில் சென்று கடவுளை வேண்டினார்கள். இவேவாறு செய்யப்படும் பூசை பரார்த்த பூசை (பிறர்பொருட்டுச் செய்யப்படும் பூசை) எனப்படும் இதற்கு எடுத்துக் காட்டு,
"வாழ்க வந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக மும்துயர் தீரவே"

என்னும் சம்பந்தர் தேவாரமாகும்.
   கோவில்கள் நல்லார் வந்து கூடும் இடங்கள் ஆதலின் அவர்கள் இணத்தினால் மக்கல் நல்வவிப்படுத்துவார்கள் என்னும் கருத்துப்பற்றியே ஒளவைப் பிராட்டியாரும் கோயிலில்லாதவூரிற் குடியிருக்க வேண்டாம் என அருளிச்செய்தார்.
   தமிழ் மக்களின் வவிபாட்டுக்குரிய கோவில்களில் ''மலங்கெடுத்து மனங்கரைக்கும்'' திருவாசகம், தேவாரம் முதலிய தமிழ்ப்பால்கள் பத்திச் சுவை ததும்பப் பாடப்படுதல் வேண்டும். தமிழ் மக்கள் பொருள் விளங்கமாட்டாத வடமொழிச் சுலோகங்களைத் தமிழ்க்கடவுளர் முன்னிலையில் ஓதுதல் அறிவுடைடார் செயலாகமாட்டது. மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமாயின் அவர்கள் தமது உயிர் நிலையாயுள்ள கோவில்களில் சீர்திருத்தஞ் செய்தல் வேண்டும்.

நமது நாடு வளரும்...

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...