Monday, July 19, 2010

அதிகாலைக் குரல்

     அதிகாலையில் பறவைகள் குரலெழுப்புவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, பெரும்பாலும் எல்லா உயிரினங்களிலும் உள்ளிலுள்ள உயிரியல் கடிகார இயக்கம். இரண்டு, உணவு. மூன்று, தம் எல்லையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது. THE EARLY BIRD CATCHES THE WORM (அதிகாலையில் எழுகின்ற பறவை இரை பிடிக்கும்) எனும் ஆங்கிலப் பழமொழி, பறவைகளின் காலை நேரக் கூச்சல்களை விளங்குகிறது. அதிகாலையில் பறவைகள் இரை தேடுவதற்கான பரபரப்பில் இருக்கும். ஆயினும் குறைவான வெப்ப நிலையும், மங்கிய வெளிச்சமும் அதிகாலையில் இரை தேடுவதற்குத் தடையாக இருக்கின்றன. இரை குறைகின்ற காலகட்டங்களில்தான் பறவைகள் மிக உரக்கக் கத்துகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

÷காலையில் எழுந்தவுடன் பறவைகள் அலைந்து திரியும். உணவு கிடைக்கும் வாய்ப்புடைய இடங்களைக் கண்டுபிடித்து, அந்த இடத்தின் மீது தங்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும். அப்படியான இடங்களுக்கு மற்ற பறவைகள் வந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் அவை ஓசை எழுப்புகின்றன. பறவைக் குழுவிலிருக்கும் வலிமையான ஆண் பறவைதான் அதிக உரத்த குரலில் கூவும், அல்லது பாடும். தான்தான் இந்தப் பறவைகளின் தலைவன் என்று அறிவிப்பதற்காகத்தான் அது இவ்வாறு செய்யும். தட்டிக் கேட்பதற்கு ஒரு தலைவர் அந்த இடத்தில் உண்டென்று அறிந்தால் மற்ற பறவைகள் அங்கே அவ்வளவு சுலபமாக வந்துவிடுவதில்லை. இது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்திருக்கிறது. பறவைக் கூட்டத்தின் தலைவரை கூட்டத்திலிருந்து விலக்கி அங்கே ஒரு ஒலி பெருக்கி வைக்கப்பட்டது. அதன் வழியே தலைவரின் குரல் ஒலிபரப்பப்பட்டது. அந்த இடத்திற்கு வர முற்பட்ட பல பறவைகளும் அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் போய்விட்டன. ஆனால் அதிக எதிர்ப்புத் தன்மை கொண்ட சில பறவைகள், ஒலி பெருக்கியைத் தாக்க முற்பட்டன. ஒலி பெருக்கி வைக்காத இடங்களில், மற்ற பறவைகள் நிறைய வந்து சேர்ந்தன.

÷இதைப்போன்று, சூரியன் உதிக்கும்போது சேவல் கூவுவதற்கும் மூன்று காரணங்கள் உள்ளன. சேவலின் உயிரியல் கடிகாரம், உணவு தேடுவதற்கான ஆயத்தம், தன் அதிகார எல்லையை மற்றவர்களுக்கு அறிவிப்பது ஆகியவையே அவை.

படித்தது..

சோ.ஞானசேகர்.

No comments: