Tuesday, June 5, 2012

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று.


  2012-ம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தை பசுமை பொருளாதாரம் என்ற கருப்பொளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 40-வது உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

  இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தி வருகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் சுற்றுச்சூழல்களை பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

 இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

 நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

 மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

  மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

  வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

 வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.

 இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.
 இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.

  ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

 பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

  எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நன்றி:  மாலை  மலர்  நாளிதழ்.

No comments: