Monday, March 7, 2011

நமது நாடு 5. மொகஞ்சொதரோத் தமிழர்

  தென்னிந்தியாவிலே மக்கள் பெருகத் தொடங்கினார்கள். அவர்கள் வடக்கே செல்ல முடியாதபடி தண்டகம் என்னும் பெரிய காடு கிடந்தது. கடற்கரைப் பக்கங்களில் வாழ்ந்த மக்கள் பலர் குடியேற்ற நாடுகளை நாடி கடல் வழியே சென்றனர். இவ்வாறு சென்றவர்களுள் ஒரு சிலர் சிந்துநதி முகத்துவாரத்தை யடைந்தனர். அவ்வாற்றோங்கள் மிகச் செழிப்புடையன அங்கு இம்மக்கள் தங்கினார்கள், ஆற்றினின்றும் நீரை வாய்க்கால்களாற் பாய்ச்சி வேளாண்மை செய்தார்கள். தானியங்கள் நன்றாய் விளைந்தன அங்கு குடியேரிய மக்களின் தொகை பெருகத் தொடங்கிற்று. அவர்கள் சிறிது சிறிதாக சிந்து நதி வெளி முழுமையிலும் குடியேறி வாழ்ந்தார்கள். இம்மக்கள் கட்டி வாழ்ந்த இரண்டு பெரிய பட்டினங்கள் மண்ணினால் மூடுண்டு நீண்ட காலம் அறியப்படாமற் கிடந்தன. அண்மையில் அந்நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட்ன. அப்பட்டினங்கள், இப்பொழுது அரப்பா, மொகஞ்சொதரோ என்று வழங்குகின்றன. பட்டினங்கள் இரண்டிற்கும் இடையிலுள்ள தொலைவு நானூறுமைல்.இரண்டு நகரங்களிலும் வாழ்ந்த மக்களின் நாகரிகமும் ஒரே வகையாகவுள்ளது. இதனால் அக்காலத்தே தமிழ் மக்கள் மிக அகன்ற இடப்பரப்பிற் குடியேறி யிருந்தார்கள் என விளங்குகின்றது.
  
    இப் பட்டினங்களில் பழந் தமிழரின் நாகரிகக் குறிகள் பல கிடைத்தன, இவைகளைக் கண்டு உலகமே வியப்படைந்தது. இக்கால மக்கள் தாமும் அவ்வகை  அழகிய நகரங்களை அமைக்க மாட்டார்கள். நகரங்களின் இடையிடையே அகன்ற வீதிகளின் இரு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டன. சூளையிட்ட செங்கற்கள் கட்டிட வேலைக்குப் பயன்படுத்தப் பட்டன.வீடுகளுக்கு ஒன்று முதல் மூன்று மாடிகள் வரையில் உண்டு. அவைகளின் முகப்புகள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடையன. வீடுகளுக்கு உள் முற்றம் உண்டு. உள் முற்றத்தே கிணறு இருந்தது. எல்லா வீடுகளுக்கும் குளிக்குமறை இணைக்கப்பட்டிருந்தது. உள் முற்றத்தே ஆடு மாடுகள் கட்டப்பட்டன. வீட்டிலிருந்து வீதியிலுள்ள சாக்கடை வரையும் வாய்க்கால்கள் இருந்தன. இவை செங்கற்களாற் பதிக்கப்பட்டிருந்தன. கழிவு நீர், வாய்க்கால் வழியே சென்று வீதியிலுள்ள சாக்கடையில் விழுந்தது. இவ்வாறு அமைக்கப்பட்ட அழகிய வீடுகளில் அக்கால மக்கள் வாழ்ந்தார்கள்.

    மக்கள் ஆடை நெய்ய நன்கு அறிந்திருந்தனர். ஆடைகளுக்கு அழகிய நிறங்கள் ஊட்டப்பட்டன. குயவர் பலவகையான அழகிய மட்பாண்டங்களைச் செய்தனர். அவைமீது செடி, கொடி, பறவை, விலங்கு முதலிய ஓவியங்களும் எழுதப்பட்டன. வீடுகளிற் பயன்படுத்தும் ஏனங்கள் பல செம்பு வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்யப்பட்டன. ஆடவர் முகத்தை மழித்துக்கொண்டனர். மழிக்கும் கத்திகள் வெண்கலத்தினாற் செய்யப்பட்டன. சிறுவர் பலவகை விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடினர்.

    மகளிர், பொன் வெள்ளி வெண்கலம் செம்பு முதலியயவைகளாற் செய்த அழகிய  நகைகளை அணிந்தனர். முகத்துக்கு மணப்பொடி பூசினர், நெற்றியில் சாதிலிங்கப் பொட்டிட்டனர்.

  வழிபாட்டிற்குரிய கடவுளரில் சிவன், அம்மன் என்போர் தலைமை பெற்றிருந்தனர். அவர்களுக்கு கோவில்கள் இருந்தன. கோவிலின் பக்கத்தே படிக்கட்டுகளுடைய கேணி யிருந்தது. ஆலயங்களுக்குச் செல்வோர் இதில் நீராடினர். கேணியின் பக்கத்தே அறைகள் பல இருந்தன. இவைகளில் நீராடுவோர் தங்கினர். கேணியின் அடியில் ஒரு புறத்தில் பெரிய துவாரம் ஒன்று விடப்பட்டிருந்தது. இதனால் கேணியின் நீர் இடையிடையே போக்கப்பட்டது. அத்துவாரத்தின்கீழ் பெரிய மதகு இருந்தது. கேணியின் பக்கத்தே மூன்று கிணறுகள் இருந்தன. இவைகளிலிருந்து இறைக்கப்படும் நீரால் கேணி நிரப்பப்பட்டது. இங்கு கூறப்பட்டவற்றால் அக்கால மக்கள் எவ்வாறு நாகரிகம் அடைந்திருந்தார்கள் என்பது நன்கு விளங்குகின்றது.

No comments: