Saturday, August 18, 2012

தூக்கணாங்குருவி


 தெற்காசிய நாடுகளில் காணப்படும் தூக்கணாங்குருவி, தமிழகத்தின் செழிப்பு மிகுந்த பகுதிகளில் வசித்து வரும் ஒரு அதிசய பறவை.
 செழிப்பான நீர்பகுதி, உயரமான பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி குடும்ப வாழ்க்கை நடத்தும் தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவி இனத்தைப் போன்று வேகமாக அழிந்து வரும் இனம். காய்ந்து போன ஆறுகள், ஏரிகள், கண்மாய்கரைகள் என பசுமை குறைந்து வரும் நிலையில், இந்த தூக்கணாங்குருவி இனமும் மாயமாகி வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எந்த திசையில் பார்த்தாலும் தெரியும் தூக்கணாங்குருவி கூடுகளை இன்று பார்ப்பது அரிது. காய்ந்தபுல், வைக்கோலால் கூட்டை நெய்கிறது ஆண் குருவி. மேல்பகுதி உருண்டையாகவும், கீழ்பகுதி நீட்சியாகவும் இருக்கும். உட்புறம் மிருதுவான நெல் வைக்கோல் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவற்றுடன் ஈரகளிமண், உலர்ந்த மாட்டு சாணியை பசை போன்று பயன்படுத்தி இந்த உறுதியான கூட்டை அமைக்கிறது. இவை வசிக்கும் இடத்தில் 20 -30 கூடுகள் இருக்கும்.
 ஒரு கூடுகட்ட பொருட்களை சேகரிப்பதற்கு 500 முறை பறந்து செல்கிறது. 4 ஆயிரம் பதர்களால் கூட்டை முழுமை செய்கிறது. ஒரு கூடு கட்டுவதற்கு 18 நாட்கள். குடுவை போன்ற பகுதிக்கு 8 நாட்கள். ஆண்குருவிக்கு பெண் துணை உறுதியான பின் தான் கீழ்பகுதியில் உள்ள நீட்சியான பகுதியை ஆண்குருவி கட்டுகின்றது. கூடுகட்டி முடித்த பின் பெண் குருவியை அழைத்து வருகிறது. கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை எனில் சில வேளை வெளியேறும். அல்லது அது மாற்றியமைக்கும். பெண் குருவி 3 - 4 முட்டையிடும். 15 நாட்கள் அடைகாக்கிறது. இரவில் கூட்டில் ஈரமண் கொண்டுவந்து அதில் மின்மினிப்பூச்சியை பிடித்து அதில் பதித்து வைத்து ஒளிபெறும் ஆற்றல் கொண்டவை இவை. குஞ்சுகள் பறந்ததும், ஆண் குருவி புதிதாக அடுத்த வீடுகட்டத் துவங்கி விடுகிறது. இரண்டு கி.மீ., தூரத்திற்குள்ளாக இவை கூடுகளை மாற்றிவிடும்.
 சமூகப் பறவை. குழுக்களாக வாழும். பறக்கும்போது அழகிய வடிவமைப்பில் குழுக்களாகப் பறக்கும்.      
 வயல்வெளிகளிலுள்ள தானியங்களைத் தின்பதால் விவசாயிகளுக்கு இந்தப் பறவையைப் பிடிக்காது. நெல், சோளம், வயல்களில் கூட்டமாக இறங்கினால் கதிர்களை மொட்டையாக ஆக்கிவிடும் இதை விரட்டுவதற்கு விவசாயி காலை, மாலை மிகவும் சிரமப்படுவார்கள். 
 நெற்கதிர்களும் புற்களும் தென்னங்கீற்று, கரும்பு சோகை கூடுகட்டும் பொருள்களாகவும் இந்தப் பறவைக்குப் பயன்படுகின்றன. சமயங்களில் புழு பூச்சிகளையும் சாப்பிடும்.
 கிராமங்களில் பாசன வளம் குன்றியதால் நீரோடைகள் நாடிச் செல்லும் தூக்கணாங்குருவி இனம் இன்றும் பல காலம் வாழவேண்டுமெனில் நாம் பசுமையை பாதுகாப்பதும் அவசியம்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.


No comments: