Thursday, August 2, 2012

இந்தியாவுக்கு வனவிலங்கு பாதுகாப்பில் நல்ல பெயர்

 உலகநாடுகளில் அனைத்திலும் வனவிலங்கு சட்டவிரோதமாக பல உபயோகத்திற்காக வேட்டையாடப்படுகிறது. வியட்நாமில் காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காக கொல்லப்படுகின்றன

 உலகில் அருகிவரும் உயிரினங்களின் உடற்பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் குற்றங்கள் நடக்கும் நாடுகள் வரிசையில் வியட்நாம், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பதாக வனஉயிர்கள் பாதுகாப்புக்கான உலகளாவிய அமைப்பு (WWF) கூறுகின்றது.

 இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 23 ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை பட்டியல் படுத்தியுள்ள WWF அமைப்பு, தென்னாபிரிக்காவில் இருந்து காண்டாமிருகங்களின் கொம்புகள் கடத்தப்படும் நாடுகளில் வியட்நாம் முக்கிய இடமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது.

 தென்னாபிரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் 448 மிருகங்கள் கொம்புகளுக்காக கடத்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காண்டாமிருகங்களின் கொம்புகள் கடத்தி விற்கப்படுவதை தடுப்பதற்கு சீனா முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறுகின்ற போதிலும், அங்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வனஉயிர்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

 ஆனால் இந்தியாவும் நேபாளமும் யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளின் உடற்பாகங்கள் கடத்தி விற்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் வெற்றியடைந்திருப்பதாகவும் WWF அமைப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்...


No comments: