Monday, April 11, 2011

நமது நாடு 13. தமிழ் மறை


    தமிழ் மக்களிடம் மிகப் பழங் காலத்தில்லேயே மறைகள் இருந்தன. மறை என்பதற்குப் பிறர் அறியாவண்ணம் மறைத்துச் சொல்லப்படுவது எண்பது பொருள். வேதம் என்பதற்கும் பொருள் இதுவே. உண்மையில் ஆரிய வேதங்கள் மறைகள் ஆகமாட்டா. அவை மறைத்துக் கூறப்படுவன வல்ல. தமிழர் அறிந்திருந்த சமய உண்மைகள், குரு மாணாக்க முறையில் தொன்று தொட்டு வந்தன. அவற்றைக் கேட்கும் தகுதி அடைந்தவர்களுக்கு மட்டும் அவை வெளியிடப்பட்டன. ஆரிய வேதங்கள் சூத்திரருக்கும் பெண்களுக்கு மட்டும் மறைக்கப்பட்டிருந்தன.

    தமிழ் மொழியிலுள்ள மிகப் பழைய நூல், தொல்காப்பியம். அது, தமிழில் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்கள் பற்றியே நூல்கள் செய்யப்படும் எனக் கூறுகின்றது. ஆகவே தமிழ் மறைகள் நூல்களாக இருந்தில என நாம் நன்கு அறியலாம்.

   ஆரியர், தமிழரிடமிருந்து அவர்கள் சமய உண்மைப் பொருள்களை அறிந்தனர். அவர்கள் அவ்வுண்மைப் பொருள்களை அமைத்து உபநிடதம் என்னும் நூல்களைச் செய்தனர். உபநிடத மென்பதற்குக் குரு மாணாக்க முறையில் கிட்டஇருந்து கேட்கப்படுவது என்பது பொருள். உபநிடதங்களிற் கூறப்படுவனவே தமிழரின் மறை என்று சொல்வதற்குரிய பல காரனங்கள் உண்டு. அவை ஓங்காரத்தின் பெருமையைக் கூறுகின்றன. வடமொழியில் ஒகரமாகிய குறில் இல்லை. குறிலின் நீட்டமே நெடில் ஆகும். இதனால் ஓம் என்னும் பிரணவம் தமிழருக்கே உரியது என்று விளங்குகிறது.

   பிராமணர் அரச வகுப்பினரிடம் மாணாக்கராயிருந்து உபநிடத ஞானங்களைப் பயின்றனர். ஆரிய வேதங்கள் சூத்திரருக்கும் பெண்களுக்கும் மட்டும் மறைக்கப்பட்டிருந்தனவென்பது முன் கூறப்பட்டது. வேதங்களைப் பிராமணன் மட்டும் ஆசிரியனாக விருந்து மூன்று வருணத்தவர்களிக்கும் ஓதலாம் என அவர்கள் நீதி நூல்கள் கூறுகின்றன. பெண்களும் அரசரும் அரசர் அல்லாதாரும் உபநிடத ஞானங்களில் பயிற்சியடைந்திருந்தார்கள். இக்காரனங்ளினால் உபநிடதங்களிற் கூறப்படும் உண்மை ஞானங்களே தமிழரின் மறை என்று தெளிவாகின்றது.

   தமிழரின் மறை எழுதப்படாது செவிவழக்கில் நீண்டகாலம் வந்தது. ஆதலின் அது எழுதாக் கிளவி எனப்பட்டது. தமிழ்மறைப் பொருள்களைத் திரட்டித் திருமூலநாயனார் திருமந்திரம் என்னும் நூலாகச் செய்தார். திருமந்திரத்திற் காணப்படும் உண்மைகள் தேவார திருவாசஙகங்களிலும் காணப்படுகின்றன. இவைகளின் பொருள்களைச் சாரமாகக் கொண்டனவே தமிழர் போற்றும் சைவ சித்தாந்த நூல்களாகும். ஆரியன் மதம் தென்னாட்டிற் பரவிய காலத்தில் தமிழரின் மறை என்பது ஆரியரின் வேதம் எனத் தவறாகக் கருதப்படலாயிற்று.

நமது நாடு தொடரும்...

தூய்மையை இழக்காத ஒன்று இயற்கைதான்...




No comments: