சுற்றுச்சூழல் பாதிப்பு,பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்:40 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் இடம்பெயரும் அபாயம்
பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் வரும் காலங்களில் மனித சமுதாயம் பெரும் பாதிப்புக்குள்ளாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் தென்கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள்தான் கடும் பாதிப்புக்குள்ளாக உள்ளதாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பால் இந்த பகுதிகளில் இருந்து அடுத்த 40 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் இடம்பெயர்வு மற்றும் புலம்பெயரலாம்.
கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை பேரழிவுகள் இருமடங்கு அதிகரித்துள்ளன. சமீபகாலமாக பூகம்பம், வறட்சி, வெள்ளம் ஆகியவை மனித சமுதாயத்துக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமான காற்று, நீர், நிலம் ஆகிய சீர்கேடும் அதிகரித்து வருகிறது.
அதேபோல, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் வெப்பநிலையும் 2 டிகிரி சென்டிகிரேட் முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற காரணங்களால் மனித சமுதாயம் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் பருவநிலை மாறுபாட்டால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இது கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடல் மட்டம் தொடர்ந்து உயருமானால் கடலுக்கு மத்தியில் உள்ள நாடுகள் மூழ்கிப்போகும் அபாயமும் உள்ளது.
இதனால் இதுபோன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் தற்போதே எதிர்கால அபாயத்தை நினைத்து பிற நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்துவிட்டனர். எங்கெல்லாம் சுற்றுச்சூழல் அதிகரித்துள்ளதோ அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
சில நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்புமிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிப்பில்லாத பகுதி நோக்கி இடம்பெயர்கின்றனர். இதனால் ஓரிடத்திலேயே அதிக மக்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் இடம்பெயரும் போது சில நேரங்களில் மக்களிடையே மோதலும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இது எதிர்காலத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் புலம்பெயரும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நன்றி தினமணி நாளிதழ்...
சோ.ஞானசேகர்.
No comments:
Post a Comment