Saturday, August 2, 2014

நாம் நமது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமை

 காடுகளை அழித்தல், நதிகளை மாசடையச் செய்தல் என மனிதன் செய்த பல தவறுகளால், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப மாறுதல் ஏற்பட்டு, மனித குலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு உள்ளது. அதில் முக்கியமானதும், மனிதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் என்றால் அது தண்ணீர் பிரச்னையாகும்.

 மனித வாழ்க்கைக்கு நீர் ஆதாரம் என்பது மிகவும் அவசியமானதாகும். எண்ணெயைப் போல அதற்கு எந்த மாற்றும் கிடையாது. மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் தண்ணீரின் ஆதாரம் தற்போது மிகவும் சுருங்கி வருகிறது. தண்ணீர் ஆதாரம் குறைந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் பிரச்னையை இன்னும் சிக்கலாக்குகிறது. உலக பொருளாதாரமே உயர்ந்தாலும், மனிதனின் தாகம் தணிய தண்ணீரைத்தான் நாட வேண்டும்.

 தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து பணக்காரரோ, ஏழையோ, தென் பகுதியில் வசிப்பவரோ, வட பகுதியில் வசிப்பவரோ யாரும் தப்பிக்க இயலாது. பல நாடுகளில் உள்ள தண்ணீர் ஆதாரங்கள் பத்தில் ஒரு பங்காக சுருங்கி விட்டது. குறிப்பாக ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு கட்டடங்கள் வந்துவிட்டன. ஆறுகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

 ஆற்று மணலை களவாட, ஆறுகளை வற்றவிட்ட நம் மக்கள், நாளை நமக்கே தண்ணீர் கிடைக்காமல் போகப் போகிறது என்பதை இன்னமும் உணரவில்லை.


தண்ணீர் பற்றாக்குறை என்பது வெறும் குடிநீர் அல்லது பயன்பாட்டுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவது மட்டும் அல்லாமல்,  மறைமுகமாக பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. அதாவது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சுகாதாரமற்ற தண்ணீரை ஏழை நாடுகளின் மக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அங்கு மலேரியா, காசநோய் போன்ற நோய்கள் அதிகமாகப் பரவுவதும், உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, உணவுப் பஞ்சம் ஏற்படுவதும் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் பிரச்னைகளே.

 சரி இதற்கெல்லாம் தீர்வு காண நம்மால் என்ன முடியும் என்று நினைக்காமல், ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்துவைத்தால், நாம் நிச்சயம் இந்த பிரச்னையில் இருந்து ஒரு சில ஆண்டுகளாவது தப்பித்துக் கொள்ளலாம்.

 தொழிற்சாலைகளை நடத்துவோர், அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே நதியில் கொட்டாமல், அதனை சுத்திகரித்து வெளியேற்றுவதும், மரங்களை வெட்டாமல், இருக்கும் இடத்தில் மரங்களை வளர்ப்பதும் மனிதனின் கடமையாகிறது.

 வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதும், தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதும், நீர் ஆதாரங்களை மேலும் சுருக்காமல் பெருக்குவதும் மனிதன் மனிதனுக்காக, அவனது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமையாக இருக்கும்.

இன்றே அதற்கான பணிகளை துவக்குவோம்...

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

No comments: