Showing posts with label வனவிலங்கு. Show all posts
Showing posts with label வனவிலங்கு. Show all posts

Wednesday, June 17, 2015

ஒரே ஆண்டில் 176 புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு!


 இந்திய வன விலங்குகள் பற்றிய விரிவான பதிவுகளை வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, இந்திய உயிரியல் சர்வே பிரிவிடம் தான் உள்ளது. இது மத்திய சுற்றுச்சூழல், வனவுயிர் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஓர் ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதிலும் களப்பணியில் இருக்கும், இசட்.எஸ்.ஐ.,யின் விலங்கியல் வல்லுனர்கள், புதிதாக, 176 விலங்கினங்களை கண்டுபிடித்து, விவரித்து பதிவு செய்துள்ளனர்.
 இந்த கண்டுபிடிப்புகளில், பூச்சியினங்களுக்கே முதலிடம். அடர்ந்த காடுகளில், யார் கண்ணிலும் படாமலேயே தப்பி விடும் பூச்சிகளில், 93 புது வகைகள், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 இந்த பட்டியலில், 23 வகை புதிய மீன்கள்; நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை போன்றவற்றில், 24 புது இனங்கள்; 12 வகை புதிய சிலந்திகள்; நண்டு, இறால் போன்ற வற்றில், 12 புது வகைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கினங்களை, மிக குறுகிய புவிப்பரப்பில் தான் காண முடிகிறது. எனவே அவை ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்' என்கிறார் இசட்.எஸ்.ஐ.,யின் இயக்குனரான டாக்டர் கே.வெங்கட்ரமணன்.
 பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வது, பல்லுயிர்தன்மை செறிந்த கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தான். இந்தியாவில் கிழக்கு இமாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள், பல்லுயிரி மண்டலங்களாக, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய உயிரியல் வல்லுனர்கள், 176 புதிய விலங்குகளை கண்டுபிடித்து இருக்கின்றனர். 'இவை வனவுயிர் அறிவியலுக்கு புதியவை' என, கோல்கட்டாவிலுள்ள இந்திய உயிரியல் சர்வேயான, இசட்.எஸ்.ஐ., கூறுகிறது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, March 17, 2015

சாம்பல் நிற அணில்களின் சரணாலயம்

பல அரிய தாவரங்களையும், விலங்குகளையும் தென்னகத்தே கொண்டுள்ள திருவில்லிபுத்தூர் மேற்குமலைத் தொடரில் இயற்கை சூழலில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது.
 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச் சரணாலயம் 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இயற்கையின் ஈடற்ற படைப்பாக இருக்கும் இந்தச் சரணாலயம் நில அமைப்பிலும், மழை அளவிலும் தட்பவெப்ப நிலையிலும் பலவித மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தின் இடையில் அமைந்துள்ள இந்த சாம்பல் நிற அணில்கள் சரணாலயப் பகுதி தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைகளால் பயன் பெறுகிறது. பல வகை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பலவகை காடுகள் காணப்படும் இந்தப் பகுதியில் ஆண்டு சராசரி மழை அளவு 500 மி.மீ.
 அந்த சரணாலயத்தில்தான் உலகிலேயே அரிய விலங்கினமான சாம்பல் நிற அணில்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம், ஆத்தூர், திண்டுக்கல், சிறுமலை, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இந்த அணில்கள் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பொள்ளாச்சி, பழனி மற்றும் மேற்கு மலைத்தொடரில் உள்ள திருவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில்தான் இந்த சாம்பல் நிற அணில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
 அழிந்து வரக்கூடிய இந்த சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியையும், விருதுநகர் மாவட்ட வனப்பகுதியையும் சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலயமாக அறிவித்தது.
 பொதுவாக ஒவ்வொரு அணிலும் 2 கூடுகளை கட்டுகிறது. காரணம், ஒரு கூடு காற்றினாலோ அல்லது மழையினாலோ சேதமடைந்தால் மற்றொரு கூட்டில் வாழ்வதற்கு ஒரு முன்னேற்பாடு. புளியம்பழம், மாம்பழம் மற்றும் பழ வகைகளையும் மரப்பட்டைகளையும் உணவாக உட்கொள்ளும் இவை குட்டிப்போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. ஆண்டுக்கு ஒரு குட்டி வீதம் ஈனும் இவற்றின் கர்ப்ப காலம் 35 முதல் 40 நாட்களாகும். இவற்றின் ஆயுள்காலம் 14 ஆண்டுகள்.
 அதிவேகமாக மரம் விட்டு மரம் தாவும் இந்த அணில்கள் இரை தேடுவது காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும்தான். மற்ற நேரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...
வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

 

Saturday, August 16, 2014

கோலா கரடி


 
தப்பவெப்ப நிலைக்கு ஏற்ப இடம் பெயரும் கோலா கரடிகள் கோலா கரடிகள், மரங்களை கட்டிப் பிடித்தாற்போன்று தூங்கும் இயல்பு கொண்டவை. இளம் சாம்பல் நிறத்திலும், அடர்ந்த உரோமங்களுடனும் காட்சியளிப்பவை. இவை காட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று இடம் பெயர்ந்து தூங்கும் மரங்களையும், உண்ணும் இலைகளையும் மாற்றிக் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுளளன. இதனை மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கல் கீர்னி மற்றும் நாட்டலி பிரிஸ்சியோ ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிரெஞ் தீவில் இருக்கும் 37 கோலா கரடிகளை தேர்வு செய்து அவைகளின் நடவடிக்கைகளை ரகசிய கேமரா மற்றும் ஒளி சேகரிப்பு கருவிகல் மூலம் கண்காணித்தனர். 6 வருடங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக கோலா கரடிகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று அடன் உடலில் நிலவும் வெப்ப நிலையை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான செயல் பாடுகளில் ஈடுபடுகின்றன எண்பதை கண்டறிந்துள்ளனர். கோலா கரடிகள் பொதுவாக ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடியவை. இதனால் வெப்ப காலங்களில் உடலில் இருக்கும் குளிர் தன்மையை தக்கவைத்துக்கொள்ள காட்டில் இருக்கும் அசாசியா என்ற மரத்திற்கு இடம் பெயருகின்றன. அசாசியா மரங்கள் பொதுவாக குளிர் தன்மை கொண்டவை. இதனால் கோடைகாலங்களில் நிலவும் வெப்ப சூழலை இந்த மரத்தின் மூலமாக சமாளிக்கின்றன. மேலும் குளிர்காலங்களில் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள யூக்கலிப்டஸ் மரங்களில் தூங்கி அதன் இலைகளை உட்கொள்கின்றன. வெப்ப காலங்களில் மரத்தின் உச்சியில் தூங்கும் கோலா கரடிகள் உணவாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. 
 இது குறித்து ஆய்வாளர் ஆண்ட்ரூ கிராக்கன்பெர்ஜர் கூறும்போது, கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலையால் கோலா கரடிகளில் 4ல் ஒரு பங்கு இறந்து விட்டது.  எனவே, கடினமான சூழலில் சில உயிர்வாழ் இனங்களை வாழ வைக்கும் காரணிகளை குறித்து புரிந்து வைத்து கொள்வது மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.  மரங்களில் வசிப்பதை விரும்பும் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற மிருகங்களும் இந்த விசயங்களையே கடைப்பிடிக்கின்றன என ஆய்வு குழு மேலும் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் ஆஸ்திரேலிய அரசாங்கம் கோலா கரடிகளை அழிந்து வரும் உயிரினங்கள் வரிசையில் இருப்பதாக பட்டியலிட்டு உள்ளது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அவை காணாமல் போய் விடும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  ஆரோக்கியமான கோலா கரடி ஒன்று 16 வருடங்கள் வரை வாழ கூடியது.  ஆஸ்திரேலியாவில் முன்பு 10 லட்சம் வரை கோலா கரடிகள் வசித்துள்ளன. 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Saturday, August 2, 2014

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள


 உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
காரணம் இந்த எறும்புத்தின்னிகளின் இறைச்சிக்கும் அவற்றின் செதில்களுக்கும் சீனா மற்றும் வியட்நாமில் இருக்கும் மிகப்பெரிய கிராக்கி காரணமாக அவை பெருமளவில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாக இயற்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
 கடந்த பத்து ஆண்டுகளில் பத்துலட்சத்துக்கும் அதிகமான எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். குறிப்பாக பெரிய செதில்களைக்கொண்ட பங்கோலின் என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னிகள் அதிகம் அழிக்கப்பட்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 உலக உயிரினங்களில் அதிகபட்சமாக உடலெங்கும் செதில்களைக்கொண்ட ஒரே பாலூட்டி இனமாக வர்ணிக்கப்படும் பங்கோலின் ரக எறும்புத்தின்னிகள் தான் இன்றைய நிலையில் உலக அளவில் சட்டவிரோதமாக விற்கப்படும் முதன்மையான விலங்கு என்கிறார்கள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள்.
 சீனாவிலும் வியட்நாமிலும் இந்த பங்கோலின் ரக எறும்புண்ணியின் மாமிசம் மிகவும் விரும்பி உண்ணப்படும் மாமிசமாக இருக்கிறது. இவற்றின் செதில்கள் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
 இத்தனைக்கும் இந்த பங்கோலின் ரக எறும்புத்தின்னிகளின் செதில்கள் மனித நகங்களைப்போலவே வெறும் கெராடின் என்கிற வேதிப்பொருளால் ஆனது தான் என்றாலும் அதற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக சீன மருத்துவர்கள் நம்புவதால் அதற்கு சீன மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய கிராக்கி நிலவுகிறது.
 இப்படி உணவுக்காகவும் பாரம்பரிய சீன மருத்துவ தேவைகளுக்காகவும் உலகின் எறும்புண்ணிகள் பெருமளவில் சட்டவிரோதமாக கொல்லப்பட்டு கடத்தப்படுகிறது என்பது இயற்கை பாதுகாவலர்களின் கவலையாக இருக்கிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Thursday, August 2, 2012

இந்தியாவுக்கு வனவிலங்கு பாதுகாப்பில் நல்ல பெயர்

 உலகநாடுகளில் அனைத்திலும் வனவிலங்கு சட்டவிரோதமாக பல உபயோகத்திற்காக வேட்டையாடப்படுகிறது. வியட்நாமில் காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காக கொல்லப்படுகின்றன

 உலகில் அருகிவரும் உயிரினங்களின் உடற்பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் குற்றங்கள் நடக்கும் நாடுகள் வரிசையில் வியட்நாம், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பதாக வனஉயிர்கள் பாதுகாப்புக்கான உலகளாவிய அமைப்பு (WWF) கூறுகின்றது.

 இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 23 ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை பட்டியல் படுத்தியுள்ள WWF அமைப்பு, தென்னாபிரிக்காவில் இருந்து காண்டாமிருகங்களின் கொம்புகள் கடத்தப்படும் நாடுகளில் வியட்நாம் முக்கிய இடமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது.

 தென்னாபிரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் 448 மிருகங்கள் கொம்புகளுக்காக கடத்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காண்டாமிருகங்களின் கொம்புகள் கடத்தி விற்கப்படுவதை தடுப்பதற்கு சீனா முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறுகின்ற போதிலும், அங்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வனஉயிர்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

 ஆனால் இந்தியாவும் நேபாளமும் யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளின் உடற்பாகங்கள் கடத்தி விற்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் வெற்றியடைந்திருப்பதாகவும் WWF அமைப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்...