Saturday, April 30, 2011

நமது நாடு 18.முல்லை நில மக்கள்


   காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிகள் செழித்து வளர்ந்தன. அக்காரனத்தினால் அவைகளுக்கு முல்லை நிலம் எனப் பெயர் உண்டாயிற்று. அவ்விடங்ளில் ஆடு மாடுகள் புல் மேய்வதற்கேற்ற மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. முல்லை நில மக்கள் ஆடு, மாடு முதலியவைகளை வளர்த்து அவை தரும் பயன்களையே பெரிதும் தம் உணவாகக்கொண்டு வாழ்ந்தனர். காடு சார்ந்த நிலங்களில் வரகு, அவரை, துவரை முதலிய கூல வகைகளும் விளைவிக்கப்பட்டன.

    முல்லை நில மக்கள், ஆயர், இடையர், கோவலர், அண்டர் முதலிய பல பெயர்களாற் குறிப்பிடப்படுவர். அவர்கள் காட்டு ஒதுக்குகளில் சிறு இல்லங்கள் கோலி வாழ்ந்தனர். இல்லங்கள் வரகு வைக்கோலால் வேயப்பட்டன. முற்றத்தே இறுக்கப்பட்ட முளைகளில் இராக்காலங்களில் ஆடு மாடுகள் கட்டப்பட்டன. குடியிருப்பைச் சுற்றி விழங்குகள் நுழையாதபடி முள் வேலி யிடப்படடிருந்தது. விடியற்காலத்தே இடைப்பெண்கள் தாழிகளில் உறைந்திருக்கும் தயிரை மத்துப்பூட்டிக் கடைந்தார்கள். அவர்கள் மோரையும் வெண்ணெயையும் அயல் இடங்ளுக்குக் கொண்டுசென்று விற்றார்கள். ஆடவர் விடியற்காலத்தே மாடுகளையும் ஆடுகளையும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செந்றார்கள், அவைகளைப் புலி கோநாய் முதலிய விலங்குகள் கொல்லாதபடி காவல் காத்தார்கள். ஆடுகளும் மாடுகளும் மேயும் போது அவர்கள் மர நிழல்களில் இருந்து இனிய பண்களைப் புல்லாங்குழலில் வாசித்தனர். கொன்றைப் பழத்தைக் குடைந்து நெருப்புக் கொள்ளியால் துளையிட்டுச் செய்த குழல்களிலும் அவர்கள் இனிய இசைகளை அமைத்துப் பாடினார்கள்.

    தமிழர்களின் செல்வம் ஆடு மாடுகளே ஆகும். மாடு என்னுஞ் சொல் ஒருகாலத்தில் செல்வம் என்னும் பொருளில் வழங்கிற்று. அதனால், மக்கள் ஒருகாலத்தில் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்தார்கள் என அறிகின்றோம். ஆடு மாடுகள் மேய்வதற்குப் பொது மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அவை குடும்பங்களுக்குச் சொந்தமாயிருந்தன. குடும்பங்களுக்குரிய மேய்ச்சல் நிலங்கள் சிறிது சிறிதாகப் பிரிக்கப்படின் அவை ஆடு மாடுகள் மேய்வதற்கு ஏற்றனவாகா. அகவே இடையர் குடும்பங்களாக வாழ்ந்தனர். சொத்துக், குடும்பத்தவர்கள் எல்லாருக்கும் பொதுவாக விருந்தது. குடும்பத்தவருள் மூத்தவன் குடும்பத் தலைவனாயிருந்தான். மற்றவர்கள் அவனுக்கு அடங்கி நடந்தார்கள். பல குடும்பங்களுக்குப் பெரிய தலைவன் ஒருவன் இருந்தான். இவ்வாறு பண்டை மக்களிடையே ஆட்சி முறை உண்டாயிற்று. கோ என்னும் சொல் மாட்டைக் குறிக்குமாதலால் அதனையுடையவன் கோன் எனப்பட்டான். கோன் என்னுஞ் சொல் அரசனையும் குறிக்கும். அதனால் ஆட்சி முறை இடையருள்ளேயே தொடங்கிற்றெனக் கருதப்படுகின்றது. கோன் ஆட்டுமந்தைகளை மேய்க்கும் கோலைக் கையிடத்தே வைத்திருந்தான் அக்கோலே ஆட்சியை உணர்த்தும் செங்கோலாக மாறிற்று.

     இடையரின் குலதெய்வம் திருமால். ஆயர் பாற் பொங்கல் இட்டுத் திருமாலை வழிபட்டனர். மகளிர் கைகோத்துக் குரவை ஆடித் திருமாலின் புகழ் பாடினர். கண்ணபிரான் இடைக்குலத்தினன். பாரதப் போருக்குப்பின் முல்லை நிலத்தாரின் திருமால் வணக்கம் கண்ணன் வணக்கமாக மாறிற்று.

நம் நாடு தொடரும்...


இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...

Friday, April 29, 2011

லிச்சி பழம்

  

    லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம், இருந்தாலும் பெரிய பழக்கடைகளில் இந்த சத்தான பழம் கிடைக்கிறது. சீனாவை  பூர்விகமாகக் கொண்ட இந்தப்பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது  இந்தப் பழம் கொடைக்கானலில் கிடைக்கிறது. 'லிச்சிப் பழத்தில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.

   பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்தபகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி., நீலத்தில் கொட்டை இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பளத்திள் கொழுகொழு சதைப்பகுதிதான், சத்துகளின் இருப்பிடம்.

    இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் தோல், எலும்புக்கு நல்லது. கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது. அதிக கலோரி இல்லாதது என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்களைப் போக்குகிறது.

   இதில் உள்ள நியாசிந், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும். கோடை காலத்தில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. வாங்கிபயன் அடைவோம்.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...


Thursday, April 28, 2011

சூரியஒளி மின்சாரம்     பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக பூமியின் சுற்றுச்சூழல் பல்வேறு மாசுவால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

   இதனால் சுற்றுச்சூழலுக்கான முக்கியத்துவமும், விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். புவிவெப்ப உயர்வு, பருவநிலை மாற்றம், எரிபொருள் அழிவு, பல்லுயிர்ச் சூழல் பாதிப்பு ஆகிய பிரச்னைகள் நம் முன்னே பூதாகரமாகி நிற்கின்றன.

       இது ஒருபுறமிருக்க, சுற்றுச்சூழலைப் பாதிக்காத இயற்கை வளங்களான நீர், காற்று மூலம் கிடைக்கும் மின்சாரமானது, உலகின் அசுர வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.

    இதனால், புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் அனைத்து நாடுகளுமே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.

      புவிவெப்பமாதலுக்குப் பசுமை இல்லவாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) வெளியேற்றம் முக்கியமான காரணமாக இருப்பதால், இந்த வாயுவை உருவாக்கும் டீசல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாடுகளைக் குறைப்பதிலும், வெப்பத்தாலும், மின்சாரத்தாலும் இயங்கும் சாதனங்களை தயாரிப்பதிலும் அமேரிக்கா, சீனா உள்ளிட்ட பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகள் பலவும் முனைப்புகாட்டுகின்றன.

      இந்தியா போன்ற பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இயற்கை வளங்கள் குறைந்து வருவதும், சுற்றுச்சூழல் சீரழிவும் முக்கிப் பிரச்னைகளைக நம்மை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்தப்பிரச்னைகளை திறம்பட எதிர்கொள்வது என்பது, புதிப்பிக்கவல்ல் எரிசக்தி சார்ந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், குறிப்பாக சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம்தான் சாத்தியமாகும். மற்றும் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாகவும், மாற்றி நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றக்கூடிய கருவிகளில் சூரிய வென்நீர் கலன், சூரிய உலர்கலன், சூரிய நன்னீர் கலன் போன்றவை முக்கியமானவையாகும். அதே நேரத்தில் சூரிய மின் உற்பத்தியிலும் சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், சோலார் தெர்மல்
முக்கிய பங்கு வகிக்கின்றன.

   சூரிய எரிசக்தியை வெப்பமாக மாற்றி அதன்பின் மின்சாரம் பெறுவதற்கும், நேரடியாகவே மின்சாரமாக மாற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.

    சூரிய வெப்பம் மற்றும் மின் கருவிகள் உற்பத்தியும், பயன்பாடும் இன்றைக்கு உலகம் முழுவதும் மிகவும் அவசியத் தேவையாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகிறது.
  
      மின் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை தெரிவித்தார்.

    இப்போது தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் போட்டோ வோல்டிக் சாதனம் அமைத்து தந்து தடையில்லா மின்சாரம் கிடைக்க வகை செய்வேம் என்று அறிவித்துள்ள. இது இலவசங்களைவிட நன்மை பயக்கும் திட்டம்  வரவேற்க வேணேடிய ஒன்று. சோலார் போட்டோ வோல்டிக் இதன் விலை அதிகம். அதிகம் பேர் பயன்படுத்தினால் உற்பத்தி பெருகும் விலையும் குறைய நிறைய வாய்புள்ளது.

   ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் கொடுக்கிறேன் என்கிற இலவசங்களைக் காட்டிலும் இயற்கையாக நமக்கு கிடைக்ககும் சூரியசக்கியை ஆக்கசக்தியாக்கி பயனடைவோம்.


இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

Wednesday, April 27, 2011

சிவப்பு மிளகய்


    உணவில் சிவப்பு மிளகாயை குறைத்தால் பருமனான உடல் மெலியும் உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவை குறைக்கும். அதன் மூலம், உடல் எடையை குறைக்கலாம் என்று இங்கிலாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    பசி வந்தால் சிலர் அதிகமா சாப்பிடுவார்கள். அதனால், உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் சூப் போன்ற பசியை தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்லாந்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

     6 வாரங்கள் நடந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு பிரியர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். மசலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராம், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது. 6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில், மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரிய வந்தது.

     பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிக பசி ஏற்படும். இதை மிளகாயின் கேப்சைசின் என்ற பொருள் செய்கிறது. அதற்கேற்ப உணவில் அளவு அதிகரித்தோ அல்லது சாப்பிடும் நேர இடைவெளி குறைந்தோ உடல் பருமனில் கொண்டு சேர்க்கும். மிளகாய் தூளின் அளவு குறைவாக இருந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டனில் ஆய்வுக் குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

Wednesday, April 20, 2011

நமது நாடு 17. மலைநாட்டு மக்கள்

    மலை நாடு குறிஞ்சி நிலம் எனப்பட்டது. குறிஞ்சி என்படு ஒருவகை மரம். மலைகளில் இம் மரம் பெரிதும் வளரும். ஆகவே மலைநாட்டுக்குக் குறிஞ்சி நிலம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. அங்கு வாழும் மக்கள் குறவர், வேடர், கானவர் எனப்பட்டார்கள்.

   மலைகளில் தானே வளர்ந்து பயன் தரும் மரங்கள் பல உண்டு. உண்ணுதற்கினிய கிழங்குகளை வீழ்த்தும் கொடிகள் பல காடுகளின் இடையிடையே செழித்துப் படரும். மலைமுகடுகளில் தேன்கூடுகள் தொங்கும். மலைச்சாரல்களில் ஐவனம் என்னும் ஒருவகை மலைநெல் விளையும். மலைகளின் இடையிடையேயுள்ள சமநிலங்களில் சாமை பயிரிடப்படும். மலைநாட்டினர் அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்கு, தேன், மலைநெல், சாமை என்பவைகளைத் தமது முதன்மையான உணவுகளாகக் கொண்டு வாழ்ந்தனர்.

     காடுகளில் மான், மரை, பன்றி, புலி, கரடி, யானை முதலிய விலங்குகள் திரிந்தன. மான், மரை, பன்றி முதலிய விலங்குகள் உணவின் பொருட்டு வேட்டையாடப்பட்டன. தோல், நகம் என்பவைகளிள் பொருட்டுப் புலிகளும் தந்தத்தின் பொருட்டு யானைகளும் வேட்டையாடப்பட்டன.
பருவம் அறிந்து சாமை விதைக்கப்பட்டது. பயிரிடப்படும் இடம் கொல்லை எனப்பட்டது. காட்டு விலங்குகள் பயிரை மேய்ந்து அழித்து விடாதபடி கொல்லையைச்சுற்றி வேலியிடப்பட்டிருந்தது. இராக்காலத்தே யானை, பன்றி முதலிய விலங்குகள் கொல்லைக்குட் புகுந்து பயிரை அழிக்காதபடி பரண்கள்மீதிருந்து குறவர் காவல் காத்தனர். பயிரை மேயவரும் விலங்குகள் கண்டு அஞ்சி ஓடும்படி அவர்கள் நெருப்புக் கொள்ளிகளை பரணின் பக்கங்களில் மாட்டிவைத்தார்கள், கவணில் கற்களை வைத்து எறிந்து விலங்குகளை ஓட்டினார்கள்.

   தினை கதிர்  முற்றியதும் கிளி முதலிய பறவைகள் கூட்டமாக வந்து தினையை உண்ணும். குறச் சிறுமியர் பகற்காலங்களில் பரண்மீதிருந்து தினைமீது விழும் குருவிகளை ஓட்டினர். அவர்கள் மூங்கில் தடியைக் கிழித்துச் செய்த தட்டை என்னும் கருவியை தட்டியும் ஆயோ என ஓசையிட்டும் குருவிகளை ஓட்டினர். தினை விளையும்காலம் குறச் சிறுமியரின் இனிய பொழுது போக்குக் காலமாயிருந்தது. குறவரின் குலதெய்வம் முருகன் எனப்பட்டான் அவன் கையில் முருகக்கடவுளின் வேலைப் பிடித்திருந்தான்.

  குறவரின் வீடுகள் மலைச்சாரலிலே பலர் மரங்களின் கீழ்க் கட்டப்பட்டிருந்தன. அவை தழைகளால் வேயப்பட்ட சிறு குடிசைகள். அவர்கள், தேன், பலாப்பழம் என்பவைகளிலிருந்து ஒருவகைக் கள்ளைச் செய்தார்கள். அக்கள் மூங்கிற் குழாய்களில் இட்டுக் காரமேறும்படி வைக்கப்பட்டது. கள்ளை உண்டு மகிழ்ந்த குறவரும் குறத்தியரும் முற்றத்தே நிற்கும் பலாமரத்தின்கீழ் கைகோத்துக் குரவை என்னும் கூத்து ஆடினார்கள்.

   முன்னை காலத்தே குறவர் தழைகளையும் மரப்பட்டைகளையும் உடையாகக் கொண்டனர். பழைய நூல்களில் முனிவர்கள் மர உரியை உடையாக அணிந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. குறமாதர் குறி சொன்னார்கள். அவர்கள் உடம்பில் பச்சை குத்திக்கொண்டனர், சங்கு மணிகளைக் கோத்து மாலையாக அணிந்தனர். சங்கு வளைகளைக் கையில் இட்டு அழகுசெய்தனர். குங்குமப் பொட்டிட்டனர். பூக்களைத் தலையில் சூடினர்.

நமது நாடு தொடரும்...

 இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...

நமது நாடு 16. தமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்


    இவ்வுலகம் கடல், மலை, காடு, மணல், வெளி என்னும் இயற்கை அமைப்புகளுடையது. தமிழ் நாட்டின்கண்ணும் இவ்வைவகை இயற்கை அமைப்புக்களை. நாம் பார்கலாம். மக்கள், தாம் வாழும் இடங்களுக்கு ஏற்பத் தமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கின்றனர். இக்காரத்தினால் தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் மக்கள் ஒரேவகையாக வாழ்ந்திலர். வாழ்க்கை என்பது ஊண், உடை உறைவிடம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டது.


நமது நாடு தொடரும்...


இயற்கை நமக்களித்த ஆதார ஒளி சூரியன்!

Monday, April 18, 2011

நமது நாடு 15.புராணங்கள்


     தமிழ் அரசர் அவைகளில் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசருடைய வெற்றிகளையும் பிற புகழ்களையும் குறித்துப் பாடினார்கள். அரண்மனைகளில் பலவகை விழாக்கள் நடைபெறுவதுண்டு. அக்காலங்களில் புலவர்கள் அரசனின் முன்னேர்களுடைய பழைய வரலாறுகளை எடுத்துச்சொல்வது வழக்கம். ஒவ்வோர் அரசமரபினருடைய பரம்பரை வரலாறுகளும் இவ்வாறு புலவர்களாற் காப்பாற்றப்பட்டு வந்தன. வடநாட்டு அரசர் அவைகளிலிருந்து அரசர் வரலாறுகளைக் கூறிய புலவர்கள் சூதர் எனப்பெயர்பெற்று விளங்கினார்கள். இதுபற்றியே புராணங்கள் சூத முனிவராற் சொல்லப்பட்டன என்று கூறப்படுகின்றன. இந்திய நாட்டை ஆண்ட அரசரின் வரலாறுகள் ஒருகாலத்தில் எழுதப்பட்டன. அவை புராணம் எனப் பெயர் பெற்றன. புராணம் என்பதற்குப் பழைய வரலாறு என்பது பொருள்.

     கோயிற் குருமாராலும் அரசரின் வரலாறுகள் எழுதி வைக்கப்பட்டன. இவ்வாறு செய்தால், இந்தியர் வழக்கு மட்டுமன்று. இலங்கை, மேற்கு ஆசியா, எகிப்து முதலிய நாடுகளிலும், இம்முறை இருந்துவந்தது.இன்று நிகழ்ச்சிகளை கிறித்துவுக்கு பின் இத்தனையாவது ஆண்டில் இன்னவை இன்னனை நிகழ்ந்தன என்று குறிப்பிடுகிறோம். முன்னைக் காலங்களில் ஆண்டுகள் இவ்வாறு தொடர்பாகக் கணக்கிடப்படவில்லை, இன்ன அரசன் ஆட்சியில் இத்னையாவது ஆண்டு என்று கணக்கிடப்பட்டது. அவ்வாறாகவே முற்கால அரசரின் ஆட்சிக் காலங்கள் குறித்துவைக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குமுன் மயூரசந்திரகுப்தன் என்னும் அரசன் வட இந்தியாவை ஆண்டான். அவனுடைய அரண்மனையில் மெகஸ்தினஸ் என்னும் கிரேக்கர் ஒருவர் தங்கியிருந்தார். அவர் இந்தியாவின் வரலாறு ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் அலக்சாந்தரின் படை எடுப்புக்குமுன் பாண்டிய நாட்டை ஆண்ட அரசரின் எண் 154 எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அரசரின் ஆட்சிக்காலங்கள் குறித்து வைக்கப்பட்டிலவாயின் அவர் இவ்வாறு கூறியிருத்தல் இசையாது. தமிழர் தமது பழைய வரலாறுகளை எழுதி வைத்ததில்லை எனச் சிலர் கருதுவது தவறு. பழைய கல்வெட்டுகளையும் புராணங்களையும் நோக்குமிடத்து முன்னர் எழுதி வைக்கப்பட்ட வரலாறுகள் பிற்காலங்களில் சிதைந்து மறைந்தொழிந்தன என்பது விழங்குகின்றது. திருவிளையாடற் புராணத்தில் மதுரையை ஆண்ட அரசரின் வரலாறுகளைக் காண்கின்றோம். புராணக் கதைகள் நம்பத்தக்கவல்ல எனப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணம் புராணங்களிற் பல கற்பனைக் கதைகள் காணப்படுதலேயாகும். அக்கற்பனைக் கதைகளின் இடையிடையே சிற்சில இடங்களிற் கூறப்படும் அரசரின் வரலாறுகள் பொருத்தமாயிருக்கின்றன.

   ஒருகாலத்தில் பிராமண மதம் இந்திய நாட்டில் தலை எடுத்திருந்தது. அப்காலத்தில் பிராமணர் தமக்கு நலம் பயக்கும் பல கோட்பாடுகளைப் புகுத்தியும் நலம் பயவாதனவற்றை நீக்கியும் கற்பனைக் கதைகளைப் புகுத்தியும் புராணங்களை மாறுபடுத்தினர். இக்காரணங்களே புராணங்கள் வரலாற்று நூல்களாகக் கொள்ளப்படுவதற்குத் தடையாயுள்ளன. பிராமனரால் திருத்தப்பட்டதால் வரலாற்று நூல்களாகிய புரணங்கள் வெறும் சமய நூல்கள் எனக் கொள்ளப்படுகின்றன.

   இதிகாசம் என்பதற்கும் பழைய வரலாறு என்பது பொருள். பாரதம் இராமாயணம் முதலிய நூல்கள் இதிகாசங்கள் என வழங்கப்படுகின்றன. அவையும் நீண்டகாலமாகக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் எழுதப்பட்டுவந்தன. அதனால் அவைகளும் வரலாற்றுத் தண்மையை இழந்தன. பாரதப்போர் இன்றைக்கு மூவாயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளின்முன் நிகழ்ந்ததற்குச்சான்று உண்டு.


நமது நாடு தொடரும்...


இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ...

Saturday, April 16, 2011

இருவாட்சி ஹார்ன்பில்


       கிரேட் இந்தியன் ஹார்ன்பில்,  கறுப்பு மலபார் ஹார்ன்பில், வெள்ளை மலபார் ஹார்ன்பில், ஆப்பிரிக்கா ஹார்ன்பில்'  என்பன உள்பட பல்வேறு வகைகள் உள்ளன. கிரேட் இந்தியன் ஹார்ன்பில் பறவையின் கழுத்தை சுற்றிலும் மஞ்சள் நிற பட்டை இருக்கும்

     இருவாட்சி மரப் பொந்துகளில் தனது கூட்டினை அமைக்கும். முட்டைகள் இட்டபின் அவற்றினை அடை காக்கப் பெண் பறவை மரப் பொந்துக்குள் புகுந்து கொண்டு களிமண்ணைக் கொண்டு உட்புறமாக ஓட்டையை  அடைத்துவிடும். பின் அதில் ஒரு சிறு துவாரம் செய்து விடும். பொந்துக்குள்  அடைக்காக்கும். அடுத்த பதினைந்து இருபது நாட்களுக்கு ஆண் பறவை உணவு கொண்டு வந்து கொடுக்கும். ஆண் பறவை தான் உண்ண நேரமின்றி இளைத்துத் துரும்பாகிவிடும். பெண் பறவையோ உட்கார்ந்த இடத்திலேயே உண்டு உறங்குவதால் கொழுத்துவிடும்.

   முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்தபின், தாய்ப் பறவை பூசிய காரையினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் முன் போலவே பூசிவிட்டு, தாய் தந்தை இருவருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுக்கும். இப்பறவைகளின் உணவு ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களின் பழங்கள்.


இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Friday, April 15, 2011

நமது நாடு 14. பார்ப்பனர்


     தமிழர் மிகப் பழைமை தொட்டே கோவில்களை அமைத்து அவைகளில் கடவுளின் அருட்குறிகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆதியில் கோவிற்குரு அரசனாக விருந்தான். பின்பு அரசனுக்கு அடுத்தபடியிலிருந்த மேன்மக்கள் குருமாராயினர். அக்குருமார் பல தகுதியினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். கோவிற் கருமங்களைப் பார்போர் பார்ப்பார் எனப்பட்டனர். பார்ப்பார் என்பதற்குக் கண்காணிப்பவர் என்பது பொருள். கடவுளுக்கு ஐயன் என்பதும் ஒரு பெயர். ஐயனைச் சேவிப்பவர்கள் ஐயர் எனப் பெயர் பெற்றனர். ஐயர், பார்ப்பார் என்போர் தமிழ்மக்களே.

  
    முற்காலங்களில் குருமார் செல்வாக்குடைய வர்களாயிருந்தனர். மக்கள் அவர்களிடத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடவுளுக்கு அண்மையில் உள்ளவர்கள் எனக் கருதப்பட்டனர். அரசனும் அவர்களுக்கு மிகுந்த வணக்கம் செய்தான். அரசனுக்கு அறிவு கூறுவோரில் பார்ப்பானும் ஒருவனாகவிருந்தான். பார்பானே பெரும்பாலும் அரசனது அமைச்சனாய் இருந்தான். இதனை மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு அமைச்சராகவிருந்தமை கொண்டு நன்கு அறிதல் ஆகும். அரசியல் அளுவல்களிலும் பார்ப்பார் இடம் பெற்றனர்.

    பிற்காலங்களில் வடநாட்டுப் பிராமணர் தெற்கே வந்தனர். பிராமணங்கள் என்னும் வடமொழி நூல்களைக் கற்றவர்கள் பிராமணராயினர் என முந் கூறப்பட்டது. அவர்களுட் சிலர் பார்ப்பன வகுப்பினரிடையே திருமணக் கலப்புடையராயினர். அவர்கள் தமது மதத்தைத் தென்னாட்டிலும் புகுத்துவாராயினர். பொது மக்கள் அவர்களின் கொள்கைகளுக்கு இணங்கவில்லை. அதனால் அவர்கள் அரசரைத் தம்வழிப் படுத்தினார்கள். அவர்களை வேள்விகள் செய்யும்படி தூண்டினார்கள். வேள்விகளுக்கு அவர்கள் ஆசிரியர்களாகவும் இருந்தனர். அக்காரணத்தினால் அரச வட்டாரங்களில் பிபாமணருக்கு மதிப்பு உண்டாயிற்று. பார்ப்பார் நாளடைவில் தம்மைப் பிராமணர் எனக் கூறுவாராயினர். அவர்களும் வடமொழியைக் கற்றுப் பிராமணங்களைப் பயின்றனர், தமக்கு இருக்கு முதலிய வேதங்கள் முதல் நூல்கள் எனவுங் கூறினர், சமக்கிருதம் தேவ மொழி என அரசரை நம்பச் செய்தனர். அரசர் ஆணையினால் ஆலயங்களில் சமக்கிருத மொழியில் புகழ்பாடும் வழக்கு ஏற்பட்டது. பார்ப்பனர் தம்மை ஆரியர் எனக் கருதத் தொடங்கினர், உண்மை அவ்வாறன்று. இப்பொழுது நாம் பார்ப்பாரை ஆரியர் எனக்கருதுகின்றோம். தமிழரில்  பலர் இஸ்லாம், கிறித்துவ மதங்களைத் தழுவியிருக்கின்றார்கள். இவர்களை நாம் அரபியர் அல்லது ஐரோப்பியர் எனக் கூறுகின்றேமா இல்லை. அவ்வாறே ஆரியமதத்தைத் தழுவிய தமிழராகிய பார்ப்பனரும் ஆரியராகமாட்டார். தமிழர் எனக் கூறுவதிலும் தம்மை ஆரியர் எனக் கூறுவதே பெருமை எனப் பார்ப்பன வகுப்பினர் கருதுகின்றனர். வரலாற்றில் ஆரியமக்களே எல்லா மக்களுக்கும் பின்னால் நாகரிகம் அடைந்தோராவர்.

  பார்ப்பனரிடையே வடநாட்டுப் பிராமணரின் கலப்பு உண்டு என்பது உண்ணையே. அவர்கள் நரம்புகளில் ஓடும் ஆரியக் குருதி ஒரு சிறிதளவேயாகும். இருவேறு நிறமுடைய சாதிகள் கலக்கும்போது இரு நிறங்களுக்கும் இடைப்பட்ட நிறமுடைய மக்கள் தோன்றுகின்றனர். அப்புதிய மக்களின் நிறம் ஏறியும் தாழ்ந்தும் காணப்படுமேல் அது இரு மக்களின் கலப்பின் அளவைக்காட்டுவதாகும். புதிதாக  இந்திய நாட்டை அடைந்த ஐரோப்பிய சாதியினருக்கும் இந்திய மக்களுக்கும் தோன்றிய மக்கள் யூரேசியர் எனப்படுகின்றனர். இவர்களில் கருமை முதல் வெண்கலம், வெண்மை வரையில் நிறமுடையவர்களைக் காணலாம். இது பார்பனர்களிடையில் நிறங்கள் பலவாயிருப்பதன் காரணத்தை அறிந்துகொள்வதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும்.

நமது நாடு தொடரும்...


வனவளம் காப்போம் வளமான வாழ்வு பெறுவோம்...

Thursday, April 14, 2011

தேவக்கனி எலுமிச்சை


   எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடது. எலி மிச்சம் வைத்ததாதல்தான் என்னவோ  இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்ததோ என்னவோ.

  சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. இதில் சிட்ரிக் அமிலம் 5% உள்ளது.

   மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் இந்தியாதான் என்றும் மற்றும் எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை பரவியது என்று கூறப்படுகிறது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

சிறிய பழம் இதன் பயன்கள் மிக அதிகம்.
   இதிலுள்ல அதிகமான வைட்டமின் சி சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்றவல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
    எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.
   தலைச்சுற்றல் வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
    எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.
   கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.
   சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன. பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
   தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.
    பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.
   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும். மனஅழுத்தம், ஸ்டிரெஸ் நீங்கும்.
  உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
    இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது. காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.
   சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.
   தலையில் பொடுகுத் தொல்லை நீங்க,  எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Monday, April 11, 2011

நமது நாடு 13. தமிழ் மறை


    தமிழ் மக்களிடம் மிகப் பழங் காலத்தில்லேயே மறைகள் இருந்தன. மறை என்பதற்குப் பிறர் அறியாவண்ணம் மறைத்துச் சொல்லப்படுவது எண்பது பொருள். வேதம் என்பதற்கும் பொருள் இதுவே. உண்மையில் ஆரிய வேதங்கள் மறைகள் ஆகமாட்டா. அவை மறைத்துக் கூறப்படுவன வல்ல. தமிழர் அறிந்திருந்த சமய உண்மைகள், குரு மாணாக்க முறையில் தொன்று தொட்டு வந்தன. அவற்றைக் கேட்கும் தகுதி அடைந்தவர்களுக்கு மட்டும் அவை வெளியிடப்பட்டன. ஆரிய வேதங்கள் சூத்திரருக்கும் பெண்களுக்கு மட்டும் மறைக்கப்பட்டிருந்தன.

    தமிழ் மொழியிலுள்ள மிகப் பழைய நூல், தொல்காப்பியம். அது, தமிழில் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்கள் பற்றியே நூல்கள் செய்யப்படும் எனக் கூறுகின்றது. ஆகவே தமிழ் மறைகள் நூல்களாக இருந்தில என நாம் நன்கு அறியலாம்.

   ஆரியர், தமிழரிடமிருந்து அவர்கள் சமய உண்மைப் பொருள்களை அறிந்தனர். அவர்கள் அவ்வுண்மைப் பொருள்களை அமைத்து உபநிடதம் என்னும் நூல்களைச் செய்தனர். உபநிடத மென்பதற்குக் குரு மாணாக்க முறையில் கிட்டஇருந்து கேட்கப்படுவது என்பது பொருள். உபநிடதங்களிற் கூறப்படுவனவே தமிழரின் மறை என்று சொல்வதற்குரிய பல காரனங்கள் உண்டு. அவை ஓங்காரத்தின் பெருமையைக் கூறுகின்றன. வடமொழியில் ஒகரமாகிய குறில் இல்லை. குறிலின் நீட்டமே நெடில் ஆகும். இதனால் ஓம் என்னும் பிரணவம் தமிழருக்கே உரியது என்று விளங்குகிறது.

   பிராமணர் அரச வகுப்பினரிடம் மாணாக்கராயிருந்து உபநிடத ஞானங்களைப் பயின்றனர். ஆரிய வேதங்கள் சூத்திரருக்கும் பெண்களுக்கும் மட்டும் மறைக்கப்பட்டிருந்தனவென்பது முன் கூறப்பட்டது. வேதங்களைப் பிராமணன் மட்டும் ஆசிரியனாக விருந்து மூன்று வருணத்தவர்களிக்கும் ஓதலாம் என அவர்கள் நீதி நூல்கள் கூறுகின்றன. பெண்களும் அரசரும் அரசர் அல்லாதாரும் உபநிடத ஞானங்களில் பயிற்சியடைந்திருந்தார்கள். இக்காரனங்ளினால் உபநிடதங்களிற் கூறப்படும் உண்மை ஞானங்களே தமிழரின் மறை என்று தெளிவாகின்றது.

   தமிழரின் மறை எழுதப்படாது செவிவழக்கில் நீண்டகாலம் வந்தது. ஆதலின் அது எழுதாக் கிளவி எனப்பட்டது. தமிழ்மறைப் பொருள்களைத் திரட்டித் திருமூலநாயனார் திருமந்திரம் என்னும் நூலாகச் செய்தார். திருமந்திரத்திற் காணப்படும் உண்மைகள் தேவார திருவாசஙகங்களிலும் காணப்படுகின்றன. இவைகளின் பொருள்களைச் சாரமாகக் கொண்டனவே தமிழர் போற்றும் சைவ சித்தாந்த நூல்களாகும். ஆரியன் மதம் தென்னாட்டிற் பரவிய காலத்தில் தமிழரின் மறை என்பது ஆரியரின் வேதம் எனத் தவறாகக் கருதப்படலாயிற்று.

நமது நாடு தொடரும்...

தூய்மையை இழக்காத ஒன்று இயற்கைதான்...
Saturday, April 9, 2011

நமது நாடு 12. ஆரியர் வேதங்கள்


      ஆரிய மக்கள், இந்தியாவை அடைந்தபின் தங்கள் கடவுளர் மீது பாடிய பாடல்களின் திரட்டு வேதம் எனப்படும். வேதங்கள் பாடப்பட்ட காலத்தில் ஆரியர் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தனர்.  ஆகவே ஒருவர் பாட   மற்றவர்கள் கேட்டு அப்பாடல்களை நெட்டுருச் செய்தனர். நீண்டகாலம் எழுதப்படாத செவி வழக்கில் வந்தமையின் அவை எழுதாக்கிளவி என்னும் பெயர் பெற்றன. அப்பாடல்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கு, எசுர், சாமம் என்னும் பெயர் பெற்றன. பின்பு அதர்வணம் என்னும் ஒரு வேதமும் சேர்க்கப்பட்டு வேதங்கள் நான்கு ஆயின. அவை தமிழர் வழிபட்ட கடவுளர் மீது பாடப்பட்டனவல்ல.

   ஆரியர் தமிழர்களைப்போல ஆலயங்களை அமைத்து அவைகளிற் சென்று கடவுளை வழிபடவில்லை. அவர்கள் வேள்விச் சாலைகள் அமைத்து அவைகளில் பெரிய வேள்விகள் செய்தனர். வேள்விகளில் பல விலங்குகள் பலியிடப்பட்டன. நூறு வேள்வி  வேட்கின்றவன் இந்திர பதவியை அடைகிறான் என்று அக்கால அரசர் நம்பினார்கள். இந்திரன் வானுலகத்துக்கு அரசன் என ஆரியமக்கள் நம்பிவந்தனர்.

     வேதங்களுக்குப்பின் ஆரணியங்கள் என்னும் நூல்கள் எழுந்தன. அவை, முதுமைக் காலத்திற் காட்டிற் சென்று தவஞ்செய்வோர் படிப்பதற்காக எழுதப்பட்டவை.

     ஆரணியங்களுக்குப்பின் பிராமணங்கள் என்னும் நூல்கள் எழுதப்பட்டன. பிராமணங்கள் வேள்விக் கிரியைகளைப்பற்றி விரிவாகக் கூறும் நூல்கள். அந்நூல்களிற் பயிற்சியடைந்ததோர் பிராமனர்  எனப்பட்டனர். அவை கூறும் வேள்விமுறைகள் தமிழர்க்குரியன வல்ல. பிராமணரும் தமிழ் மரபினரல்லர். ஒரு காலத்தில், சமக்கிருதம் தேவமொழி என்றும், தமிழ் மனிதமொழி என்றும் மக்கள் தமது அறியாமையால் நம்பத் தலைப்பட்டார்கள். அப்பொழுது தென்நாட்டு ஆலயங்களுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர்களுக்குப் பதில் வடமொழிப் பெயர்கள் இடப்பட்டன. தமிழ் அந்தணரான பார்ப்பானருக்கும் பிராமணர் என்னும் பெயர் வழங்குவதாயிற்று.  இதனாலேயே பார்ப்பனர் ஆரியரே என்னும் கருத்து
ஏற்படலாயிற்று.


நமது நாடு தொடரும்...

 
பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....

Tuesday, April 5, 2011

நமது நாடு 11. தமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்


    தமிழ்நாட்டில் சாதி எப்படித் தோன்றிற்று என்று முன் பதிவுகளிற் பார்த்தோம். வடநாட்டார் சாதிகளை நிறம்பற்றிப் பிரித்தனர். ஆகவே அவர்கள் செய்த சாதிப் பிரிவு வருணம் எனப் பெயர் பெற்றது. வருணம் என்பதற்கு நிறம் என்று பொருள். ஆரியரிற் பிராமணர் முதற் குலத்தினராவர். இரண்டாங் குலத்தினர் சத்திரியர் எனப்பட்டனர். சத்திரியர் என்பதற்கு அரசர் அல்லது போர் வீரர் என்பது பொருள். மூன்றாங் குலத்தினர் வைசியர். அவர் வாணிகத் தொழில் நடத்துவர். நான்காவது குலத்தினர் சூத்திரர். அவர்கள் போரில் சிறையாகப் பிடிக்கப்பட்டோரும் பரம்பரையாக அடிமைத் தொழில் புரிவோருமாவர். ஆகவே சூத்திரர் என்பதற்கு அடிமைகள் அல்லது வேலைக்காரர் என்பது பொருள். வடநாட்டாரின் வருணப் பிரிப்புக்கு பிற்ப்பே காரணம். பிறப்புரிமையை வலுப்படுத்துவதன் பொருட்டுப் பல கட்டுக்கதைகள் எழுந்தன. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போர் முறையே பிரம்மாவின் முகம், தோள், தொடை, கால்களினின்றும் பிறந்தார்கள் என்பதும் அக்கதைகளுள் ஒன்று. இதனை மக்கள் நீண்டகாலம் உண்மையென நம்பிவந்தனர். சாதிக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு கட்டுப்பட்டதோர் கதையே இதுவாகும்.

   ஒவ்வொரு வருணத்தவர்களும் ஒழுகவேண்டிய ஒழுக்க முறைகள் அவர்கள் நீதி நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருணத்துக்கும் வெவ்வேறு ஒழுக்கங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வருண தருமங்கள் சமயத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. அவர்கள் நீதி நூல்கள் வருணத்துக்கு தக்கவாறு நீதிகள் விதித்துள்ளன. தமிழர் பிறப்பில் சாதி இல்லை, ஒழுக்கத்தினாலும், செய் தொழிலினாலும் சாதி உண்டு என்றனர். பிறப்பெடுக்கும் எல்லா வுயிருக்கும் சிறப்பொவ்வா-செய்தொழில் வேற்றுமையால் எனத் திருவள்ளுவனாரும் ஆணை இடுவாராயினர்.

''வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி''

   என்னும் செய்யுளில் தமிழர் ஆரியர் நீதிகளின் உயர்வு தாழ்வுகள் நன்கு கூறப்பட்டிருத்தல் காண்க.

   தமிழ்நாட்டில் மக்கள் அந்தணர், அரசர், வனிகர், வேளாளர் என்னும் நற்குலத்தினராகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் குருமார், அரசர், வியாபாரிகள், பயிரிடுவோர் என்பவர்களை ஒத்தவர்களேயாவர். இவர்களை அன்றிப் பலவகைத் தொழில்கள் புரிவோரும் வாழ்ந்தனர்.

    தென்னாட்டில் ஆரியக் கொள்கைகள் ஒரு காலத்திற் பரவத்தொடங்கின. அப்பொழுது தமிழர் நாற்குலங்களுக்கும் பதில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவினராகக் கருதப்பட்டார்கள். அதனை ஏற்றுக்கொள்ள ஒருப்படாத வேளாண் மக்கள் தம்மைச் சற்சூத்திரர் என்றும், பூவைசியரென்றும் பலவாறு கூறிக்கொள்வாராயினர். வேளாளர் சூத்திரரும் அல்லர் வைசியரும் அல்லர்.

நமது நாடு தொடரும்...


இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்.... 

Monday, April 4, 2011

எங்களுக்கும் எல்லைகள் உண்டு


   பறவைகளுக்கு இறக்கைகள் உள்ளன என்பது சரிதான். அவற்றிற்குப் பறக்க முடியும் என்பதும் சரிதான். ஆனால் எல்லாப் பறவைகளும் எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லையே அது ஏன்?
 ஒவ்வொரு பறவைக்கும் (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) இந்த உலகத்தில் அதற்கான குறிப்பிட்ட இடம் உண்டு. சில உயிரினங்கள் காட்டில் இருக்கும். சில வயல்களில் இருக்கும். சில சமவெளிகளில் இருக்கும். சில கடற்கரையில் இருக்கும். இவற்றிற்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லை உண்டு.

    ஏறத்தாழ 8600 - க்கும் அதிகமான சிறப்பினங்களைச் சேர்ந்த (species) பறவைகள்    உள்ளன. ஐந்து சென்டி மீட்டர் மட்டுமே நீளமுள்ள ஹம்மிங் பறவை முதல், இரண்டு மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள நெருப்புக் கோழி வரை இதில் உட்பட்டவை.   ஆர்ட்டிக் முதல் வெப்ப மண்டலப் பிரதேசம் வரை உலகத்தின் எல்லா இடத்திலும்       பறவைகளைக் காணலாம்.

   பெரும்பாலான பறவைகள் ஒரு இடத்தில் நிலையாக வாழ்கின்றன. பறவைகளில், தனியாக வாழ்பவை - கூட்டமாக வாழ்பவை எனும் பிரிவுகள் உண்டு. வலசைபோகும் பறவைகள், குளிர் காலத்தில் வெப்பப் பகுதிகளை நோக்கிக் கூட்டமாகப் பறந்து வருகின்றன. வெப்பப் பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சுகளை வளர்த்த பிறகு தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றன.

  ஒரு மரம் கொத்திப் பறவையைப் பாருங்கள். மரத்திலிருந்து புழு பூச்சிகளையும், எறும்புகளையும்  தன் பலம் வாய்ந்த அலகால் கொத்தியெடுத்துத் தன் உடலில் உரசிய   பிறகே அவற்றைத் தின்னும். தான் பிடித்த எறும்புகளை உடனே விழுங்காமல் ஏன் தன் உடலில் உரசுகிறது? எறும்புகளில் உள்ள அமிலத்தைப் பயன்படுத்தி தன் இறகுகளுக்கிடையில் இருக்கும் நுண் உயிரிகளை அழிப்பதற்குத்தான் அது இவ்வாறு செய்கிறது.

  நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள மரங்களில்தான் மீன்கொத்திப் பறவைகள் வாழும். அவை எப்படி இரை தேடுகின்றன எப்படிக் கூடமைக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள புதர்க் காடுகளிலும், சிறு மரங்கள் உள்ள காடுகளிலும்தான் இவற்றைப் பார்க்க முடியும்.

    உயரத்தில் கூடமைக்க வேண்டியிருப்பதால் கழுகுகள், உயரமான மரங்கள் உள்ள காடுகளில்தான் வாழும். ஒரு வகைப்பட்ட பறவை வாழும் சுற்றுச் சூழலில், இன்னொரு வகைப்பட்ட பறவை வாழ முடியாது.
அணிலின் நகங்கள், மரக்கிளைகளைப் பற்றிப் பிடிப்பதற்கு ஏற்ற வகையிலும், மாங்காய், மற்ற விதைகள் போன்றவற்றைப் பிடித்துத் தின்பதற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருக்கின்றன. அணில் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்போது, அதன் வால்தான் அதைக் காற்றில் தாங்கிக்கொள்ளும். அதன் கூர்மையான முகமும் சிறிய கால்களும், தாவுவதற்கும் மரம் ஏறுவதற்கும் உதவுகின்றன.

  கீரி ஒரு சிறிய பாலூட்டி. இது எலி, பச்சோந்தி, பல்லி ஆகியவற்றை உண்ணும். காட்டுப் புதர்களிலும், விளை நிலங்களிலும் இதைப் பார்க்கலாம். இது நீண்ட உடலுடனும், ரோமம் நிறைந்த வாலுடனும், கூர்மையான முகத்துடனும், சிறிய கால்களுடனும் இருக்கும். மனிதர்களின் பார்வையில் படாத இடத்தில், அப்படி யாரும் பார்த்துவிட்டால் உடனே ஓடித் தப்புவதற்கு ஏற்ற இடத்தில்தான் கீரி வசிக்கும். அணிலும் கீரியும் தங்களின் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? முடியாது! வசிக்கும் இடங்கள் மாற வேண்டும் என்றால், உணவுப் பழக்கமும் உடல் அமைப்பும் மாற வேண்டும்.

   மனிதர்கள் உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். மனிதர்கள் சந்திரனுக்குச் செல்கிறார்கள். அண்டார்ட்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கிராமத்தில்   வசிக்கும் ஒருவர் நகரத்திலோ, கடற்கரையிலோ, வெப்ப மண்டலக் காடுகளிலோ வாழலாம். ஆனால் ஒரு யானையால் சைபீரியாவிலோ, அண்டார்ட்டிகாவிலோ வாழ    முடியாது.  பனிக் கரடி வெப்ப மண்டலத்திற்கு வந்தால், அதன் அடர்ந்த ரோமம் நிறைந்த சருமம் வெப்ப மண்டலத்தில் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது அல்லவா? அதேபோல வெப்ப மண்டல விலங்கான யானை குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கு, அதன் தோல் ஏற்றதாக இருக்காது. ஆனால் பலவகை விலங்குகள் அருகருகே வசிக்கிற ஒரு இடம் உண்டு. உலகத்தின் எல்லா இடத்திலிருந்தும் விலங்குகள் வருகிற இடம். அதுதான் மிருகக்காட்சி சாலை. ஒவ்வொரு விலங்கும் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை அங்கே உருவாக்குகிறார்கள்.

    பறவைகளும், மிருகங்களும் மிகவும் சுதந்திரமானவைதான். ஆனால் அவற்றிற்கும் எல்லைகள் உண்டு. பார்வைக்குப் புலனாகாத எல்லைகள் இவை.


இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

Saturday, April 2, 2011

பிரானா மீன்


    உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

   இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

   பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும்.  இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

   பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.     வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

   பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

    மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

    ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

    பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.


மரம் வளர்த்து புவி காப்போம்....