Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Friday, February 20, 2015

பறவைகளின் மொழி


 பறவைகள் ஏதோ சும்மா கத்திக் கொண்டு பறந்து செல்வதாக நினைக்க வேண்டாம். அதுதான் அவைகளின் மொழி. பறவைகளின் ஒவ்வொரு கத்தலுக்கும் பொருள் உண்டு. ரஷ்யாவின் மாஸ்கோ பல்கலைக்கழக பரவை ஆராய்ச்சியாளர்கள், இதுபற்றிய ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம் கண்டு உள்ளார்கள். அவர்கள் பறவைகளின் மொழியை கிட்டததட்ட புரிந்து கொண்டார்கள்.
 பறவைகள் சாதாரணமாக கத்துவதை அவர்கள் பதிவு செய்து வந்தார்கள். ஏராளமான ஒலிகளை பதிவு செய்தபின், குஞ்சுகளுக்கு அவற்றின் ஒலியை ஒலிபரப்பி காண்பித்து அது எதற்கான ஒலி என்பதை அறிய ஆரம்பித்தார்கள். ஒன்று கூடுங்கள், அபாயம் வருகிறது ஓடுங்கள், இரை இருக்கிறது வாருங்கள் என்பதற்கான ஒலிகள் எவை என்பதை அவர்கள் எளிதில் பிரித்து அறிந்தார்கள். பதிவு செய்யப்பட்ட ஒலியை, குஞ்சுப் பறவைகள் தங்கள் தாய்ப் பறவையின் ஆணையாக கருதி நடந்து காெண்டதால் ஆய்வாளர்கள் பறவைகளின் மொழியை ஓரளவு புரிந்து கொண்டார்கள்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

Saturday, August 23, 2014

வெளவால்களை காக்கும் கிராமம்!

காஞ்சிபுரத்தை அடுத்த விஷார் தாமரைக்குளம் அருகே உள்ள ஆலமரத்தில் வசிக்கும் வெளவ்வால் கூட்டம்.

வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் அருகே விஷார் கிராம மக்கள் வெடிகளைத் தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது விஷார் கிராமம். இக்கிராமத்தில் பீமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது.

இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இரவில் உலாவி விட்டு, பகலில் இம்மரத்தில் ஓய்வெடுக்கும் வெளவால் கூட்டங்களுடன் இம்மரத்தைப் பார்க்கும்போது, சடைமுடி சாமியார் எழுந்து நிற்பது போன்று காட்சி தருகிறது. இதே போன்று மேலும் 2 மரங்கள் முன்பு இருந்துள்ளன. கடந்த பல நூறு ஆண்டுகளாகவே இங்கு வெளவால்கள் குடியிருந்து வருவதாக இக்கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பகலில் ஓய்வெடுக்கும் வெளவால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த வெளவால்கள் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் போற்றி வருகின்றனர். இதனால் தீபாவளி மற்றும் கோயில் திருவிழா காலங்களில் இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்துவதை தலைமுறை, தலைமுறையாக தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதன் மூலம், வெளவால்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடலாம் என்றும், கிராமத்தைவிட்டு அவை கூட்டமாக சென்று விடக்கூடாது என்பதற்காகவும் இக்கிராமத்தில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. ÷அதே நேரம், பூச்சட்டி, சங்குசக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட ஒளிரும் பட்டாசுகளை பயன்டுத்துகின்றனர்.

இதுபோல் ஒவ்வெறு கிராம மக்களும் தங்களது கிரமத்தில் உள்ள பறவைகள், விலங்குகள், மரங்களை பாது காத்தால் இயற்கை இயற்கையாக இருக்கும் நாடு செழிப்பாக இருக்கும்.

Thursday, August 7, 2014

பறவைகள் குடிபெயர்வு


பதினோராயிரம் கி.மீ.தூரத்துக்கு குடிபெயரும் பறவைகள் மீண்டும் இருப்பிடம் திரும்பும் விந்தை
பிராணிகள் குடிபெயர்வு என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை முன்னிட்டு புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப்போலவே விலங்கினங்கள் கோடைகாலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன.
 அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக்கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வு செய்வது குடிபெயர்வு (வலசை போதல்) எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
 குடிபெயரும் பறவைகள், பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.
 பறவைகள் குடிபெயரும் போது பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன.
 இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள்கூடப் பார்க்கின்றன. பிறகு ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.
 இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது. மேலும் அவை புவிக்காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்க ரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.
 இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக் கொண்டு வசந்த காலத்திலும் இடம்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன், இரு அச்சு வான் பயண முறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 பல வகையான தரைப் புலம் பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன. இனப்பெருக்க காலத்தை மித வெப்பப் பகுதிகளில் அல்லது ஆர்ட்டிக் வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், மற்றக் காலங்களில் வெப்ப வலயங்களை அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் பகுதிகளை நாடிச் செல்வதே மிகவும் பொதுவாகக் காணப்படும் புலப்பெயர்வு ஆகும்.
 சான்றாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவிகள் ஆபிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல்கள் (11000 கி.மீ.) அல்லது அதற்கு அதிகமாகப் பறந்து செல்கின்றன. இவை தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும் சரியான இடைவெளியுடனும் ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்கின்றன. வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும்.
 இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி உணவு கிடைப்பதும் அரிதாகும் போது, பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலம்பெயர்வின் போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக அம்சங்களை ஈடுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
 புலம்பெயர்வுக்கு முந்திய காலப் பகுதியில் பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலம்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்பு படிதல் போன்ற உடற் கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. கூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும் போது, இயற்கையில் இவ்வினப் பறவைகள் புலப்பெயர்வின் போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது.
 அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வது அறியப்பட்டுள்ளது. குடிபெயரும் உயிரினங்களில் பாலைவன வெட்டுக்கிளிப் பூச்சிகளும் அடங்குகின்றன. பெருந்திரள் கூட்டமாக இடம்பெயரும் போது ஒரு நாளைக்கு 3000 தொன் தாவரங்களை உண்ணுகின்றன.  ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50,000 மில்லியன் வரை பூச்சிகள் இருக்கும்.
 கடலில் வாழக்கூடிய மீன்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிலங்கிலம் ஆகியவையும் குடிபெயர்கின்றன. சால்மன் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல் (2400 கி.மீ) வரை பயணிக்கின்றன. இவ்வாறு நீண்ட தூரப் பயணத்தில் முற்றிலும் ஆற்றலிழந்த நிலையில் இனப்பெருக்கத்திற்குப் பின் பல மீன்கள் இறந்து விடுகின்றன. ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக நீண்ட தூரம் இடம்பெயர்கின்றன. குறிப்பாக பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரங்களில் 1250 மைல்கள் (2000 கி.மீ.) பயணிக்கின்றன.
 வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000 கி.மீ.) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் அதிக தூரம் நடைபெறும் வருடாந்த இடம்பெயர்வு ஆகும். கிரேக்க மேதை அரிஸ்டோட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடம்பெயர்வைக் கண்டறிந்தார். கி.மு. 384 - 322 இல் எழுதிய ‘விலங்குகளின் வரலாறு’ என்ற நூலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலிகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன.
 இவற்றிற்கென தனிப் படிப்புகளும் முனைவர் சலீம் அலி (1896 - 1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன.பறவைகள் தங்களது இடப்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது.
 ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தில் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும் போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை.
 ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு, தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார். மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்க ரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

Monday, July 28, 2014

இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்


 இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

 உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.

 இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 இவ்வாறு அபாயத்தில் இருக்கும் பறவையினங்கள் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

 அதன்படி, உலக அளவில் இந்த ஆண்டில் சிவப்புப் பட்டியலில் 10,425 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 140 பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 4 இனங்கள் பூர்விக இடத்தில் அழிந்துவிட்டன. 213 இனங்கள் மிக அரிதாகவும், 413 இனங்கள் அரிதாகவும் காணப்படுகின்றன.

 741 இனங்கள் அழிய வாய்ப்புள்ளவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி நாளிதள்.

வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Wednesday, July 23, 2014

அழிந்து வரும் கழுகு

 நாட்டில் எப்படி குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவாளர்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் காட்டில் துப்புரவாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் கழுகு. 
 காட்டில் எங்கு விலங்குகள் இறந்து கிடக்கிறதோ அங்கு கழுகுகள் நிச்சயம் இருக்கும். இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும்.
பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
 இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு. இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு. கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது.
 கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது; ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Wednesday, July 9, 2014

பனை உழவாரன்

நமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை.

இந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

உலகம் சுற்றும்

பிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஆனைமலைப் பகுதிகளில் இப்பறவைகள் பறந்து திரிவதை பார்த்திருக்கிறேன். வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் அம்பைப் போல காற்றைக் கிழித்துக்கொண்டு, அதிவேகமாக அங்குமிங்கும் சட்சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. வலசை போகும் பண்பு கொண்ட இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் இவை வலசை வருவதாகத் தெரிய வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சகாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வலசை போகின்றன.

பொதுவாக வலசை போகும் பண்பை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் ஒரு வளையத்தை மாட்டிவிடுவார்கள். ஒவ்வொரு வளையத்துக்கும் ஒரு பிரத்யேக எண்ணும் வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். உலகின் வேறு பகுதியில் அந்தப் பறவை பிடிக்கப்பட்டால், அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து, எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு அறிய முடியும்.

தொழில்நுட்ப உதவி

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கைக்கோள் பட்டையை (Satellite collar) பறவையின் முதுகில் பொருத்தி, அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டே கணினியில் பார்த்து அறிந்துவிட முடிகிறது. ஆனால், இக்கருவி விலையுயர்ந்தது. உருவில் பெரிய, பருமனான (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே செயற்கைக்கோள் பட்டையைப் பொருத்த முடியும். இதனால் சிறிய பறவைகளின் வலசைப் பண்பை அறிவது, இயலாத காரியமாக இருந்தது.

இந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (Light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இந்த கருவி செய்வதெல்லாம், பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) ஒளி உணர்கருவியின் (light sensor) உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவிரம், ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுகிறதல்லவா? இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் பூமியில் எந்தப் பகுதியில் அந்த நேரத்தில் மதியமாக இருந்தது, காலைக் கருக்கல், அந்தி மாலை என்றெல்லாம் கணிக்கமுடியும். இந்த விவரங்களைக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக, ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும்.

சுவிஸ் ஆய்வு

இதுபோன்ற ஒரு கருவியை சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன. ஏனென்றால், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை மிகமிகக் குறைவு, வெறும் 1.5 கிராம். அவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும்கூட பதிவு செய்யும் முடுக்கமானியையும் (Accelerometer) கொண்டிருந்தது. இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா? இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா? அல்லது ஓய்வெடுக்கின்றனவா என்பதையெல்லாம் கணிக்கமுடியும்.

இக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில், சுமார் 10 மாதங்கள் கழித்து மூன்றை மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பதிவான தகவல்களை ஆராய்ந்ததில், அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலம் வானில் சுற்றித் திரிந்த ஆச்சரிய சங்கதி தெரியவந்தது.

ஆச்சரிய உண்மை

இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இந்த இடத்தில் இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அந்தக் கால்கள் எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகவோதான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவும் மாறுபடும் அல்லவா? அப்படியிருந்தால், அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி அதைப் பதிவு செய்திருக்கும். ஆனால், ஒளி அளவில் அப்படிப்பட்ட பெரிய ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. பதிவுகள் அனைத்தும் சுமார் 6 மாதங்களுக்கு சீராக இருந்ததை வைத்தே, இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது.

என்னதான் பறக்கச் சிறகு இருந்தாலும், எப்படி ஒரு பறவையால் கீழிறங்காமலேயே இருக்க முடியும்? சாப்பாட்டுக்கு என்ன செய்யும்? அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன. ஆகவே, கீழிறங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

அதெல்லாம் சரி, உடலுக்கு ஓய்வு வேண்டாமா? தூங்க வேண்டாமா? உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு, அந்தரத்தில் தூங்குவதுதான் அது! ஆம், ஆங்கிலத்தில் இதை Aerial roosting என்கிறார்கள்.

உழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பல காலமாக இருந்து வந்த இந்த அனுமானம், ஆராய்ச்சியின் விளைவால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகிவிட்டது.

தி இந்து  கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்-

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Wednesday, October 13, 2010

பறவைகள்

   பறவைகள் தன் இருப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், தன் இணைப் பறவைக்குத் தெரிவித்து அவற்றை கவர்ந்திழுக்கவும் பறவைகள் ஏற்படுத்துகின்ற இனிய ஓசைதான் பறவைகளின் பாட்டு என்று வழங்கப்படுகிறது.தங்கள் தொண்டையில் இருகின்ற ஸைரின்க்ஸ் (syrinx) எனும் உறுப்பின் உதவியுடன்தான் பறவைகள் பாடுகின்றன.தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டும்தான் உள்ளது.
   பறவைகள் சில சமயம் வித்தியாசமான குரல் எழுப்பும். உணவு வேண்டி பறவைக் குஞ்சுகள் கொடுக்கும் குரலும், அபாய எச்சரிக்கை செய்வதற்காக எழுப்புகின்ற குரலும் வழக்கமான குரலைவிட வித்தியாசமாக இருக்கும்.
  பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை மிகப் பொதுவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கலாம். தன் வண்ணத்தோகையை விரித்து அழகாக நடனமாடுபவை ஆண் மயில்கள். பல நிறங்களுடைய இறகுகளும் கொண்டையுமுடைய சேவல்தான் பெட்டைக் கோழியைவிட அழகாக இருககிறது.
   பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிலவகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, அல்லது இளம் நிறமுடையதாகவோ இருக்கும். புறாக்கள், ஆந்தைகள், மரம் கொத்திகள், மீன் கொத்திகள் ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இப்பறவைகள், பொந்துகளிலோ மரக் கிளைகளிலோ கூடு கட்டி முட்டையிடுகின்றன. எனவே எதிரிகளால் அவ்வளவு விரைவாக கூட்டில் உள்ள முட்டைகளைக் கவர்ந்துவிட முடியாது.
  எனவே, இப்பறவைகளின் முட்டைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நிறம் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லலாம். வேறு சில பறவைகளின் முட்டைகள் அடர்ந்த நிறமுடையதாகவோ,புள்ளிகளுடையதாகவோ இருக்கும்.இவ்வகையான முட்டைகள் தரையிலோ, திறந்த வெளிகளிலோ பொரிய வேண்டியவையாக இருக்கும். எனவேதான் இவை சுற்றுச்சூழலிருந்து எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடர்ந்த நிறங்களுடனோ, புள்ளிகளுடனோ இருக்கின்றன. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்குதான் இந்த ஏற்பாடு.
  விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலவகைப் பறவைகள் மட்டுமே முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. கருவளர்கிற சமயத்தில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் நோக்கில்தான் பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன. ஆனால் சில இடங்களில் பறவைகள் அடைகாக்காமலேயே தங்கள் முட்டைகளின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.
  ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள 'Scrub fowl' எனும் ஒருவகைப் பறவைகள் புற்களையும், இளைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து பதினைந்தடி உயரமும் முப்பத்தைந்தடி பரப்பளவும் உள்ள ஒரு வகையான குவியலை உருவாக்குகின்றன. சில சமயம் பல் பறவைகள் சேர்ந்து தங்களுக்கான ஒரே குவியலை உருவாக்கின்றன. பிறகு குவியலில் மூன்றடி நீளமுள்ள சிறு சுரங்கங்களை உருவாக்கி அதனுள் முட்டையிடுகின்றன. அந்த தாவரக் குவியலிலிருந்து கிடைக்கிற வெப்பத்தால் முட்டைகள் பொரிகின்றன. வேறொரு வகை பறவையான 'mallee fowl' இலைகளுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தி குவியல் அமைக்கின்றன.
  தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்காத சில பறவைகள் உள்ளன. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு அவை பறந்துவிடும். அந்தக்கூட்டில் வசிக்கும் பறவை அது தன் முட்டைதான் என்று தவறாகக் கருதிக்கொண்டு அந்த முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். வெளிவந்த குஞ்சை தன் சொந்தக் குஞ்சுபோல வளர்க்கும். காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில் (indian cucoo) இதற்கு ஒரு உதரணம்.
   தங்கள் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு அளவு வரை இறகுகளின் ஈரம் சேராதிருக்கவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன. இப்படி இறகுகளைத் தூய்மையாக வைத்திருப்பதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இறகுகள் வளரத் தொடங்கும்போதே பறவைக் குஞ்சுகள் கோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. சிறுவயதில் இதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றன பறவைகள்.
   முதிர்ந்த பறவைகள் இந்தப் பழக்கத்தை கடைசிவரை தொடர்கின்றன. அவற்றின் உடலின் பின் முனையில் வாலுக்குச் சற்று மேலுள்ள எண்ணெய்ச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் கொத்தியெடுத்து இறகுகளில் தடவிக் கொள்கின்றன. இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு இறகுகளில் திடிரென்று நீர் சேராமலும், இறகுகளின் மென்மையையும் காக்கிறது. இறகுகளின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.
   இறகுகளைக் கோதிக்கொள்வதுடன் இவை மண்ணில் புரளவோ அல்லது தண்ணீரில் குளிக்கவோ செய்கின்றன. வாத்துக்கள் தலையைத் தண்ணீரில் முக்குகின்றன. பிறகு சிறகு விரித்து உடம்பை உதரிக் கொள்கின்றன,
   முதுகைச் சொறிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும் போது, நமக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதல்லவா. அதைப் போல பரவைகளுக்கும் தங்கள் உடலில் அலகு எட்டாத இடத்தில் எண்ணெய்த் தேய்ப்பதற்கு இணைப் பறவையின் உதவியை நாடுகின்றன.

சோ.ஞானசேகர்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்