Friday, July 27, 2012

ஏரிகள் உருவான வரலாறு


  பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ, பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும், அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம். படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும், கன்னாபின்னா வென இயக்கம் ஏற்படும்போது அகன்ற, ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, பல கன்னாபின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது. 
  உதாரணம் சாக்கடல் என்றழைக்கப்படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப்பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்குகின்றன. அதோடு அங்கே நிறைய வீழ்படிவுகளையும் கொண்டுவந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இயற்கை அணைக்கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றியவையே. ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலாத்தலமாக மாற்றிய பெருமை ஹுசைன் சாகர் என்ற ஏரியைச் சேரும்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

பருவ நிலைகளுக்கேற்ப மாறும் கிணற்று நீர்


   பொதுவாக கிணற்று நீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் தரைமட்டத்திற்குக் கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பத்தைக் கடத்தும் என்பதால், கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர் ஏறக்குறைய 20-25 செ.கி. வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு.
   இந்நிலையில், கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45 செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25 செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.


Monday, July 23, 2012

தாவரங்களும் பேசுகிறது


  மணிதர்கள்தான் பேசுகிறோம் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், அதன் அது இனத்துடன்  ஒன்றுக்கொன்று பேசுகிறது. தாவரங்களும் பேசிக்கொள்கிறது. செடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு ஆடுவதன்லமூலம் ஒன்றுக்கொண்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ஒலிக்கு 'ரெஸ்பான்ஸ்' கட்டுவது மட்டுமல்ல தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கினறன என்கிறார்கள்.
  இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர்களை பயன்படுத்தினர் அதன்மூலம் சோளப்பயிர்கள் தமது வேர்ப் பகுதியிலிருந்து வேளியிட்ட 'கிளிக்' ஓசையைக் கேட்டனர்.
  காற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாகவே ஆடுவதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை அப்போது தொடர்ந்து உரையாடிக் கொண்டு இருக்கின்றனவாம்.
  தாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடர்ந்து ஏற்படுத்தியபோது, தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும். ஒலியும் அற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
  எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, முட்டைக்கோஸ் தாவரமாளது ஒருவித வாயுவை வெளியிட்டு, வெட்டுக்கிளிகள், செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.
  மனிதர்களின் காதுக்குக் கேக்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொல்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்திக் கொள்ள முடியாது. இனிமேல் நாம் செடிகளை வெட்டுமுன்பு அதற்கும் உயிர் இருக்கிறது, என்பதை மனதில் வைக்கவும். நமக்கும் உயிர் வாழ உணவும் சுவாசிக்க பிராணவாய்வும் கொடுக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

Friday, July 20, 2012

மரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்?

   மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தாது. ஏனென்றால் புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் ஆனவை என்பதால், அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் அல்லது திருகு சுருள் வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும்.
   மேலும், தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் பகுதிகள் உள்ளன. அவை மரவியம், பட்டையம் என்று அழைக்கப்படுகிறது. மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடிவில் காணப்படுகிறது.

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்...

Wednesday, July 18, 2012

இயற்கை பாதுகாப்பில் எலி

    மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம், செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
   பொதுவாக எலி இனம் என்றாலே அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் விளைந்த பயிர்களை நாசமாக்குவது முதல் நகர்ப்புறங்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் தானியங்களை தின்று தீர்ப்பது வரை, எலி இனம் என்றாலே மனிதர்களுக்கு பெரும் வெறுப்பும், விரோதமும் தான் நிலவுகிறது.
  ஆனால் இந்த எலி இனங்கள் இயற்கைக்கு ஒரு மிகப்பெரிய சேவை செய்வதாக கூறுகிறார் நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் ஜேன்சன்.
   மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை, கொட்டைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம் செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக கூறுகிறார் இவர்.
    தனது இந்த கருத்தை இவர் ஒரு ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறார்.
   இதற்காக இவர் சுமார் அரை மீட்டர் நீளமுள்ள அகவுடிஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை பெருச்சாளிகளை தேர்வு செய்தார். தென்னமெரிக்க காடுகளில் காணப்படும் இவற்றின் கழுத்தில் கண்காணிப்புக்கருவிகளை பொருத்தினார்.
   இவற்றை தொடர்ந்து மாதக்கணக்கில் கண்காணித்த பின்னர் இவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளின் படி, ஒரு குறிப்பிட்ட மரத்தின் விதைகளை, முதலில் எடுத்துச்சென்ற பெருச்சாளி அதை சுமார் 9 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று புதைத்து வைத்தது. அதை எடுத்துச்சென்ற இரண்டாவது பெருச்சாளி, ஐந்துமீட்டர் தொலைவில் புதைத்துவைத்தது. இப்படியே ஒன்றிலிருந்து ஒன்றாக 25 பெருச்சாளிகள் இந்த விதையை பறித்துச்சென்றன. முடிவில் இந்த விதை சுமார் 70 மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
   விளைவு, இந்த விதை அதன் தாய்மரத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் முளைப்பதற்கு இந்த பெருச்சாளிகள் காரணமாக அமைந்திருந்ததை உறுதிப்படுத்திய பேட்ரிக் ஜான்சன், பூமியில் விதைகள் பரவுவதற்கு எலி இனங்கள் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கிறார்.
   அதுமட்டுமல்லாமல், இப்படி விதைகள் பரவலாக சென்று விதைக்கப்பட்டால் தான் இந்த மரம் அல்லது செடிகள், தம் இனத்தைச்சேர்ந்த மற்ற தாவரங்களுடன் இணைந்து மரபின கலப்பு உருவாக வழி பிறக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
   எனவே எலி இனங்கள் மனிதர்களுக்கு வேண்டுமானால் நண்பனாக இல்லாமலிருக்கலாம், இயற்கைக்கு அது நண்பன் தான் என்கிறார் அவர்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

Monday, July 16, 2012

பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து

   பருவ நிலை மாற்றத்தால் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை அழிவுகள் உருவாகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் 2600 விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
   பருவ நிலை மாற்றம் கடலில் தரை பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. கடல் நீர் தொடர்ந்து வெப்பமாக மாறி வருகிறது. இதனால் இயற்கை சூழ்நிலை மாறி கடலில் உள்ள பொருட்கள் அழிய தொடங்கி உள்ளன.
   குறிப்பாக கடல் பாசி, தாவரங்கள், பவள பாறைகள் போன்றவை அழிந்து வருகின்றன. இவை இருந்தால்தான் மீன்கள் வளர முடியும், உணவும் கிடைக்கும். சூழ்நிலை மாறி வருவதால் மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவையும் அழியும் நிலையில் உள்ளன.
    கரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 75ல் இருந்து 85 சதவீதம் வரை பவள பாறைகள் அழிந்து உள்ளன. அதேபோல ஆஸ்திரேலிய கடல் பகுதியிலும் பவள பாறை மற்றும் கடல் பாசிகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன.
    ஆசிய கடல் பகுதியில் இந்தோனேஷியா, மலேசியா, பவுபாநியூகினியா, பிலிப்பைன்ஸ் பகுதியில் கடல் பவள பாறைகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு 30 சதவீத கடல் பாசி தாவரங்கள் அழிந்து விட்டன.
   இந்த பகுதியில் 3 ஆயிரம் அரியவகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துவிடும். எனவே இதை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

Saturday, July 7, 2012

இயற்கையின் பொக்கிசம் "தென்னை"


   நமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அது நிச்சயம் நமக்கு சாப்பாடு போடும் என்பர். தென்னையின் பயன்களை பார்ப்போம்.
நம் வாழ்வில் பிரிக்க மூடியாத வகையில் பிணைந்து விட்ட மரம், தென்னை.
   தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
   மலேசிய, பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள்.
 
    பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது.
   தென்னை, உயராமான தாவரம். நெட்டைத்தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும்.
   குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30- 35 ஆண்டுகள்.
   செழிப்பான வண்டலோடு ஓரளவுக்குப் பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும்.
 சரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங்களியிலும், மணற்பாங்கான இடத்திலும் நல்ல பயன் தரும் வகையில் பயிர் செய்யலாம். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடிவையாகவும் இருப்பது அவசியம்.
   குட்டைத் தென்னை வகைகள் குறுகிய காலத்துக்குள் பலன் தரத் தொடங்கினாலும், அவற்றில் தரமான தேங்காய் உண்டாகுவதில்லை. இவற்றை நோய்களும், பூச்சிகளும் தொற்றும் அபயமும் உண்டு.
   இந்தக் குறைபாடுகளால், குட்டைத் தென்னை தோப்பாக வளர்க்க ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. இருந்தபோதும் கவர்ச்சியான பச்சை கிச்சிலி, சிவப்புநிறக் காய்களின் அழகுக்காகவும், இளநீர்க்காகவும் பயிர் செய்யப்படுகிறது.

    கொச்சி, சீனா, அந்தமான், லட்சத் தீவுகள், பிலிப்பையின்ஸ் தீவுகள், சிங்கப்பூர் , ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் காணப்படும் தென்னைகள் இயல்பாகவே நல்ல பொருளாதரப் பலன் அளிக்கக்கூடியவை.
   அந்தமான் பெருங்காய், கப்படம் என்னும் வகைகளில் உருவாகும் தேங்காய்கள் மிகப் பெரியவை. லட்சத்தீவில் பயிராகும் தேங்காய் மிகச் சிறிதாக இருக்கும்.
   காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெட்டை இனம், குட்டை இனம்  இரண்டையும் இனைத்து புதிய வகை உருவாக்கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையில் நல்ல கொப்பரைகளோடு விரைவில் காய்க்கும் தன்மை கொண்டது.
   இந்தியாவில் மேற்குக் கரைப் பகுதியில் 150 அங்குலத்துக்குக் மேல் மழை பெய்யும் பகுதியிலும் தென்னை வளர்கிறது, கர்நாடகத்திலும், பிலிப்பைன்சில் 40 அங்குலத்திற்கு குறைவாக மழை பெய்யும் சில பகுதிகளிலும் தென்னை வளர்கிறது.
   தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணை கொடுக்கிறது. தேங்காய் எண்ணையின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது.
   இப்படி நிறைய பலன் தருகிறது தென்னை. ஆக மனிதனுக்கு இயற்கையின் பொக்கிசம் தென்னை.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Thursday, July 5, 2012

பருவநிலை மாற்றமும் விலங்குகளும்!

   அழிந்துவரும் உயிரினங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து அறிய ஓநாய்கள் உதவும் என்று வி்ஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை குறித்து வி்ஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாறிவரும் பருவநிலை எவ்வாறு ஓநாய்களின் எண்ணிக்கை, உடல் அளவு, மரபணுவியல் மற்றும் பிற உயிரியல் அம்சங்களில் தாக்கத்தை எற்படுத்துகிறது என்று அறிவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.
   அதன்படி, எந்த மாதிரியான பருவநிலை மாற்றம், விலங்குகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் பரிணாமத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தங்களால் கணிக்க முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
   தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப ஓநாய்களின் எண்ணிக்கை எவ்வாறு மாறும் என்று அறிந்து, அதுகுறித்து வன உயிரினக் காப்பாளர்களுக்குத் தெரிவிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
   லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வில், அமெரிக்க அரசின் உள்துறை, உடா மாநநிலப் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆகியவற்றைச் சேர்ந்த  ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.
   சுற்றுச்சூழல் மாறுபாட்டால் உயிரினங்களின் உடல் அளவு, எடை போன்றவற்றில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும் எதிர்காலத்தில் அந்த உயிரினத் தொகுப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுவதால் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

Tuesday, July 3, 2012

உலகப் பாரம்பரிய இடமாக "மேற்குத் தொடர்ச்சி மலை"

   ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியாவிற்கு கிடைத்த அங்கிகாரம். ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது. இதற்கு 17 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. நாட்டிற்கு அதிகளவு தென்மேற்குப் பருவ மழை கிடைக்க இந்த மலைத் தொடர் பெரிதும் உதவி வருகிறது.
    1,600 கி.மீ. தூரம் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் அமைப்பு, பருவமழையைத் தருவிக்கும் ஆற்றல், மிதமான வெப்பநிலை, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்ற சூழ்நிலை ஆகியற்றை கருத்தில் கொண்டு உலகப் பாரம்பரிய இடம் என்ற அந்தஸ்தை வழங்குவதாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு அறிவித்துள்ளது.
    இமய மலையைவிட பழமையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உலகின் மிக அரிதான 325 வகை உயிரினங்கள் உள்ளன. இதுவே (இந்தியாவிற்கு) மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாம்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...

Monday, July 2, 2012

'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்

  புன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையும் தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை அதிகம் பயன்படுத்துகிறோம். நமது முன்னேர்கள் நன்செய் தானியங்கள் நஞ்சு  புன்செய் பயிர் தானியங்கள் சத்து என்பர். அப்படிபட்ட தானியங்களில் ஒன்றுதான் கம்பு.
    நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
   கம்பு பயிர் உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் ஆப்பிரிக்கா, இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் ஒரு சத்துமிக்கப் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.
   உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விழங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. அரிசியில் அதிக பீட்டா கரோட்டீன் உள்ள தங்க அரிசி ரகங்களை உருவாக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பில் இயற்கையிலேயே மஞ்சல் நிறம் கொண்ட தானியங்கள் அதிக அளவில் பீட்டா கரோட்டீனைக் கொண்டுள்ளாதாக ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ரிசாட் கண்டறிந்துள்ளது. கம்பு உணவு ஏழை எளிய கிராமங்களில் உள்ள மக்களால் மட்டுமே உண்ணப்படும் உணவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தற்போது கிராமங்களிலும் இந்நிலை மாறி அரிசி, கோதுமை உணவு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட உணவு மட்டுமே உட்கொள்வதால் சில சத்துக் குறைபாடு நோய்கள் வரக்கூடும். கம்பு தானியத்தில் அரிசியை போலவே பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். ஆகையால் நாம் உண்ணும் உணவில் சத்து நிறைந்த கம்பையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பல சத்துக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
      கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற  தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லைமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...