Friday, October 12, 2012

தக்காளி பக்கவாதத்தை தடுக்கும்


 தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்காக ஆயிரத்து முப்பத்தி ஓர் ஆண்களை தேர்வு செய்துகொண்டனர். பரிசோதனையின் துவக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.
ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
 இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது.
 இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்றும், இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி.
 எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார். 

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...


No comments: