Friday, July 1, 2011

மின்னல்

   வான்வெளியில் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். இது வினாடிக்கு குறைவான நேரத்தில் ஒளிக்கீற்றாகக் கொடி பிரிந்து மறைகிறது. மேகங்களில் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னலாகிறது.
   மழையின் சீற்றத்தின்போதும், எரிமலைகளின் சீற்றத்தின்போதும், புழுதிப் புயல்களின் போதும் மேகங்களின் உராய்வால் மின்னல் தோன்றுகிறது. மின்னலின் வேகம் மணிக்கு 36 ஆயிரம் கி.மீ. தூரம். 30 லட்சம் சென்டிகிரேடு வரை வெப்பத்தை மின்னல் வெளியிடுகிறது. அந்த மிதமிஞ்சிய வெப்பத்தில் சில வேளைகளில் மணல் துகள்கள் உருவாகி ஒன்று சேர்ந்து ஃபல்கரைட் எள்னும் கண்ணாடிக் குழாய்களாகக்கூட மாறும்.
   கட்டுப்படுத்த இயலாத காட்டுத் தீ ஏற்படுத்தும் சாம்பல் புழுதிகூட மின்னல் தோன்றக் காரணமாகும். மேகத்தினுள் பொதிந்திருக்கும் பனிக்கட்டி மின்னலைத் தூண்டும் காரணியாக இருக்கலாம். ஆனாலும், மின்னல் எப்படி உருவாகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டு பிடிக்கப்படாமலேயே இருக்கிறது.
   மின்னல் மின்னும்போது வெளியிடப்படும் மிக அதிக வெப்பம் அதைச் சுற்றிலும் உள்ள காற்றினில் ஓர் அலையைக் கிளப்புகிறது. அதிக அளவு அழுத்தத்துக்குள்ளான காற்று, அழுத்தக் குறைவான பகுதிக்கு அதிவேகமாக இடமாற்றம் செய்யும் போது கிளம்பும் ஒலியே இடி ஓசை. ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் ஒளி தெரிந்து, சிறிய இடைவெளிக்குப் பிறகு இடியுடன் ஒலி கேட்கிறது.
   தாமஸ் ஃப்ரான்கோய்ஸ் டையபார்ட், டி லோர்ஸ் ஆகிய பிரஞ்சு விஞ்ஞானிகள் பட்டம் ஒன்றைப் பறக்கவிட்டு, மின்னல் தோன்றும் போது அதில் மின்சாரம் கடத்தப்படும் ஆராச்சியை முதலில் நிகழ்த்தினார்கள். சில வாரங்களிலேயே பெஞ்சமின்ஃப்ராங்க்ளினும் இதேபோல ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிகளைப் பின்பற்றி மின்னலை ஆராய்ச்சி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் ரிச்மேன் மின்னல் தாக்கி இறந்தார். அவரைத் தாக்கிய மின்னல் பந்து மின்னல் வகையைச் சேர்ந்தது. நாலணா நாணய அளவில் இருந்து பல மீட்டர்கள் வரை விட்டம் கொண்ட உருண்டை வடிவமான மின்னல்களைப் பந்து மின்னல் என்கிறார்கள்.
   மின்னல் தாக்குதல் பேரழிவுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. 1769-ல் இத்தாலியில் செயின்ட் நாஸைர் தேவாலயத்தை மின்னல் தாக்கியது. அங்கே பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 100 டன் வெடிமருந்து தீப்பற்றிக்கொள்ள, மூவாயிரம் நபர்கள் இறந்தனர். மின்னல் தாக்கிய ப்ரெஸிகா நகரில் ஆறில் ஒரு பங்கு தரைமட்டம் ஆனது. 1902-ல் பாரிஸில் ஈஃபிள் கோபுரம் மின்னலால் தாக்கப்பட்டது. 1994-ல் எகிப்தில் ட்ரோங்கா பகுதியில் எரிபொருள் டேங்குகளை மின்னல் தாக்கியதில் 469 பேர் உயிரிழந்தனர். மிக அரிதாக மின்னல்கள் விமானங்களைத் தாக்குவதும் உண்டு.
   மின்னலால் தாக்கப்படும் சிலர் பார்வையிழப்பதற்குக் காரணம் மின்னலின் அதீத ஒளி அல்ல. மின்னல் மூலம் கடத்தப்படும் மின்சாரம் விழித்திரையையும் பார்வை நரம்புகளையும் பாதிப்பதே காரணம். கனடாவின் வான்கூவர் பகுதியில் காதில் சிறு ஸ்பீக்கர் பொருத்திப் பாட்டுக் கேட்ட ஒருவரை இயர் போன் மூலம் மின்னல் தாக்கியது.
   மின்னல் மரங்களைத் தாக்கும் என்பது உண்மைதான். மின்னல் பாயும்போது மரத்தின் கடினமான மையப்பகுதி, நீராவி அளவுக்கு எக்கச்சக்கமாக சூடாகி  வெளிப்புறப் பட்டையைப் பிளந்து வெளியேறும். இப்படிப்பட்ட நேரங்களில் மரத்துக்கு அருகில் இருப்பவர்கள் உயிர் தப்பமுடியாது. தூரக்கிழக்கு நாடுகள் மற்றும் சைபீரியா போன்ற பகுதிகளில் உள்ள காடுகளில் தீ உண்டாவதற்கு முக்கியக் காரணம் மரங்களை மின்னல் தாக்குவதே
   எல்ம், ஓக் மற்றும் பைன் வகை மரங்கள் மின்னல் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகுபவை. தேக்கு போன்ற மரங்கள் உயரமாக வளரும் இயல்புடையவை. ஏராளமான சல்லிவேர்கள் மட்டுமே கொண்டவை. இலைப்பரப்பும் அதிகம் கொண்டவை. இவற்றைப் பெரிய கட்டிடங்களுக்கு அருகில் வளர்ப்பதால் இம்மரங்கள் மின்னலைக் கடத்திப் பூமியில் விட்டுவிடும். கட்டிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.
   கிளைகள் பிரியும் விதம், தோன்றும் இடம், அதன் வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் மின்னல் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
   1900-ல் நிகோலா டெஸ்லா என்ற செர்பிய விஞ்ஞானி செயற்கையாக மின்னலை ஏற்படுத்திக் காட்டினர்.
   மின்னலின் பாதிப்பைத் தடுக்கப் பெரிய கட்டிடங்களில் இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவார்கள். இது மின்னலை பூமிக்குள் கடத்திவிடும். கட்டிடங்களுக்குப் பாதிப்பு இருக்காது. மின்னலின்போது வெளிப்படும் சக்கியைப் பயன்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்......

  

No comments: