Tuesday, September 22, 2009

நாவல் மரம்

நாவல் மரத்தையோ அதன் பழத்தையோ எங்கு பார்த்தாலும் எனக்கு எங்கள் ஊர் ஞாபகம் வரும். எங்கள் ஊரின் மேற்கே கோவில்தோப்புனு ஒரு இடம். அந்த இடத்தில் கருப்பசாமி கோவில், பஞ்சபாண்டவர் கோவில் உள்ளது. இந்த இடத்தில் பலவகை மரங்கள் உள்ளது. அதில் நாவல் மரம் ஒன்று, அடுத்து ஒரு அரசமரம். இந்த இரண்டு மரங்களும் ரெம்ப பெரியமரம் 5பேர் கட்டிபிடிக்களாம் அவ்வளவு பெரியது.இந்த நாவல்மரத்தின் வயது என்னனு ஊர் பெரியவர்களிடம் கேட்கும் போது எங்களுக்கு எங்கடா தெரியும் எங்க அய்யா, தாத்தான்ட்ட கேக்கும்போது அது நாங்க சின்னபையனாக இருக்கும் போது இப்படித்தாண்டா இருந்ததுனு சொன்னாங்கனு சொல்வாங்க.


ஆடி மாதம் ஆரம்பத்தில் இருந்து பழம் பழுத்து விழும் காலை 5மணிக்கு பழத்தை சேகதிப்பதற்க்கு நாம்தான் முதலில் வந்திருக்கோம் நினைத்தால் நமக்கு முன் நிறையப் பேர் வந்துதிருப்பார்கள். ஒவ்வெருவரும் நிறையப் பழங்களை சேகரிப்பார்கள் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.சமிபத்தில் ஊருக்கு போய் இருந்தேன் அப்ப என் பையன்களிடம் வாங்கடா போய் நாவல் பழம் எடுக்கப் போகலாம்னு சொன்னேன் அப்ப எங்க அம்மா அங்கே மரமே இல்லைனு சொன்னாஙக ஏன் என்ன ஆச்சுனு கேட்டதுக்கு மரம் எரிஞ்போச்சுனு சொன்னாஙக. அதை கேட்டவுடன் எனக்கு நெம்ப அதிர்சியாகவும் வருத்தமாக இருந்தது.எப்படிமா எரிஞ்சதுனு கேக்க பசங்க தேன் எடுத்து விட்டு தீ பந்தத்தை சரியாக அனைக்காமல் மரத்துக்குள் போட்டுட்டு வந்துட்டாங்க இரவில் மரம் எரிந்துவிட்டதுனு சொன்னாங்க. இடத்தை போய் பார்த்தேன் மரம் இருந்த சுவடுதான் இருந்தது பல வருடமரம் நெடியில் வெந்து சாம்பம் ஆகிவிட்டது. மரம் நடுவில் பெரிய ஓட்டை இருக்கும் வண்டுகள் குடைந்த ஓட்டைகள் நிறைய இருக்கும் அதனால் தீ விரவில் பற்றிக் கொண்டது. நாங்களும் தேன் எடுத்திருக்கிறோம் கவனமா தீயை அனைத்து போட்டுட்டுத்தான் வருவோம்.


சரி விசயத்துக்கு வருவோம் நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் உடல் துர்நாற்றம், வயிறு உப்புசம், சிறுநீர்க்குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணிரல் வீக்கம், சளி, இருமல், அதிக அளவிலான மாதவிடாய் போக்கு, ஆஸ்தும், கரப்பான், தோல்நோய், இரத்த பேதி, அடிக்கடி தாகம் எடுத்தல் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.இதன் பழம், இலை, பட்டை, நாவல் பழக் கெட்டையின் பருப்பு இவைகலை காயவைத்து பொடி செய்து காலை, மாலை சாப்பிட சர்கரை நோய் கட்டுப்படும் சர்கரை நோய்க்கு அருமருந்து. சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழம் சாப்பிடவும்.


நன்றி மீண்டும் பேசுவோம்.


சோ.ஞானசேகர்..

Wednesday, September 9, 2009

"பெருந்தலைவர் காமராஜ்"

பெருந்தலைவர் காமராஜ் தனக்கென்று வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பெருந்தலைவர் காமராஜ். பணம் படைத்தவர்கள், சாதிப் பெருமை பெற்றவர்கள், செல்வாக்கு மிகுந்தவர்கள் மட்டுமே அரசியலில் பதவி பெற முடியும், தலைமை ஏற்க முடியும் என்றிருந்த நிலையைத் தம் அயராத உழைப்பால், தியாகத்தால், மாற்றிக் காட்டியவர் காமராஜ்.

எளிய குடும்பத்தில் பிறந்தவர், ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தவர், ஆறாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர், தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர், எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் துவக்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை அவரது இளம் உள்ளத்தில், தேச பக்திக் கனலைத் தூண்டிவிட்டு, தேசிய இயக்கத்தில் அவரை இணையவைத்தது. அண்ணல் காந்தியடிகளைத் தம் நெஞ்சம் நிறைந்த தலைவராக ஏற்றுக் கொண்டு, காங்கிரசின் முழுநேர ஊழியராகச் சத்தியாக்கிரகப் போரட்டங்களில் ஈடுபட்டு, வெஞ்சிறையில் பலமுறை வாடினார், காங்கிரசிஸ் இயக்கத்தின் தலைவர் ஜவகர்லால் நேருவின் மதிப்பையும், பாசத்தையும் தூய தொண்டாலும், மக்கள் செல்வாக்காலும் பெற்றார். தமிழ்நாட்டின் அரசியல் மேதை சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக் கொண்டு, அவரது நன்மதிப்பையும் பெற்று, தமிழ்நாட்டு அரடியலில் நம்பிக்கை நட்சத்திரமாகத் தொண்டாற்றினார்.

பல்கலைக் கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக்கொண்டார். அவர் விரும்பிப் படித்த ஆங்கில நூல்களையும் தமிழ் நூல்களையும் சென்னையில் உள்ள காமராஜ் நினைவு இல்லத்தில் இன்னும் காணலாம்.

பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே காமராஜ் கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழவைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார்.ஜவகர்லால்நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப்பெருந்தலைவராக காமராஜ் செயல்பட்டார்.


''சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்"


"வாழ்க்கைக் குறிப்பு"

1903 - விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாக பிறந்தார். 1907-ல் தங்கை நாகம்மாள் பிறப்பு.

1908- காமராஜ் திண்மைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பெற்றார். ஏனாதி நாயானார் வித்யாசலாவிலும், சத்திரிய வித்தியாசலாவிலும் சேர்ந்து படித்தார்.

1909- தந்தை மறைவு. தாய்மாமன் கருப்பையா நாடர் காமராஜ் குடும்பத்திற்கு உதவியாக இருந்தார்.

1914-ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டார்.

1919-ஏப்ரல் - ரவுலட் சட்டத்தை எதிர்த்துக் காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.

1920-ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

1921-தமிழ்நாடு காங்கிரஸ் செயலராக இருந்த பெரியாரை முதன் முதலாக விருதுநகரில் சந்தித்து அவரது உறுதி மிக்க பேச்சுத் திறனை போற்றினார்.

1923-நாகபுரி கொடிப் போரட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

1925-கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1926-சத்தியமூர்த்தி - சீனிவாசஅய்யங்கார் ஆகியோருடன் தேர்தல் பணி புரிந்தார்.

1927-சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதி பெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார்.

1930-வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்யாகிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1931-காந்தி இர்வின் ஒப்பந்தம் காரனமாகக் காமராஜ் விடுதலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும், ஒற்றுமையோடு பாடுபடுவதிலுந்தான் நமது முன்ன்ற்றம் இதுக்கிறது."
1933-சதி வழக்கில் காமராஜ் சிறைக்கனுப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

1934-காமராஜ் உழைப்பால் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.

1936-காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1937-சட்டமன்றப் பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வென்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்டு வென்றார்.

1940-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.

1941-யுத்தநிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததால்,கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருக்கும்போதே 1941-மே 31 விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942-மார்ச்-சிறையிலிருந்து விடுதலையானதும்,ஒருநாள் மட்டும் நகராட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, தீவிர கட்சிப் பணிக்காக நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

1942-ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார், 1945-ல் விடுதலை ஆனார்.

1946-மே 16-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ஆகஸ்டு 15- இந்தியா விடுதலை பெற்றது. பண்டிதநேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது. அண்ணல் காந்தியடிகளைப் போற்றி அறிக்கை வெளியிட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.

1949-இலங்கையில் சுற்றுப்பயணம்.

1950-நானகாவது முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1952-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக டாக்டர் சுப்பராயன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தார்.

1952-நாடாளுமன்ற உறுப்பினர்- சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறமுடியவில்லை. இராஜாஜி முதலமைச்சர் ஆவதற்க்குக் காமராஜ் ஒத்துழைப்பு நல்கினார். 1952டிசம்பரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"அப்பாவியான ஏழை மக்களை வடதி படைத்தவர்களும், கல்மனம் படைத்தவர்களுந் கசக்கிப் பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்."
1953-இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார்.

1954-பிப்ரவரியில் மலாய் நாட்டில் சுற்றுப்பயனம். குலக் கல்வித்திட்ட எதிர்ப்பு காரணமாக இராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராகக் காமராஜ் போட்டியிட்டு வென்றார்.

1954-ஏப்ரல் 13- சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். குடியாத்தம் இடைத்தோர்தலில் போட்டியிட்டு வென்றார்.

1955-ஆவடி காங்கிரஸ் மாநாடு வெற்றிகரமாக நடைபெற காமராஜ் அரும்பணி ஆற்றினார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலாலும் பேய் மழையாலும் பாதிக்கப்பட்டபகுதிகளை நேரில் பார்த்து, நிவரண உதவிகளைச் செய்தார்.

1956- மொழிவழி மாநிலம் என்ற திட்டத்தின்படி புதிய தமிழகம் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1957-பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

1960-ஏழைப் பிள்ளைகள் அனைவரும் 11-ஆம் வகுப்புவரை இலவசக் கல்வி அளித்தார்.
"நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாகச் சொல்ல முடியாது."
1961-அக்டோபர் 9- சென்னை மநாகராட்சி உருவாக்கிய காமராஜ் திருஉருவச் சிலையைப் பிரதமர் நேரு திறந்துவைத்தார்.

1962-பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

1963-எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டத்தை அமல்படுத்தினார். அக்டோபர் 2-காமராஜ் திட்டத்தின்படி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1964- அனைத்திந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 27-ல் நேரு அவர்கள் மறைந்த பிறகு, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட காமராஜ் ஆவன செய்தார்.

1965-இந்தியா - பாக்கிஸ்தான் போர் ஏற்பட்டபோது பஞ்சாப் போர்முனைப் பகுதிகளுக்குக் காமராஜ் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

1966-தாஸ்கண்ட் சென்று லால்பகதூர் மறைவு எய்தியதால், இந்ராகாந்தி பிரதமராவதற்கும் காமராஜ் ஆவன செய்தார். சோவியத் நாட்டிற்க்கும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் காமராஜ் சென்று வந்தார்.

1967-பொதுத் தேர்தலில் காமராஜ் தோல்வி.

1969-நாகர்கோயில் நாடடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு.காமராஜ் அவர்களின் தாயார் மறைவு.
"பெணகள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்."
1971-பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. நாடளுமன்ற உறுப்பினராகத் காமராஜ் தேர்வு.

1972-தாமிரப்பத்திர விருது பெற்றார்.

"மறைவு"

1975- எளிய குடும்பத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத் தொண்டனாக வாழ்வைத் துவக்கி, தன்னலமற்ற உழைப்பால், தியாகத்தால், மக்கள் தலைவராக உயர்ந்து, கோடிக்கணக்கான இதயங்களில் குடிகொண்டிருக்கும் பெருந்தலைவர் காமராஜ் 1975 அக்டோபர் 2 அன்று அண்ணல் காந்தியடிகல் பிறந்தநாளில் நம்மை விட்டு உடலால் பிரிந்தார். நினைவாக நம் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.
" நினைவில் காமராஜ்"

கிண்டி படேல் சாலையில் காந்தி மண்டபத்தை அடுத்துள்ள வளாகத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் தமிழக அரசு காமராஜ் நினைவகத்தை உருவாக்கியிருக்கிறது.

விருதுநகரில் காமராஜ் வாழ்ந்த இல்லத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக்கியுள்ளது.

1976- ஜூலை 15ஆம் நாள் காமராஜ் நினைவு 25 காசு அஞ்சல் தலையை மைய அரசு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிட்டது. 1976 ல் பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. 1977 ஆகஸ்டு 18 தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேதகு இமந்தியக் குடியரசுத் தலைவர் சஞ்சுவி ரெட்டியால் காமராஜ் திருவுருவப் படம் திறந்து வைப்கப்பட்டது.

"காமராஜ் நினைவு இல்லம்"

பெருந்தலைவர் காமராஜ் சென்னை, தியாகராய நகர் திருமலைச் சாலையில் வாழ்ந்து வந்த வீட்டை அரசுடைமையாக்கி மாண்பு மிகு அன்றய தமிழக முதலமைச்சர் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்கள் 15-7-1978 அன்று நினைவு இல்லமாக மாற்றினார். அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து கூறும் புகைப் படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நினைவு இல்லத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ன.

தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நினைவு இல்லத்தைப் பொது மக்கள் பார்வையிடலாம்.சென்னை கடற்கரைச் சாலைக்கு காமராஜ் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்ட காமராஜ் மாவட்டத்தை 1984 ஜூலை 15 அன்று மாண்புமிகு அன்றய தமிழக முதமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மதுரைப் பல்கலைக் கழகத்திற்க்கு மதுரை-காமராஜ் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டிச் சிறப்பித்தார்.

தமிழக அரசு வாங்கிய மூன்றாவது கப்பலுக்கு தமிழ் காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார்.
தனக்கென்று வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பெருந்தலைவர் காமராஜ்.
சோ.ஞானசேகர்.