Wednesday, October 3, 2012

விஷமில்லா பூச்சிக்கொல்லிகள்


 பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை மட்டும் அழிப்பதில்லை. மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்யும் தேனீக்கள் மற்றும் பறவைகள், பூச்சிகளை இயற்கையாகக் கொல்லும் தவளைகள், தேரைகளையும் அவை அழித்துவிடுகின்றன. பூச்சிக்கொல்லிகள் ஆபத்தான ரசாயனங்கள். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் பாலூட்டி விலங்குகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதனும் ஒரு பாலூட்டிதானே? பொதுவாக, புட்டிப்பாலை விட தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் அதிக நோய் எதிர்ப்புத்திறனுடனும் காணப்படுவது இயற்கை. 
 இதற்கு மாறாக கனடாவில் இனுயிட் என்ற சமூகத்தில் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைகளை விட குறைவான நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளன என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் இன்றைய உணவில் கலந்துவிட்ட பூச்சிக்கொல்லிகள்தான். பூச்சிக்கொல்லி நஞ்சால் உலகில் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், இதனால் பலனிருக்கிறதா என்றால் ஏமாற்றம்தான். பூச்சிகளைக் கொல்வதற்கு 70 சதவீதம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அந்தப் பூச்சிக்கொல்லிகளைச் சமாளித்து உயிர் வாழும் அளவுக்கு 525 பூச்சி இனங்கள் தயாராகி விட்டன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 எனவேதான், விஷமில்லாத பூச்சிக்கொல்லிகளை நோக்கி அறிவியல் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண் வண்டுகளின் வாசனையை மோப்பம் பிடித்துத்தான் ஆண் வண்டுகள் பல மைல் தூரம் பறந்து வந்து இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் பூச்சிகளிடம் சுரக்கும் அந்த வாசனைப் பொருளை எடுத்து பசை தடவிய பெட்டிக்குள் வைத்தால், வாசனையால் கவரப்பட்டு வரும் ஆண்பூச்சிகள் பசையில் ஒட்டிக்கொண்டு உயிர் துறப்பது உறுதி. இந்த வகையில் பூச்சிகளைக் கொல்லும் முறை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. பூச்சி இனம் பரவாமல் இருக்க மற்றொரு வழி, காமா கதிர்களை உபயோகிப்பது. ஆண் பூச்சிகள் மீது இந்தக் கதிர்களைப் பாயச்செய்து அவற்றை மலடாக்குகின்றனர். இதனால் ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளுடன் இணைந்தாலும் அவற்றைக் கருத்தரிக்கச் செய்ய முடியாது. இதனால் பூச்சி இனம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
 பூச்சிகளால் பாதிக்கப்படாத வீரியம் மிக்க விதைகளை உற்பத்தி செய்து அவற்றைப் பயிர் செய்வதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குகிறார்கள். அல்ட்ரா சவுண்ட் மூலமும் சில வகை விளக்குகள் மூலமும் பூச்சிகளை வெறுப்பேற்றி, எரிச்சல் உண்டாக்கி, குறிப்பிட்ட பயிரை அந்தப் பூச்சிகள் நாடிவராமல் செய்யவும் வழிமுறைகள் இப்போது வந்துவிட்டன. பூச்சி களைக் கொல்லும் நுண் உயிரி களை வளர்த்து, பயிருக்கும் உயிருக்கும் பாதிப்பில்லாமல் அவற்றை வெகு எளிதில் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எப்படியோ... உணவு நஞ்சாகாமல் சீக்கிரம் தடுத்தால் சரி.
நன்றி:  தினகரன் நாளிதழ்....

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

No comments: