ஆரியருக்கும் தமிழருக்கும் இடையில் நீண்டகாலம் போர் நடந்தது. ஆரியர், தமிழரை வென்று சிறிது சிறிதாகப் பஞ்சாப் மாகாணம் முழுவதையும் கைப்பற்றினார்கள் அவர்கள் அம்மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கு அறு நூறு ஆண்டுகள் சென்றன. அவர்கள் தமக்கு வெற்றியை வேண்டித் தாம் வழிபட்ட கடவுளர் மீது பல துதிப்பாக்களைப் பாடிணார்கள். அப்பாடல்களில் அவர்கள் தாம் எதிர்த்துப் போராடிய தமிழர்களைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். அக்கூற்றுக்களால் அக்காலத் தமிழரின் நாகரிகம் எவ்வகையினது என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவர்களுடைய பாடல்களில் தமிழர்தாசர் என்று கூறப்பட்டிருக்கின்றனர்.
அக்காலத்தில் தமிழர் மதிலாற் சூலப்பட்ட பெரிய நகரங்களில் வாழ்ந்தார்கள். அவர்களிடத்தில் நிலம், ஆடு, மாடு முதலிய செல்வப் பொருள்கள் இருந்தன. மக்கள் பொன், வெள்ளி முதலியவைகளாற் செய்யப்பட்ட பலவகை அணிகலன்களைப் பூண்டார்கள். அவர்களின் கடவுளர் பொன், வெள்ளி, செம்பு முதலியவைகளாற் புனையப்பட்ட கோயில்களில் வைத்து வழிபடப்பட்டனர். தேர், குதிரை, காலாள் முதலிய படைகள், அவர்களிடத்தில் இருந்தன. இவ்வாறு ஆரியர் தாமே தமிழரின் செல்வத்தையும் நாகரிகத்தையும் பற்றித் தமது பாடல்களில் நன்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
அக்கால ஆரியரது சிறந்த கடவுள் இந்திரன். அவர்கள், தமக்கு வெற்றியை அளிக்குமாறு இந்திரன் மீது பல பாடல்கள் பாடினார்கள். தமிழர் ஆரியரின் கடவுளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காரணத்தினாலும் அவர்களுக்கிடையில் போர் நடந்தன.
படைஎடுப்பு வாணிகம் போன்ற காரணங்களால் பல சாதியினருக்கிடையே கலப்பு உண்டாகின்றது. ஆரியர் கலப்பின்றி நீண்டகாலம் வாழவில்லை. புறத்தே இருந்துவந்த ஆரியரிலும் பார்க்க இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர் மிகப் பலர். இவ்விரு சாதியினருக்கு மிடையில் கலப்புமணஞ் செய்வதில் தடை ஏற்படவில்லை. இரு மக்களுக்கு மிடையில் கலப்பு மணங்கள் நிகழ்ந்தன. புதிய மக்கள் தோன்றினார்கள். அவர்கள் தம்மை ஆரியர் என்றே சொல்லிக்கொண்டனர். அவர்கள் சிறிது சிறிதாகக் கங்கைச் சமவெளி வரையிற் சென்று தமது வெற்றியை நாட்டினர். ஆரியர் வழங்கிய மொழி பிராகிருதம் எனப்பட்டது. வடக்கே வாழ்ந்த தமிழர் பிராகிருதச் சொற்களைத் தமிழுடன் கலந்து பேசினர். பேசுமிடத்து அச்சொற்களைத் திரித்து வழங்கினர். ஆரியர் பிராகிருத்ததுடன் தமிழ்ச் சொற்களைக் கலந்து வழங்கினர். அவர்களும் தமிழ்ச் சொற்களைப் பிறழ உச்சரித்தனர். இக்காரணங்களால் வடக்கே பல மொழிகள் தொன்றலாயின. நாள் ஏற ஏற ஆரியர் தமிழரின் கொள்கைகளையே பின்பற்று வாராயினர். அவர்கள் தமிழரின், சிவன், உமை முதலிய கடவுளரை வழிபட்டனர். அவர்களின் இந்திரன், பிரமா, வருணன் முதலிய கடவுளர் தெய்வங்களாயினர். இவ்வாறு இந்திய மக்கள் எல்லோரது நாகரிகமும் தமிழர் நாகரிகமாக மாறியுள்ளது. தமிழரின் கொள்கைகள் அல்லாதன சிலவும் அதன் இடை இடையே காணப்படுகின்றன.
தொடரும்...