Friday, November 27, 2015

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை



 விவசாயத்தை காக்கும் பறவை

பார்ப்பதற்கு ஆந்தை போல் இருக்கும் இந்த பறவை, ஆந்தை அல்ல. இதன் பெயர் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை. நமக்கு எதிரே இருக்கும் மரத்தில் இந்த பறவை அமர்ந்திருந்தாலும் இதை நம்மால் காண முடியாது. சூழலுக்கு ஏற்ப தன்னை மறைத்துக் கொள்வதில் கில்லாடி.

உலகம் முழுவதும் மூன்று வகையான தவளைவாய்ப் பறவை இனம் இருக்கிறது. அவை: செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை, புள்ளித்தீற்றல் தவளைவாய்ப் பறவை, பப்புவன் தவளைவாய்ப் பறவை ஆகியவையாகும். இவற்றில் வெள்ளை சாம்பல் நிறத்தில் உடலில் ஆங்காங்கே கருநிற கோடுகளுடன் அடிப்பகுதியும், செம்பழுப்பு நிறத்தில் கருமை நிற புள்ளிகளும் கொண்ட செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை தனது விசித்திர நிறக் கலவையால் மரங்களில் அமர்ந்திருந்தாலும் பார்வைக்கு புலப்படாது. நல்ல மதிய வெயிலில் கூட மரத்தின் தாழ்வான கிளையில் அசைவற்று அமர்ந்திருக்கும்.

இவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை. தோப்புகள், புதர்கள். மனிதர்கள் நடமாடும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பயமின்றி வசிக்கின்றன. இதுவொரு இரவு நேர வேட்டையாளி. பகலில் மரக்கிளையில் அசையாமல் அமர்ந்திருக்கும் இவற்றின் வாய்க்கருகில் பறந்து வரும் பூச்சிகளை மட்டும் உண்ணும். இரவில் வேட்டை யாடுவதில் படு கில்லாடிகள். குருத்து வண்டுகள், வெட்டுக் கிளிகள், தத்துக்கிளிகள், மரவண்டுகள் போன்ற பயிர்களை அழிக்கும் பூச்சிகள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். அதனால் இது விவசாயத்துக்கு தோழன். மேலும் எலி, அந்துப்பூச்சி, வண்டு, புழுக்கள், நத்தை, சிலந்தி, குளவி, மரவட்டை, பூரான், தேள், பல்லி, தவளைகள் போன்றவையும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் வாய்க்குத் தப்புவதில்லை. இதனால் இதை சுற்றுச் சூழலுக்கு உகந்த பறவை என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

இந்தப் பறவைகள் பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும். ஆண் பறவை தனது ஜோடியின் இறகுகளை அடிக்கடி அலகால் கோதி அன்பை வெளிப்படுத்தும். ஒருமுறை இணை சேர்ந்த ஜோடி வாழ்நாள் முழுவதும் பிரிவதில்லை. வருடா வருடம் ஒரே இடத்தில் கூடு கட்டும். இவற்றின் கூடுகள் மிகவும் பலவீனமானவை. மரக்கிளைகளில் கூடு கட்டிக் கொள்ளும். பெரும் மழைக்கும், கொஞ்சம் வேகமான காற்றுக்கும் கூட தாங்காது, இவற்றின் கூடுகள். பெண் பறவை இரண்டு அல்லது மூன்று வெள்ளை நிற முட்டைகளை இடும். ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும். அடைகாக்கும் பறவைக்கு மற்ற பறவை இரை கொண்டு வந்து ஊட்டும். ஒரு மாதத்தில் குஞ்சுகள் பொரிக்கும். தாய் தந்தை இணைந்தே குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.

ஒரு மாதம் கழித்து குஞ்சுகள் பறக்கத் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் குடும்பம் மொத்தமும் மரக்கிளையில் வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது அழகாக இருக்கும். கழுத்தை உள்ளிழுத்து கண்களை மூடிக்கொண்டு விறைப்புடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காய்ந்த மரக்கட்டை போலவே காட்சியளிக்கும்.

இவை விதவிதமான ஒலியை எழுப்பக்கூடியவை. காதல் அழைப்பு, எல்லை அறிவிப்பு, இரைக்கான ஒலி, எதிரிகளை எச்சரிக்க என்று பலவித ஒலிகளை வைத்திருக்கின்றன. காதல் மொழிகளை தாழ்ந்த ஒலியிலும், எச்சரிக்கை ஒலிகளை உரத்த குரலில் பல கி.மீ. தூரம் வரை கேட்கும் அளவிற்கும் எழுப்பக்கூடியவை. இரவில் இவை எழுப்பும் ஒலியை அபசகுனமாக நினைத்து இந்த பறவைகளை கிராமத்தினர் துரத்தி விடுகிறார்கள். உண்மையில் இது விவசாயத்தைக் காக்கும் பறவை. 

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...