Monday, April 18, 2011

நமது நாடு 15.புராணங்கள்


     தமிழ் அரசர் அவைகளில் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசருடைய வெற்றிகளையும் பிற புகழ்களையும் குறித்துப் பாடினார்கள். அரண்மனைகளில் பலவகை விழாக்கள் நடைபெறுவதுண்டு. அக்காலங்களில் புலவர்கள் அரசனின் முன்னேர்களுடைய பழைய வரலாறுகளை எடுத்துச்சொல்வது வழக்கம். ஒவ்வோர் அரசமரபினருடைய பரம்பரை வரலாறுகளும் இவ்வாறு புலவர்களாற் காப்பாற்றப்பட்டு வந்தன. வடநாட்டு அரசர் அவைகளிலிருந்து அரசர் வரலாறுகளைக் கூறிய புலவர்கள் சூதர் எனப்பெயர்பெற்று விளங்கினார்கள். இதுபற்றியே புராணங்கள் சூத முனிவராற் சொல்லப்பட்டன என்று கூறப்படுகின்றன. இந்திய நாட்டை ஆண்ட அரசரின் வரலாறுகள் ஒருகாலத்தில் எழுதப்பட்டன. அவை புராணம் எனப் பெயர் பெற்றன. புராணம் என்பதற்குப் பழைய வரலாறு என்பது பொருள்.

     கோயிற் குருமாராலும் அரசரின் வரலாறுகள் எழுதி வைக்கப்பட்டன. இவ்வாறு செய்தால், இந்தியர் வழக்கு மட்டுமன்று. இலங்கை, மேற்கு ஆசியா, எகிப்து முதலிய நாடுகளிலும், இம்முறை இருந்துவந்தது.இன்று நிகழ்ச்சிகளை கிறித்துவுக்கு பின் இத்தனையாவது ஆண்டில் இன்னவை இன்னனை நிகழ்ந்தன என்று குறிப்பிடுகிறோம். முன்னைக் காலங்களில் ஆண்டுகள் இவ்வாறு தொடர்பாகக் கணக்கிடப்படவில்லை, இன்ன அரசன் ஆட்சியில் இத்னையாவது ஆண்டு என்று கணக்கிடப்பட்டது. அவ்வாறாகவே முற்கால அரசரின் ஆட்சிக் காலங்கள் குறித்துவைக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குமுன் மயூரசந்திரகுப்தன் என்னும் அரசன் வட இந்தியாவை ஆண்டான். அவனுடைய அரண்மனையில் மெகஸ்தினஸ் என்னும் கிரேக்கர் ஒருவர் தங்கியிருந்தார். அவர் இந்தியாவின் வரலாறு ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் அலக்சாந்தரின் படை எடுப்புக்குமுன் பாண்டிய நாட்டை ஆண்ட அரசரின் எண் 154 எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அரசரின் ஆட்சிக்காலங்கள் குறித்து வைக்கப்பட்டிலவாயின் அவர் இவ்வாறு கூறியிருத்தல் இசையாது. தமிழர் தமது பழைய வரலாறுகளை எழுதி வைத்ததில்லை எனச் சிலர் கருதுவது தவறு. பழைய கல்வெட்டுகளையும் புராணங்களையும் நோக்குமிடத்து முன்னர் எழுதி வைக்கப்பட்ட வரலாறுகள் பிற்காலங்களில் சிதைந்து மறைந்தொழிந்தன என்பது விழங்குகின்றது. திருவிளையாடற் புராணத்தில் மதுரையை ஆண்ட அரசரின் வரலாறுகளைக் காண்கின்றோம். புராணக் கதைகள் நம்பத்தக்கவல்ல எனப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணம் புராணங்களிற் பல கற்பனைக் கதைகள் காணப்படுதலேயாகும். அக்கற்பனைக் கதைகளின் இடையிடையே சிற்சில இடங்களிற் கூறப்படும் அரசரின் வரலாறுகள் பொருத்தமாயிருக்கின்றன.

   ஒருகாலத்தில் பிராமண மதம் இந்திய நாட்டில் தலை எடுத்திருந்தது. அப்காலத்தில் பிராமணர் தமக்கு நலம் பயக்கும் பல கோட்பாடுகளைப் புகுத்தியும் நலம் பயவாதனவற்றை நீக்கியும் கற்பனைக் கதைகளைப் புகுத்தியும் புராணங்களை மாறுபடுத்தினர். இக்காரணங்களே புராணங்கள் வரலாற்று நூல்களாகக் கொள்ளப்படுவதற்குத் தடையாயுள்ளன. பிராமனரால் திருத்தப்பட்டதால் வரலாற்று நூல்களாகிய புரணங்கள் வெறும் சமய நூல்கள் எனக் கொள்ளப்படுகின்றன.

   இதிகாசம் என்பதற்கும் பழைய வரலாறு என்பது பொருள். பாரதம் இராமாயணம் முதலிய நூல்கள் இதிகாசங்கள் என வழங்கப்படுகின்றன. அவையும் நீண்டகாலமாகக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் எழுதப்பட்டுவந்தன. அதனால் அவைகளும் வரலாற்றுத் தண்மையை இழந்தன. பாரதப்போர் இன்றைக்கு மூவாயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளின்முன் நிகழ்ந்ததற்குச்சான்று உண்டு.


நமது நாடு தொடரும்...


இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ...

No comments: