Monday, January 31, 2011

இயற் (கை) கொடுக்கும் காடுகள்!


   காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன.பெருமளவில் மனிதகுலத்திற்கு அவை நமக்கு மரம்,மூலிகை, காய், கனிகள் இன்னும் பல பொருட்களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங்களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.
  ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைகாமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன்பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.
   காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள் அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலைகளால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்கு வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படி அரித்துச் செல்லும் மண்ணை மலைச்சரிவில் உள்ள மரவேர்கள் தடுத்து விடுகின்றன.
   மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், மெதுவாகச் சென்று பரவுகிறது.
  வேகமாக வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.
   வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.
   காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும். மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.
  மனிதன் தனது சுயநலத்தால் எப்படி தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.

மரம் வளர்ப்போம் புவிகாப்போம்

Friday, January 28, 2011

ஆல்ப்ஸ் மலை வெள்ளை அழகி

   ஆல்ப்ஸ் என்ற பெயரைத் திரை இசைப் பாடல்களில் கேட்டிருப்போம். ஆல்ப்ஸ் என்பது தென் மத்திய ஆஸ்திரியா, ஸ்லோவேனியா பகுதிகளில் துவங்கி, இடையில் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளைக் கடந்து, மேற்கே ஃபிரான்ஸ் தேசம் வரை, இம்மலைத்தொடர் பிறை வடிவத்தில் மத்தியதரைக்கடலோரம் நீண்டிருக்கிறது.
லத்தீன் மொழியில் ஆல்ப்ஸ் என்றால் வெண்மை என்று அர்த்தம். இம்மலைத்தொடர் பனி நிறைந்து வெண்மையாக இருப்பதால், ஆல்ப்ஸ் என்ற பெயர் பெற்றது.
  சுமார் ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் நீளமும், இரண்டு லட்சத்து ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பல சிகரங்கள் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இங்கு பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பனிப்பாறைகள் உள்ளன.
  ஆல்ப்ஸ் மலைத்தொடர் அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும், கருங்கடலையும் பிரிப்பதாக அமைந்துள்ளது. ரோன், டான்யுப், மற்றும் போ உள்ளிட்ட பல ஐரோப்பிய ஆறுகளின் தோற்றுவாயாக இம்மலைத்தொடர் விளங்குகிறது.
   பொதுவாக, கிழக்கு ஆல்ப்ஸ், மேற்கு ஆல்ப்ஸ் என்று இம்மலைத்தொடர் இரு பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. ரைன், லிரோ, மேரா என்ற நதிகளை ஒட்டி, கான்ஸ்டன்ஸ் மற்றும் கோமோ என்ற ஏரிகளுக்கு இடையில் இப்பிரிவு நிகழ்ந்துள்ளது.
   மேற்கு ஆல்ப்ஸில், பதினாறாயிரம் அடி உயரமுள்ள மான்ட் என்பது மிக உடரமான சிகரமாக விளங்குகிறது. கிழக்கு ஆல்ப்ஸில் பதிமூன்றாயிரம் அடிகளுக்கு மிகுந்த பிஸ் பெர்னியா என்பதே உயரமான சிகரமாகும்.
ஆர்வம், வணிகம், ஆராய்ச்சி, சுற்றுலா, யாத்திரை என்று பல காரணங்களுக்காக ஆல்ப்ஸ் மலைத் தொடர் மனிதனை வசீகரித்துத் தன்பால் இழுக்கிறது.
   அங்காங்கே மலைச்சரிவுகளையும், இடைப்பட்ட சமவெளிகளையும் கடக்கச் சாலைகள், ரயில் பாதைகள், நடைபாதைகள் இருக்கின்றன. அதனால், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் வசதியாகப் பயணம் செய்வது இன்றைக்கு சாத்தியமாகி இருக்கிறது.
மலையின் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதற்கேற்றபடி அங்கே தாவரங்ளும், உயிரினங்ளும் காணப்படுகின்றன. கிரேநோபிள், இன்ஸ்ப்ரூக், பொல்ஸானோ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆல்பைன் நகரங்களாக விளங்குகின்றன.
செயின்ட் காடர்ட் கணவாய் ஆல்ப்ஸின் குறிப்பிடத்தக்க சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும்.
  மூவாயிரம் அடிக்கும் தாழ்வான உயரங்களில், குளிர் குறைவாக இருப்பதால், சிறு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. பலவகைத் தாவரங்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன. பனி மூடாத நேரத்தில், மலைத்தொடரே திடீரென்று உயிர்பெற்றது போல், பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ணமான பூக்களுடன் காண்போர் கண்களைக் கொள்ளை கொள்கிறது.
  கோடை, குளிர்காலம் இரண்டு பருவங்களிலும் சுற்றுலாவுக்கு ஆல்ப்ஸ் வழி செய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில், பனிச்சறுக்குப் பந்தையங்கள் உள்ளிட்ட பல்வேறு பனி விளையாட்டுக்களில் பங்கு கொள்ள ஆர்வலர்கள் கூடுகின்றனர்.
  இயற்கையின் மாபெரும் அழகுப் பிரதேசங்களில் ஒன்றாக ஆல்ப்ஸ் அமைந்துள்ளது. தரை மார்க்கம், ஆகாய மார்க்கம், மற்றும் ரயில் வழி என்று அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து ஆல்ப்ஸ் சென்று வர பல வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டு தோறும் பல கோடி சுற்றுலாப் பயணிகள் ஆல்ப்ஸ் மலைக்கு வருகின்றனர்.

இயற்கையை இயற்கையாக இருக்க விடுவோம்...

Thursday, January 27, 2011

அமேசான் மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்.
  தென் அமேரிக்காவில் இருக்கும் அமேசான் காடுகள் மிக அடர்ந்த மழைக்காடுகள். 2008ம் வருடம் உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான பட்டியலில், அமேசான் காடுகள் இடம் பெற்றன. அமேசோனியா என்றும் அமேசான் மழைக்காடுகள் என்றும் அழைக்கப்படும் இவை நூற்று நாற்பது கோடி ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்துள்ளன. இப்பரப்பளவை பிரேடிலே, பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வதார், பொலிவியா, கயானா, கரிநேம், மற்றும் ஃப்ரென்ச் குயானா என்ற ஒன்பது தென் அமெக்கா நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.
  இக்காட்டில் பல்லாயிரக் கணக்கான மரங்கள், தாவர வகைகள் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பறவை வகைகள், மீன் வகைகள், பல நூறு வகை மிருகங்கள் இங்கு வாழ்கின்றன. இருநூற்றைம்பது கோடி விதமான பூச்சி வகைககள் அமேசான் காடுகளில் சுற்றி வருகின்றன. இப்படி, பல கோடி உயிரினங்களுக்கு அமேசான் காடுகள் அடைக்கலம் கொடுத்துள்ளது. வேறெங்கும் கான முடியாத விதம் விதமான உயிர் வகைகள் இங்கு இருப்பதால், உயிரினங்கள் பற்றிய எந்த ஆராய்ச்சியும் இக்காடுகளைக் கவனிக்காமல் முழுமை பெற முடியாது.
  அமேசான் என்ற பெயர் வரக் காரணம் என்ன? இங்குள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நீரோடைகளில் வரும் படகுகளைக் கவிழ்க்க வல்லவை. எனவே இங்கு வாழ்ந்த காட்டு மக்கள் அவ்வகை மரங்களை அமேசான் என்று அழைக்கலாயினர், அமேசான் என்றால், இங்குள்ள மக்கள் மொழியில் 'படகுகளை அழிக்க வல்லவன்' என்று பொருள்.
  அழகு இருக்கும் இடத்தில் ஆபாத்தும் பொதிந்து தானே இருக்கும்? ராட்சத அனகோண்டா பாம்புகள், முதலை வகையைச் சேர்ந்த கருநிற கேய்மன், மலைவாழ் சிங்கங்கள், வெகு வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை வகைகள் என்று இயற்கையின் ஆபத்தான உயிரினங்களும், சில வகை விஷத்தாவரங்களும் இங்கே காணப்படுகின்றன.
  இங்குள்ள ஈல் மீன் மனிதனையே சாய்க்கக் கூடிய அளவு மின்சாரம் பாய்ச்சக் கூடியது. ரத்தக் காட்டேரி நகை வவ்வால்களும் காணப்படுகின்றன. இவை ராபீஸ் என்னும் மிகக் கொடிய நோயைப் பரப்ப வல்லவை. மஞ்சல் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இங்கு வேகமாகப் பரவுகின்றன.இங்கு பாயும் அமேசானே ஆறு, அதிக நீர்க் கொள்ளவிலும், விரிந்த ஆற்றுப் படுகையிலும் உலகின் மிகப் பெரிய ஆறாக விளங்குகிறது.
  உலகத்தில் மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. இந்த நதி 6448 கிலோமீட்டர் நீளமுடையது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சிலரும், நைல் நதிதான் என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்று சொல்வதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

  மிகவும் கடைசியாக நடத்திய கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோ மீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோ மீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோ மீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது பாரா எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதிவழி, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோ மீட்டர் நீளம் வருகிறது.

  ஆனால், அந்த நதி அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி  அது, டோக்காட்டின்ஸ் பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, தோ-நோர்த்  எனும் கனால் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ள வேண்டும். அமேசான், 6448 கிலோ மீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

  ஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கின்ற நீரின்     அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் நதியின் வழியாக சாதாரண நேரங்களில் ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது.

   நைல் நதி உட்பட மற்ற எந்த நதியிலும் இந்தளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலத்தில் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. 15,000 கிளை நதிகள் உண்டு இதற்கு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
  மனிதன் தான் வாழ்வதற்காக காடுகளை அழிக்க ஆரம்பித்த போது, அக்கொடுமையிலுருந்து அமேசான் காடுகளும் தப்பவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் மவைக்காடுகளில் நேர்ந்த பொருளாதரச் சுரண்டல் காரனமாகப் பெருமளவு மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பய்யன. மண்ணரிப்பால், பூமியின் சுற்றுச்சூழலே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, இற்கையின் சீற்றத்துக்கு வழி செய்யப்பட்டு விட்டது. தவிர, மரத்தவளை போன்ற அரிய உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படும் ஆபத்துகள் உள்ளாகியிருக்கின்றன.
  உலகின் மிகப்பரந்த மழைக் காடுகளைக் கொண்ட அமேசான் படுகை அரிய வகைப் பறவையினங்கள்,மீன் வகைகள் மற்றும் மிருக இணங்களுக்குக் குடியிருப்பாக இருந்து இயற்கைக்கு உதவுகிறது. இயற்கையின் பொக்கிசமாக விளங்கும் அமேசான் காடுகளை உரிய வகையில் பாதுகாத்து, மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டியது மனிதரின் கடமை.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...
கங்கை நதி

  பாரத மக்கள் தெய்வமாகக் கருதும் கங்கை, வற்றாத நீரும், குதறையாத வளமும் வழங்கும் ஜீவநதி. கங்கை மீதிருக்கும் மரியாதை குறைந்து விடலாகாது என்று அதன் பிறப்புக்கு, கடவுளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதையும் வழங்கப்படுகிறது.
  கைலாயத்தில் பார்வதி சிவனின் கண்களைப் பொத்தினதினார். இருண்ட அகிலத்துக்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதந் வெப்பம் தாக்கியதால் பார்வதியின் கைகளில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அன்னை கைகளை உதறினாள். உதிர்ந்த துளிகள் வெளளமாகத் திரண்டன. சிவன் அந்த வெள்ளத்துக்கு  கங்கை எனப் பெயரிட்டு, அள்ளி எடுத்து தலையில் முடிந்து கொண்டார். கங்கை புனிதமடைந்தது. மக்களின் பாவங்களைக் கரைக்கும் சக்கியும் பெற்றது.
  கங்கையைப் பூமிக்கு வரவழைத்தால் மக்களின் பாவங்களைப் போக்கிவிடலாம் என்று எண்ணிய பகீரதன் என்னும் அரசகுமாரன் சிவனைக் குறித்துத் தவம் புரிந்தான்.
  அவனுக்கும், மக்களுக்கும் அருள் புரிய, மஹாவிஷ்ணு கங்கையிடம் பூமிக்கச் செல்லுமாறு கூறியதாகவும், கங்கையும் பூமி நோக்கிப் பாய்ந்தாள் என்றும் அந்தக் கதை சொல்லப்படுகிறது.
  இமயமலையின் இருபத்து இரண்டாயிரமாவது அடி உயரத்தல் படர்ந்திருக்கும் பனி உருகி நதியாகப் பாயத் தொடங்குகிறது. சற்று தூரம் ஓடி மலைப் பிளவுக்குள் மறைந்து நிலமட்டத்தில் இருந்து பத்தாயிரத்த முன்னூறு அடி உயரத்தில் வெளிப்படுகிறது. பகீரதனின் தவத்தால் பூமிக்கு வந்தது என்று நம்பப்படுவதால் நதிக்கு இங்கு பாகீரதி என்று பெயர்
  கங்கை இந்தியாவின் முக்கிய ஆறாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2507கிமீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
  வங்கதேசத்தில் கங்கையானது பத்மா என அழைக்கப்படுகிறது.

  கங்கை பிறப்பெடுக்கும் இடத்திலிருந்து பதினாறு கி.மி. தொலைவில் அதன் கரையில் முதல் கோயில் அமைந்துள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. 250 கி.மி. பயணம் செய்தபின் கங்கை ஹரித்வாரைத் தொடுகிறது. இங்கு கங்கையுடன், யமுனையும் கலக்கிறது.
  பயணத் துவகத்திலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் கங்கை, அலஹாபாதைக் கடந்தவுடன் காசியைத் தொடுவதற்காக வடக்கு நோக்கிப் பாய்வது ஓர் ஆச்சரியம்!
   கங்கையில் ஏராளமான மீன்கள் உள்ளன. அவற்றைப் பிடித்து மீனவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். இமயத்தில் படர்ந்திருக்கும் பனி உருகிக் கொண்டே இருப்பதால் கங்கையில் நீர் வற்றுவதே இல்லை. நீர் பாசனத்துக்கு பயன்பட்டு ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரமாக கங்கை விளங்குகிறது.
  தூய்மையான கங்கையில் ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டு நீர் மாசடைந்து கொண்டே போவதால் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் விரைவிலேயே கங்கை எதற்கும் பயன்படாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கவலைப்படுகிறார்கள்.
  காசியின் விளிம்பைத் தொட்டுச் செல்லும் கங்கையின் கரையெங்கும் கடவுளர்களின் கோயில்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட படித்துறைகள். மக்கள் நதியில் நீராடுகிறார்கள், புஷ்பாஞ்சலி செய்கிறர்கள், தீபங்களை ஏற்றி, தெப்பங்களாக மிதக்க விடுகிறார்கள். இவ்வளவு மரியாதைகளையும் ஏற்றுக் கொள்ளும் கடவுள்காம்தான் கங்கையை காப்பாற்ற வேண்டும்!

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

Thursday, January 20, 2011

 ஏலகிரி பச்சை மலை

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்திருக்கும் ஏலகிரி மலை, பிற கோடை வாசஸ்தலங்களோடு ஒப்பிடுகையில், இயற்கைச் சூழலிலும், தட்பவெப்ப நிலையிலும் ஓரளவு மாறுபட்டிருக்கிறது.
  கடல் மட்டத்திலிருந்து 1045 மீட்டர், அதாவது 3,400 அடி உயரத்தில் இந்த ஏலகிரி அமைந்திருக்கிறது. இதனால், கோடை காலத்திலும் சில்லென வீசும் காற்று, இரவில் எப்போதும் குளிர் என மனதுக்கு இதமளிக்கும் சூழல். குளிர்காலத்தில் இங்குள்ள குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ். கோடை காலத்தில் வெயில் நிலவினாலும், குளிர்ந்த காற்று வீசுவதை உணர முடியும்.
  இதுமட்டுமன்றி, மொத்தம் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும், காரி, பாரி, ஓரி, ஒüவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள். சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
  வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களூர் பகுதி மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. பெங்களூரில் கணினி மென்பொருள் துறையில், கணினியோடு போராடும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வார இறுதி நாள்களைக் கொண்டாட ஏற்ற இடமாக இன்றைக்கு ஏலகிரி மாறியிருக்கிறது. பெங்களூரிலிருந்து காரில் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஏலகிரியை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது. அதிலும் சிலர், இரு சக்கர வாகனங்களிலேயே நேராக ஏலகிரி மலைக்கு வந்து விடுகின்றனர்.
  ஏலகிரி மலை மீது முதலில் வரவேற்பது, 13-வது வளைவில் இருக்கும் டெலஸ்கோப்
மையம். வனத்துறை பராமரிப்பில், இலவசமாகவே மலை அடிவாரத்தில் இருக்கும்  பொன்னேரி கிராமத்தின் அழகை ரசிக்க முடியும்.
  அடுத்ததாக, புங்கனூர் கிராமத்தில் இருக்கும் ஏரி. ஏலகிரியில் படகு சவாரி செய்வதற்கான மிகப் பெரிய ஏரி இது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனப் பலர் ஒரே நேரத்தில் சவாரி செய்வதற்கான வகை, வகையான படகுகள் உள்ளன. சுற்றுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
  படகுத் துறைக்கு எதிரேயே இயற்கைப் பூங்கா அமைத்திருக்கின்றனர் சுற்றுலாதுறையினர். இதை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. புல்வெளிப் பூங்கா இது. இதன் நடைபாதையின் இரு பக்கமும் பச்சைப் பசேலெனப் புல் தரைகள், அழகான செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கையாகவே உருவாக்கப்பட்ட சிற்றருவி, தொட்டிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட மீன்கள், ரோஜாப் பூந்தோட்டம் என அழகின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
  புங்கனூருக்கு மிக அருகே இருக்கும் அத்தனாவூர். அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் பாராகிளைடிங் திருவிழா நடைபெறும் இடம் இருக்கிறது. திருவிழா நாட்களில் மட்டுமே இங்கு கூட்டம் அதிகம் காணப்படும்.
  அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் நிலாவூர் இருக்கிறது. அங்கு அம்மன் கோயிலும், அதையொட்டிய சிறு பூங்காவும் உண்டு. மலைகளில் இருந்து பெருகி, வழிந்தோடி வரும் ஓடை நீரைச் சேமித்து, சிறு படகு நிலையம் அமைத்திருக்கின்றனர்.
  காட்டு வழிப் பயணமாக, அங்கிருந்து மலைப் பாதையில் 8 கி.மீ. தூரம் நடந்து சென்றால் ஜலகாம்பாறை செல்ல முடியும். அங்கு முருகன் கோயில் இருக்கிறது. காட்டு வழியில், மூலிகைச் செடிகள், புதர் மண்டிய இடங்கள், உயர்ந்து வளர்ந்த பல வகை மரங்கள், வன விலங்குகளைக் காண முடியும். அருகேயிருக்கும் மங்கலம் கிராமத்துக்குச் சென்றால், சுவாமி மலை கோயிலுக்குச் செல்ல 4 கி.மீ. தூரத்துக்கு காட்டுவழிப் பாதை இருக்கிறது.
  ஆண்டுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும் கோடை விழா தவிர்த்து, இங்கு வாகனப் பெருக்கம் அவ்வளவாகக் கிடையாது. பேருந்து நிலையம் இல்லை.
  ஆட்டோக்களின் நெரிசல் இல்லை. அமைதியான சூழல்; கோடையில் அளவுக்கு ஏற்ற குளிர், மழைக்காலத்தில் உறையவைக்கும் குளிர் எனச் சூழலுக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொண்டு, இன்றும் இயற்கையின் இன்னிசையை வெளிப்படுத்துகிறது ஏலகிரி.

கட்டுரையாளர் - ஜெய்சங்கர்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மலை.
 பச்சைகுமாச்சி மலை
                      ஹைவேவிஸின் தோற்றம்
  தேனி மாவட்டத்தில், சின்னமனூர் அருகில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது பச்சைகுமாச்சி மலை.
இந்த மலையில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலார் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன.
   கொஞ்சி விளையாடும் மேகக் கூட்டங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், பச்சைப் பட்டு உடுத்தியது போல பரவிக் கிடக்கும் தேயிலை, காபித் தோட்டங்கள், புல்வெளிகள், யானைக் கூட்டம் ஆகியவை இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. இதனால் தற்போது ஹைவேவிஸிற்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
   தேனியிலிருந்து 23 கி.மீ. தூரம் உள்ள சின்னமனூருக்குச் சென்று அங்கிருந்து 40 கி.மீ. தூரம் ஹைவேவிஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். ஹைவேவிஸ் சாலையைப் பராமரிக்க முடியாமல், எஸ்டேட் நிர்வாகங்கள் தற்போது அரசிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளன. ஹைவேவிஸ் மலையை சுற்றுலாத்தலமாக்கும் முயற்சியில் கரடு முரடான நிலையில் உள்ள சாலைக்கான இடத்தை கையகப்படுத்தி சீரமைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
    சின்னமனூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் ஹைவேவிஸிற்கு 3 பஸ்கள் இயக்கப்பட்டாலும், அங்கிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வாய்ப்பாகவும், காலதாமதம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் தனியார் வாகனங்களில் சென்று வருவது வசதியாக இருக்கும்.
சின்னமனூர்-ஹைவேவிஸ் சாலையில் 13 கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் தென்பழனி முருகன் கோயில் உள்ளது. மாலை நேரங்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியின் இயற்கைச் சூழலும், உலாவரும் மயில்களின் கூட்டமும் பார்வையாளர்களுக்கு பரவசத்தைத் தரும். ஹைவேவிஸ் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் இருந்து கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை கிராமங்கள், சின்னச்சுருளி அருவி, பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள் ஆகியவற்றின் எழில்மிகு தோற்றங்களைக் காணலாம்.
    ஹைவேவிஸ்ஸில் பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்கு கூட்டங்களை கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
     ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.
  இரவங்கலாறு பகுதியில் உள்ள ஏரியில் யானை, காட்டெருமை, பல வகையான மான் இனக் கூட்டம் தண்ணீர் அருந்திச் செல்லும் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்த இடம் முல்லையாறு வன விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் கண்கவர் தோற்றம், கேரள வனப்பகுதிகள் ஆகியவற்றையும் இங்கிருந்து காணலாம்.
ஹைவேவிஸ் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள முல்லையாற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழி மூலம் இந்த இடத்தின் தொன்மைச் சிறப்பு தெரியவருகிறது. "மதிகெட்டான் சோலை' என்று அழைக்கப்படும் வனப்பகுதியும் இங்குதான் உள்ளது.
மகாராஜாமெட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள மகராசியம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மதுரையிலிருந்து கேரளத்துக்குச் செல்லும் வழியில் கண்ணகி வந்து தங்கியிருந்த இடமே தற்போது கண்ணகி கோட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் இயற்கை எழில் தோற்றத்தைக் காணலாம்.
  ஹைவேவிஸ்ஸில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 18 அறைகள் உள்ளன. தனியார் விடுதிகள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் தொலைபேசி எண்: 04554- 232225, கொடைக்கானல் சுற்றுலா அலுவலகம் தொலைபேசி எண்: 04542- 241675ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர் - ஜி.ராஜன்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.