மலை நாடு குறிஞ்சி நிலம் எனப்பட்டது. குறிஞ்சி என்படு ஒருவகை மரம். மலைகளில் இம் மரம் பெரிதும் வளரும். ஆகவே மலைநாட்டுக்குக் குறிஞ்சி நிலம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. அங்கு வாழும் மக்கள் குறவர், வேடர், கானவர் எனப்பட்டார்கள்.
மலைகளில் தானே வளர்ந்து பயன் தரும் மரங்கள் பல உண்டு. உண்ணுதற்கினிய கிழங்குகளை வீழ்த்தும் கொடிகள் பல காடுகளின் இடையிடையே செழித்துப் படரும். மலைமுகடுகளில் தேன்கூடுகள் தொங்கும். மலைச்சாரல்களில் ஐவனம் என்னும் ஒருவகை மலைநெல் விளையும். மலைகளின் இடையிடையேயுள்ள சமநிலங்களில் சாமை பயிரிடப்படும். மலைநாட்டினர் அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்கு, தேன், மலைநெல், சாமை என்பவைகளைத் தமது முதன்மையான உணவுகளாகக் கொண்டு வாழ்ந்தனர்.
காடுகளில் மான், மரை, பன்றி, புலி, கரடி, யானை முதலிய விலங்குகள் திரிந்தன. மான், மரை, பன்றி முதலிய விலங்குகள் உணவின் பொருட்டு வேட்டையாடப்பட்டன. தோல், நகம் என்பவைகளிள் பொருட்டுப் புலிகளும் தந்தத்தின் பொருட்டு யானைகளும் வேட்டையாடப்பட்டன.
பருவம் அறிந்து சாமை விதைக்கப்பட்டது. பயிரிடப்படும் இடம் கொல்லை எனப்பட்டது. காட்டு விலங்குகள் பயிரை மேய்ந்து அழித்து விடாதபடி கொல்லையைச்சுற்றி வேலியிடப்பட்டிருந்தது. இராக்காலத்தே யானை, பன்றி முதலிய விலங்குகள் கொல்லைக்குட் புகுந்து பயிரை அழிக்காதபடி பரண்கள்மீதிருந்து குறவர் காவல் காத்தனர். பயிரை மேயவரும் விலங்குகள் கண்டு அஞ்சி ஓடும்படி அவர்கள் நெருப்புக் கொள்ளிகளை பரணின் பக்கங்களில் மாட்டிவைத்தார்கள், கவணில் கற்களை வைத்து எறிந்து விலங்குகளை ஓட்டினார்கள்.
தினை கதிர் முற்றியதும் கிளி முதலிய பறவைகள் கூட்டமாக வந்து தினையை உண்ணும். குறச் சிறுமியர் பகற்காலங்களில் பரண்மீதிருந்து தினைமீது விழும் குருவிகளை ஓட்டினர். அவர்கள் மூங்கில் தடியைக் கிழித்துச் செய்த தட்டை என்னும் கருவியை தட்டியும் ஆயோ என ஓசையிட்டும் குருவிகளை ஓட்டினர். தினை விளையும்காலம் குறச் சிறுமியரின் இனிய பொழுது போக்குக் காலமாயிருந்தது. குறவரின் குலதெய்வம் முருகன் எனப்பட்டான் அவன் கையில் முருகக்கடவுளின் வேலைப் பிடித்திருந்தான்.
குறவரின் வீடுகள் மலைச்சாரலிலே பலர் மரங்களின் கீழ்க் கட்டப்பட்டிருந்தன. அவை தழைகளால் வேயப்பட்ட சிறு குடிசைகள். அவர்கள், தேன், பலாப்பழம் என்பவைகளிலிருந்து ஒருவகைக் கள்ளைச் செய்தார்கள். அக்கள் மூங்கிற் குழாய்களில் இட்டுக் காரமேறும்படி வைக்கப்பட்டது. கள்ளை உண்டு மகிழ்ந்த குறவரும் குறத்தியரும் முற்றத்தே நிற்கும் பலாமரத்தின்கீழ் கைகோத்துக் குரவை என்னும் கூத்து ஆடினார்கள்.
முன்னை காலத்தே குறவர் தழைகளையும் மரப்பட்டைகளையும் உடையாகக் கொண்டனர். பழைய நூல்களில் முனிவர்கள் மர உரியை உடையாக அணிந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. குறமாதர் குறி சொன்னார்கள். அவர்கள் உடம்பில் பச்சை குத்திக்கொண்டனர், சங்கு மணிகளைக் கோத்து மாலையாக அணிந்தனர். சங்கு வளைகளைக் கையில் இட்டு அழகுசெய்தனர். குங்குமப் பொட்டிட்டனர். பூக்களைத் தலையில் சூடினர்.
நமது நாடு தொடரும்...
இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...
No comments:
Post a Comment