Thursday, August 7, 2014

அழிவின் விளிம்பில் நன்னீர் தாவரங்கள்

தாவரங்கள்தான் இந்த உலகின் முதன்மை உணவு உற்பத்தியாளர்கள். இதில் பயிர் செய்யப்படும் தாவரங்களின் நன்மைகளை ஓரளவுக்கு உணர்ந்திருக்கிறோம். ஆனால், இன்றளவும் காடுகளில் இருக்கும் தாவரங்கள் எண்ணற்ற நன்மைகளை நமக்குச் செய்துவருகின்றன. இந்தத் தாவரங்களில் பல, இனம் கண்டறியப்படுவதற்கு முன்பே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க பல்லுயிரிய மையமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருக்கும் சில அரிய வகைத் தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

நன்னீர் தாவரங்களும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலான தாவரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீரைச் சுத்திகரிக்கும் பணியில் உள்ளதாக ஐ.யு.சி.என். அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பயன்கள்

நன்னீர் தாவரங்கள் மக்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் உள்ளன. பலவகையான தாவரங்கள் பாய், கயிறு தயாரிக்கக் காடுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. சதுப்புநிலப் புல் வகையான லெப்டொசொலே நீசி என்ற தாவரம் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. லெம்னா ஜிபா என்ற தாவரம் அழுக்குத் தண்ணீரைச் சுத்திகரிக்கவும், எரிசக்தி உற்பத்திக்கும் முக்கியமாகப் பயன்படுகிறது. சைபரஸ் ட்டுபரோஸ் என்ற ஒரு நீர்வாழ் தாவரம் ஊதுவத்தி, வாசனை திரவியத் தயாரிப்பில் பயன்படுகிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான நன்னீர் தாவரங்கள் உரம் தயாரிப்பில் மூலப்பொருளாக உள்ளன.

நன்னீர் தாவரங்களில் சுமார் 175 மருத்துவக் குணம்கொண்டவையாகவும், 83 உணவுக்காகவும், 80 கால்நடை தீவனமாகவும் பயன்படுகின்றன. 3 தாவரங்கள் சாயம் தயாரிக்கவும், 14 தாவரங்கள் வேதிச்சேர்மங்கள் தயாரிக்கவும், 6 உயிர் எண்ணெய் தயாரிக்கவும், 9 நார் பொருள்கள் உருவாக்கவும், 16 அழகுக்காகவும், 37 தோட்டங்களில் வளர்க்கவும், 7 ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆபத்தில் உள்ள நன்னீர் தாவரங்கள்:

1. எரியோகோலன் பெக்டிநாட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் தாவரம் இது. நீலகிரி, கொடைக்கானல், பழனி மலைகளின் உயரமான பகுதிகளிலும் கேரளத்தின் ஆனைமுடியிலும் உள்ளது. சதுப்பு நிலப் புல்வெளி காடுகளில் வளரும் இயல்புடையது. காட்டுத்தீ, அந்நியத் தாவரங்கள் பெருக்கம், கட்டிட ஆக்கிரமிப்பு போன்றவை இது அழிவதற்கான காரணங்கள்.

2. ஹைகிரோபில்லா மதுரையன்சிஸ்

தமிழகத்தில் மட்டுமே காணப்படும் அரிய தாவரம். 1958-ல் மதுரை அருகே நல்லகுளம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இதன் பெயரில் மதுரையும் சேர்க்கப்பட்டது. இது எண்ணிக்கையில் மிகமிக குறைவாக இருப்பதாகவும், புதுக்கோட்டையில் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழிட அழிப்பு, மேய்ச்சல், சுருங்கிவரும் நன்னீர் நிலைகள், நகரமயமாக்கல் போன்றவை இது அழிவதற்கான காரணங்கள். மிகச் சிறிய சூழலியல் மாற்றம்கூட இந்தத் தாவரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றுவிடும்.

3. ஹைட்ரோகொட்டிலீ கொண்பர்டா

இந்த நீர்வாழ் தாவரம் நம் மலைகளில் மட்டுமே காணக்கூடிய அரிய வகைத் தாவரம். நீலகிரி, பழனி மலைகளில் மட்டுமே உள்ளது. மலை முகடுகளிலும், ஆற்றின் கரைகளிலும், காட்டின் ஓரங்களிலும் வளரும் தாவரம் இது. காட்டுத்தீ, ஒற்றை பயிர் பெருக்கம், சுற்றுலாவுக்காகக் காட்டை அழித்தல், கால்நடை மேய்ச்சல் போன்றவை இந்த இனம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் காரணங்கள்.

4. பியுர்னா சுவாமிய்

இந்த நீர் வாழ் தாவரம் மதுரை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால், சமீப காலமாக இந்தத் தாவரத்தை யாரும் பார்க்கவில்லை. இது சதுப்புநில, புல்வெளிகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த இனம் அழியும் நிலையில் உள்ளதாகப் பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு (ஐ.யு.சி.என்.) சொல்கிறது.

5. பார்மேரியா இண்டிகா

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய இந்தத் தாவரம் அழிவின் விளிம்பில் உள்ளது. இது தமிழ்நாட்டின் தாமிரபரணியிலும் கேரளத்தின் சில பகுதிகளிலும் மட்டுமே உள்ளது. மிகக் குறுகிய வாழிடத்தில் இது வாழ்கிறது. வாழிட அழிப்பு, ரசாயன விவசாயம், கட்டிடப் பெருக்கமும் இந்தத் தாவரத்தின் அழிவுக்குக் காரணமாக உள்ளன.

6. முர்டானியே லேன்சியோலேட்டா

தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு சில மலைகளில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை நீர் வாழ் தாவரம் இது. தோட்டங்கள், அதைச் சார்ந்த புல்வெளிகளில் வளரும் இயல்புடையது. பெருகிவரும் தொழிற்சாலைகள், வீடுகளின் அபரிமிதப் பெருக்கம் காரணமாக இந்த இனம் அச்சுறுத்தலில் உள்ளது.

அழிவின் விளிம்பில்

வாழிட அழிப்பும், வேகமான நகரமயமாக்கலும், அந்நியத் தாவரங்களின் ஆதிக்கமும் நன்னீர் தாவர எண்ணிக்கை குறையவும் அழிவுக்கும் காரணமாக உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கும், விலங்குகளுக்கும் குறிப்பாக இந்த உயிர் சூழலுக்கும் அதிகம் பயனளிக்கும் நன்னீர் தாவரங்கள் பல அச்சுறுத்தலில் உள்ளன.

நம் நாட்டில் பெருவாரியான மக்கள் இந்த நன்னீர் சூழல், நன்னீர் உயிரினங்களை நம்பியே வாழ்கின்றனர். நம்மைச் சுற்றி உள்ள, அதிகம் கவனிக்கப்படாத இந்த நன்னீர் உயிரினங்களையும் தாவரங்களையும் அவை செய்துவரும் சூழலியல் நன்மைகளையும் நாம் உணர வேண்டும். ஒருங்கிணைந்த வாழிடப் பாதுகாப்பு, தனி மனிதச் சூழலியல் அக்கறை, மாசுபாடு மேலாண்மை, முறைப்படுத்தப்பட்ட சுற்றுலா, மேம்படுத்தப்பட்ட சூழலியல் விழிப்புணர்வு, சட்டங்கள், தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் போன்றவற்றால் மூலமே அழிவிலுள்ள நன்னீர் உயிரினங்களைக் காப்பாற்ற முடியும்.

தமிழ்.திஇந்து.....

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

No comments: