Monday, May 2, 2011

தாட்பூட் பழம் (பேசன் ஃபுரூட்)


     தாட்பூட் பழம் இந்ப்பழத்தை நான் சிறுவயதில் கேரளா மாநிலம் மூனாரில் இருந்தபோது சாப்பிட்டது. காட்டில் உள்ள மரங்களில் இதன் கொடி படர்ந்து இருக்கும் காய்கள் காய்த்து பழம் பழுக்கும். நல்ல சுவையுடன் இருக்கும். யான கூட இதை விரும்பி சாப்பிடும் என்பார்கள்.

     தாட்பூட் என்ற பெயரில் அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த  பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாகச் செயல்படுகிறது.

     தாட்பூட் என்ற பெயரில் பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் பேசன் ஃபுரூட் என அழைக்கப்படுகிறது.

   பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்த இப்பழத்தை ஆங்கிலேயர்கள்தான் பேசன் புரூட் என்ற பெயரில் அழைத்தனர். பேசன் என்றால் ஆசை என்று பொருள். பார்த்தவுடன் இப்பழத்தை ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதாலேயே இப்பழம் பேசன் ஃபுரூட் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு.

    பேசி புளோரா தாவரக் குடும்பத்தில் உலகில் 400 வகைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்குமென்பதால் கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழமாக இது அமைந்துள்ளது.

   தற்போது கருங்குரங்குகளுக்குத் தேவைப்படும் உணவு வகைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இவ்வகை இனம் அழிவின் விளிம்பிலுள்ளது தனிக்கதை.

   அமெரிக்காவில் வெப்ப மண்டல பகுதிகளிலும், பிரேசிலில் அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்காவில் பராகுவே உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வகைப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. அதைத் தவிர இலங்கை, கென்யா, கேமரூன், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பழங்கள் கிடைக்கின்றன.

   வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். மேலை நாடுகளில் இப்பழத்திலிருந்து சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ், கார்டியல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

     இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுவதாக மக்கள் நம்புவதால் இதற்கு அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு உள்ளது. இப்பழத்தின் சிறப்பிற்காகவே கோவாவில் பேசியோ என்ற பெயரில் மதுபானமும் தயாரிக்கப்படுகிறது. உலகளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது இவ்வகை மதுபானம்.

   வழக்கமாக செடிகளில் மலரும் மலர்களில் சூலகம் மலருக்குள்ளேயே அமைந்திருக்கும். ஆனால், இந்த ரகத்தில் மட்டும் சூலகம் இதழ்களுக்கு வெளியே தனியே வளர்ந்திருக்கும். அதன் தோற்றம் சிலுவையின் தோற்றத்தைப் போலவே இருக்கும் .

    நீலகிரி மாவட்டத்தில் பேசி புளோரா கல்கரேட்டா, எடிபிள், போட்டிடா, லென்னாட்டி, மொல்லிசிமா என்ற ரகங்களைக் கொண்டுள்ளது. சில இடங்களில் இப்பழங்கள் உருண்டையாகவும், சில இடங்களில் கூம்பைப் போலவும் வளரும். இவை செடியாக இல்லாமல் கொடியாக வளரும் தன்மை கொண்டவை என்பதால் மரங்களின் மீது படர்ந்திருக்கும். இதன் காரணமாகவே குரங்கு இனங்கள் இப்பழங்களை விரும்பி உண்கின்றன.

  இப்பழத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைக் கருதி குன்னூரிலுள்ள அரசு தோட்டக்கலை பழவியல் நிலையத்தில் பேசன் ஃபுரூட் பழச்சாறு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தவிர பழக்கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

நன்றி- தினமணி...


இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

No comments: