பறவைகள் தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்தல்.
பறவைகளும் விலங்குகளும், தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்ந்து செல்வது "வலசை' போவது எனப்படும். பறவை உலகின் பல அற்புதமான சம்பவங்களில் ஒன்று இது. வலசைப் பறவைகளின் பயணங்கள் ராணுவ ஒழுங்குடன் துல்லியமாக நடைபெறும். ஏறக் குறைய, தெற்குத் திசையை நோக்கியும் வடக்குத் திசையை நோக்கியும்தான் இவை பயணம் செய்யும். பூமத்திய ரேகைக்கு வடக்கிலுள்ள பல இனத்தைச் சேர்ந்த நிறைய பறவைகள் குளிரின் கடுமையிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கிப் பயணம் செய்கின்றன. ஏறத்தாழ ஆறு மாத காலம் அங்கே தங்கிய பிறகு அவை தங்கள் பழைய இடத்திற்கே திரும்பிச் செல்கின்றன.
வலசைப் பறவைகளில் மிகவும் திறமையானது ஆர்ட்டிக் டெர்ன் என்ற பறவைதான். வட துருவத்திற்குச் சுற்றிலுமுள்ள இடங்களில் இனப் பெருக்கம் செய்த பிறகு இவை தெற்கு நோக்கிப் புறப்பட்டு, ஏறத்தாழ 18,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து தென் துருவப் பிரதேசங்களை அடைகின்றன. ஒரு மீட்டரின் மூன்றில் ஒரு பங்கு நீளம்தான் இருக்கும் இந்தப் பறவை. இவ்வளவு தொலைவு பயணம் செய்கிற பறவைகள் குறைவு. ஆயினும் 3,000 அல்லது 4,000 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வருகின்ற பறவைகள் இருக்கின்றன. இது போன்ற பறவைகளை குளிர் காலத்தில் நம் நாட்டிலும் பார்க்கலாம்.
உயரமான மலைகளில் வசிக்கின்ற பல வகையான பறவைகள், வடக்கு தெற்காக பயணம் செய்வதற்குப் பதிலாக, உயரத்திலிருந்து கீழ்ப் பகுதிக்கு வருகின்றன. குளிர் காலம் முடிந்ததும் மீண்டும் உயரத்திற்குச் சென்றுவிடுகின்றன.
வலசைப் பறவைகள் , வழி தவறாமல் பெரிய மலைகளையும் கடல்களையும் கடந்து, எல்லா வருடமும் வருகிற அதே இடத்தைச் சரியாக அடைகின்றன. பறவைகளால் இது எப்படி முடிகிறது என்பதை இப்போதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சூரியனின் நிலையையும், இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டுதான் அவை பயணம்போகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நீண்ட பயணம் போவதற்கான சக்தி பறவையின் மூளையில் எங்கே, எப்படி ஒளிந்திருக்கிறது என்று இப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, நாளின் நீளத்திலுள்ள வித்தியாசமும் - இனப் பெருக்கத்தோடு தொடர்புடைய உள் உணர்வும்தான் பறவைகளை வலசை போகத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். அவற்றின் மரபான குணங்கள்தான், பயணம் போவதற்கான நேரத்தையும், திசையையும், தூரத்தையும் முடிவு செய்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகள் மட்டுமல்ல, சால்மன் எனும் மீனும், மோனார்க் எனும் வண்ணத்துப் பூச்சியும் நெடுந்தூரம் பயணம் போவதில் மிகவும் திறமை பெற்றவை.
படித்தது.
சோ.ஞானசேகர்.
No comments:
Post a Comment