உலகெங்கும் உள்ள காடுகளின் பெரிய வில்லன் காட்டுத்தீ மட்டுமே. மின்னல், எரிமலை, பாறைச்சரிவு ஆகியவற்றினால் ஏற்படும் உராய்வுகள் மற்றும் சிறு தீப்பொறி போன்றவைதான் காட்டுத்தீ ஏற்பட காரணமாக அமைகின்றன. இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும், அணைக்கப்படாத சிகரெச் துண்டுகளும் தீ உருவாக காரணமாக உள்ளன.
ஏறக்குறைய 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காடுகளில் உருவாகும் தீயினால் அவை அழிக்கப்படுகின்றன. எதிரிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக முந்தைய காலத்தில் ராணுவத்தினர் காடுகளுக்கு தீ வைப்பார்கள். மரங்கள் இருக்கும் இடத்தில் அதிக அளவில் சுத்தமான ஆக்சிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்துவிட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடுகள் தீப்பற்றி எரிந்தால் அந்தப் பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் சுமார் 800 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அந்தப் பகுதியில் எரியாமல் இருக்கும் மரங்களில் உள்ள நீரும் ஆவியாகிவிடும். இதனால் அவை பசுமையை இழந்து விறகுக்கட்டைபோல மாறிவிடும்.
காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டராக அதிகரிக்கும். புயல், பலத்த காற்று வீசும் நிலையில் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த ஒரேவழி, அது பரவும் திசைக்கு எதிர் திசையில் நாம் தீ வைப்பதுதான். இதன் மூலம் அங்கிருக்கும் மரங்கள் எரிந்து விடுவதால், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதற்கு வழி இல்லாத நிலை ஏற்படும். இதனால் தீயின் வேகம் குறைந்து அணைந்துவிடும்.
ஆனாலும் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீயும் திசை மாறும் என்பதால் அது எந்த திசைக்கு பரவும் என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது. சில நாடுகளில் ஹெலிகாப்டர் மூலம் சில்வர் அயோடைடு பொடிகளை தூவி செயற்கை மழையை உருவாக்கி தீயை அணைப்பார்கள்.
சில நாடுகளின் பொருளாதாரத்தையே காட்டுத்தீ ஆட்டம் காண வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தீப்பிடித்து எரிவதால் உருவாகும் கரியமில வாயு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் கேடு விளைவிக்கும். காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தால் வெப்பப் புயல் உறுவாகும். அது உலகின் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.
காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...
No comments:
Post a Comment