நமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை.
இந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
உலகம் சுற்றும்
பிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஆனைமலைப் பகுதிகளில் இப்பறவைகள் பறந்து திரிவதை பார்த்திருக்கிறேன். வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் அம்பைப் போல காற்றைக் கிழித்துக்கொண்டு, அதிவேகமாக அங்குமிங்கும் சட்சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. வலசை போகும் பண்பு கொண்ட இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் இவை வலசை வருவதாகத் தெரிய வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சகாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வலசை போகின்றன.
பொதுவாக வலசை போகும் பண்பை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் ஒரு வளையத்தை மாட்டிவிடுவார்கள். ஒவ்வொரு வளையத்துக்கும் ஒரு பிரத்யேக எண்ணும் வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். உலகின் வேறு பகுதியில் அந்தப் பறவை பிடிக்கப்பட்டால், அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து, எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு அறிய முடியும்.
தொழில்நுட்ப உதவி
இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கைக்கோள் பட்டையை (Satellite collar) பறவையின் முதுகில் பொருத்தி, அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டே கணினியில் பார்த்து அறிந்துவிட முடிகிறது. ஆனால், இக்கருவி விலையுயர்ந்தது. உருவில் பெரிய, பருமனான (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே செயற்கைக்கோள் பட்டையைப் பொருத்த முடியும். இதனால் சிறிய பறவைகளின் வலசைப் பண்பை அறிவது, இயலாத காரியமாக இருந்தது.
இந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (Light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இந்த கருவி செய்வதெல்லாம், பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) ஒளி உணர்கருவியின் (light sensor) உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவிரம், ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுகிறதல்லவா? இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் பூமியில் எந்தப் பகுதியில் அந்த நேரத்தில் மதியமாக இருந்தது, காலைக் கருக்கல், அந்தி மாலை என்றெல்லாம் கணிக்கமுடியும். இந்த விவரங்களைக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக, ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும்.
சுவிஸ் ஆய்வு
இதுபோன்ற ஒரு கருவியை சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன. ஏனென்றால், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை மிகமிகக் குறைவு, வெறும் 1.5 கிராம். அவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும்கூட பதிவு செய்யும் முடுக்கமானியையும் (Accelerometer) கொண்டிருந்தது. இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா? இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா? அல்லது ஓய்வெடுக்கின்றனவா என்பதையெல்லாம் கணிக்கமுடியும்.
இக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில், சுமார் 10 மாதங்கள் கழித்து மூன்றை மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பதிவான தகவல்களை ஆராய்ந்ததில், அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலம் வானில் சுற்றித் திரிந்த ஆச்சரிய சங்கதி தெரியவந்தது.
ஆச்சரிய உண்மை
இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இந்த இடத்தில் இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அந்தக் கால்கள் எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகவோதான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவும் மாறுபடும் அல்லவா? அப்படியிருந்தால், அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி அதைப் பதிவு செய்திருக்கும். ஆனால், ஒளி அளவில் அப்படிப்பட்ட பெரிய ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. பதிவுகள் அனைத்தும் சுமார் 6 மாதங்களுக்கு சீராக இருந்ததை வைத்தே, இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது.
என்னதான் பறக்கச் சிறகு இருந்தாலும், எப்படி ஒரு பறவையால் கீழிறங்காமலேயே இருக்க முடியும்? சாப்பாட்டுக்கு என்ன செய்யும்? அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன. ஆகவே, கீழிறங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
அதெல்லாம் சரி, உடலுக்கு ஓய்வு வேண்டாமா? தூங்க வேண்டாமா? உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு, அந்தரத்தில் தூங்குவதுதான் அது! ஆம், ஆங்கிலத்தில் இதை Aerial roosting என்கிறார்கள்.
உழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பல காலமாக இருந்து வந்த இந்த அனுமானம், ஆராய்ச்சியின் விளைவால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகிவிட்டது.
தி இந்து கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்-
இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?
No comments:
Post a Comment