ஜெட் வேகத்தில் தட்டான், தும்பி பூச்சிகள் பறந்து செல்வது பார்ப்பதற்கு பரவசமூட்டும். குறிப்பாக நெல் வயல் பகுதிகளில் பகல் நேரத்தில் கூட இவை அதிகமாக சுற்றி திரிவதை காண முடியும். ஆனால் பல வகை பூச்சிகளிடமிருந்து நெற்பயிரை காக்கும் பாதுகாவலர்களாக இவ்விரு பூச்சியினங்களும் விளங்குகின்றன.
உலகளவில் 6,000 வகையான இரை விழுங்கிகள் உள்ளன. அதில் தட்டான் மற்றும் தும்பி பூச்சிகள் முக்கியமானவை. தட்டான் மற்றும் தும்பி பூச்சிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகையை சேர்ந்தவை. உடல் அமைப்பில் சில வித்தியாசங்களை வைத்து தான் தட்டான், தும்பி பூச்சிகள் என்பதை கண்டறியமுடியும். பயிரின் பச்சையை தாக்கி, தீமை செய்யும் பூச்சிகளை தின்று அழித்து விடுகிறது. இதனால் இதை இரை விழுங்கிகள் என்றும் அழைக்கின்றனர்.
கொசுக்களை அழிப்பவை: தாய் பூச்சிகள் விடும் முட்டையில் இருந்து வெளி யேறும் இப்பூச்சிகள் குறைந்தபட்சம் 8 நாள் முதல் அதிகபட்சம் 3 மாதம் வரை உயிர் வாழும். முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் நீர் நிலையில் உள்ள கொசு, பூச்சிகளை பிடித்து உண்டு தனது இரைவேட்டையை துவக்கி விடுகிறது. நீர்ப்பாங்கு உள்ள நெல் வயல்களுக்கு படையெடுக்கும் இவ்விரு பூச்சிகளும், அங்குள்ள புகையான், தத்துப்பூச்சி, இலை மடக்குப்புழுவை அழித்து விடுகிறது. பயிர்களை எளிதில் நாசம் செய்யக்கூடிய புகையான், தத்துப்பூச்சிகளை உருத்தெரியாமல் அழித்து விடுவதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. தட்டானும், தும்பையும் அதிகமாக பறந்தால் அந்த பகுதியில் நெற்பயிர் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பலாம்.
கண்கள் பெரியதாக பார்ப்பதற்கு முட்டைக் கண்கள் போல இருக்கும். இதன் ஒரு கண்ணில் 3000 கூட்டுக் கண்கள் இருக்கும். இந்த கண்களின் உதவியுடன் 360 டிகிரி அளவுக்கு உள்ள எல்லா பகுதிகளிலும் பறக்கிற இரைகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இவை 25 கிலோ மீட்டர் முதல் 35 கிலோ மீட்டர் வரை வேகமாக பறக்கும்.
இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ...
No comments:
Post a Comment