Tuesday, August 28, 2012

தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால் மட்டும்   அ...   ஆ...

சிரிக்கும் போது மட்டும்   இ...   ஈ...

சூடு பட்டால் மட்டும்   உ...   ஊ...

அதட்டும் போதும் மட்டும்   எ...   ஏ...

ஐயத்தின போது மட்டும்   ஐ...

ஆச்சரியத்தின் போது மட்டும்   ஒ...ஓ...

வக்கணையின் போது மட்டும்   ஔ...

விக்களின் போது மட்டும்   ஃ...

என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி  பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!


இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.....


'அம்மா' எனும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!


 தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை உருவான விதம் அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக  'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதல் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.
 அதே போன்றுதான் 'அப்பா' என்ற சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


மரம் வளர்ப்போம் புவி காப்போம் .....
 மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....


Saturday, August 18, 2012

தூக்கணாங்குருவி


 தெற்காசிய நாடுகளில் காணப்படும் தூக்கணாங்குருவி, தமிழகத்தின் செழிப்பு மிகுந்த பகுதிகளில் வசித்து வரும் ஒரு அதிசய பறவை.
 செழிப்பான நீர்பகுதி, உயரமான பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி குடும்ப வாழ்க்கை நடத்தும் தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவி இனத்தைப் போன்று வேகமாக அழிந்து வரும் இனம். காய்ந்து போன ஆறுகள், ஏரிகள், கண்மாய்கரைகள் என பசுமை குறைந்து வரும் நிலையில், இந்த தூக்கணாங்குருவி இனமும் மாயமாகி வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எந்த திசையில் பார்த்தாலும் தெரியும் தூக்கணாங்குருவி கூடுகளை இன்று பார்ப்பது அரிது. காய்ந்தபுல், வைக்கோலால் கூட்டை நெய்கிறது ஆண் குருவி. மேல்பகுதி உருண்டையாகவும், கீழ்பகுதி நீட்சியாகவும் இருக்கும். உட்புறம் மிருதுவான நெல் வைக்கோல் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவற்றுடன் ஈரகளிமண், உலர்ந்த மாட்டு சாணியை பசை போன்று பயன்படுத்தி இந்த உறுதியான கூட்டை அமைக்கிறது. இவை வசிக்கும் இடத்தில் 20 -30 கூடுகள் இருக்கும்.
 ஒரு கூடுகட்ட பொருட்களை சேகரிப்பதற்கு 500 முறை பறந்து செல்கிறது. 4 ஆயிரம் பதர்களால் கூட்டை முழுமை செய்கிறது. ஒரு கூடு கட்டுவதற்கு 18 நாட்கள். குடுவை போன்ற பகுதிக்கு 8 நாட்கள். ஆண்குருவிக்கு பெண் துணை உறுதியான பின் தான் கீழ்பகுதியில் உள்ள நீட்சியான பகுதியை ஆண்குருவி கட்டுகின்றது. கூடுகட்டி முடித்த பின் பெண் குருவியை அழைத்து வருகிறது. கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை எனில் சில வேளை வெளியேறும். அல்லது அது மாற்றியமைக்கும். பெண் குருவி 3 - 4 முட்டையிடும். 15 நாட்கள் அடைகாக்கிறது. இரவில் கூட்டில் ஈரமண் கொண்டுவந்து அதில் மின்மினிப்பூச்சியை பிடித்து அதில் பதித்து வைத்து ஒளிபெறும் ஆற்றல் கொண்டவை இவை. குஞ்சுகள் பறந்ததும், ஆண் குருவி புதிதாக அடுத்த வீடுகட்டத் துவங்கி விடுகிறது. இரண்டு கி.மீ., தூரத்திற்குள்ளாக இவை கூடுகளை மாற்றிவிடும்.
 சமூகப் பறவை. குழுக்களாக வாழும். பறக்கும்போது அழகிய வடிவமைப்பில் குழுக்களாகப் பறக்கும்.      
 வயல்வெளிகளிலுள்ள தானியங்களைத் தின்பதால் விவசாயிகளுக்கு இந்தப் பறவையைப் பிடிக்காது. நெல், சோளம், வயல்களில் கூட்டமாக இறங்கினால் கதிர்களை மொட்டையாக ஆக்கிவிடும் இதை விரட்டுவதற்கு விவசாயி காலை, மாலை மிகவும் சிரமப்படுவார்கள். 
 நெற்கதிர்களும் புற்களும் தென்னங்கீற்று, கரும்பு சோகை கூடுகட்டும் பொருள்களாகவும் இந்தப் பறவைக்குப் பயன்படுகின்றன. சமயங்களில் புழு பூச்சிகளையும் சாப்பிடும்.
 கிராமங்களில் பாசன வளம் குன்றியதால் நீரோடைகள் நாடிச் செல்லும் தூக்கணாங்குருவி இனம் இன்றும் பல காலம் வாழவேண்டுமெனில் நாம் பசுமையை பாதுகாப்பதும் அவசியம்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.


Thursday, August 16, 2012

தேயிலை கதிர்வீச்சை தடுக்கும்

 தலைவலியாக இருந்தாலும் சரி, கொஞ்சம் டல்லாக இருப்பது போல தெரிந்தாலும் சரி, சூடாக டீ என்ற தேநீரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி  நிச்சயம். அந்தளவுக்கு தேநீருக்கு சக்தி உண்டு. தேநீரின் மூலப்பொருளான தேயிலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதயம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது தேயிலை. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சற்று விரிவடையச் செய்ய வைப்பதிலும் இதற்கு  முக்கிய பங்கு உண்டு. மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டி நமது வேலை செய்யும் திறனை அது முறுக்கேற்றுகிறது. தேநீரில் உள்ள அமினோ அமிலமான ‘காட்டாசின்’ உடலில் சேருகிறது. இந்தக் காட்டாசினில் வைட்டமின் ‘பி’ சக்தி நிறைந்திருக்கிறது. இது தந்துகிக் குழாய்களைப் வலுப் படுத்தும் சக்தி படைத்தது. மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் சிட்ரின், ருட்டின், எஸ்குலைன் போன்ற பொருட்களைக் காட்டிலும் காட்டாசினுக்கு சக்தி அதிகம்.  ‘காட்டாசின்’ என்ற பொருளுக்கு கதிர்வீச்சு முறிப்புக் குணமும் உண்டு. மனித உடலில் ‘ஸ்டிரான் ஷியம் 90’ ஏற்படுத்தும் தீய விளைவுகளை முற்றிலும் அகற்றி விடும் இது.
 கதிர்வீச்சு ‘ஐஸோடோப்’ எலும்பு மஜ்ஜையை அடையும் முன்னர் அதனை இப்பொருள் உறிஞ்சி விடுகிறது  என்கின்றனர் ஆய்வாளர்கள். தந்துகிகளை வலுவாக்குவதன் மூலம் மனித உடலில் ‘அஸ்கார்பிக்’ அமில அளவு சீராகிறது. காட்டாசினுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும் உண்டு என்று லேட்டஸ்ட் ஆய்வுகள் கூறுகின்றன. விதவிதமான தேநீர் வகைகள் யாவும் ஒரே செடியில் இருந்து பறிக்கப்படும் இலைகளை வெவ்வெறு வித மாகப் பதப்படுத்துவதன் மூலம் கிடைப்பவைதான். பதப்படுத்தும் முறையைப் பொறுத்து அவற்றின் தரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தேயிலையில் இரண்டு வகை உள்ளன. அவை சீனத் தேயிலை (சைனன்சிஸ் வகை), அசாம் தேயிலை (அசாமிக்கா வகை). பச்சைத் தேயிலை சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இது ‘கேமில்லியா’ என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது படிப்படியாக மேற்கு மற்றும் கீழை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பச்சைத் தேயிலைத் தயாரிப்பின்போது இலைகள் உலர்த்தப்படுகின்றன. ஊற வைத்து நொதிக்க வைக்கப் படுவதில்லை. வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படும் பச்சைத் தேயிலையில் முக்கியமாக நான்கு ‘பாலிஃபீனால்கள்’ உள்ளன. இவை மொத்தமாக ‘கேட்டகின்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் ஆகும். அதாவது இவை நமது வேதியியல் பண்பினால் ஆக்ஸிகரணமாகும் செயல்களைத் தடைப்படுத்துகின்றன. இதனால்  கேட்டகின்களால் வைரஸ்களை எதிர்கொள்ள முடிகிறது.
 பச்சைத் தேயிலையில் ஒருவர் தேநீர் தயாரித்து குடித்து வந்தால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். அதேபோல புற்றுநோய் செல்கள் பிரிந்து வளர்வதையும் இது தடுக்கிறது. பல வகையான புற்று நோய்களில் இருந்து பச்சைத் தேயிலை நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
 வளர்ந்த நாடுகளுள் சீனாவில் இதய மற்றும் ரத்தக் குழாய் நோய்கள் 80% குறைவாக இருக்க இதுவே காரணம். ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பச்சைத் தேயிலை மூளையில் முதுமை ஏற்படுவதைக் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் அதிகம் இருப் பதால்தான், உலகில் பல நாட்டு மக்கள் தேநீர் அதிகமாக அருந்துகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் காஃபியைத்தான் அதிகமாக அருந்துவதாகச் சொல்லும் ஆய்வுத் தகவல்தான் வினோதமாக இருக்கிறது!

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Thursday, August 9, 2012

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி!


 இந்திய சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சிக்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பொருள்கள் இஞ்சியில் இயற்கையிலேயே உள்ளதால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
 சிட்னி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில், ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் இஞ்சிக்கு உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், இதய பாதிப்பு-சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க இஞ்சி உதவுவதுடன், பக்க விளைவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் திறன் இஞ்சிக்கு உள்ள இந்த ஆராய்ச்சி முடிவு 'பிளான்ட்டாமெடிகா' மருத்துவ சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.
 இதை நமது முன்னோர்கள் காலையில் இஞ்சி, மாலையில் சுக்கு, இரவில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்று கூறினார்கள்.

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Monday, August 6, 2012

அண்டார்டிக்கில் பாக்கு, பனை, தென்னை மரம் முளைக்கும்!

 பனிப்பிரதேசமான அண்டார்டிக்கில் பனை, தென்னை, பாக்கு மரங்கள் முளைக்கும் அளவுக்கு சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 பாக்கு, பனை, தென்னை போன்ற மரங்கள் வெப்ப பிரதேசத்தில் வளரும் மரவகையாகும். மலையளவு பனிகள் நிறைந்த அண்டார்டிக்காவில், இன்னும் சில நூற்றாண்டுகளில் பனைமரம் வளரும் அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருவதாக கண்டரியப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கோதபல்கலைக்கழகம் மற்றும் பிராங்பர்ட் உயிரி மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

 ஆய்வில் 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிக் பகுதியில் இதுபோன்ர தாவரங்கள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. "தற்போது உலக வெப்பமாதலின் விளைவால் கார்பன்-டை-ஆக்சைடு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்டார்டிக் பகுதியில் குளிர்காலத்தில் கூட 10 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் சூழல் உள்ளது. இதுபோன்ற சூழல்மாற்றங்கள் தொடர்ந்தால் இனினும் சில நூற்றாண்சுகளில் அண்டார்டிக்காவில் தாவரங்கள் வளரும் சூழல் ஏற்படுவது நிச்சயம்" என்கிறார்கள் ஆய்வாழர்கள்.

   அதிர்ச்சியான விஷயம்தான்! 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்...


Friday, August 3, 2012

புலிகள் சரணாலயம்: சத்தியமங்கலம் சரிவருமா?


 தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் காட்டில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
 ஏற்கெனவே முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை ஆகிய மூன்று புலிகள் சரணாலயங்கள் தமிழ்நாட்டில் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 163 புலிகள் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்திருந்தது.
 இந்த பின்னணியில் சத்தியமங்கலம் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாக தெரிவித்த அமைச்சர், இந்த புலிகளை பாதுகாக்கும் நோக்கில் சத்தியமங்கலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாநிலத்தின் நான்காவது புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
 அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக்கதாக இருந்தாலும் அதேசமயம் இந்த புலிகள் காப்பகத்திற்காக சத்தியமங்கலம் காடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் பூர்விக குடிமக்களையும் அங்கிருந்து வெளியேற்றக்கூடாது. 
 மலைவாழ் மக்களை வனத்தில் விவசாயம் செய , மேலும், வனத்தில் கிடைக்கும் தேன், சிகைக்காய், நெல்லி போன்ற பொருள்களைச் சேகரித்து விற்பனை செய, வனத்தில் சேகரிக்கும் பொருள்களை மலைவாழ் மக்கள் விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு  நடைமுறைப்படுத்த வேண்டும். சுற்றுலா வழிகாட்டி, சுற்றுச்சூழல் பாதுகாவலர், வேட்டைத் தடுப்பு காவலர், விருந்தினர் மாளிகைகளில் சமையல் பணி மற்றும் காவலர் போன்ற பணிகளில் மலைவாழ் மக்களை ஈடுபடுத்தப்பட வேண்டும். 
 ஆஸ்திரேலிய அரசு எப்படி  தனாமி பாலைவனத்தில் உள்ள அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கும் வேலையை பூர்வகுடி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ, அது போன்று சத்தியமங்கலம் காட்டில் வாழும் பூர்வகுடி மக்களிடமே வன விலங்குகள், மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் பொருப்பை அவர்களிடமே கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு கொடுக்கபடவேண்டும்.

இற்கையின் பொக்கிஷம் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

Thursday, August 2, 2012

இந்தியாவுக்கு வனவிலங்கு பாதுகாப்பில் நல்ல பெயர்

 உலகநாடுகளில் அனைத்திலும் வனவிலங்கு சட்டவிரோதமாக பல உபயோகத்திற்காக வேட்டையாடப்படுகிறது. வியட்நாமில் காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காக கொல்லப்படுகின்றன

 உலகில் அருகிவரும் உயிரினங்களின் உடற்பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் குற்றங்கள் நடக்கும் நாடுகள் வரிசையில் வியட்நாம், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பதாக வனஉயிர்கள் பாதுகாப்புக்கான உலகளாவிய அமைப்பு (WWF) கூறுகின்றது.

 இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 23 ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை பட்டியல் படுத்தியுள்ள WWF அமைப்பு, தென்னாபிரிக்காவில் இருந்து காண்டாமிருகங்களின் கொம்புகள் கடத்தப்படும் நாடுகளில் வியட்நாம் முக்கிய இடமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது.

 தென்னாபிரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் 448 மிருகங்கள் கொம்புகளுக்காக கடத்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காண்டாமிருகங்களின் கொம்புகள் கடத்தி விற்கப்படுவதை தடுப்பதற்கு சீனா முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறுகின்ற போதிலும், அங்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வனஉயிர்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

 ஆனால் இந்தியாவும் நேபாளமும் யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளின் உடற்பாகங்கள் கடத்தி விற்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் வெற்றியடைந்திருப்பதாகவும் WWF அமைப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்...


Wednesday, August 1, 2012

ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள தனாமி பாலைவனம் 'பாதுகாப்புக்குரிய வலயமாக'

 ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டின் பழங்குடி பிரதேசங்களில் சுமார் ஒரு கோடி ஹெக்டேயர் நிலப்பரப்பை 'பாதுகாப்புக்குரிய வலயமாக' பிரகடனப்படுத்தியுள்ளது. 
 ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள தனாமி பாலைவனம், அந்நாட்டிலிருந்து அழிந்துவரும் அரியவகை உயிரினங்கள் பலவற்றுக்கு வாழ்விடமாக இருந்துவருகிறது.
 துஷ்பிரயோகம், பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், மனித உரிமை
இந்த உயிரினங்கள் காட்டுப்பூனைகள் மற்றும் நரிகள் போன்ற விலங்குகளினாலும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயினாலும் பெரும்   அச்சுறுத்தலை எதிர்நோக்கிவருகின்றன.
 பழங்குடியினத்தைச் சேர்ந்த வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த பிரதேசத்தை காவல்காக்கும் வேலையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரியதாக அமைந்துள்ள இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் பெரும் பாலைவனங்களையும் அடர்த்தியில்லாத தாவர பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது.
 அரசுக்கும் பழங்குடி அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குமிடையே கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த பேச்சுவார்த்தைகளின் முடிவாக இந்த பிரகடனம் வெளியாகியுள்ளது.
 பாதுகாக்கப்படும் பழங்குடிப் பிரதேசங்களை பராமரிக்கும் வேலை பூர்வகுடி  அமைப்புகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.  எலியைப் போன்ற பில்பி என்ற அரியவகை பாலூட்டி இனம், கங்காருவை ஒத்த சிறிய வகை பாலூட்டி விலங்குகள், பாலைவன அரணைகள், வளைகளில் வாழும் ஒருவகை பல்லிகள் என அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கும் வேலை பூர்வகுடி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதேநேரம் இன்னொரு பக்கத்தில் தமது வாழ்க்கைமுறையை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த புதிய பிரகடனம் உதவும் என்று பழங்குடித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 பூர்வகுடி மக்களின் வாழ்க்கை முறையில் நிலத்துக்குத் தான் முன்னிரிமை அளிக்கப்படுகிறது. பூமியே உலக படைப்புகளுக்கெல்லாம் ஆதாரம் என்று பூர்வகுடிகள் பாரம்பரியமாக நம்பிவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.