Saturday, July 24, 2010

சப்தங்கள்


          பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவு வரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், செயல்படுவதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. வாகனங்களும், சைரன்களும், கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும், பலவிதமான மணியோசைகளும், ஒலிபெருக்கிச் சப்தங்களும் ஓலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற சப்தங்களைக் கேட்டுவருவதால், இது அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். தொந்தரவாக இருக்காது. ஆயினும் இது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் ஆபத்தானது.

   டெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக் கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். தொடர்ச்சியான சப்தம் உறக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சப்தங்களை ஏற்படுத்தாதபடி சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.

இலைகள் சலசலக்கும் ஓசை - 10 டெசிபல்

ரகசியம் பேசும் குரல் - 20 டெசிபல்

மெதுவான உரையாடல் - 40 டெசிபல்

கூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை - 60 டெசிபல்

நகரத் தெருக்களின் சப்தம் - 70 டெசிபல்

தொழிற்சாலையின் ஓசை -100 டெசிபல்

ஒலி பெருக்கிச் சப்தம் - 110 டெசிபல்

விமானத்தின் ஓசை -120 டெசிபல்


படித்தது.


சோ.ஞானசேகர்.

Monday, July 19, 2010

அதிகாலைக் குரல்

     அதிகாலையில் பறவைகள் குரலெழுப்புவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, பெரும்பாலும் எல்லா உயிரினங்களிலும் உள்ளிலுள்ள உயிரியல் கடிகார இயக்கம். இரண்டு, உணவு. மூன்று, தம் எல்லையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது. THE EARLY BIRD CATCHES THE WORM (அதிகாலையில் எழுகின்ற பறவை இரை பிடிக்கும்) எனும் ஆங்கிலப் பழமொழி, பறவைகளின் காலை நேரக் கூச்சல்களை விளங்குகிறது. அதிகாலையில் பறவைகள் இரை தேடுவதற்கான பரபரப்பில் இருக்கும். ஆயினும் குறைவான வெப்ப நிலையும், மங்கிய வெளிச்சமும் அதிகாலையில் இரை தேடுவதற்குத் தடையாக இருக்கின்றன. இரை குறைகின்ற காலகட்டங்களில்தான் பறவைகள் மிக உரக்கக் கத்துகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

÷காலையில் எழுந்தவுடன் பறவைகள் அலைந்து திரியும். உணவு கிடைக்கும் வாய்ப்புடைய இடங்களைக் கண்டுபிடித்து, அந்த இடத்தின் மீது தங்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும். அப்படியான இடங்களுக்கு மற்ற பறவைகள் வந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் அவை ஓசை எழுப்புகின்றன. பறவைக் குழுவிலிருக்கும் வலிமையான ஆண் பறவைதான் அதிக உரத்த குரலில் கூவும், அல்லது பாடும். தான்தான் இந்தப் பறவைகளின் தலைவன் என்று அறிவிப்பதற்காகத்தான் அது இவ்வாறு செய்யும். தட்டிக் கேட்பதற்கு ஒரு தலைவர் அந்த இடத்தில் உண்டென்று அறிந்தால் மற்ற பறவைகள் அங்கே அவ்வளவு சுலபமாக வந்துவிடுவதில்லை. இது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்திருக்கிறது. பறவைக் கூட்டத்தின் தலைவரை கூட்டத்திலிருந்து விலக்கி அங்கே ஒரு ஒலி பெருக்கி வைக்கப்பட்டது. அதன் வழியே தலைவரின் குரல் ஒலிபரப்பப்பட்டது. அந்த இடத்திற்கு வர முற்பட்ட பல பறவைகளும் அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் போய்விட்டன. ஆனால் அதிக எதிர்ப்புத் தன்மை கொண்ட சில பறவைகள், ஒலி பெருக்கியைத் தாக்க முற்பட்டன. ஒலி பெருக்கி வைக்காத இடங்களில், மற்ற பறவைகள் நிறைய வந்து சேர்ந்தன.

÷இதைப்போன்று, சூரியன் உதிக்கும்போது சேவல் கூவுவதற்கும் மூன்று காரணங்கள் உள்ளன. சேவலின் உயிரியல் கடிகாரம், உணவு தேடுவதற்கான ஆயத்தம், தன் அதிகார எல்லையை மற்றவர்களுக்கு அறிவிப்பது ஆகியவையே அவை.

படித்தது..

சோ.ஞானசேகர்.

Saturday, July 17, 2010

பறவைகள் தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்தல்.


      பறவைகளும் விலங்குகளும், தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்ந்து செல்வது "வலசை' போவது எனப்படும். பறவை உலகின் பல அற்புதமான சம்பவங்களில் ஒன்று இது. வலசைப் பறவைகளின் பயணங்கள் ராணுவ ஒழுங்குடன் துல்லியமாக நடைபெறும். ஏறக் குறைய, தெற்குத் திசையை நோக்கியும் வடக்குத் திசையை நோக்கியும்தான் இவை பயணம் செய்யும். பூமத்திய ரேகைக்கு வடக்கிலுள்ள பல இனத்தைச் சேர்ந்த நிறைய பறவைகள் குளிரின் கடுமையிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கிப் பயணம் செய்கின்றன. ஏறத்தாழ ஆறு மாத காலம் அங்கே தங்கிய பிறகு அவை தங்கள் பழைய இடத்திற்கே திரும்பிச் செல்கின்றன.

வலசைப் பறவைகளில் மிகவும் திறமையானது ஆர்ட்டிக் டெர்ன் என்ற பறவைதான். வட துருவத்திற்குச் சுற்றிலுமுள்ள இடங்களில் இனப் பெருக்கம் செய்த பிறகு இவை தெற்கு நோக்கிப் புறப்பட்டு, ஏறத்தாழ 18,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து தென் துருவப் பிரதேசங்களை அடைகின்றன. ஒரு மீட்டரின் மூன்றில் ஒரு பங்கு நீளம்தான் இருக்கும் இந்தப் பறவை. இவ்வளவு தொலைவு பயணம் செய்கிற பறவைகள் குறைவு. ஆயினும் 3,000 அல்லது 4,000 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வருகின்ற பறவைகள் இருக்கின்றன. இது போன்ற பறவைகளை குளிர் காலத்தில் நம் நாட்டிலும் பார்க்கலாம்.

உயரமான மலைகளில் வசிக்கின்ற பல வகையான பறவைகள், வடக்கு தெற்காக பயணம் செய்வதற்குப் பதிலாக, உயரத்திலிருந்து கீழ்ப் பகுதிக்கு வருகின்றன. குளிர் காலம் முடிந்ததும் மீண்டும் உயரத்திற்குச் சென்றுவிடுகின்றன.

வலசைப் பறவைகள் , வழி தவறாமல் பெரிய மலைகளையும் கடல்களையும் கடந்து, எல்லா வருடமும் வருகிற அதே இடத்தைச் சரியாக அடைகின்றன. பறவைகளால் இது எப்படி முடிகிறது என்பதை இப்போதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சூரியனின் நிலையையும், இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டுதான் அவை பயணம்போகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நீண்ட பயணம் போவதற்கான சக்தி பறவையின் மூளையில் எங்கே, எப்படி ஒளிந்திருக்கிறது என்று இப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, நாளின் நீளத்திலுள்ள வித்தியாசமும் - இனப் பெருக்கத்தோடு தொடர்புடைய உள் உணர்வும்தான் பறவைகளை வலசை போகத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். அவற்றின் மரபான குணங்கள்தான், பயணம் போவதற்கான நேரத்தையும், திசையையும், தூரத்தையும் முடிவு செய்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகள் மட்டுமல்ல, சால்மன் எனும் மீனும், மோனார்க் எனும் வண்ணத்துப் பூச்சியும் நெடுந்தூரம் பயணம் போவதில் மிகவும் திறமை பெற்றவை.


படித்தது.

சோ.ஞானசேகர்.