Friday, May 23, 2014

ஹம்மிங் பறவை


உலகிலேயே மிகச் சிறிய பறவையான ஹம்மிங் பறவை கடல் கடந்து பறந்து செல்லும் என்று சொன்னால் உங்களுக்குச் சந்தேகம் தோன்றலாம்.
 ஆனால் அது உண்மைதான். அமெரிக்காவில் காணப்படுகின்ற சிவப்புக் கழுத்து ஹம்மிங் பறவைகள் தான் மிக அதிகமான தொலைவு பறந்து செல்கின்றன. அமெரிக்காவில் பனிக்காலம் ஆரம்பித்தவுடன் இவை கூட்டமாக மெக்ஸிகோவிற்கும், கியூபாவிற்குமெல்லாம் பறந்து போகும். 
 800 முதல் 3,200 கிலோ மீட்டர் தூரம் வரை இவை பறந்து செல்கின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள். கடல் கடந்து பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இவை பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பு மிக அதிகமாக உணவு உண்ணத் தொடங்கும். 
 இந்த உணவைக் கொழுப்பு வடிவில் தங்கள் உடலில் சேகரித்து வைப்பது தான் ஹம்மிங் பறவைகளின் சிறப்புத் தன்மை. 
 வெகு தொலைவு பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இந்தக் கொழுப்பைத்தான் இவை பயன்படுத்துகின்றன. இப்படி வலசை போகின்ற பறவைகள் அமெரிக்காவில் பனிக்காலம் முடியும்போது சற்றும் வழி தவறாமல் அவ்வளவு தூரத்தையும் கடந்து தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பி வருகின்றன. 

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

ஆப்ரிகாட் பழம்

அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits - த‌மி‌ழி‌ல் ச‌ர்‌க்கரை பாதா‌மி எ‌ன்று அ‌றிய‌ப்படு‌கிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. 
 இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. 
 பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.
தோல் நோய்களை நீக்கும்:
 இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்தவல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
நரம்புகளை வலுப்படுத்தும்:
 பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. 
 இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல், என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி:
 மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சில வகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசித்துக் கொள்ளலாம். 
 பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும், தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
 கண்பார்வை தெளிவாகும்:
வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. தினமும் 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும், கட்டுப்படுத்தப்படும். 
 மலை வாழைப்பழம் 1, ஆப்ரிகாட் 4 ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுக்கும் பொழுது சாப்பிட்டு வர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும். 

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...
மரம் வளர்த்து புவி காப்போம்....

Thursday, May 15, 2014

பெங்குயின்

 பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும்.

 பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

 பெங்குயின்களின் முக்கிய உணவு மீன்கள்.

 பெங்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பெங்குயின் எனப்படும் ‘எம்பரர் பெங்குயின்’. ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமும் 35 கிலோகிராம் எடையும் உள்ளவை.

 பெங்குயின்களில் சிறியது, நீலப் பெங்குயின். இதன் உயரம் 40 சென்டிமீட்டர். ஒரு கிலோகிராம் எடை.

 கடல் நீரைக் குடித்து பெங்குயின்களால் வாழமுடியும்.

 வாழ்நாளின் பாதியை நீரிலும், பாதியை நிலத்திலும் செலவழிக்கின்றன.

 பொதுவாகப் பெரிய பென்குயின்கள், வெப்பத்தை உடலில் தக்கவைக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. அதனால் அதிக குளிர்ப் பகுதிகளிலும் அவற்றால் வாழமுடியும். சிறிய பெங்குயின்களால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் வாழமுடியாது.

 நியூசிலாந்தைச் சேர்ந்த மஞ்சள் கண் பெங்குயின்கள் அரிதாகி வருகின்றன. தற்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 4000 மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 பெங்குயினின் கறுப்பு முதுகும், வெள்ளை வயிறும் நீந்தும்போது குழப்பத்தை ஏற்படுத்தும். அவை நீந்தும்போது, மேலிருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. தண்ணீருக்குக் கீழே இருந்து, சூரிய ஒளி பிரதிபலித்து அதன் வெள்ளை வயிறை மறைத்து விடும்.

 பெங்குயின்களுக்கு அன்டார்டிகா கண்டத்தில் ஆபத்து கிடையாது. ஏனெனில் அங்கு பெங்குயின்களை வேட்டையாடும் விலங்குகள் கிடையாது.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.

Tuesday, May 13, 2014

மிளகாய்

 


மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள்... 
  எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம்... காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.
  கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடைக் குறைக்கிற முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
  நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம். அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.
 வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. மிளகாயில் ஃபைட்டோகெமிக்கல் அதிகம். சிணீஜீsணீவீநீவீஸீ என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.
  நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
  மிளகாயில் உள்ளதாகச் சொன்ன Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
  அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும். இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். 
  அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்னை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்னை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் - ஊறுகாய் போன்ற காம்பினேஷன்களை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!
  வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்னை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.

என்ன இருக்கிறது? 100 கிராமில்...

                    காய்ந்த மிளகாய்             பச்சை மிளகாய்                 குடை மிளகாய்

ஆற்றல்        246 கிலோ கலோரி         29 கிலோ கலோரி        24 கிலோ கலோரி
புரதம்            15.9 கிராம்                             2.9 கிராம்                          1.3 கிராம்
கொழுப்பு      6.2 கிராம்                             0.6 கிராம்                           0.3 கிராம்
நார்ச்சத்து   30.3 கிராம்                           6.8 கிராம்                            1.0 கிராம்
இரும்பு        2.3 கிராம்                              4.4 கிராம்                            0.567 கிராம்
கால்சியம்               160 மி.கி.                   30 மி.கி.                               10 மி.கி.
வைட்டமின் சி    50 மி.கி.                     111 மி.கி.                               37 மி.கி.
வைட்டமின் ஏ    345 மியூஜி*          75 மியூஜி                                   427 மியூஜி

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்......