Friday, August 6, 2010


கேள்விக்குறி
  "?' - இந்தக் கேள்விக்குறி, புராதன கிரேக்க-லத்தீன் மொழிகளிலிருந்து வந்தது. தொடக்க காலத்தில் நிறுத்தற் குறிகள் (Punctuation), வாசகங்களின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் உரக்க வாசிப்பதுதான் வழக்கமாக இருந்தது. வாசிக்கும்போது, வாக்கியத்தின் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது எப்படி, தற்காலிகமாக எங்கே இடைநிறுத்தி மூச்சுவிட்டுக் கொள்ள வேண்டும் போன்றவற்றை குறிப்பிடத்தான் நிறுத்தற் குறிகள் பயன்படுத்தப்பட்டன.

  லத்தீன் மொழியில் ஒரு வாக்கியத்தின் முடிவில் கேள்வியைக் குறிப்பிடுவதற்காக "கொஸ்டியோ' (Questio)  என்று எழுதுவார்கள். அச்சு இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, புத்தகங்களை கையால் பிரதி எடுப்பதுதான் வழக்கமாக இருந்தது. எழுதும் வேலையைக் குறைப்பதற்காக பல வார்த்தைகளுக்கு சுருக்கெழுத்துகளை ஏற்படுத்தினார்கள். அப்படி Questio என்பது முதலில் Qo என்றானது. ஆனால் இது மற்ற சில சுருக்கெழுத்துகளுடன் சேர்த்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு இருந்ததால்  O வின் மேலே Q என்றெழுதத் தொடங்கினார்கள். விரைவிலேயே Q வரையப்பட்டதைப் போன்ற ஒரு அடையாளம் ஏற்பட்டது. அதன் கீழுள்ள O ஒரு புள்ளியாக மாறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் கிரிகோரியன் ஸ்துதி கீதங்கள் பாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நிறுத்தற் குறிகளில் இன்றைய கேள்விக் குறியும் இருந்தது. ஆனால், அது சற்று வலது பக்கம் சரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, அது அன்றைய முற்றுப் புள்ளியைக் குறித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சிடுவது தொடங்கப்பட்டதோடு முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி போன்ற நிறுத்தற் குறிகளைத் தொகுக்க வேண்டி வந்தது. 1566-இல் ஆல்டொமனுஸியோ என்பவர் முதலாவது நிறுத்தற் குறி நூலைப் பிரசுரித்தார். அதில் இன்றைய கேள்விக்குறி இருந்தது.


சோ.ஞானசேகர்.Monday, August 2, 2010

தேனீ
      தேனீ அதன் மூக்காலோ,​​ வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.​ அது உண்மையில்லை.​ தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.​ அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது.​ அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன.​ அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
     சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும்.​ அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி.​ கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும்.​ கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை.​ இவை இனப்பெருக்க திறனற்றவை.​ இன்னொரு வகை தேனீக்கள்,​​ சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
       ராணித் தேனீ,​​ மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும்.​ வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும்,​​ மகரந்தப் பொடியும் சேகரிக்கும்.​ மெழுகால் கூடு கட்டுவது,​​ கூட்டைச் சுத்தப்படுத்துவது,​​ குஞ்சுத் தேனீக்களுக்கும்,​​ ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.​ ​
   வேலைக்காரத் தேனீக்கள் சேகரித்து வைத்த தேனைக் குடிக்கின்ற வேலையைத்தான் சோம்பேறிகளான ஆண் தேனீக்கள் செய்யும்.​ ஆண் தேனீக்களின் உடல் அமைப்பும்,​ தேனோ மகரந்தமோ சேகரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருக்காது.​ இவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.​ இவை குறிப்பிட்ட காலங்களில் ராணித் தேனீயுடன் இணை சேர்கின்றன.​ தேனீக்களின் சமூக வாழ்க்கை நிலைப்பதற்கு ஆண் தேனீக்கள் மிகவும் அவசியம்.​ ராணித் தேனீக்கள் கூட்டின் அதிபதிகள் என்பதில் சந்தேகம் இல்லை.​ ஆனால் இவை அத்தனை வேலைக்காரத் தேனீக்களையும் சார்ந்து வாழ்கின்ற "முட்டையிடும் இயந்திரங்கள்" மட்டுமே.
   ராணித் தேனீக்களின் மூளை,​ வேலைக்காரத் தேனீக்களின் மூளையைவிட சிறியதாக இருக்கும்.​ ஆனால்,​​ ராணித் தேனீ மட்டும்தான் முட்டையிடும் திறன் பெற்றிருக்கிறது.​ கூட்டில் ஒன்றிற்கும் அதிகமான ராணிகள் இருப்பதற்கு,​​ ஏற்கனவே கூட்டில் இருக்கும் ராணி அனுமதிப்பதில்லை.​ ராணித்தேனீ முட்டையிடும்.​ முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ராணியாக வேண்டுமா அல்லது வேலைக்காரர்கள் ஆகவேண்டுமா என்று முடிவு செய்வது வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான்.
      வேலைக்காரத் தேனீக்கள் குறிப்பிட்ட காலங்களில் சில முட்டைகளை கூட்டின் கீழ் முனையில் அமைத்திருக்கிற "ராணியறை'களுக்கு மாற்றுகின்றன.​ ஒவ்வொரு தேன் கூட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ராணியறைகள் இருக்கும்.​ ஆனால் அவை மற்ற அறைகளைவிட மிகப் பெரிதாக இருக்கும்.​ ராணியறைகளில் பிறக்கின்ற குஞ்சுகளுக்கு வேலைக்காரத் தேனீக்கள் பிரத்தியேகமான உணவை ஊட்டுகின்றன.​ இங்கே வளர்ந்து வருகிற பெண் தேனீக்கள்தான் எதிர்காலத்தில் ராணித் தேனீக்களாக இருக்கும்.​ ராணித் தேனீக்களின் பிரத்தியேகத் தன்மைகளுக்கு முக்கியக் காரணம்,​​ அவற்றின் உணவு முறையில் உள்ள மாற்றம்தான்.
     புதிய ராணி வெளியே வரும்போது,​​ ஏற்கனவே இருக்கும் ராணி கூட்டமான வேலைக்காரத் தேனீக்களுடன் இடத்தை விட்டுச் சென்றிருக்கும்.​ அவை வேறொரு இடத்தில் புதிய கூடமைத்து வாழத் தொடங்குகின்றன.​ சில சமயம் அறைகளின் மேல் படலத்தைத் திறந்து வெளிவரும் புதிய ராணிகள் இதுபோன்று வேலைக்காரத் தேனீக்களுடன் இடம் விட்டுச் செல்கின்றன.​ ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகள் ஒரே நேரத்தில் வெளியே வரும்போது,​​ அவர்களுக்கிடையே மிகக் கடுமையான சண்டை நடக்கும்.​ ஒரு ராணி மட்டுமே மிஞ்சும்வரை இந்தப் பலப்பரீட்சை தொடரும்.​ புதிதாக வெளியே வந்த ராணிக்கும்,​​ கூட்டில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்த ராணிக்கும் இடையே யாராவது ஒருவர் வெற்றி பெறுவதுவரை போட்டி நடக்கிறது.​ அதனால் ஒரு தேன் கூட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட ராணிகள் இருக்கும் நிலை ஏற்படுவதில்லை.
   தேனீக்கள் நிறைய தேன் உள்ள பூக்களுடைய ஒரு இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, திரும்பி வந்து அந்தச் செய்தியை மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன.​ இத்தகைய கருத்துப் பரிமாற்றத்திற்காக,​​ அவை குறிப்பிட்ட விதமான நடன முறையைக் கையாள்கின்றன.​ ஒன்று,​​ வட்டத்திற்குள் வட்டமாகப் பறப்பது.​ இந்த நடன முறைக்கு,​​ தேனுள்ள இடம் கூட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ளது என்று அர்த்தம்.​ இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் நடனத்தை ஆடிக்கொண்டே அந்தத் தேனீக்கள்,​​ தான் சேகரித்த உணவை கூட்டினுள்ளே இருக்கும் மற்ற தேனீக்களுக்குக் கொடுக்கும்.​ இதன்மூலம்,​​ நூறு மீட்டர் தொலைவில் அது கண்டுபிடித்த உணவின் சுவையையும்,​​ மணத்தையும் மற்ற தேனீக்கள் புரிந்துகொள்ளும்.​ உடனே அனைத்துத் தேனீக்களும் நாற்புறமும் பறந்து அந்த பூக்களைத் தேடிப் போகும்.​ இந்த "வட்ட நடன'த்திலிருந்து,​​ நூறு மீட்டர் தொலைவில் பூக்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாமே தவிர,​​ பூக்கள் இருக்கும் சரியான இடத்தை ​ புரிந்துகொள்ள முடியாது.​ அதனால்தான் அவை குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செல்லாமல் நாற்புறமும் பறந்து தேடப் போகின்றன.
   தேனுடைய பூக்கள் இருக்கும் இடத்தைச் சரியாகத் தெரிவிக்கும் நடனமுறை ஒன்றும் தேனீக்களிடம் உண்டு.​ இந்த முறைக்கு "வேகல்' (waggle)​​ நடனம் என்று பெயர்.​ முதலில் தேனீ நேர்க் கோடாக பலமாக நடுங்கிச் செல்லும்.​ சற்று மேலாகச் சென்ற பிறகு ஒரு புறமாகத் திரும்பி கீழே வந்து மீண்டும் முதலாவது நேர்க்கோடு வழியே மேலே செல்கிறது.​ பிறகு முதலில் திரும்பியதற்கு எதிர்த்திசையில் திரும்பி ​ கீழே வந்து மீண்டும் நேர்க்கோட்டில் திரும்பி மேலே செல்கிறது .​ நடனமாடும் தேனீ,​​ இந்த நடனத்தின் மூலமாக மற்ற தேனீக்களுக்கு இரண்டு விஷயங்களைத் துல்லியமாக அறிவிக்கிறது.​ ஒன்று,​​ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம்,​​ கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்ற விஷயம்.​ இரண்டு,​​ சூரியனையும்,​​ கூட்டையும் தொடர்புபடுத்துகிற நேர்க்கோட்டிலிருந்து எத்திசையில் எவ்வளவு சரிவான கோணத்தில் அந்த இடம் அமைந்திருக்கிறது என்பது.
நடனத்தின் வேகத்திலிருந்தும்,​​ அதே நடனத்தை திரும்பத்திரும்பச் செய்வதிலிருந்தும் உணவு இருக்கும் இடம் எத்தனை தொலைவில் இருக்கிறது என்று மற்ற தேனீக்களுக்குத் தெரிந்துவிடும்.​ அது மட்டுமல்ல,​​ போகவேண்டிய இடம் கூட்டிலிருந்து சூரியனுக்கு நேராக இருக்கிறதா?​ அல்லது எதிர்திசையில் இருக்கிறதா?​ பக்கவாட்டில் இருக்கிறதா என்பதுபோன்ற விவரங்களும் சரியாகப் புரிந்துவிடும்.​ நடனம் அதிக நேரம் நீடித்தால் உணவு மிக நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.
   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்வோன்ப்ரிஷ் எனும் உயிரியல் விஞ்ஞானிதான் ஆய்வு செய்து,​​ தேனீக்களின் இந்த செய்திப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்தார்.​ ​ ​ ​
  தேனீக்களின்,​​ அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவருகிற லார்வாக்களின் முக்கிய உணவு தேன்தான்.​ பூவிலுள்ள தேனும்,​​ தேன் கூட்டிலுள்ள தேனும் வித்தியாசமானவை.​ தேனீ,​​ பூவிலிருந்து தேனெடுத்த பிறகு அந்தத் தேன் நேராக,தேனீயின் வயிற்றிலுள்ள இரண்டு அறைகளில் முதலாம் அறைக்குச் செல்லும்.​ ஒரு சிறிய "வால்வி 'ன் செயல்பாட்டினால் இந்தத் தேன் இரண்டாவது அறைக்குக் கடப்பதில்லை.​ பூவிலிருந்து சேகரித்த தேனுடன் கூட்டை அடைகிற தேனீ,​​ இந்தத் தேனை கூட்டில் உள்ள சில பிரத்தியேக தேனீக்களுக்குக் கொடுக்கிறது.​ அவை ஒன்றுக் கொன்று இந்தத் தேனை "கை'மாற்றிக் கொள்கின்றன.​ இந்த செயல்களுக்கிடையில் அதில் சில நொதிகள் (enzyme)​ சேரும்.
  அதன்பிறகு இந்தத் தேன்,​​ கூட்டின் பிரத்தியேக அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.​ சில பிரத்தியேக தேனீக்கள்,​​ அவற்றின் சிறகுகளை விசிறியாகப் பயன்படுத்தி தேனில் உள்ள நீர்மையின் அளவைக் குறைக்கின்றன.​ இப்போது தேன் கூட்டில் தேன் தயாராகிறது.​ ஒரு சாதாரண தேன் கூட்டில் 45 கிலோகிராம் வரை தேன் சேகரிக்கலாம்.​ ஒரு கிலோகிராம் தேனுண்டாக்க ஒரு தேனீ ஒரு கோடி பூக்களிலிருந்து தேன் சேகரிக்கவேண்டும்.​ ஒரு பயணத்தில் ஒரு தேனீ 600 பூக்களைச் சந்திக்கும்.​ பூக்களிலிருந்து மட்டுமல்ல,​​ தேன் உண்கிற சில உயிரினங்களின் எச்சங்களிலிருந்தும் தேனீ தேன் சேகரிப்பதுண்டு.​ தேனீக்களுக்கு தேன்தான் முக்கியமான உணவு.​ எனவேதான் அவை தேன் சேகரித்து கூட்டில் பாதுகாக்கின்றன

நன்றி - தினமணி....

சோ.ஞானசேகர்.