Friday, October 12, 2012

தக்காளி பக்கவாதத்தை தடுக்கும்


 தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்காக ஆயிரத்து முப்பத்தி ஓர் ஆண்களை தேர்வு செய்துகொண்டனர். பரிசோதனையின் துவக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.
ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
 இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது.
 இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்றும், இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி.
 எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார். 

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...


Thursday, October 4, 2012

பசுமைக் கூடாரம்


 வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இந்தியாவில் புதிய தொழில்நுட்பமாக உள்ள பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி முறை மிகவும் பலன் தரும் வழிமுறையாக உள்ளது.
 நமது நாட்டில் 95 சத பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில வகைப் பயிர்களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. இந்தப் பயிர்களுக்கு ஏற்ற சூழல்நிலையை உருவாக்கினால் மட்டுமே எந்த இடங்களிலும் இந்தப் பயிர்களை வளர்க்க முடியும்.
 பசுமைக் கூடாரம்: பசுமைக் கூடார தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுப்புறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று, குளிர், மழை அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, பூச்சி நோய்களிலிருந்து செடிகளைப் பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.
 பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாராத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
 இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. மேலும், மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கிவிடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படும்.
 பயன்கள்-நன்மைகள்: பூச்சி, நோய், எலிகள் மற்றும் பறவைகள் பயிரைத் தாக்குவதிலிருந்து
 பாதுகாக்கலாம். அதிகமான வெப்பம், பெரும் மழை, அதிவேகக் காற்றுகளால் பயிருக்குச் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள், உரங்கள் ஆகியவை சரியான அளவில் உபயோகிக்கலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் உற்பத்தி செய்யலாம்.
 சந்தையில் பருவமில்லா காலத்தில் வரும் விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் கிடைக்கும். எனவே, அத்தகைய தருணங்களில் பசுமைக் கூடார உற்பத்தி முறை பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பதப்படும் தொழில்சாலைகளுக்குத் தேவையான காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்க முடியும்.
 50 நாடுகளில் பயன்: பசுமைக் கூடார அமைப்புகள் இப்போது உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக ரீதாயாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.8 பில்லியன் டாலர்கள் ஈட்டக் கூடிய மலர் சாகுபடி, 400 ஹெக்டர் பரப்பில் பசுமைக் கூடார முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானில் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பசுமைக் கூடார உற்பத்தி முறை உள்ளது. இந்தியாவில் 1980-ம் ஆண்டுதான் பசுமைக் கூடாரத் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது. முதலில் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான் உலகமயமாக்கல், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியால் பசுமைக் கூடார தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது.
 உள்ளூர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி பயிர் வகைகள் பயிரிடும் வகையில் இந்தக் கூடாரங்களை அமைக்க முடியும். 4 வகை பசுமைக் கூடார முறைகள் உள்ளன.
 குறு நுட்ப பசுமைக் கூடாரம்: இந்த வகை கூடாரத்தில் காலநிலைக் காரணிகள் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்காது. மூங்கில் கட்டைகள், பாலீத்தின் பைகள் உபயோகப்படுத்தி கட்டப்படும். பூச்சிகளை கட்டுப்படுத்தும் வலைகளையும் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் பக்கச் சுவர்களை திறந்து வைப்பதன் மூலம் வெப்ப நிலையைக் குறைக்கலாம். இந்த வகை கூடாரம் குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்றவையாகும்.
 மித நுட்ப பசுமைக் கூடாரம்: இயந்திரங்ளைக் கொண்டு இந்த வகை கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்படுவதால் வேகமாக வீசும் காற்றை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டவை. காற்று வெளியேற்றி விசிறிகள், பனிப்புகை குழாய்கள், குளிர்விக்கும் பட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடாரத்தில் தேவையான அளவு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை நிலவச் செய்ய முடியும். பயிர் பருவம் முழுவதும் தேவைக்கேற்ப சூழலை மாற்றிக் கொள்ளலாம். தரமான மலர்களை இந்த வகையில் உற்பத்தி செய்ய முடியும். வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் இந்தக் கூடாரங்கள் உகந்தவையாகும்.
 உயர்நுட்ப பசுமைக் கூடாரம்: முழுமையான தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொண்டவை. இந்த வகை கூடாரம் அமைக்க செலவு அதிகமாக இருந்தாலும் தரமான உற்பத்திப் பொருள்களை வழங்குவதால் செலவை ஈடு செய்யலாம். இந்தக் கூடாரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் போன்ற காரணிகளின் அளவை ஓர் உணர் கருவியானது உள் வாங்கிக் கொள்ளும். அந்த கருவியில் உள்ளவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
 மலைச் சரிவுகளுக்கான கூடாரம்: சமனற்ற கூரைகளைக் கொண்ட பசுமைக் கூடாரங்கள் மலைச் சரிவுகளில் கட்டுப்படும். சரிவுகளுக்குத் தகுந்தபடி வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படும். தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடுகள் பயன்படுத்துவதில்லை. இதேபோல், பிளாஸ்டிக் பசுமைக் கூடாராங்களை குறைந்த செலவில் அமைக்கக் கூடியது. புற ஊதாக்கதிர்கள் கொண்டு மேம்படுத்தப்பட்ட தாள்களால் அமைக்கப்படும் இந்தக் கூடாரங்கள் 4 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Wednesday, October 3, 2012

விஷமில்லா பூச்சிக்கொல்லிகள்


 பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை மட்டும் அழிப்பதில்லை. மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்யும் தேனீக்கள் மற்றும் பறவைகள், பூச்சிகளை இயற்கையாகக் கொல்லும் தவளைகள், தேரைகளையும் அவை அழித்துவிடுகின்றன. பூச்சிக்கொல்லிகள் ஆபத்தான ரசாயனங்கள். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் பாலூட்டி விலங்குகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதனும் ஒரு பாலூட்டிதானே? பொதுவாக, புட்டிப்பாலை விட தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் அதிக நோய் எதிர்ப்புத்திறனுடனும் காணப்படுவது இயற்கை. 
 இதற்கு மாறாக கனடாவில் இனுயிட் என்ற சமூகத்தில் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைகளை விட குறைவான நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளன என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் இன்றைய உணவில் கலந்துவிட்ட பூச்சிக்கொல்லிகள்தான். பூச்சிக்கொல்லி நஞ்சால் உலகில் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், இதனால் பலனிருக்கிறதா என்றால் ஏமாற்றம்தான். பூச்சிகளைக் கொல்வதற்கு 70 சதவீதம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அந்தப் பூச்சிக்கொல்லிகளைச் சமாளித்து உயிர் வாழும் அளவுக்கு 525 பூச்சி இனங்கள் தயாராகி விட்டன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 எனவேதான், விஷமில்லாத பூச்சிக்கொல்லிகளை நோக்கி அறிவியல் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண் வண்டுகளின் வாசனையை மோப்பம் பிடித்துத்தான் ஆண் வண்டுகள் பல மைல் தூரம் பறந்து வந்து இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் பூச்சிகளிடம் சுரக்கும் அந்த வாசனைப் பொருளை எடுத்து பசை தடவிய பெட்டிக்குள் வைத்தால், வாசனையால் கவரப்பட்டு வரும் ஆண்பூச்சிகள் பசையில் ஒட்டிக்கொண்டு உயிர் துறப்பது உறுதி. இந்த வகையில் பூச்சிகளைக் கொல்லும் முறை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. பூச்சி இனம் பரவாமல் இருக்க மற்றொரு வழி, காமா கதிர்களை உபயோகிப்பது. ஆண் பூச்சிகள் மீது இந்தக் கதிர்களைப் பாயச்செய்து அவற்றை மலடாக்குகின்றனர். இதனால் ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளுடன் இணைந்தாலும் அவற்றைக் கருத்தரிக்கச் செய்ய முடியாது. இதனால் பூச்சி இனம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
 பூச்சிகளால் பாதிக்கப்படாத வீரியம் மிக்க விதைகளை உற்பத்தி செய்து அவற்றைப் பயிர் செய்வதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குகிறார்கள். அல்ட்ரா சவுண்ட் மூலமும் சில வகை விளக்குகள் மூலமும் பூச்சிகளை வெறுப்பேற்றி, எரிச்சல் உண்டாக்கி, குறிப்பிட்ட பயிரை அந்தப் பூச்சிகள் நாடிவராமல் செய்யவும் வழிமுறைகள் இப்போது வந்துவிட்டன. பூச்சி களைக் கொல்லும் நுண் உயிரி களை வளர்த்து, பயிருக்கும் உயிருக்கும் பாதிப்பில்லாமல் அவற்றை வெகு எளிதில் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எப்படியோ... உணவு நஞ்சாகாமல் சீக்கிரம் தடுத்தால் சரி.
நன்றி:  தினகரன் நாளிதழ்....

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

பவழப்பாறைத் தடுப்புக்கு ஆபத்து


 ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்பரப்பில் இருக்கும் "பெரும் பவழப்பாறைத் தடுப்பு" ( கிரேட் பேரியர் ரீஃப் ) என்ற இயற்கை அமைப்பு, 1985லிருந்து அதன் பவழப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டது என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த பவழப்பாறைத் தடுப்பு இன்னும் பத்து ஆண்டுகளில் அதன் பவழப்பாறை வளத்தில் கால் பங்குக்கும் குறைவான அளவையே பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 உலகின் மிகப்பெரும் பவழப்பாறைத் தொடரான இந்த அமைப்பிற்கு ஏற்பட்டு வரும் சேதத்தின் வேகம் 2006லிருந்து அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய கடற்கல்விகள் கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
 மிகவும் கடுமையான புயற்காற்றுகள், நட்சத்திர மீன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றாலேயே பெரும்பாலான சேதம் விளைந்திருப்பதாகக் கூறும் இந்த ஆய்வு, கடல் வெப்ப நிலை அதிகரித்ததும் இந்த பவழப்பாறைகள் அரிக்கப்பட ஒரு காரணமாக இருந்திருப்பதாகக் கூறுகிறது. 
சுற்றுச்சூழல் மாசடைவதுடன் தொடர்புபடுத்தப்படும், கடல் அமிலத்தன்மை உயர்வதால், இவ்வாறு சேதமடைந்த பவழப்பாறைகள் புத்துயிர் பெறுவது தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்.......

Monday, October 1, 2012

மீன்வளம் குறையும்


 புவி வெப்பமடைந்துவருவதன் காரணமாக உலக சமுத்திரங்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதத்தால் குறைந்துவிடும் எனத் தெரிவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணினிகள் துணைகொண்டு ஆய்வாளர்கள் அனுமானித்துள்ளனர்.
 நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள பிராணவாயுவின் அளவு குறைந்துவிடுகிறது.
 இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதை விட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
 கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் குறிப்பிட்ட மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது என்றும். பல மீன் இனங்களின் இனவிருத்தி திறனும் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
 நீரில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
 உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றால் மீன்வளத்துக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் அனுமானித்துள்ளனர்.
 கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 ஏனென்றால் பாலூட்டி விலங்குகள் போல சீரான உடல் வெப்பம் கொண்டவையல்ல மீன்கள்.
 சுற்றாடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும்.
மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதனால் அவற்றுக்கு கூடுதலான பிராணவாயு தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
 கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை நோக்கி தமது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.
 இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கிளைமேட் சேன்ஞ் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...