புவி வெப்பமடைந்துவருவதன் காரணமாக உலக சமுத்திரங்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதத்தால் குறைந்துவிடும் எனத் தெரிவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணினிகள் துணைகொண்டு ஆய்வாளர்கள் அனுமானித்துள்ளனர்.
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள பிராணவாயுவின் அளவு குறைந்துவிடுகிறது.
இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதை விட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் குறிப்பிட்ட மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது என்றும். பல மீன் இனங்களின் இனவிருத்தி திறனும் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
நீரில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றால் மீன்வளத்துக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் அனுமானித்துள்ளனர்.
கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஏனென்றால் பாலூட்டி விலங்குகள் போல சீரான உடல் வெப்பம் கொண்டவையல்ல மீன்கள்.
சுற்றாடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும்.
மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதனால் அவற்றுக்கு கூடுதலான பிராணவாயு தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை நோக்கி தமது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கிளைமேட் சேன்ஞ் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.
No comments:
Post a Comment