Thursday, June 21, 2012

கடல்சார் பறவையினங்கள் அழிந்துவருகின்றன



   கடற்கரையை அண்டி வாழும் பறவையினங்கள் அவற்றின் எண்ணிக்கையில் அரைவாசியளவாக குறைந்துவருவதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
   மோசமாக அழிவடைந்துவரும் விலங்கினங்களின் பட்டியலின் உச்சத்தில் இந்தப் பறவையினங்களில் 28 வீதமானவை இருப்பதாக பறவைகள் பற்றிய சஞ்சிகையொன்றில் (Bird Conservation International) வெளியான ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
   ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்நத பறவையினங்களே வேகமாக அழிந்துவருவதாக பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும் வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் என்று கருதப்படுகின்றது.
   கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. ஆனால் உலகின் மொத்தப் பறவையினங்களில் இவை வெறும் 3.5 வீதமானவைதான்.
அடையாளம் காணப்பட்டுள்ள 346 வகையான கடல்சார் பறவையினங்களில் 47 வீதமானவற்றில் இந்த அழிவைக் காணமுடிவதாக கூறப்படுகிறது.
தரையில் இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் இந்தப் பறவையினங்களிடம் கவனிக்கப்பட வேண்டிய பல முக்கிய அம்சங்கள் இருப்பதாக கடற்சார் பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறுகிறார்.
   அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள் அருகிவிடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும் வர்த்தக ரீதியான மீன்பிடி நடவடிக்கைகளின்போது பெருமளவிலான பறவைகள் வலைகளிலும் கண்ணிகளிலும் சிக்கி உயிரிழந்துவிடுவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
   அதேபோல இந்தப் பறவையினங்களின் கூடுகளையும் அழித்து. அவற்றின் முட்டைகளையும் குஞ்சுகளையும் உண்ணக்கூடிய பெருச்சாளிகளும் பெருகிவருவதால் கடல்சார் பறவையினங்களின் இனப்பெருக்கம் வேகமாக தடுக்கப்படுகிறது.
   கடல் பரப்பில், இந்தவகை எலிகள் பெருகிவரும் சில தீவுகளை எலிகளைக் கொல்ல நச்சுப் பொருட்களைத் தூவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

No comments: