Tuesday, March 17, 2015

சாம்பல் நிற அணில்களின் சரணாலயம்

பல அரிய தாவரங்களையும், விலங்குகளையும் தென்னகத்தே கொண்டுள்ள திருவில்லிபுத்தூர் மேற்குமலைத் தொடரில் இயற்கை சூழலில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது.
 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச் சரணாலயம் 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இயற்கையின் ஈடற்ற படைப்பாக இருக்கும் இந்தச் சரணாலயம் நில அமைப்பிலும், மழை அளவிலும் தட்பவெப்ப நிலையிலும் பலவித மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தின் இடையில் அமைந்துள்ள இந்த சாம்பல் நிற அணில்கள் சரணாலயப் பகுதி தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைகளால் பயன் பெறுகிறது. பல வகை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பலவகை காடுகள் காணப்படும் இந்தப் பகுதியில் ஆண்டு சராசரி மழை அளவு 500 மி.மீ.
 அந்த சரணாலயத்தில்தான் உலகிலேயே அரிய விலங்கினமான சாம்பல் நிற அணில்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம், ஆத்தூர், திண்டுக்கல், சிறுமலை, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இந்த அணில்கள் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பொள்ளாச்சி, பழனி மற்றும் மேற்கு மலைத்தொடரில் உள்ள திருவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில்தான் இந்த சாம்பல் நிற அணில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
 அழிந்து வரக்கூடிய இந்த சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியையும், விருதுநகர் மாவட்ட வனப்பகுதியையும் சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலயமாக அறிவித்தது.
 பொதுவாக ஒவ்வொரு அணிலும் 2 கூடுகளை கட்டுகிறது. காரணம், ஒரு கூடு காற்றினாலோ அல்லது மழையினாலோ சேதமடைந்தால் மற்றொரு கூட்டில் வாழ்வதற்கு ஒரு முன்னேற்பாடு. புளியம்பழம், மாம்பழம் மற்றும் பழ வகைகளையும் மரப்பட்டைகளையும் உணவாக உட்கொள்ளும் இவை குட்டிப்போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. ஆண்டுக்கு ஒரு குட்டி வீதம் ஈனும் இவற்றின் கர்ப்ப காலம் 35 முதல் 40 நாட்களாகும். இவற்றின் ஆயுள்காலம் 14 ஆண்டுகள்.
 அதிவேகமாக மரம் விட்டு மரம் தாவும் இந்த அணில்கள் இரை தேடுவது காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும்தான். மற்ற நேரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...
வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

 

No comments: