Tuesday, April 5, 2011

நமது நாடு 11. தமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்


    தமிழ்நாட்டில் சாதி எப்படித் தோன்றிற்று என்று முன் பதிவுகளிற் பார்த்தோம். வடநாட்டார் சாதிகளை நிறம்பற்றிப் பிரித்தனர். ஆகவே அவர்கள் செய்த சாதிப் பிரிவு வருணம் எனப் பெயர் பெற்றது. வருணம் என்பதற்கு நிறம் என்று பொருள். ஆரியரிற் பிராமணர் முதற் குலத்தினராவர். இரண்டாங் குலத்தினர் சத்திரியர் எனப்பட்டனர். சத்திரியர் என்பதற்கு அரசர் அல்லது போர் வீரர் என்பது பொருள். மூன்றாங் குலத்தினர் வைசியர். அவர் வாணிகத் தொழில் நடத்துவர். நான்காவது குலத்தினர் சூத்திரர். அவர்கள் போரில் சிறையாகப் பிடிக்கப்பட்டோரும் பரம்பரையாக அடிமைத் தொழில் புரிவோருமாவர். ஆகவே சூத்திரர் என்பதற்கு அடிமைகள் அல்லது வேலைக்காரர் என்பது பொருள். வடநாட்டாரின் வருணப் பிரிப்புக்கு பிற்ப்பே காரணம். பிறப்புரிமையை வலுப்படுத்துவதன் பொருட்டுப் பல கட்டுக்கதைகள் எழுந்தன. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போர் முறையே பிரம்மாவின் முகம், தோள், தொடை, கால்களினின்றும் பிறந்தார்கள் என்பதும் அக்கதைகளுள் ஒன்று. இதனை மக்கள் நீண்டகாலம் உண்மையென நம்பிவந்தனர். சாதிக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு கட்டுப்பட்டதோர் கதையே இதுவாகும்.

   ஒவ்வொரு வருணத்தவர்களும் ஒழுகவேண்டிய ஒழுக்க முறைகள் அவர்கள் நீதி நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருணத்துக்கும் வெவ்வேறு ஒழுக்கங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வருண தருமங்கள் சமயத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. அவர்கள் நீதி நூல்கள் வருணத்துக்கு தக்கவாறு நீதிகள் விதித்துள்ளன. தமிழர் பிறப்பில் சாதி இல்லை, ஒழுக்கத்தினாலும், செய் தொழிலினாலும் சாதி உண்டு என்றனர். பிறப்பெடுக்கும் எல்லா வுயிருக்கும் சிறப்பொவ்வா-செய்தொழில் வேற்றுமையால் எனத் திருவள்ளுவனாரும் ஆணை இடுவாராயினர்.

''வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி''

   என்னும் செய்யுளில் தமிழர் ஆரியர் நீதிகளின் உயர்வு தாழ்வுகள் நன்கு கூறப்பட்டிருத்தல் காண்க.

   தமிழ்நாட்டில் மக்கள் அந்தணர், அரசர், வனிகர், வேளாளர் என்னும் நற்குலத்தினராகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் குருமார், அரசர், வியாபாரிகள், பயிரிடுவோர் என்பவர்களை ஒத்தவர்களேயாவர். இவர்களை அன்றிப் பலவகைத் தொழில்கள் புரிவோரும் வாழ்ந்தனர்.

    தென்னாட்டில் ஆரியக் கொள்கைகள் ஒரு காலத்திற் பரவத்தொடங்கின. அப்பொழுது தமிழர் நாற்குலங்களுக்கும் பதில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவினராகக் கருதப்பட்டார்கள். அதனை ஏற்றுக்கொள்ள ஒருப்படாத வேளாண் மக்கள் தம்மைச் சற்சூத்திரர் என்றும், பூவைசியரென்றும் பலவாறு கூறிக்கொள்வாராயினர். வேளாளர் சூத்திரரும் அல்லர் வைசியரும் அல்லர்.

நமது நாடு தொடரும்...


இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்.... 

No comments: