சாதாரண மீன்களைப் போலவே கடலில் நீந்தித்திரியும் இந்த மீன்கள் எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டால் பலூன் போல உருண்டை வடிவமாகி விடுவதால் இதற்கு பலூன் மீன் எனப் பெயர் வந்தது.
""மீனவர்களால் செல்லமாக பேத்தை மீன் என அழைக்கப்படும் இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான். லத்தீன் மொழியில் டெட்ராடான் என்பதற்கு 4 பற்கள் என்று அர்த்தமாகும். மனிதப் பல்லைப் போலவே இம்மீனின் வாயில் மேலும், கீழுமாக தலா இரு பற்கள் வீதம் மொத்தம் 4 பற்கள் இருக்கின்றன.கடலுக்கடியில் வாழும் சங்குகள்,சிப்பிகள், நண்டுகள் இவற்றைப் பிடித்து அதன் உறுதியான மேலோடுகளை உடைத்து அதனுள்ளே இருக்கும் சதைகளை இப்பற்களின் உதவியால் சாப்பிடுகின்றன.
இம்மீனின் வயிற்றுப்பகுதியில் மட்டும் டெட்ராடாக்ஸின் எனும் மிகக் கொடிய விஷம் இருக்கும். ஆனால் ஜப்பானிலும் கொரியாவிலும் இந்த விஷம் உள்ள பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து விட்டு மற்றவற்றை சுவையுள்ள உணவாக்கி சாப்பிடுகின்றனர்.
தனித்தனியாக இருக்கும் இதன் இரு கண்களும் எல்லாப்பக்கமும் அசையும் சக்தியுடையது.
தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளும் விசித்திர ஜீவன். உலகம் முழுவதும் 121 வகைகள் இருப்பதாகவும் அவற்றில் சில பிறப்பு முதல் இறப்பு வரை கடலில் மட்டுமே வாழும் தன்மையுடையதாகவும் சில உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் முகத்துவாரங்கள் வழியாக ஆறுகளில் சென்றும் வாழ்கின்றன.
குளிர் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற எல்லாக் கடல்களிலும் இவ்வினங்கள் காணப் படுகின்றன. இவை நீந்தும்விதம் இவற்றை மற்ற மீன்களிலிருந்து தனித்து பிரித்துக் காட்டுகிறது.
ஏனெனில் இதன் பக்கவாட்டு மற்றும் மேல்,கீழாக இருக்கும் செதில்கள் மூலமாக மிக மெதுவாக நீந்துகிறது. மற்ற மீன்களைவிட சற்று வித்தியாசமான தோற்றமளிக்கும் இம்மீன்கள் மெதுவாக நீந்துவதால் எதிரிகளுக்கு எளிதில் இரையாகி விடுகின்றன. எதிரிகள் இதனருகில் வந்து பயமுறுத்தும்போது நீரை உடனடியாக உடலுக்குள் உள்ளிழுத்து ஒரு பலூனைப்போல, உருண்டையாக பந்தைப் போல மாறி தண்ணீரில் உருள ஆரம்பித்து விடுகின்றன.
மற்ற எதிரி மீன்கள் இதன் செயல்பாடுகளைப் பார்த்துப் பயந்து உடனே அந்த இடத்தை விட்டு அகன்று ஓடிவிடும். இம்மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து விட்டால் காற்றை வாய் வழியாக உடலுக்குள் உள்ளிழுத்து அப்போதும் பலூன் போன்று உருமாறிவிடும்.
இந்த தற்காப்பு நடவடிக்கையையும் மீறி எதிரிகள் விழுங்கிவிட்டால் அதன் வாயை அடைத்துக் கொண்டு நின்று விடும். இதனால் வாயில் சிக்கிக் கொண்ட இந்த மீனை எதிரி மீன்கள் எப்படியாவது வெளியில் துப்பிவிடத் துடிக்கும்.
வெளியில் வந்தவுடன் தனது வயிற்றில் இருக்கும் காற்றையோ அல்லது நீரையோ வெளியேற்றிவிட்டு சாதாரண நிலைக்கு வந்து பின் தப்பித்துச் சென்று பாறைகளின் ஊடே பதுங்கிக் கொள்ளும் விநோத ஜீவன் இது''
சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.
No comments:
Post a Comment