Saturday, May 14, 2011

நமது நாடு 20.கடற்கரை மக்கள்


   கடற்கரையில்  நெய்தல் என்னும் ஒருவகை நீர்ச்செடி பெரிதும் வளர்ந்திருக்கும். அக்காரணத்தால் கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்னும் பெயர்பெற்றன. நெய்தல் நிலத்தே, புன்னை, பனை, தெங்கு முதலியன செழித்து வழர்ந்தள. அவ்விடங்களில் வாழுநர் பரதவர் எனப்பட்டனர்.

    பரதவர் கட்டுமரங்களிற் கடலிடத்தே சென்று மீன் பிடித்தனர். அவர்கள் மீனைத் தமது முதன்மை உணவாகக் கொண்டனர். பரதவர் கொண்டுவந்த மீனை பரத்தியர் மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர், மீனின் விலையாகக் கூலங்களையும் தமக்கு வேண்டிம் பிற பண்டங்களையும் பெற்றனர். கடற்கரைகளில் உப்பு விளைக்கும் பாத்திகள் உண்டு. அவர்கள் கடல் நீரை அப்பாத்திகளிற் பாய்ச்சி உப்பு விளைவித்தனர். உப்பு வணிகர்கள் உமணர் எனப்பட்டனர். உமணர் உப்பை வண்டிகளின் மேலும் கழுதைகளின் மீதும் ஏற்றிச் சென்று மற்றைய இடங்களில் விலைப்படுத்தினர்.

    கட்டுமரத்துக்குத் திமில் என்பது மற்றெரு பெயர். திமில்களிலே கடலிற் சென்றோர் திமிலர் எனவும் பட்டனர். திமில்களிலே சென்று மீன் பிடித்த பரதவர் நாளடைவில் பெரிய மரக்கலங்களில் கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் செந்றனர். அவர்கள் அந்நாடுகளிலுள்ள அரிய பண்டங்களை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தனர், இந்தநாட்டுப் பண்டங்களை அந்நாட்டுக்கு கொண்டு சென்றனர். நாளடைவில் பிறநாட்டு மரக்கலங்கள் தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு வரத்தொடங்கின. இவேவாறு கடற்கரைகளில் வாணிகம் தொடங்கிற்று. உள்நாட்டுப் பண்டங்கள் வண்டிகளிலும், கழுதைகளிலும், பொதிமாடுகளிலும் கடற்கரைகளுக்குக் கொண்டுவரப்பட்டன. கடற்கரைகளில் வந்திறங்கிய பிறநாட்டுப் பண்டங்கள் உள்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. உள் நாடுகளிலிருந்து கடற்கரைத் துறைமுகங்கள் வரையில் வண்டிகளும் மக்களும் செல்லக்கூடிய தெருக்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கடற்கரைகளில் பட்டினங்கள் உண்டாயின. அவ்விடங்களில் வணிகரும் மரக்கலங்கள் வைத்திருப்போரும் பெரிய மளிகைகள் அமைத்து அவைகளில் வாழ்ந்தனர். ஏற்றுமதியாகும் பண்டங்களுக்கும் இறக்குமதியாகும் பண்டங்களுக்கும் தீர்வை பெறும்பொருட்டு அரசினராற் பண்டசாலைகள் அவ்விடங்களில் அமைக்கப்பட்டன. பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வாணிகத்தின் பொருட்டுத் துறைமுகப் பட்டிணங்களுக்கு வந்தார்கள். தொழில் செய்து பிழைக்கும் பொருட்டு அவ்விடங்களுக்கு உள்நாடுகளினின்றும் மக்கள் சென்று தங்கினார்கள். பட்டிணங்கள் மக்கள நெருங்கி நடமாடும் இடங்களாயின. மக்கள் நெருங்கிவாழும் இடங்களில் பொழுது போக்குக் கேற்ற பலவகைக் களியாட்டங்கள் நடைபெற்றன. இராக்காலங்களில் மரக்கலங்கள் திசை அறிந்து துறைபிடிக்கும் பொருட்டுத் துறைமுகங்களில் வெளிச்சவீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை கலங்கரை விளக்கங்கள் எனப்பட்டன.

    தமிழ்நாட்டில் காவிரி ஆற்று முகத்துவாரத்திலிருந்த புகார் என்னும் நகர் பெரிய துறை முகப்பட்டினமாயிருந்தது. அங்குப் பல மொழிகளைப் பேசும் பிறநாட்டுமக்கள் தங்கி வாழ்ந்தனர்.

     பட்டினங்களல்லாத மற்றைய கடற்கரைப் பக்கங்களில் பரதவர் மீன்பிக்கும் தொழிலையே பெரிதும் கைக்கொண்டிருந்தனர். அவர்கள் பனந்தோப்புக்களில் சிறு சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தனர், மீன், இறால் முதலியவைகளை வெயிலில் உலர்த்தினர். பரதவர் சிறுமியர் புன்னை நிழலில் இருந்து மீனைக் கவரவரும் புட்களை ஓட்டினர். பரதவர் பனை தென்னை முதலியவைகளினின்றும் எடுக்கப்படும் கள்ளை உண்டு மகின்ந்தனர்.

   பரதவரிந் குல தெய்வம் வருணன். அவர்கள் சுறாக்கொம்பை நட்டு, மாலைகள் சூட்டி, ஆடல் புரிந்து அக்கடவுளை வழிபட்டனர். தமிழர் கடவுளாகிய வருணனை ஆரியமக்களும் வழிபட்டனர். வருணன் என்னும் கடவுளை வாழ்த்திப் பாடிய பாடல்கள் பல அவர்கள் வேதங்களிற் காணப்படுகின்றன.
  
நமது நாடு தொடரும்...

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

No comments: