Thursday, March 17, 2011

நமது நாடு 7.சுமேரியர்


    மேற்கு ஆசியாவிலே தைகிரஸ் யூபிரதர்ஸ் என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக் குடாக்கடலுள் விழுகின்றன. அந்த ஆறுகளின் ஓரங்கள் மிகச் செழிப்பு வாய்ந்தன. அங்குக் கூலப்பொருள்கள் (தானியங்கள்) நன்கு விளையும். தமிழ் நாட்டினின்றும் வந்த மக்களின் ஒரு கூட்டத்தினர் அங்குத் தங்குவாராயினர். முன்னர்க் கூறப்பட்ட சிந்து,நீல ஆற்று ஓரங்களிற் போலவே அங்கும் மக்கள் பெருகினார்கள், நாடு நகரங்கள் உண்டாயின. அங்கு வாழ்ந்த மக்களுடையவும் தமிழருடையவும் நாகரிகங்கள் எல்லாவகையாலும் ஒரே வகையின. அங்குச் சென்று குடியேறிய மக்களின் தலைவர்கள் உவண்ணா என்னும் பெயர் தமிழரின் ஒரு பிரிவினராகிய துளுவ மக்களின் இடையே வழங்குகின்றது. அதற்குப் பூவின் அண்ணன் என்பது பொருள்.

    அம்மக்கள் குடியேறி வாழ்ந்த நாட்டுக்குச் சுமேரியா என்று பெயர். சுமேரியாவின் தலைநகரம் சுசா. அவர்கள் ஆற்று நீரை வாய்க்கால் வழியே வயல்களுக்குப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர்.
 
    மொகஞ்சொதரோ மக்கள் வழிபட்ட பெரிய கடவுளுக்கு ஆண் என்று பெயர்.சுமேரியரும் தமது பெரிய கடவுளை ஆண் என்னும் பெயர் கொடுத்து வழிபட்டனர். ஆண் எண்பதிலிருந்தே ஆண்டவன் என்னும் பெயர் வந்திருக்கலாம். அவர்களுடைய தாய்க் கடவுளின் பெயர் அம்மா. நம் தாய்க்கடவுளை நாம் இன்றும் அம்மன் என வழங்குகின்றோம்.

   குல நூலார் சுமேரியரும் தமிழரும் ஒரு பொதுத் தோற்றத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறுகின்றனர். இதற்கு, இரு மக்களின் நாகரிகம், மொழி, எழுத்து ஆதியன சான்று பகர்கின்றன.

   தைகிரஸ், யூபிரதர்ஸ் என்னும் ஆறுகளின் வடக்கேயுள்ள நாடுகளில் இன்னெரு மக்கட் கூட்டத்தினர் குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் தமது நாட்டுக்குச், சால்தியா எனப் பெயர் இட்டனர். சால்தியா என்பது சோழ தேசம் என்பதன் திரிபு. சோழ நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள் தமது தாய் நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள் தமது தாய் நாட்டின் பெயரையே குடியேற்ற நாட்டிற்கும் இட்டு வழங்குவாதாயினர்.

  பிற்காலங்களில் சால்தியாவும் சுமேரியாவும் இணைக்கப்பட்டுப் பபிலோனியா என்னும் பெயர் பெற்றன. பபிலோனியா என்பதற்குப் பகற் கடவுளின் நாடு என்பது பொருள். அது முன்னைக் காலத்தில் தமிழ் மக்களால் பவேரு என வழங்கப்பட்டது. புத்தரின் பழம் பிறப்பைக் கூறும் சாதகக் கதைகள் என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதில் பவேருவைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்திய மக்கள் மரக்கலங்கள் வழியாகப் பவேருவுக்குச் சென்றார்கள். அங்கு பறவைகளைக் காண்பது அருமை. இந்திய வணிகர் ஒருமுறை காகம் ஒன்றைப் பவேருக்குக் கொண்டு சென்றனர். அந்நாட்டு மக்கள் அதன் வடிவைக் கண்டு அதனைக் கொண்டாடினார்கள். அடுத்த பயணத்தில் அவர்கள் ஆடும் மயில் ஒன்றைக் கொண்டு சென்றார்கள். அதன் அழகைக் கண்ட மக்கள் காக்கையின் வடிவினால் வியப்படையவில்லை. இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகட்கு முன் பவேருவில் கடை வைத்து வாணிகம் செய்த தமிழர் ஒருவரின் கணக்கு சூலையிட்ட களிமண் ஏட்டில் காணப்படுகிறது. அத்தமிழரின் விலாசம் மு.ர.சு.வ.ரா. பபிலோன் மக்கள் கனத்த களிமண் தட்டுகளில் குச்சிகளால் எழுதினார்கள், எழுதியபின் அவைகளைச் சூளையிட்டுக் காப்பாற்றினார்கள். இவ்வாறு களிமண் ஏடுகளில் எழுதப்பட்ட நூல்கள் பல பபிலோன் நாட்டிற் கண்டுபிடிக்கப்பட்டன.



No comments: