Wednesday, May 11, 2011

நமதுநாடு 19. வேளான் மக்கள்


   ஆற்றேரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். வேளாளர் என்பதற்கு நிலத்தை ஆள்பவர் என்பது பொருள். வேள் என்பது நிலத்தைக் குறிக்கும். வேளாளரைக் குறிக்க வெள்ளாளர் என்னும் சொல்லும் வழங்கும். இச்சொல்லில் வெள் என்பது வெள்ளம் என்பதன் மருஉ. வெள்ளாளர் என்பதற்கு வெள்ளத்தை ஆள்பவர் என்பது பொருள். வயல் நிலங்களில் மருத மரங்கள் செழித்து வளர்ந்தன. ஆகவே வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருத நிலம் அல்லது மருதம் என்னும் பெயர் பெற்றன. வேளாண்மை செய்யும் ஒருவன் தனக்கு நீண்ட நாட்களுக்குப் போதுமான உணவைப் பெறக்கூடியவளாயிருந்தான். வேளாண்மக்கள் பயிரிட்டுக் கூலங்களை அறுக்குங் காலங்கள்போக மற்ற காலங்களில் ஓய்ந்திருந்தனர். இந்த நல்ல நிலைமையில்தான் மக்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து தம் அறிவைப் பெருக்க நினைத்துப் பல்வகை நற்கலைகளை வளர்த்தனர். மனிதனுக்குப் போதுமான உணவும் உடையும் கிடைப்பின் அவன் உள்ளக்களிப்பாக வாழவும், பொழுது போக்கவும் விரும்புகிறான். தனக்கு அவ்வகைப் பொழுதுபோக்கும் முறைகளைக் காண்பிப்பவர்களுக்கு அவன் தனது களஞ்சியத்தினின்றும் தானியங்களைக் கொடுக்கிறான். ஆதலின், பொழுது போழுது போக்குக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உரிய நற்கலைகளைப் பலர் பயின்றதனால் கலைகள் வளர்ச்சியடைந்தன.

   கூலம் விளைவிக்கும் வேளாளர் செல்வராயிருந்தனர். அவர்களின் பெண்டுபிள்ளைகள் அணிவதற்கு அழகிய பொன் அணிகள் வேண்டப்பட்டன. வீட்டிற் பயன்படுத்துதற்கு வேண்டிய நாற்காலி, முக்காலி, கட்டில், பெட்டி, ஏணி போன்ற பல பொருள்கள் தேவைப்பட்டன. பயிரிடுவதற்கு உதவியான கலப்பை, நுகம், கொழு, மண்வெட்டி, அரிவாள் போன்ற பல பொருள்களும் தேவையாயிருந்தன. இவைகளை எல்லாம் செய்து அளிக்கும் தொழிலாளர் வந்து வேளாண்மக்கள் வாழ்ந்த இடங்களைச் சுற்றிக் குடியிருந்தார்கள். அவர்கள் தாம் வேளானுக்குச் செய்து உதவும் பொருள்களுக்கு விலையாகக் கூலங்களைப் பெற்றனர்.

   வேளாளர் வேந்தன் என்னும் கடவுளைத் தமது குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டனர். வேந்தன் என்பதற்கு அரசண் எனவும் பொருள் உண்டு. கடவுள் உலகுக்கு அரசன் எனவும், அரசன் அக்கடவுளுக்கு ஏற்ப மக்களைக் காக்கும் உரிமையாளன் எனவும் முற்கால மக்கள் நம்பினார்கள். இந் நம்பிக்கை தமிழர்களிடையே மட்டுமன்று, பழையமக்கள் எல்லாரிடையும் காணப்பட்டது.

     வேளான்மக்கள் கொலையும் புலையும் நீக்கித் தூயவாழ்க்கை நடத்தினர். மக்கள் கடவுளை வழிபடும்பொருட்டு அவர்கள் ஊர்கள் தோறும் பெரிய கோவில்களைக் கட்டினார்கள், பிறர் நலங் கருதிப் பல்வேறு அறங்களைப் புரிந்தார்கள். வேளாளர் விருந்தினரை அகமலர்ந்து வரவேற்றனர். கம்பரும், திருவள்ளுவரும் வேளாண் மக்களின் சிறப்பை வேண்டிய அளவு விளக்கிக் கூறியுள்ளார்கள். வேளாண்மக்கள் உலகுக்கு அச்சாணி போன்றோர். அவர்களே உலகில் சிறந்த வள்ளல்களாக விளங்கினார்கள்.

நமது நாடு தொடரும்...

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

No comments: