கடலில் வாழும் பல வகையான விநோத உயிரினங்களில் முத்துச் சிப்பியின் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினமே கடல் ஆழி. மேலை நாடுகள் பலவற்றில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் சுவை மிகுந்த உணவாக விற்பனை செய்யப்படும் இந்த உயிரினத்தின் சிறப்புகள்
கடலில் வாழும் ஓடுகளையுடைய பல உயிரினங்களில் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாத ஓர் உயிரினம்தான் கடல் ஆழி. கிரோஸோஸ்டீரியா என்ற விலங்கியல் பெயருடைய இதன் ஓடுகளின் விளிம்புகள் அடர்த்தியான கால்சியத்தால் ஆக்கப்பட்டிருக்கிறது. இவை ஒரு பிளேடைப் போன்று மிகவும் கூர்மையாக இருப்பதால், இதன் மீது தப்பித் தவறி கால் வைத்து விட்டால் கூட, "சரக்'கென்று வெட்டிவிடும் தன்மையுடையது.
ஆறுகளின் கழிமுகத் துவாரங்களிலும், சென்னையை ஒட்டியிருக்கிற கடற்கரைகளிலும் அதிக எண்ணிக்கையில் வாழும் கடல் ஆழிகளுக்கு விஞ்ஞானிகள் கிரோஸோஸ்டீரியா மெட்ராஸென்சீஸ் என்றும் பெயர் வைத்திருக்கின்றனர். இவ்வினங்கள் மட்டும் மற்ற கடல் ஆழிகளைக் காட்டிலும் விரைவாக வளர்வதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கின்றன. கடலில் அதிகமான பரப்பளவில் ஆழிகள் படர்ந்து காணப்படும் இடங்களை ஆழிப்படுகைகள் என்கிறார்கள்.
உலகிலேயே மிகப் பெரிய ஆழிப்படுகை சிஸ்பாக் வளைகுடாவில் இருக்கிறது. கடலில் வாழும் பவளப் பாறைகளுக்கு அடுத்தபடியாக அதிகமான கடல்வாழ் உயிரினங்களுக்கு உண்டு, உறைவிடமாகவும் இருக்க ஆழிப் படுகைகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
கடல் தாமரைகள், கடல் விசிறிகள், நத்தைகள் போன்றவை உயிர் வாழவும் இவை சிறந்த உறைவிடமாக உள்ளன.
இந்த உயிரினங்களைத் தின்று வாழும் பெரிய வகை மீன்களும் ஆழிப் படுகைகள் இருக்கும் பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன. பழைய ஆழிகளுக்கு மேற்புறத்திலேயே புதிய ஆழிகளும் ஒட்டிக் கொண்டே உருவாகி விடுவதால், ஆழிப் படுகைகள் பரப்பளவிலும், கொள்ளளவிலும் அதிகரித்து கடலுக்குள் அவை ஒரு தனி உலகமாகவே காட்சியளிக்கின்றன.
தினமணி...
இயற்கையின் அதிசயம் கடல் வாழ் உயிரினம்
No comments:
Post a Comment