Saturday, June 23, 2012

புவி வெப்பமடைவதைப் பயன்படுத்தி மீன்வளத்தைப் பெருக்க முயற்சி

  மாறிவரும் புவியின் பருவ நிலை மாற்றத்தை சாதமாகப் பயன்படுத்தி கூடுதல் மீன்வளத்தை எவ்வாறு பெறலாம் என்பது பற்றி ஆராய்வதற்காக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியப் பிராந்தியமான டாஸ்மேனியாவில் கூடியுள்ளனர்.
   கடல் வெப்பமடைவதன் காரணமாக சில மீன் இனங்கள் தாம் வாழ்ந்துவந்த பகுதிகளை விட்டு இடம்பெயருவது என்பது ஏற்கனவே நடந்துவருகின்ற ஒரு சூழ்நிலையில், அவ்வகையான இடங்களில் மீன்வளத்தை வளர்த்து அறுவடை செய்வதற்குரிய புதிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
  இந்தியாவை அண்டிய கடற்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவை அண்டிய கடற்பகுதிகளை புவிவெப்பமடைந்துவரும் பருவ நிலை மாற்றம் வேகமாக நடந்துவருகின்ற இடங்களாக விஞ்ஞானிகள் காண்கின்றனர்.
  குளிர்ந்த நீருடைய இடமாக இருந்துவந்த டாஸ்மேனியக் கடல் பகுதியில் கடல் நீர் வெப்பமடைந்து வருவதன் காரணமாக, அந்தக் கடல் பகுதியில் ஏராளமான மீன் இனங்கள் செழிப்பாக பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த மீன்வளத்தை வர்த்தக ரீதியில் அறுவடைசெய்ய முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
  ஹோபர்ட் நகரில் இருநாட்டு விஞ்ஞானிகளும் கூடிய ஒரு சந்திப்பில், வெப்பமண்டலம் மற்றும் வெப்பமண்டலத்தை ஒட்டிய கடல் பிரதேசத்தில் வாழும் மீன் இனத்தின் முட்டைகளை புதிதாக வெப்பமடைந்துவரக்கூடிய கடல் பகுதிகளில் தூவி, அந்த இடங்களில் மீன்வளத்தைப் பெருக்குகின்ற ஒரு திட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.
  ஒரு பிரதேசத்தில் அறவே இல்லாத மீன் இனங்களை அப்பிரதேசத்தில் புதிதாக அறிமுகப்படுத்தும் வகையிலானது அல்ல தமது திட்டம் என்பதை ஹோபர்ட்டில் கூடியுள்ள விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
   மாறாக வெப்பமாக கடல்பகுதிகளை நோக்கி ஏற்கனவே இடம்பெயர்ந்துவரும் மீன் இனங்களை அவ்விடங்களில் செயற்கையாக வளரவிட்டு, இயற்கையில் நடந்துவரும் ஒரு மாற்றத்தை சற்றே வேகப்படுத்த தாங்கள் திட்டமிடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

No comments: