Saturday, June 25, 2011

அதிவேக ரயில்

     நமது நாட்டில் பெரிய திட்டங்கள் பொதுவாக இத்தனை ஆண்டுகளில் முடிவடையும் என்றும் அதன்பின் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்படுவதுண்டு. அவை பெரும்பாலும் குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிவதில்லை. சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட தாமதமாகலாம். ஆனால் சீனாவிடம் மட்டும் இந்தத் தாமதம் என்பது அறவே இல்லை என்பது அதிசயம். ஆனால் உண்மை. லேட்டஸ்ட்டாகப் பாருங்கள். சீனாவின் இருபெரும் நகரங்கள் பெய்ஜிங், ஷங்காய். இரண்டு நகரங்களுக்கும் இடையே அதிவேக ரயில் பாதை போட அரசு திட்டமிட்டது. வேலை முடிந்துவிட்டது. இன்னும் ஒருமாதத்தில் ரயில்கள் ஓட இருக்கின்றன.
     எப்போது வேலை முடிந்தது? குறிப்பிட்ட தேதிக்கு ஓராண்டு முன்னதாக! தயவுசெய்து மூக்கின் மேலிருந்து விரலை எடுங்கள். மீதியையும் கேட்டுவிட்டு மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
    இந்த அதிவேக ரயில் பாதையில் ஓடப்போகும் ரயில்கள் இன்றைய அளவில் உலகில் மிகவும் பாதுகாப்பான ரயில்கள். ரயில் பெட்டிக்குள் ரயில் ஓடும் சப்தம் கேட்கும் இல்லையா? இந்த ரயில் பெட்டிக்குள் ரயில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது அந்தச் சப்தத்தின் அளவு 61 டெஸிபல்லாக இருக்கும். ஒரு விமானம் பறக்கையில் அதற்குள் கேட்கும் ஒலியின் அளவு 81 டெஸிபல்ஸ். 120 கி.மீ. வேகத்தில் போகும் காருக்குள் 76 டெஸிபல்ஸ்.
    சீன ரயில்வே பொறியாளர்களுக்குச் சல்யூட் அடிக்க வேண்டும் போலத் தோன்றவில்லையா?
     இன்னொரு தகவல். பெய்ஜிங் - ஷங்காய் இடையே உள்ள தூரம் 1318 கி.மீ. இதுவரை இந்தத் தூரத்தைக் கடக்க பத்து மணிநேரம் பிடித்தது. இனி அதிநவீன வேக ரயிலில் போனால் 4 மணி 48 நிமிடங்கள் மட்டுமே!
    இன்று உலகில் ஓடும் அதிவேக ரயில்களில் முதல் பரிசு இந்த சீன ரயிலுக்குத்தான். இந்த ரயிலில் மணிக்கு 380 கி.மீ. வேகத்தைச் சர்வ சாதாரணமாகத் தொடமுடியும்!
   நமது சென்னையில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் எப்போது முடியும் குறிப்பிட் காலமா? எப்போது என்று யாருக்குத் தெரியும்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

 

No comments: