Tuesday, September 6, 2011

பசுமை இல்ல விளைவு

   சூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட வெப்பத்தின் ஒரு பகுதியை மீண்டும் செந்நிறக்கதிர்களாக விண்வெளியை நோக்கி வீசுகிறது. இவற்றின் ஒரு பகுதி மேகம், நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு வாயு போன்றவற்றின் மீது படுகிறது. அவை இந்த கதிர்களை வெளியே விட்டுவிடாமல் தன்னகத்தே அடக்கி வைத்து விடுகின்றன. இப்படி தேக்கி வைக்கப்பட்ட கதிர்கள்தான் பூமியை சூடாக வைத்திருக்கின்றன. இதுதான் 'பச்சை வீட்டு விளைவு'  அல்லது 'பசுமை இல்ல விளைவு' என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்ற நிகழ்வு பூமியில் நடைபெறாமல் போனால், பூமி குளிர்ந்து நீர் முழுவதும் உறைந்துவிடும்.
   ஆனால், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு வளிமண்டலத்தில் மேலும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இந்த வாயுக்கள் பூமியைச் சுற்றிலும் கண்ணாடுக் கூண்டு போல இருந்து செந்நிறக் கதிர்களை வளிமண்டலத்தில் இருந்து தப்பி விட முடியாதபடி, தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொள்கின்றன.
   இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒருபக்கம் கடும் வறட்சியும், மற்றெரு புறம் பெரும் வெள்ளம், கடும் புயல், சூறாவளி என்று இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     பச்சை வீட்டு விளைவால் வெப்ப மண்டல நாடுகளின் பனி மலைகள் எப்போதோ உருகத் தொடங்கி விட்டன. துருவ பகுதிகளின் பனிக் குவியல்களும், உருக ஆரம்பித்து விட்டன. இவை கடலில் கொண்டு போய்ச் சேர்க்கும் நீரால் கடல் மட்டம் உயரும். ஏற்கனவே 25 சென்டிமீட்டராய் உயர்ந்து விட்ட கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மீட்டரைத் தொட்டுவிடும் எனறு அஞ்சப்படுகிறது. இது மட்டும் நிகழ்ந்தால் மாலத்தீவுகள் மட்டுமல்லாமல், நியூயார்க் முதல் மும்பை வரை உள்ள கரையோர நகரங்கள் பலவும் கடலுக்குள் மூழ்கிவிடும். பூமி சூடாவதைக் கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்.
   நாம் எரிபொருட்களை எரித்து கரியாக்குவதால், காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. இதன் அளவில் பெரும்பகுதியை கடல் நீர் உள்வாங்கி தன்னுள் கரைத்து விடுகிறது. எரிபொருட்களின் பயன்பாட்டால் வரும் கார்பன்-டை-ஆக்சைடில் 48 சதவிதத்தை இப்படி கடல் உள்வாங்கிவிடுகிறது. இதனால் கடலுக்குக் கடல் இந்த வாயுவின் அளவு வேறுபடுகிறது. இந்த வாயு கடல் நீரில் கரைந்து கார்போனிக் அமிலமாக மாறுவதால் கடல்வாழ் உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது.
   இதுபோன்ற அபாயகரமான விளைவுகள் பூமியில் தொடர்ந்து நடைபெறும்போது, ஒருகட்டத்தில் பூமியின் வெப்பம் அதிகரித்து விடுகிறது. இந்தக் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதைக் குறைக்கவே கியாட்டோ ஒப்பத்தம் உருவானது.
  பூமி வெப்பமாவதை தடுக்க மரம், செடி, கொடிகள், காடுகள், வனங்கள், வனவிலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் காப்போம்.

No comments: