Wednesday, March 16, 2011

எலி



   எலிகள் "கொறித்துண்ணும் பாலூட்டி' இனத்தைச் சேர்ந்தவை. அணிலும், முள்ளம் பன்றியும் இதே இனத்தைச் சேர்ந்தவைதான். மேல் தாடையில் உள்ள வெட்டுப் பற்கள் (இவற்றை உளிப் பற்கள் என்றும் சொல்வார்கள்) தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதுதான் இவற்றின் முக்கியமான சிறப்பம்சம். இந்தப் பற்கள் தாமாகவே கூர்மையடையும். வெட்டுப் பற்களின் முன் பகுதியில் மட்டுமே எனாமல் இருக்கும். அதனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அந்தப் பற்களின் பின்புறம் தேய்ந்துகொண்டிருக்கும். அப்படித்தான் பற்கள் உளிபோன்று கூர்மையாகின்றன. நமது முன்    பற்களையும் வெட்டுப் பற்கள் என்று சொல்லலாம். என்றாலும் அவை எலிகளின் வெட்டுப் பற்களைப்போன்றவை அல்ல. 

   கொறித்துண்ணும் இனத்தைச் சேர்ந்தவற்றின் முன் பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும். எனவே அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த முன் பற்கள் மிகவும் நீளமாக வளர்ந்துவிடும். பிறகு எதையும்  கடிப்பதற்கு இயலாமல் போய்விடும்.

   எப்போதாவது, மேல் வரிசை வெட்டுப் பற்கள்  வளர்ந்து வாயைத் துளைத்துக்கொண்டு கீழே வந்துவிடுவதும் உண்டு. எனவே, எதையாவது கடித்துக்கொண்டிருப்பதைத் தவிர எலிகளுக்கு வேறு வழி இல்லை. முக்கியமாக, எலிகள் மென்மையான உணவுகளையே அதிகம் தின்றுகொண்டிருக்கும்போது பற்களின் நீளம் அதிகமாகும்.  அதுபோன்ற சூழ்நிலைகளில் மரம், பிளாஸ்டிக், கம்பி ஆகியவற்றைக் கடித்துக் கடித்து, பற்களின் நீளம் அதிகரிக்காமல் எலிகள் பார்த்துக்கொள்ளும்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

No comments: