Friday, November 27, 2015

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை விவசாயத்தை காக்கும் பறவை

பார்ப்பதற்கு ஆந்தை போல் இருக்கும் இந்த பறவை, ஆந்தை அல்ல. இதன் பெயர் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை. நமக்கு எதிரே இருக்கும் மரத்தில் இந்த பறவை அமர்ந்திருந்தாலும் இதை நம்மால் காண முடியாது. சூழலுக்கு ஏற்ப தன்னை மறைத்துக் கொள்வதில் கில்லாடி.

உலகம் முழுவதும் மூன்று வகையான தவளைவாய்ப் பறவை இனம் இருக்கிறது. அவை: செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை, புள்ளித்தீற்றல் தவளைவாய்ப் பறவை, பப்புவன் தவளைவாய்ப் பறவை ஆகியவையாகும். இவற்றில் வெள்ளை சாம்பல் நிறத்தில் உடலில் ஆங்காங்கே கருநிற கோடுகளுடன் அடிப்பகுதியும், செம்பழுப்பு நிறத்தில் கருமை நிற புள்ளிகளும் கொண்ட செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை தனது விசித்திர நிறக் கலவையால் மரங்களில் அமர்ந்திருந்தாலும் பார்வைக்கு புலப்படாது. நல்ல மதிய வெயிலில் கூட மரத்தின் தாழ்வான கிளையில் அசைவற்று அமர்ந்திருக்கும்.

இவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை. தோப்புகள், புதர்கள். மனிதர்கள் நடமாடும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பயமின்றி வசிக்கின்றன. இதுவொரு இரவு நேர வேட்டையாளி. பகலில் மரக்கிளையில் அசையாமல் அமர்ந்திருக்கும் இவற்றின் வாய்க்கருகில் பறந்து வரும் பூச்சிகளை மட்டும் உண்ணும். இரவில் வேட்டை யாடுவதில் படு கில்லாடிகள். குருத்து வண்டுகள், வெட்டுக் கிளிகள், தத்துக்கிளிகள், மரவண்டுகள் போன்ற பயிர்களை அழிக்கும் பூச்சிகள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். அதனால் இது விவசாயத்துக்கு தோழன். மேலும் எலி, அந்துப்பூச்சி, வண்டு, புழுக்கள், நத்தை, சிலந்தி, குளவி, மரவட்டை, பூரான், தேள், பல்லி, தவளைகள் போன்றவையும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் வாய்க்குத் தப்புவதில்லை. இதனால் இதை சுற்றுச் சூழலுக்கு உகந்த பறவை என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

இந்தப் பறவைகள் பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும். ஆண் பறவை தனது ஜோடியின் இறகுகளை அடிக்கடி அலகால் கோதி அன்பை வெளிப்படுத்தும். ஒருமுறை இணை சேர்ந்த ஜோடி வாழ்நாள் முழுவதும் பிரிவதில்லை. வருடா வருடம் ஒரே இடத்தில் கூடு கட்டும். இவற்றின் கூடுகள் மிகவும் பலவீனமானவை. மரக்கிளைகளில் கூடு கட்டிக் கொள்ளும். பெரும் மழைக்கும், கொஞ்சம் வேகமான காற்றுக்கும் கூட தாங்காது, இவற்றின் கூடுகள். பெண் பறவை இரண்டு அல்லது மூன்று வெள்ளை நிற முட்டைகளை இடும். ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும். அடைகாக்கும் பறவைக்கு மற்ற பறவை இரை கொண்டு வந்து ஊட்டும். ஒரு மாதத்தில் குஞ்சுகள் பொரிக்கும். தாய் தந்தை இணைந்தே குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.

ஒரு மாதம் கழித்து குஞ்சுகள் பறக்கத் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் குடும்பம் மொத்தமும் மரக்கிளையில் வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது அழகாக இருக்கும். கழுத்தை உள்ளிழுத்து கண்களை மூடிக்கொண்டு விறைப்புடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காய்ந்த மரக்கட்டை போலவே காட்சியளிக்கும்.

இவை விதவிதமான ஒலியை எழுப்பக்கூடியவை. காதல் அழைப்பு, எல்லை அறிவிப்பு, இரைக்கான ஒலி, எதிரிகளை எச்சரிக்க என்று பலவித ஒலிகளை வைத்திருக்கின்றன. காதல் மொழிகளை தாழ்ந்த ஒலியிலும், எச்சரிக்கை ஒலிகளை உரத்த குரலில் பல கி.மீ. தூரம் வரை கேட்கும் அளவிற்கும் எழுப்பக்கூடியவை. இரவில் இவை எழுப்பும் ஒலியை அபசகுனமாக நினைத்து இந்த பறவைகளை கிராமத்தினர் துரத்தி விடுகிறார்கள். உண்மையில் இது விவசாயத்தைக் காக்கும் பறவை. 

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Thursday, July 30, 2015

நெருப்புக் கோழி

 அசுரப்பறவை என்று இங்கே குறிப்பிடுவது தீப்பறவையைத்தான்! ஆம்! நெருப்புக் கோழி! இது பறவை இனங்களில் மிகப்பெரியது! விசித்திர இயல்புகள் நிறைந்தது! முழு உருவமுடைய ஆண் பறவை ஏறக்குறைய 2.5மீட்டர் உயரமும் 135 அல்லது 180 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

 இப்பறவை மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது! ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன! இதன் பெரிய முட்டையொன்று 1.4 கிலோ முதல் 1.8 கிலோ எடையைக் கொண்டிருக்கும்! இப்பறவை உணவுக்கு பயன்படுவதோடு இதன் சிறகுகளிலிருந்து கிடைக்கும் இறக்கைகள் அலங்கரிப்புக்கும் உதவுகின்றன! ஆப்பிரிக்க ஆதிவாசிகள் இவ்விறக்கைகளை உடையாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலம் செல்லச் செல்ல நாகரிக நாடுகளிலும் இவ்விறக்கைகள் அழகு அணியாகப் பயன்படுத்தப்படலாயின.

 ஆண் பறவையின் உடலில் கருப்பு நிறமுடைய இறக்கைகள் காணப்படும். இப்பறவையின் சிறகுகள் வெண்மை நிறம் கொண்டவையாகவும் இதன் வால் இறக்கைகள் நிரம்பியதாகவும் இருக்கும். பெண் பறவையின் இறக்கைகள் மங்கலாகவும் சாம்பல் தவிட்டு நிறங்களில் கவர்ச்சியின்றியும் காணப்படும்.

 தீப்பறவைகளில் பலவகை உள்ளன. அதில் ஒரு வகை வடஆப்பிரிக்கா, சிரியா, மெசபடோமியா ஆகிய இடங்களிலும் மற்றொரு வகை சோமாலிலாந்திலும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலெல்லாம் சிறந்த இனம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுதான். அதிலும் "கலஹரி' பாலைவனத்தில் காணப்படுவதே மிகச் சிறப்புடையதாகும்.

 பாலைவனப்புதர்களில் இவை மறைந்திருக்கும். புதர்களின் உள்ளிருந்தவாறே இவை தம் எதிரிகளைக் கவனித்துக்கொள்ளும். இதற்கேற்றவாறு இதன் நீண்ட கழுத்தும் சிறு தட்டையான தலையும் அமைந்துள்ளன. புதரினுள்ளிருந்து இது தலையை உயர்த்திப் பார்க்கும்போது இதைக் கண்டு கொள்ள இயலாது.

 இந்த அசுரப் பறவைகளால் பறக்க இயலாது. ஆனால் விரைவாக ஓடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இதன் விரிந்த சிறகுகள் இதன் ஓட்டத்திற்குத் துணையாக உதவுகின்றன. விமானத்தின் சிறகுகள்போல் இதன் சிறகுகள் ஓரளவு வேகமாகச் செல்லும் ஆற்றலை இதற்கு அளிக்கின்றன. குதிரைபோல் வேகமாகச் செல்லும் இது மணியொன்றுக்கு 42 கி.மீ. ஓட்டம் தொலைவைக் கடக்கும் ஆற்றல் உடையது. இதன் ஓட்டம் வளைவு கொண்டதாக இருப்பதால் எளிதில் இது வேட்டையாடுவோர் கையில் அகப்பட்டுக்கொள்கிறது.

 நீண்ட நாட்கள் இவை நீரின்றி வாழும் இயல்பு பெற்றவை! இப்பறவைகள் எல்லா வகையான உணவையும் உட்கொள்ளும்! சிறு பிராணிகள், புற்கள், இலைகள், பழங்கள், கொட்டைகள் போன்றவை இவற்றின் உணவாகும்.

 ஆண் பறவைகள் அடிக்கடி சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்யும்!

 பெண் பறவைகள் அனைத்தும் ஒரே கூட்டில் முட்டையிடும்! ஆண்பறவை இவற்றை அடைகாக்கும்! திருட வரும் நரிகள், கழுதைப்புலிகள் மற்றும் ஏனைய மிருகங்களிடமிருந்தும் ஆண் பறவை மணிக்கணக்காக முட்டைகளைப் பாதுகாக்கிறது! பிறகு ஷிப்ட் முறையில் பெண் பொறுப்பேற்றுக் கொள்கிறது! இரைதேடுவதற்கு வெளியில் செல்லும்போது முட்டைகளை மணலில் புதைத்து வைத்துவிட்டுச் செல்கின்றன!

 சூரியனின் வெப்பத்தால் இவை கெட்டுப் போகாமலும் பாதுகாத்துக் கொள்கின்றன.

 ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இப்பறவைகளின் இறக்கைகள் நாகரிகச் சின்னங்கள் ஆன பிறகு இப்பறவைகளை வளர்க்கப் பண்ணைகள் பல தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Tuesday, July 21, 2015

"கிங் சால்மன்' (KING SALMON)

"கிங் சால்மன்' (KING SALMON) அமெரிக்காவின் ஒரு மாநிலமான அலாஸ்காவின் தேசிய மீன்! உலகிலுள்ள சுவையான மீன்களில் முதலிடத்தைப் பிடிப்பது கிங் சால்மன் ஆகும். அலாஸ்கா அரசின் வருமானத்துக்குக் கணிசமாக உதவும் இந்த மீன் நல்ல நீரில் உற்பத்தி ஆகிறது. பிறந்த சில மாதங்களில் ஆயிரக் கணக்கான மைல் தூரம் பயணம் செய்து கடலை அடைகிறது!

மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி மீன் பிடிப்பவர்களிடமிருந்தும், கரடிகள், மற்றும் பருந்துகளிடமிருந்தும் தப்பிப் பிழைத்துத் தான் பிறந்த இடத்துக்கே வந்து சேர்கின்றன! இதில் என்ன வியப்பென்றால் கடலிலிருந்து ஆற்றுக்குள் இவை நீந்த வேண்டும்! கடலில் கலக்கும் ஆற்றின் வேகம் எப்படியிருக்கும்? அந்த வேகத்தை எதிர்த்து இவை கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்வது அரியதோர் காட்சியாகும்! அதைவிட அதிசயமான விஷயம் என்னவென்றால் அருவி எதிர்ப்படும்போது அம்மீன் மேல் நோக்கிப் பாய்ந்து அருவியின் வேகத்தை எதிர்த்துச் செல்கிறது!! அதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும்!

அப்படிப் பாய்ந்து வரும் மீன்களைப் பிடிப்பதற்காக நீர் நிலைகள் அருவிகள் ஓரம் "கிரிஸ்லி' (GRIZZLY)கரடிகள் காத்திருக்கும்! சால்மன் மீன்களைப் பார்த்ததும் பாய்ந்து பிடிக்கும். அருவி நீரை மீன் எதிர்த்துப் பாய்வது ஒரு வியப்பென்றால் அவற்றைப் பாய்ந்து பிடிக்கக் காத்திருக்கும் கரடிகள் அருவி நீரில் முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்ந்து மீனைப்பிடித்து சமநிலை தவறாமல் மீண்டும் தரையில் காலூன்றுவது ஓர் அதிசயம்! அதைப் பார்ப்பவர்களுக்குக் கரடியை அருவி அடித்துக் கொண்டு போய்விடும் என்றுதான் தோன்றும்! சால்மன்களுக்குத்தான் எவ்வளவு வாழ்க்கைப் போராட்டம்!

இம்மாபெரும் போராட்டத்தில் தப்பி தான் பிறந்த இடத்துக்கே வந்து சேரும் சால்மன் மீன்கள் சுமார் 1500லிருந்து 10000ஆயிரம் முட்டைகள் இடும். இதற்காக இவை நூற்றுக் கணக்கான மைல்கள் நீந்த வேண்டியிருக்கிறது! சில மீன்கள் ஆயிரம் மைல்கள் கூட நீந்தும்! இந்த பயணத்தில் சோர்வுற்று சில மீன்கள் இறந்துவிடுவதும் உண்டு! பயணத்தில் வெற்றி பெற்று இட்ட முட்டைகளை பெண்மீன்கள் மட்டுமின்றி ஆண் மீன்களும் போட்டி போட்டுக்கொண்டு காக்கிறது!

தான் பிறந்த இடத்தை அடைந்த இம்மீன்கள் மீண்டும் கடலை அடைவதில்லை. பின்னே?

பொறிந்த தன் குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டே சில நாட்களில் பெரிய சால்மன்கள் இறந்துவிடும். சில மாதங்களில் பெரியனவாக வளர்ந்து விட்ட சால்மன்கள் கடலை நோக்கி பயணம் செய்யும். மீன்களில் "கிங் சால்மன்'களின் வாழ்க்கை ஒரு சரித்திரம் என்பதில் சந்தேகமில்லை!


இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

Monday, July 20, 2015

மேற்குத் தொடர்ச்சி மலைகள்!

உலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு! அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்! இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது!

இது இமயமலையைவிட பழமையானது!

80மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளினால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவு ஆகும்.

இந்த மலைத்தொடரானது குஜராத் மாநிலத்தில் தபதி நதியில் தொடங்கி மஹாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளா, வழியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை 1600கி.மீ. தூரத்திற்கு வரைபடத்தில் சங்கிலித் தொடர்போல் நீண்டு உள்ளது!

இம்மலைத்தொடர் தக்காண பீடபூமியின் மேற்கு எல்லையாக அரபிக்கடலிற்கு இணையாக

கடற்கரையினை ஒட்டி வடக்கு தெற்காக நீண்டு உள்ளது. அரபிக் கடலிற்கும் இந்த மலைத்தொடருக்கும் இடைப்பட்ட நீண்ட குறுகிய பகுதி "மேற்குக் கடற்கரை சமவெளிப்பகுதி' எனப்படுகிறது!

அரபிக் கடற்கரைப் பக்கமுள்ள மலைப்பகுதிகள் செங்குத்தாக உயர்ந்தும் தக்காண பீடபூமியின் பக்கம் உள்ள மலைகள் கிழக்குப்பகுதி மென்சரிவாகவும் காணப்படுகின்றன.

அகஸ்தியர்மலை, மகேந்திரகிரி,பொதிகைமலை,பாபநாசம் மலை, சபரிமலை, பழனிமலை, மஹாபலேஸ்வரர் மலை, நந்தி மலை,குடகு மலை, உதயகிரி, கந்தகிரி உள்ளிட்ட அனைத்து மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளேயாகும்!

இம்மலைத்தொடர் வடக்கே குஜராத் பகுதியில் 3000அடிகள் முதல் 5000அடிகள் உயரமும் கோவாவிற்குத் தெற்கே சுமார் 3000அடிகள் உயரமும் இருக்கிறது!

ஆனால் தமிழ்நாட்டின் தென்பகுதியில் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தின் உயரம் 8652அடிகள் ஆகும். இங்குதான் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணைகின்றன! இந் மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரமே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 8842அடிகள் ஆகும். இந்த பகுதியிலிருந்துதான் வடக்கில் ஆனைமலையும், வடகிழக்கில் பழனி மலையும் மற்றும் தெற்கில் ஏலமலையும் பிரிந்து செல்கிறது! மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 35 சிகரங்கள் உள்ளன!

கணவாய்கள்!

தால் கணவாய், போர் கணவாய், மற்றும் பாலக்காட்டுக் கணவாய் ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் முக்கிய கணவாய்கள் ஆகும். இந்த கணவாய்களை மேற்குக் கடற்கரை சமவெளி பகுதிக்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதிக்கும் (தக்காணப் பீடபூமிக்கும்) இடையில் சாலைகள் மற்றும் இரயில் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இதில் போர் கணவாயும் தால் கணவாயும் கொங்கன் கடற்கரை பகுதியை கிழக்கில் உள்ள நிலப்பகுதியுடனும், பாலக்காட்டுக் கணவாய் கேரளக் கடற்கரையை தமிழ்நாட்டுடனும் இணைக்கிறது!

ஆறுகள்!

இந்த மலைத்தொடரில் தோன்றும் ஆறுகளில் 126 குறிப்பிடத்தக்கவை ஆகும். தென்னிந்தியாவின் விவசாயம், குடிநீர், தொழிற்சாலைகள் என ஒட்டுமொத்த தேவைக்கும் இந்த ஆறுகளே பெருமளவில் உதவுகின்றன!

குடகுமலையில் தோன்றும் காவிரி (800கி.மீ.), மகாபலேஸ்வரர் மலையில் தோன்றும் கிருஷ்ணா (1400கி.மீ.), சிவகிரி மலையில் தோன்றும் பெரியாறு, நாசிக் ப்ரம்மகிரி மலையில் குன்றுகளில் தோன்றும் கோதாவரி, அகஸ்தியர் மலையில் தோன்றும் தாமிரபரணி உள்ளிட்ட பல பெரிய ஆறுகளும், மணிமுத்தாறு, தென்பெண்ணையாறு, வைகை, கபினி, ஒüரங்காபாத் அஜந்தா மலைகளில் தோன்றும் பென்கங்கா நதி, துங்கபத்ரா, நொய்யல், கோய்னா, வாஸ்னா, பஞ்சகங்கா, சாராவதி, பீமா, ஏர்வா, மலப்பிரபா, கடப்பிரபா, கோதையாறு, உள்ளிட்ட பல சிறிய ஆறுகளும் இந்த மலைத்தொடரில் தோன்றி சமவெளி பகுதியினை கடந்து வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் கலக்கின்றன!

இவ்வாறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 50அணைகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

அருவிகள்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன! குற்றாலம் அருவி, அகஸ்தியர் அருவி, சுருளி அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கஞ்சனா கட்சே, சோகக், சாலக்குடி, கல்சட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி முதலியவை இம்மலைத்தொடரில் உள்ள 29 முக்கியமான அருவிகளில் சிலவாகும். கிழக்குப் பகுதியைவிட மேற்குப்பகுதி செங்குத்தாக இருப்பதால் அருவிகளின் உயரமும் நீரின் வேகமும் அதிகமாக இருக்கும்!

செயற்கை ஏரிகள்!

ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, உள்ளிட்ட பல செயற்கை ஏரிகள் இம்மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில் உள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்று!

இம்மலைத்தொடரினால் அரபிக்கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த தென்மேற்குப் பருவக் காற்றின் ஒரு பகுதி தடுக்கப்படுகிறது! இதனால் மலைத்தொடரின் மேற்கு சரிவுகளும், மேற்கு சமவெளி பகுதிகளும் நல்ல மழையினை பெற்று செழிப்புடன் இருக்கிறது. ஆனால் மலையின் கிழக்கு சரிவுகளும் கிழக்கு பீடபூமி பகுதிகளும் மழை மறைவு பகுதியாக உள்ளதால் மிதமான மற்றும் குறைவான மழையினைப் பெறுகிறது.

வனப்பகுதி!

மலைத்தொடரின் மேற்குப் பகுதிக்கு ஓர் ஆண்டில் 200செ.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு கிடைக்கிறது! எனவே இங்கு அடர்ந்த காடுகள் மிக அதிகம்! சூரிய ஒளியே தரையில் படாதவாறு இக்காடுகள் அடர்த்தியாக உள்ளன! இவை பசுமை மாறா காடுகள் எனப்படும்! மரங்கள் 60மீட்டர் உயரம் வரை வளர்பவை! ரோஸ் மரம், எபானி, மககோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில் மற்றும் லயனரிஸ் மரங்கள் மிக முக்கியமானவை!

கிழக்குப்பகுதியில் மிதமான (75-200செ.மீ) மழைப்பொழிவு காரணமாக இலையுதிர்க்காடுகள் எனப்படும் வெப்ப மண்டல பருவக்காற்றுக் காடுகள் காணப்படுகின்றன! தேக்கு, சால், சந்தனமரம், வேட்டில் மற்றும் வேப்பமரம் போன்றவை இப்பகுதியில் வளரும் சில முக்கியமான மரங்கள் ஆகும்.

மிகவும் குறைவான (75செ.மீ. க்கும் கீழ்) மழைபெறும் கிழக்கு சரிவு பகுதிகளில் வறட்சி அதிகம். இங்கு அக்கோசியா, பாபூல், பலாஸ், சுக்ரி, கஜீரி, கயிர், பனை போன்ற மரங்கள் காணப்படுகின்றன! குறுங்காடுகளும், முட்புதர் காடுகளும், புல்வெளிகளும், சோலைக்காடுகளும் இப்பகுதியில் காணப்படுகின்றன.

வளங்கள்!

பல்லாயிரக்கணக்கான பூக்கும் தாவரங்களும், பூக்காத வகைத்தாவரங்களும், மூலிகைச்செடிகளும் இங்கு காணப்படுகின்றன!

ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கணக்கான பறவை இனங்கள், நீரிலும் நிலத்திலும் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள், மீன் வகைகள், மேலும் புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், யானைகள்,வரையாடுகள்,மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலூட்டி விலங்கினங்கள் இம்மலைப்பகுதியில் காணப்படுகின்றன!

சபரிமலை, பழனிமலை, சதுரகிரி, நந்திமலை, மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற பற்பல ஆன்மீகத் தலங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. புவிப்பரப்பிலிருந்து மிக உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி இருப்பதால் மூணாறு, கொடைக்கானல், மேகமலை, நீலகிரி, ஊட்டி, மகாபலேஷ்வர், போன்ற கோடைவாசஸ்தலங்கள் பல உள்ளன.

நீர்மின் உற்பத்தி, அணைகளால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பெறப்படும் விவசாயம்,மரங்கள், பழங்கள், காய்வகைகள்,மூலிகை மருந்துகள், தொழில்வளம், மழையால் கிடைக்கும் குடிநீர் வளம், தூயகாற்று ஆகியவை இம்மேற்குத் தொடர்ச்சிமலைகள் தரும் வரங்களாகும்!

மெல்ல அழியும் வனம்!

வணிகரீதியான கட்டிடங்களாலும், பணப்பயிர் சாகுபடியாலும், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதாலும், மிருகங்களை வேட்டையாடுவதாலும், கிரானைட் சுரங்கங்களாலும், கனிம வளங்களை சுரண்டுவதாலும், பல்வேறு தேவைகளுக்காக ஆழ்துளைக்கிணறுகளாலும், நன்னீர் வேதிப்பொருட்களால் மாசுபடுவதாலும், ஆயிரக்கணக்கான நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது!

தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும், நீர்நில வாழ் உயிரினங்களுக்கும், மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும், ஆன்மீக எழுச்சிக்கான ஆதாரமாகவும் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள் இயற்கை அன்னையின் கருணை மிக்க அருட்பொழிவாகும்!!

இம்மலைத்தொடரை வணங்குவோம்! பாதுகாப்போம்!

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்

நன்றி:  தினமணி சிறுவர் மணி வார இதழ்.

Thursday, June 18, 2015

வால் மீனுக்கு கல்யாணம் இல்லாமலேயே பிரசவம்!


பொதுவாக, பிடித்து வைத்து வளர்க்கப்படும் உயிரினங்களில் இது நிகழ்வதுண்டு என்றாலும், இயற்கையான சூழலில் வாழும் உயிரினங்களில், இதுபோல நிகழ்வது அரிது. நியூயார்க்கிலுள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செய்த ஆய்வில், வால் சுறாக்கள், ஆண் மீன்களுடன் உறவு கொள்ளாமலேயும், குஞ்சுகள் ஈனுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கன்னி தாய் பிரசவிக்கும் இந்த முறைக்கு, 'பார்தினோஜெனெசிஸ்' என்று பெயர்.
பிடித்து வைத்து வளர்க்கப்படும் உயிரினங்கள், தங்கள் இனம் அழியாமல் காப்பதற்காக, இதுபோல பிரசவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்பதை, பல ஆண்டுகளாக உயிரியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நட்சத்திர மீன், தேனீக்கள் போன்றவையும், பாலுாட்டிகளில் முயல் இனமும், இது போல ஆண் கலவியில்லாமலும், செயற்கை கருத்தரிப்பு முறைகள் இல்லாமலும் கர்ப்பம் தரிப்பதுண்டு.
பறவையினங்களில், பண்ணைக் கோழிகளும் இதேபோல முட்டையிடுகின்றன. ஹங்கேரியில் ஒரு மீன் காட்சியகத்தில், பெரிய பெண் சுறா ஒன்று, ஆண் சுறாவுடன் உறவு கொள்ளாமலேயே கருவுற்று குஞ்சு பொரித்தது. ஆண் துணையின்றி கருத்தரித்த வால் சுறா பற்றி, செய்தி வெளிவர ஆரம்பித்ததுமே, ஆண் பாலினமே அவசியமற்றதாகி விடுமோ என்ற பீதியூட்டும் கேள்வியையும், சில உயிரியல் விஞ்ஞானிகள் கிளப்பி விட்டிருக்கின்றனர்.
மிரட்டலான தோற்றமுள்ள, 'சா பிஷ்' என்றழைக்கப்படும் வால் சுறா, விஞ்ஞானிகளை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் வால் சுறா, ஆண் மீனுடன் கலவி செய்யாமலேயே, குஞ்சுகளை ஈன்றிருக்கிறது.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

Wednesday, June 17, 2015

ஒரே ஆண்டில் 176 புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு!


 இந்திய வன விலங்குகள் பற்றிய விரிவான பதிவுகளை வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, இந்திய உயிரியல் சர்வே பிரிவிடம் தான் உள்ளது. இது மத்திய சுற்றுச்சூழல், வனவுயிர் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஓர் ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதிலும் களப்பணியில் இருக்கும், இசட்.எஸ்.ஐ.,யின் விலங்கியல் வல்லுனர்கள், புதிதாக, 176 விலங்கினங்களை கண்டுபிடித்து, விவரித்து பதிவு செய்துள்ளனர்.
 இந்த கண்டுபிடிப்புகளில், பூச்சியினங்களுக்கே முதலிடம். அடர்ந்த காடுகளில், யார் கண்ணிலும் படாமலேயே தப்பி விடும் பூச்சிகளில், 93 புது வகைகள், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 இந்த பட்டியலில், 23 வகை புதிய மீன்கள்; நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை போன்றவற்றில், 24 புது இனங்கள்; 12 வகை புதிய சிலந்திகள்; நண்டு, இறால் போன்ற வற்றில், 12 புது வகைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கினங்களை, மிக குறுகிய புவிப்பரப்பில் தான் காண முடிகிறது. எனவே அவை ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்' என்கிறார் இசட்.எஸ்.ஐ.,யின் இயக்குனரான டாக்டர் கே.வெங்கட்ரமணன்.
 பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வது, பல்லுயிர்தன்மை செறிந்த கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தான். இந்தியாவில் கிழக்கு இமாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள், பல்லுயிரி மண்டலங்களாக, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய உயிரியல் வல்லுனர்கள், 176 புதிய விலங்குகளை கண்டுபிடித்து இருக்கின்றனர். 'இவை வனவுயிர் அறிவியலுக்கு புதியவை' என, கோல்கட்டாவிலுள்ள இந்திய உயிரியல் சர்வேயான, இசட்.எஸ்.ஐ., கூறுகிறது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, March 17, 2015

சாம்பல் நிற அணில்களின் சரணாலயம்

பல அரிய தாவரங்களையும், விலங்குகளையும் தென்னகத்தே கொண்டுள்ள திருவில்லிபுத்தூர் மேற்குமலைத் தொடரில் இயற்கை சூழலில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது.
 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச் சரணாலயம் 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இயற்கையின் ஈடற்ற படைப்பாக இருக்கும் இந்தச் சரணாலயம் நில அமைப்பிலும், மழை அளவிலும் தட்பவெப்ப நிலையிலும் பலவித மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தின் இடையில் அமைந்துள்ள இந்த சாம்பல் நிற அணில்கள் சரணாலயப் பகுதி தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைகளால் பயன் பெறுகிறது. பல வகை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பலவகை காடுகள் காணப்படும் இந்தப் பகுதியில் ஆண்டு சராசரி மழை அளவு 500 மி.மீ.
 அந்த சரணாலயத்தில்தான் உலகிலேயே அரிய விலங்கினமான சாம்பல் நிற அணில்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம், ஆத்தூர், திண்டுக்கல், சிறுமலை, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இந்த அணில்கள் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பொள்ளாச்சி, பழனி மற்றும் மேற்கு மலைத்தொடரில் உள்ள திருவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில்தான் இந்த சாம்பல் நிற அணில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
 அழிந்து வரக்கூடிய இந்த சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியையும், விருதுநகர் மாவட்ட வனப்பகுதியையும் சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலயமாக அறிவித்தது.
 பொதுவாக ஒவ்வொரு அணிலும் 2 கூடுகளை கட்டுகிறது. காரணம், ஒரு கூடு காற்றினாலோ அல்லது மழையினாலோ சேதமடைந்தால் மற்றொரு கூட்டில் வாழ்வதற்கு ஒரு முன்னேற்பாடு. புளியம்பழம், மாம்பழம் மற்றும் பழ வகைகளையும் மரப்பட்டைகளையும் உணவாக உட்கொள்ளும் இவை குட்டிப்போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. ஆண்டுக்கு ஒரு குட்டி வீதம் ஈனும் இவற்றின் கர்ப்ப காலம் 35 முதல் 40 நாட்களாகும். இவற்றின் ஆயுள்காலம் 14 ஆண்டுகள்.
 அதிவேகமாக மரம் விட்டு மரம் தாவும் இந்த அணில்கள் இரை தேடுவது காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும்தான். மற்ற நேரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...
வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

 

Tuesday, March 3, 2015

உலகில் வாழும் மிகப்பெரிய மரம்

 
  நீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே, இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும் 'கலிபோர்னியா பிக்' (பெரிய) மரங்களே அவை.
  இவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை. சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம் கொண்டிருக்கிறது. அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக உள்ளன. எடை 2,145 டன்!
  இதுபோன்ற ஒரு மரத்திலிருந்து 500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க முடியும்! பல கோடி ஆண்டுகளுக்கு முன், பிரமாண்ட செக்கோயா மரங்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்பட்டன. இப்போது கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டுக்கும் முன்பு தோன்றியவை!

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Friday, February 20, 2015

பறவைகளின் மொழி


 பறவைகள் ஏதோ சும்மா கத்திக் கொண்டு பறந்து செல்வதாக நினைக்க வேண்டாம். அதுதான் அவைகளின் மொழி. பறவைகளின் ஒவ்வொரு கத்தலுக்கும் பொருள் உண்டு. ரஷ்யாவின் மாஸ்கோ பல்கலைக்கழக பரவை ஆராய்ச்சியாளர்கள், இதுபற்றிய ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம் கண்டு உள்ளார்கள். அவர்கள் பறவைகளின் மொழியை கிட்டததட்ட புரிந்து கொண்டார்கள்.
 பறவைகள் சாதாரணமாக கத்துவதை அவர்கள் பதிவு செய்து வந்தார்கள். ஏராளமான ஒலிகளை பதிவு செய்தபின், குஞ்சுகளுக்கு அவற்றின் ஒலியை ஒலிபரப்பி காண்பித்து அது எதற்கான ஒலி என்பதை அறிய ஆரம்பித்தார்கள். ஒன்று கூடுங்கள், அபாயம் வருகிறது ஓடுங்கள், இரை இருக்கிறது வாருங்கள் என்பதற்கான ஒலிகள் எவை என்பதை அவர்கள் எளிதில் பிரித்து அறிந்தார்கள். பதிவு செய்யப்பட்ட ஒலியை, குஞ்சுப் பறவைகள் தங்கள் தாய்ப் பறவையின் ஆணையாக கருதி நடந்து காெண்டதால் ஆய்வாளர்கள் பறவைகளின் மொழியை ஓரளவு புரிந்து கொண்டார்கள்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

டிரண்டுலா சிலந்தி

டிரண்டுலாவின் வாழ்க்கை
உடல் நடுங்கும் கடுமையான நஞ்சு கொண்ட சிலந்தி வகைதான் டிரண்டுலா. ஆனால் விஷமுள்ள இதை, எளிதில் அடிமையாக்கி விடுகிறது ஒரு குளவி இனம். இனப்பெருக்கம் செய்ய தயாராகிவிட்ட குளவிகள், டிரண்டுலா சிலந்தியை தேடிப்பிடிக்கும். சிலந்தியின் வாய்க்கு அருகே குளவி கொட்டிவிடுகிறது. என்ன மாயத்தாலோ அதன் பிறகு இந்த விஷச்சிலந்தி, குளவியின் அடுமைபோல அமைதியாகிவிடுகிறது. பிறகு சிலந்தியின் வயிற்றைக் கிழித்து, தன் முட்டைகளை அங்கே இடுகிறது குளவி. சில நாட்கள் கழித்து முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு இறந்த டிரண்டுலாதான் முதல் உணவு.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Saturday, January 31, 2015

கடல் ஆமைகள் சுற்றுச்சூழல் மாசினால் எப்படி பாதிக்கிறது?

 
கடல் ஆமைகள் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான உயிரினம். பனி யுகம் மற்றும் கண்டங்கள் இடம் பெயர்ந்த காலத்துக்கு முன்பிருந்தே வாழ்கின்றன. ஆனாலும் அவற்ரால் புவி வெப்பமாதல் மற்றும் கதல் நீர்மட்டம் உயர்வதை தாக்குப் பிடிக்க முடிவதில்லை. பச்சை ஆமை, ஹாவ்க்ஸ்பில், லாக்கர்கெட், கெம்ப்ஸ் ரைட்லி, ஆலிவ் ரைட்லி, தோல்பை ஆமை போன்ற 6 ஆமை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
  பெண் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வருகின்றன. அவை முட்டைகளை மணலில் குழிதோண்டி இடுகின்றன. புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடற்கரையொட்டிய பகுதியில் இடப்படும் ஆமை முட்டைகள் அதிகமாக அழிகின்றன. அதேபோல வெப்பநிலை உயர்வு அதிகமான பெண் ஆமைகள் உருவாக காரணமாகின்றன. புளோரிடா மாகாணத்தில் ஆமை முட்டைகள் 90 சதவீதம் பெண் ஆமைக்குஞ்சுகளை பொரித்திருகின்றன. இதே நிலை நீடித்தால் விரைவில் ஆண் ஆமைகள் இல்லாமல் அந்த இணமே அழியும் நிலை உருவாகிவிடும்

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...