Saturday, March 19, 2011

நமது நாடு 8. மேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்


    தமிழ்நாட்டினின்றும் சென்ற வேறு மக்கட் கூட்டத்தினர் சிலர் மேற்கு ஆசியாவின் வெவ்வேறு இடங்களிற் குடியேறினார்கள். இவர்கள் பாலஸ்தீனியர், பொனீசியர், சீரியர், அசீரியர், சின்ன ஆசிய மக்கள் என்போர். இவர்கள் நாடுகளைப் முதல் அத்தியாயத்தில் உள்ள படத்தில் பாருங்கள். பாலஸ்தீனியர், யூதர் அல்லது எபிரேயர் எனவும் படுவர். இவர்கள் தமிழர்களைப்போலவே பிறப்பு இறப்பினால் தீட்டு உண்டு என்றனர், தீட்டுக்காலங்களில் அவர்கள் ஆலயங்களுட் செல்வதில்லை, தூய பொருட்களைத் தீண்டுவதும் இல்லை.

 அவர்கள் மரங்களின் கீழ் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். சிவன் என்னும் கடவுளையும் அவர்கள் வழிபட்டார்கள். சிவன் என்பது அம்மக்களின் மொழியில் சியன் எனத் திரிந்து வழங்கிற்று. இடபத்தையும், பாம்பையும் அவர்கள் வழிபட்டார்கள். நமது ஆலயங்களிலும் இடபம், பாம்பு முதலிய சிலைகள் உள்ளன. இவை மாத்திரமல்ல இன்னும் அவர்களின் பழக்க வழக்கங்களும் தமிழ்நாட்டிற் காணப்படுவன போன்றன.

  பாலஸ்தீனத்துக்கும மேற்பகுதியில் குடியேறினோர் பொனீசியர் எனப்பட்டார்கள். பொனீசியா என்பது பனை நாடு என்பதன் திரிபு என்று கருதப்படுகின்றது. அங்குப் பேரீந்து எனப்படும் பனைகள் அதிகம். அவர்கள் தென்னாட்டு ஆலயங்களைப்போலவே பெரிய கோயில்கள் கட்டினார்கள். அங்கு அவர்கள் சிவலிங்கங்களை வைத்து வணங்கினார்கள். அவர்களின் எழுத்து பிராமி எனப்பட்ட முற்காலத் தமிழ் எழுத்தினின்றும் பிறந்தது. பிராமி எழுத்து மொகஞ்சொதரோ எழுத்தினின்றும் தோன்றியது.

   பொனிசியாவுக்கு வடக்கே குடியேறிய மக்கள் சீரியர் எனப்பட்டனர். இங்கு இடபத்தின் மீது நிற்கும் சிவன் சிலைகள் காணப்படுகின்றன, சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் தாய்க்கடவுள் வடிவங்களும் இருக்கின்றன. இவர்களின் கடவுள் வழிபாடு தமிழரின் கடவுள் வழிபாட்டை மிக ஒத்தது. அவர்கள் நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகம் போன்றதே. சீரியாவுக்கு வடகிழக்கிற் குடியேறிய மக்கள் அசீரியர் எனப்பட்டனர். தமிழரில் ஒரு பிரிவினர் அசுரர் எனப்பட்டார்கள்.இரணியன், சூரன் எனப் புராணங்களிற் கூறப்படுவோர் அசுரர். இவர்கள் அக்காலத்தில் சிறந்த நாகரிகமும் வலிமையும் பெற்றிருந்தனர். இவர்கள் சிவனையே வழிபட்டனர். அசுரரில் ஒரு பிரிவினரே அசீரியர் என்று கருதப்படுகின்றனர்.

  சின்ன ஆசிய மக்களின் மொழி தமிழுக்கு இனமுடையதாகக் காணப்படுகிறது. அந் நாட்டு மக்கள் சிவனையும் காளியையும் வழிபட்டனர். இடபத்தின் மீது நிற்கும் சிவன் கடவுட்சிலைகளும் சிங்கவாகனத்தின் மீது இருக்கும் தாய்க்கயவுளின் சிலைகளும் அங்கு கானப்படுகின்றன. மேற்கு ஆசியா முழுமையிலும் வாழ்ந்த எல்லா மக்களின் நாகரிகமும் ஒரு வகையினது.

    கிரீசுக்குத் தெற்கில் கிரேத்தா என்னும் ஒரு தீவு இருக்கின்றது. அங்கு வாழும் மக்களும் தமிழ் நாட்டினின்றும் சென்று குடியேறினோராவர். இவர்கள் தமிழர் என்றே முக்காலத்தில் மற்றவர்களால் சொல்லப்பட்டார்கள். இவர்கள் நாகரிகம் மொகஞ்சொதரோ மக்களின் நாகரிகம் போன்றது. ஸ்பெயின் தேசத்திலும் தமிழ் மக்கள் குடியேறியிருந்தார்கள். அங்கு வழங்கிய பழைய மொழி பாஸ்க்கு எனப்பட்டது. அது தமிழோடு மிக ஒற்றுமையுடையது. இத்தாலியில் வாழ்ந்த மக்களும் தமிழர்களேயாவர். ஒரு காலத்து இந்தியா முதல் அயர்லாந்து வரையும் தமிழர் பரவியிருந்தனர்.

No comments: